அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து
அன்புள்ள ஐயாவுக்கு,
தோழி ஒருவர் என்னிடம் பேசும்போதெல்லாம் அடிக்கடி ஒரு கேள்வியை வியந்து கேட்பார்.
‘எப்படி ஒரு விசயத்த அழகா திட்டமிட்டு கொஞ்சம் கூட சமரசம் இல்லாம உங்களால தொடர்ந்து செய்ய முடியுது?’
இப்படி அவர் கேட்கும்போதெல்லாம் சிறு புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்ப்பது வழக்கம்.
அவர் இவ்வாறு கேட்க எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், அவற்றில் இரண்டை மட்டும் இங்கே உங்களிடம் சொல்ல விரும்புகிறேன் ஐயா.
ஒன்று… 2011 ஆம் ஆண்டின் இறுதியில் எழுத்துதான் எனது வாழ்க்கை என முடிவுசெய்த தருணத்தில், என் முன்னால் இருந்த ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில்’ கடைசி இடத்தில் இருந்த நான் முதலிடம் வரவேண்டும் என நினைத்தது.
அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதையும் நன்கறிவேன். என்றபோதும் ‘முயன்றால் உன்னால் முடியும்’ என உள்மனம் சொன்னதால், அதன்படி திட்டம் வகுக்க ஆரம்பித்தேன்.
என் திட்டப்படி கடைசி ஆறு மாதத்தில் 150 கட்டுரைகள் எழுதி வெளியாக வேண்டும். அதற்குக் குறைந்தது இருநூறு கட்டுரைகளாவது நான் எழுதியாக வேண்டும். அதுவும் 180 நாட்களில். நாட்களை விட அதிகமாக.
அதனால் வெறித்தனமாக செயல்பட ஆரம்பித்தேன். பார்க்கும் எதிலும் கட்டுரையைக் கண்டேன். எதை, எந்த இதழுக்கு எப்படி எழுதலாம் என்றே யோசிப்பேன்.
உதாரணத்திற்கு, ஒரு கல்லூரிக்கு காலேஜ் கேம்பஸ் (அப்போது ‘ஆனந்த விகடன்’ இதழுடன் இலவச இணைப்பாக வெளிவந்த ‘என் விகடனில்’ இடம்பெற்ற ஒரு பகுதி இது) செய்யப் போனால், கூடவே அங்குள்ள மாணவிகளை வைத்து அவள் விகடனுக்கு ஒரு ஜாலியான கட்டுரையும், அங்கு படிக்கும் மாணவ மாணவிகளில் தனித்திறமை வாய்ந்தவர்கள் யாரையாவது வைத்து என் விகடனுக்கோ, அவள் விகடனுக்கோ இன்னொரு கட்டுரையும் என மொத்தம் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மூன்று கட்டுரைகள் செய்துவிடுவேன். மாலை முடிந்தால் இன்னொரு கட்டுரைக்காக யாரையேனும் சென்று சந்தித்து பேட்டியெடுப்பேன். இரவு அறைக்கு போய் நள்ளிரவு இரண்டு, மூன்று மணி வரைக்கும் உட்கார்ந்து அக்கட்டுரைகளை ஒவ்வொன்றாக எழுதி அந்தந்த இதழுக்கு அனுப்பிவிட்டு உறங்கப்போவேன்.
திரும்பவும் அடுத்தநாள் இதேபோல் வேறு கட்டுரைகளுக்காக ஓடுவேன். இப்படி ஆறுமாதம் உழைத்ததன் விளைவாக திட்டமிட்டதுபோல் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுத முடிந்தது. அதில் 150-க்கும் அதிகமான கட்டுரைகள் ஆனந்த விகடன் தொடங்கி, டாக்டர் விகடன் வரைக்குமான பத்து இதழ்களில் வெளியானது. நினைத்தது போல் கடைசி இடத்தில் இருந்த நான் முதலிடம் வந்து, ‘தலைசிறந்த மாணவர் நிருபர்’ விருதும் வாங்கினேன்.
இரண்டு… இதன் தொடர்ச்சியாக நான் வாழ்நாள் முழுக்க பின்பற்ற நினைத்து முடிவெடுத்த ஒன்று, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை சென்னை – கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு போய், காலை முதல் மாலை வரை முழுநாளும் உட்கார்ந்து நூல்கள் வாசிக்கவேண்டும் என்பது.
ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் பழக ஆரம்பித்ததும் பிடித்த ஒன்றாக, தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதை உணர்ந்தேன்.
2012 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் தொடங்கிய இப்பயணம் எட்டாண்டுகள் கடந்தும் இப்போதும் தொடர்கிறது. சென்னையில் இல்லாத ஞாயிறுகள், இக்கொரொனா காலம் தவிர்த்து எந்த ஞாயிறும் இதுவரை தவறியதில்லை.
அப்படியே தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியாமல் போன விரல்விட்டு எண்ணக்கூடிய ஞாயிறுகளை, அதற்கடுத்த திங்கள் செவ்வாய்களில் சென்று ஈடுசெய்துவிடுவேன்.
இப்படி நான் அங்கு போய் உட்கார்ந்து வாசித்த நூல்கள் மட்டும் பல நூறுகள் இருக்கக்கூடும். அதிலும் குறிப்பாக சங்க இலக்கியங்களில் – குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு… ஜெயமோகனின் – கொற்றவை, விஷ்ணுபுரம், ரப்பர்… ஜெயகாந்தன் மற்றும் சுந்தர ராமசாமியின் முக்கால்வாசி நூல்களையும் சொல்லலாம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், சென்னையின் மிகப் பிடித்த இடங்களில் ஒன்றாக அண்ணா நூற்றாண்டு நூலகம் சில தினங்களிலேயே மாறியதுதான்.
அங்கு நான் உட்கார்ந்து நூல்களை வாசித்ததோடு மட்டுமல்லாமல், இடையிடையே பலநூறு பாடல்களையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.
ஆரம்பத்தில் நண்பர்கள் பலரும், ‘சண்டேவும் அதுவும் ஜாலியா இல்லாம, எதுக்குடா போய் மாஞ்சி மாஞ்சி ஒக்காந்து நாள் முழுக்க படிக்கிற?’ என்றார்கள். வழக்கம்போல் எதுவும் சொல்லாமல் சிறு புன்னகையை மட்டுமே அவர்களுக்கு பதிலாக தந்துவிட்டு சென்றுவருவேன்.
ஒருகட்டத்துக்கு மேல் எனக்குப் பழக்கமானது போல் என் நண்பர்களில் சிலருக்கும் பழக்கமாகி, ஞாயிறுகளில் என்னை எங்கும் அழைப்பதை விட்டுவிட்டு வேறு தினங்களில் அழைக்க ஆரம்பித்தார்கள்.
இம்முடிவை நான் எடுக்க மிக முக்கியக் காரணம், ‘என்னதான் வாரம் முழுக்க படிக்க நேரமின்றி வேலை வேலையென அலைந்து திரிந்தாலும், ஒரு நாளாவது நமக்கென்று முழுமையாக ஒதுக்கி பிடித்த நூல்களை யாதொரு இடையூறும் இன்றி வாசிக்கவேண்டும்’ என்றுதான்.
‘அதெப்படி எல்லா ஞாய்த்திக்கெழமையும் தவறாம லைப்ரரி போயிட்றீங்க?’
தோழி கேட்கும் அடுத்த கேள்வி இது.
ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும், பயணமும் மிகமிக அவசியம் என்பார்கள். அவ்வகையில் வாசிப்பிற்காக நான் எடுத்த மிக முக்கிய முடிவு இது என்பேன்.
நான் இதை ஒரு வேலையாகவோ, சுமையாகவோ ஒருநாளும் பார்த்ததில்லை, நினைத்ததில்லை. மாறாக என் வாழ்வின் ஒரு பகுதியாக, அங்கமாக உண்பது உறங்குவது போல் இயல்பான ஒன்றாகப் பார்க்கிறேன், செய்கிறேன். ஆம்! ஐயா.
இப்படித் திட்டமிட்டு தொடர்ந்து எது ஒன்றையும் சமரசம் இல்லாமல் செய்யும் பழக்கம் எங்கிருந்து எனக்குள் எப்படி வந்தது என இப்போது யோசித்துப் பார்க்கையில், தங்களிடமிருந்துதான் என உறுதியாகத் தோன்றுகிறதய்யா.
சிறுவயது முதல் அதிகாலையில் சீக்கிரம் எழுவதை வழக்கமாக கொண்டவர் நீங்கள். அதிலும் நம் ஊரில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்தபோது, எழுந்ததும் முதல் வேலையாக பச்சைத் தண்ணீரில் குளிர், மழை என எதையும் பொருட்படுத்தாமல் போய் குளித்துவிட்டு சாமி கும்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள்.
அதிலும் ஆச்சரியம் என்னவென்றால், ஒருநாளும் யாரும் எழுப்பிவிட்டு எழுந்ததில்லை நீங்கள். இப்போதுபோல் அப்போது அலாரம் வைத்து எழும் வசதியெல்லாம் கூட கிடையாது. தானாக மணியடித்தது போல் நாலரை மணிக்கு எழுந்துவிடுவீர்கள். வியந்து போய் ஒருநாள் கேட்டே விட்டேன்.
”எப்டிய்யா தெனம் காலில சொல்லி வச்சமாரி சீக்கரம் ஏன்ச்சிட்ற?’’
வழக்கம் போல் மெல்ல உதடசைத்து சிரித்துவிட்டு,
”நாம எந்த வேல செஞ்சாலும், அந்த வேலக்கி உண்மயா இருக்கணும். இது நம்ம மனசுல பதிஞ்சாலே, தானா அதுக்கான வேலய செய்வம்..’’ என்றீர்கள்.
அப்போததன் அர்த்தம் புரியவில்லை என்றாலும், காலப்போக்கில் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
அதுவும் எழுத்தை என் வாழ்வாக தேர்ந்தெடுத்த பிறகு, அதற்காக நான் எப்படியெல்லாம் உழைக்க வேண்டும், எவ்வாறெல்லாம் என்னை தயார் செய்யவேண்டும் என யோசித்து முடிவுசெய்தேன்.
அதன் முதல் முக்கிய முடிவுதான் வாரந்தோறும் ஞாயிறுகளில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று முழுநாள் உட்கார்ந்து படிப்பது என்பது.
அதிலும் வாசிப்பின் ருசி புலப்பட ஆரம்பித்ததும் இன்னும் இன்னும் வாசிக்க வேண்டும், அதுவும் தினம்தோறும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உந்துதலும் ஒருசேர எழ, நான் வேலைபார்த்த விகடன் அலுவலக நூலகத்திலிருந்து தினம் ஒரு புத்தகம், பெரிய புத்தகமாக இருந்தால் இரு தினங்களுக்கு ஒரு புத்தகமென எடுத்து வந்து, அதை அன்றிரவே உட்கார்ந்து படித்துவிட்டுப் போய் திருப்பிக் கொடுத்துவிட்டு, அடுத்தநாள் இன்னொரு புத்தகம் எடுத்து வருவது, வாய்ப்பு கிடைக்கும்போது நான் படித்த லயோலா கல்லூரி நூலகத்தை பயன்படுத்துவது என தொடர்ந்து பழக்கிக்கொண்டேன்.
2016 ஆம் ஆண்டு ஜனவரியில் எனக்கான இடமும் வேலையும் இதுவல்ல எனத்தோன்ற பத்திரிகையாளர் பணியை அத்தோடு விட்டுவிட்டு கனவை நோக்கி பயணப்பட ஆரம்பித்தேன். அதன் விளைவாக கூடுதலாக வாரத்தில் ஒருநாள் கன்னிமரா நூலகம் சென்று படிப்பதையும், அங்கிருந்து தேவையான நூல்களை எடுத்து வந்து வாசிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டேன்.
அதனால்தான் சிறு வயதுமுதல் பாடப் புத்தகத்தை தாண்டி, என்றாவது செய்தித்தாள் வாசிப்பதையும் தாண்டி ஒரு நூலையும் வாசிக்காத என்னால் இன்று எதை எழுத நினைத்து உட்கார்ந்தாலும் அதை எளிதில் எழுத முடிகிறது. அதற்கான திறனும் எனக்குள் உருவாகியிருக்கிறது.
அவ்வகையில் இவ்வீடடைவு காலத்தில் மட்டும் மரப்பா, முகங்கள், நிலைத்திணை என அடுத்தடுத்து மூன்று நூல்களைத் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். இதில் நிலைத்திணை நூலானது என் எழுத்துப்பயணத்தில் மிக முக்கியமான பெருநூலாக இருக்குமென உறுதியாக நம்புகிறேன் ஐயா.
இவ்வரிசையில் இப்போது தினமொரு கடிதம் என உங்களுக்கு தொடர்ந்து 22 நாட்களுக்கு எழுத திட்டமிட்டு, இன்றோடு 11-வது நாளாக அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
‘நாம எந்த வேல செஞ்சாலும், அந்த வேலக்கி உண்மயா இருக்கணும். இது நம்ம மனசுல பதிஞ்சாலே, தானா அதுக்கான வேலய செய்வம்..’
தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகள்தான் என்னை தொடர்ந்து இவ்வாறு சிந்திக்கவும், செயல்படவும் வைப்பதாக உணர்கிறேன் ஐயா.
அதிலும் எழுதினால் முக்கிய இதழ்களில்தான் எழுதுவேன், நாளிதழ்களிலும் இலக்கிய வலைத்தளங்களிலும்தான் எழுதுவேன் என நினைத்து வாய்ப்புக்காகவும், காலத்திற்காகவும் காத்திருக்காமல் முகநூலும் எனக்கான, என் எழுத்துக்கான பெரும் களம்தான் என நினைத்து தொடர்ந்து எழுதிவருகிறேன்.
இதில் முகங்கள் என்னும் எனது நான்காவது நூலினை… தொடர்ந்து இருபது நாட்கள் தினமொரு முகமென இருபது முகங்கள் பற்றி அன்றன்று எழுதி அன்றைக்கே முகநூலில் பதிவிட்டேன். நிலைத்திணையின் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஐந்து நாட்கள் என திட்டமிட்டு தொடர்ந்து நூறு நாட்கள் இருபது கட்டுரைகள் எழுதிமுடித்தேன்.
அதுவும் எழுதுவதற்கு முன் என்ன திட்டமிட்டு தொடங்கினேனோ, அதில் எவ்வித சமரசமும் கடைசிவரை செய்து கொள்ளவில்லை. நடுவில் ஓரிரு நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போனபோது கூட மனம் என்னை உறங்கவிடாமல், ‘உன்னால முடியும் எழுந்து செய்..’ எனச் சொல்லி செய்ய வைத்ததை இங்கே தங்களிடம் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன் ஐயா.
இத்தொடர் செயல்பாட்டின் விளைவாக எனக்குள் இப்போது, பெரும் நம்பிக்கையும் உற்சாகமும் உருவாகியுள்ளதை என்னால் உணரமுடிகிறது. அதுவும், கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 700-க்கும் அதிகமான பக்கங்கள் எழுதியிருக்கிறேன்.
இவ்வளவெல்லாம் என்னால் தொடர்ச்சியாக எழுதமுடியும் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. அதோடு ஒருநாளும் மனம்கோணியோ, சோர்ந்துபோயோ, விருப்பின்றி வெறுப்போடோ செயல்பட்டதில்லை. முதல் நாளில் இருந்த அதே உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் ஒவ்வொரு நாளும் இயங்கினேன், இயங்கிவருகிறேன். ஆம்! ஐயா.
இன்னும் சொல்லப்போனால் முன்தினம் இரவு தூங்கப்போகும் முன்னமே அடுத்தநாள் எழுதவேண்டியது என்ன என்பதை முடிவு செய்துவிட்டுதான் போவேன். அதனால் அடுத்தநாள் காலையில் எழும்போதே தொடங்கவேண்டிய சொல்லோடும், சொற்றொடரோடும் எழுவது வாடிக்கையான ஒன்றாகியது.
இதில் இன்னோர் ஆச்சரியம் என்னவென்றால்… ஒருநாள்கூட காலையில் அலாரம் வைத்து நான் எழவில்லை என்பதுதான். அதுவும் உள்ளமானது தானாக விடிந்துவிட்டதை உணர்ந்து ஒவ்வொருநாளும் சரியாக சூரியன் உதிக்கும் முன்பே எழுப்பி விட்டதுதான்.
இத்தொடர் செயல்பாடும் அது தந்த நம்பிக்கையும் செயலூக்கமும் எனக்குள் தொடர்ந்து இன்னும் பல அரிய நூல்களையும், பாடல்களையும் எழுதவேண்டும் என்ற எண்ணத்தையும் உத்வேகத்தையும் உருவாக்கியுள்ளது.
அதோடு இன்னும் இன்னும் எனக்கான நூல்களை தேடித் தேடி வாசிக்க வேண்டும், புதுப் புது முயற்சிகளை தொடர்ந்து செய்யவேண்டும், பலப் பல இடங்களுக்கு பயணிக்கவேண்டும், பல்வேறு நிலங்களையும் மனிதர்களையும் அவர்களது வாழ்வியல்முறையையும் அறியவேண்டும் என்கிற ஆர்வத்தையும் தந்துள்ளது.
‘எதுவும் செய்யச் செய்ய பழக்கமான ஒண்ணாயிடும்..’ என்பீர்கள்.
அப்படித்தான் ஐயா இருக்கிறது வாசிப்பதும், எழுதுவதும், பயணிப்பதும்.
‘எவ்ளோ பெரிய வேலயா இருந்தாலும், சின்னச் சின்னதாப் பிரிச்சி செஞ்சம்னா சுளுவா செஞ்சிடலாம்..’ என்பீர்கள்.
உண்மைதான் ஐயா.
இவை இரண்டோடு சேர்த்து, தங்களின்,
‘நாம எந்த வேல செஞ்சாலும், அந்த வேலக்கி உண்மயா இருக்கணும். இது நம்ம மனசுல பதிஞ்சாலே, தானா அதுக்கான வேலய செய்வம்..’
இவ்வார்த்தைகளையும் என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கிய மந்திரமாகக் கொண்டு ஒவ்வொரு நாளையும் பயனுள்ள விதத்தில் மாற்றி செயலாற்றி வருகிறேன் ஐயா.
அதனால்தான் தோழி அப்படிக் கேட்கும்போது என்னால் சிறு புன்னகையை மட்டுமே பதிலாக எப்போதும் தர முடிகிறது.
பெரு மௌனத்தையும், சிறு புன்னகையையும் தாண்டிய உயர்பதிலொன்று இப்பூமியில் இருப்பதாக ஒருபோதும் தோன்றவில்லை ஐயா.
தொடர் செயலுடன்,
உங்கள் மகன் வடிவரசு
(August 21, 2020)
*
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்
அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்