அரம்பு போற்றுதும் – 003 : நீள் விளையாட்டு

ஜனவரி 24, 2026
*
கடந்த இரு மாதங்களாக நாள்தோறும் மதியம் அல்லது மாலை வேளையில் ஒரு பெரிய குண்டான் அல்லது அன்னக்கூடையில் தண்ணீர் பிடித்து வைத்து, ஐயை அதில் விளையாட விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தாள் மதி.
அவ்வகையில் இன்று பிற்பகல் விளையாட விட்டவள், என்னை ஓர் ஓரமாக உட்கார்ந்து பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, உள்ளே சென்று ஏதோ வேலையில் மூழ்கிவிட்டாள். நானும் மும்முரமாக ஐ என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
வெகுநேரமாக தண்ணீரை சிறு சொம்பிலும், டப்பாவிலும் மாறிமாறி மொண்டு தன்மேல் ஊற்றியும், ஓரமாக இருந்த செடி, சுவர் மற்றும் காலி இடங்களில் கொட்டியும் விளையாடிக்கொண்டிருந்தவன், நடுநடுவில் ஓடிப்போய் கதவருகில் காற்றில் கதவு நகராமல் இருப்பதற்காக வைத்திருந்த செங்கல்லைத் தொட்டுவிட்டு வந்தான்.
என்ன செய்கிறான் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தவன், நேரம் ஆகிவிட்டதால் எழுந்து அருகில் போய், ”சரி, வா பப்பு… விளையாடினது போதும். நாம வீட்டுக்குள்ள போவோம்” என்றேன்.
உடனே, என் பேச்சைக் காதில் வாங்காதவனாய் ஓடிப்போய் மறுபடியும் அந்தச் செங்கல்லைத் தொட்டுவிட்டு வந்து ஒரு சொம்பு தண்ணீர் மொண்டு மேலே ஊற்றிக்கொண்டான்.
”டேய் என்னடா செய்ற? வா, நாளைக்கு வந்து விளையாடலாம்” என்று திரும்பவும் கூப்பிட்டேன்.
மறுபடியும் அதேமாதிரி ஓடிப்போய் தொட்டுவிட்டு வந்து நீர் ஊற்றிக்கொண்டான்.
ஒன்றும் விளங்காமல் அவனிடமே கேட்டேன். ”அப்பு பப்பு… எதுக்கு சாமி, போய் அந்த செங்கல்ல தொட்டுட்டு வந்து தண்ணி ஊத்திக்கிற?’’
எதுவும் கூறாமல் திரும்பவும் ஓடிச்சென்று தொட்டுவிட்டு வந்தான்.
நில்லாது நீளும் இவ்வலகிலா விளையாட்டை நிறுத்துவதற்காகவே வந்தது போல சரியாக அப்போது பார்த்து உள்ளே இருந்து வந்த மதியிடம் நடந்ததைச் சொன்னேன்.
பெரிதாகச் சிரித்துவிட்டு கேட்டாள். ”அவன்கிட்ட விளையாடினது போதும், உள்ளே போகலாம்னு சொன்னீங்களா?’’
சின்னதாகத் தலையாட்டி, ”ஆமாம்” என்றேன்.
”அதான்” என்றுவிட்டு தாய்மைக் குரலில் சொன்னாள். ”அவனுக்கு அந்த செங்கல்லுதான் அழுக்கு. அதத் தொட்டுட்டா மறுமடியும் அது போகக் குளிக்கணும்ல… அதான், நீங்க போகலாம்னு சொன்னதும் போய்ப் போய்த் தொட்டுட்டு வந்து குளிக்கிறான்.’’
‘செரிதான்… இவன் நமக்கு மேல இருப்பான் போல’ என்று நினைத்து உளத்துள் சிரித்துக்கொண்டு பார்த்தேன்.
ஒன்றுமே நடக்காதது போல அவன் பாட்டுக்கு ஓடிப்போய் செங்கல் தொட்டுவிட்டு வந்து மறுபடியும் நீர் ஊற்றி விளையாடிக்கொண்டிருந்தான்.
*