முகங்கள் – 17 : ஐயார்

**
‘நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்குத்தானே கட்டிக்கொண்டது
வானம் வந்து இறங்க விரித்த
தன் மொட்டை மாடிக் களத்தை’
– தேவதேவன்
**
ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். தனக்குத் தெரிந்ததையெல்லாம் (தெரியாததையும் தெரிந்துகொண்டு) தம் மாணாக்கர்களுக்குச் சொல்லித்தந்து தன்னைத் தாண்டிச் சென்று அவர்கள் சாதிக்க வேண்டுமென நினைப்பவர்கள். அதனால்தான் மாதா பிதாவுக்கு அடுத்தபடியாக தெய்வத்துக்கு முன்னதாக குருவை வைத்துப் போற்றி வருகிறோம்.
எதுவும் தெரியாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அகரத்தில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக சொல்லித்தந்து குழந்தைகள் அதனை கற்கக் கற்க மகிழ்ச்சி கொள்ளும் ஆசிரியர்கள் அதனை வெறும் தொழிலாக மட்டும் செய்வதில்லை. சேவையாக, கடமையாக, பெருமையாக (இன்றைக்கது மாறிவிட்டது வேறுகதை!).
கற்றுத்தரும் உயரியப் பண்பு எல்லோருக்கும் எளிதில் வாய்த்துவிடாது. சிலருக்கு மட்டுமே வாய்ப்பது. அதில் எப்போதும் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள், முக்கியமானவர்கள்.
கௌதம புத்தரின் பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது.
‘மகிழ்ச்சியும் ஞானமும் மற்றவர்களுடன் பகிரப்படுவதால் ஒருபோதும் குறைவதில்லை. இன்னொருவருக்காக நீங்கள் ஏற்றி வைக்கும் தீபம் உங்கள் பாதையையும் ஒளியுள்ளதாக்கும்.’
ஆம்! ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் பாடப் புத்தகத்தில் இருக்கும் கல்வியை மட்டும் சொல்லித் தருவதில்லை. அதைத் தாண்டி இன்னும் சொல்லப்போனால் இவ்வாழ்க்கை மூலமாக தான் கற்றவற்றையும், நம்மை சுற்றியுள்ளவற்றிலிருந்து கற்கவேண்டியவற்றையும் சேர்த்து வாழ்க்கைக் கல்வியையும் கற்றுத் தருபவர்கள்.
பழங்காலத்தில் காடு படித்தல், போர்க்கலை பயின்றல், ஓவியம் சிற்பம் உள்ளிட்ட மற்றக் கலைகள் கற்றல் போன்றவற்றோடு சேர்த்து கல்வியையும் கற்றுத் தந்தனர். அப்படிக் கற்க அப்போதெல்லாம் மாணவர்கள்தான் ஆசிரியர்களைத் தேடிச் செல்ல வேண்டும். அங்கேயே தங்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்ய வேண்டும்.
ஆனால், இன்றைக்கு அப்படியல்ல. எங்கெங்கும் கல்விக்கூடங்கள், பயிற்சி நிலையங்கள். அதற்கும் மேலாக கற்றுத்தரும் ஆசிரியர்களே இன்றைக்கு வீடு தேடிவந்து கற்பிக்கும் சூழலும் உருவாகிவிட்டது.
ஆசிரியப்பணி என்பது ஓர் அறப்பணி. அவர்கள் வேலை வெறுமனே கற்றுத்தருவது என்பதைத் தாண்டி… மாணவர்களை நல்வழிப்படுத்துவது, வாழ்வின் மேன்மைக்கு அழைத்துப் போவது, இன்னும்.
ஆம்! எத்தனையோ ஆசிரியர்களை கடந்து வந்தாலும் சில ஆசிரியர்கள் மட்டும் மனத்தில் நீங்காத இடம் பிடித்துவிடுவார்கள். காரணம், அவர்களது அர்ப்பணிப்பும் நன்னடத்தையும் கற்பிக்கும் திறனும்தான்.
அப்படியோர் ஆசிரியரை நான் பார்ப்பேன் என்றும் அவர்தான் என் முதல் ஆசிரியராக இருப்பார் என்றும் நிச்சயம் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன்.
அவரை ஐந்து வயதாக இருக்கும்போது பள்ளிக்கூடத்தில் சேர்க்கக் கூட்டிப் போன ஐயாவின் பின்னால் மறைந்திருந்து தான் முதல் தடவையாகப் பார்த்தேன். ஆசிரியர் என்றாலே அடிப்பார்கள், மிரட்டுவார்கள், கொடுமையானவர்கள் என்ற என் அப்போதைய புரிதலுக்கு அப்படியே நேரெதிராக இருந்தார்.
சாந்தமான முகம். அதிலெப்போதும் அரும்பியிருக்கும் மென் புன்னகை. நடுத்தர உயரம். மாநிறம். அவர் அணிந்திருக்கும் நேர்த்தியான உடை.
அவர்தான் எங்கள் ஊர் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர். எல்லோரும் ‘பெரிய வாத்தியார்’ என்று அன்போடு அவரை அழைப்பார்கள். திருவண்ணாமலையிலிருந்து தினந்தோறும் பேருந்தில் வந்து செல்பவர். வரும்போதெல்லாம் குறைந்தது நான்கைந்து மண் பலகையோடுதான் (அப்போதெல்லாம் மண் பலகைதான்) வருவார். யாரிடம் எழுத பலகை இல்லையோ தேடிச்சென்று தருவார். அதோடு பல்பம் கட்டுக்கட்டாக வாங்கி வந்து மாணவர்களுக்குத் தரச்சொல்லுவார்.
முதல்நாள் வகுப்பு நன்றாக நினைவில் உள்ளது. பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர்ந்தால் உடன் படிக்கும் மாணவர்களுக்கு மிட்டாய் தருவது வழக்கம். அன்றைக்குப் புதிதாக பள்ளிக்குப் போன எனக்கு மிட்டாய் தரும் அளவுக்கு வசதியெல்லாம் கிடையாது. அதை ஏற்கனவே தெரிந்திருந்தவர் எனக்குத் தெரியாமல் யாரிடமோ சொல்லி ஒரு பாக்கெட் மிட்டாய் வாங்கி வரச்சொல்லி என்னை தனியாகக் கூப்பிட்டு,
”இதப் போய் எல்லாருக்கும் கொடு..’’ என்றார்.
நானும் வாங்கிக் கொண்டு போய் எல்லோருக்கும் கொடுத்தேன்.
பின் அதை மாலை வீட்டிற்குச் சென்றதும் ஐயாவிடம் சொல்ல,
”நம்ம ஊருப் புள்ளிங்களுக்கெல்லாம் அவருதான் கடவுளு..’’ என்றார்.
அதுமுதல் அவரை இன்னும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது.
தினந்தோறும் பலகைகள் வாங்கி வந்து தருவது மட்டுமல்லாமல், என்னையும் என் இன்னொரு நண்பனையும் அழைத்து எங்களிடம் நாலணா இல்லையென்றால் 50 பைசா, சிலநாள் ஒரு ரூபாய் கொடுத்து,
”இந்தாங்க இதுக்கு போய் முட்டாய் வாங்கி ஆளுக்கொண்ணு எடுத்துக்கிட்டு, யார் யார்லாம் பள்ளிக்கூடத்துக்கு வரலையோ போய் கொடுத்துக் கூட்டிட்டு வாங்க..’’ எனச் சொல்லி அனுப்புவார்.
நானும் நண்பனும் ஐந்து பைசா மிட்டாய் வாங்கி ஆளுக்கொன்று வாயில் போட்டுக்கொண்டு வராத மாணவர்கள் ஒவ்வொருவர் வீடாக, சில நேரம் அவர்களது நிலத்துக்குக் கூட சென்று மிட்டாய் கொடுத்து,
”பெரிய வாத்தியாரு கையோடக் கூட்டுனு வர சொன்னாரு…’’ என கிளப்பிக் கூட்டி வருவோம்.
எங்களூர் பள்ளிக்கூடம் இருக்குமிடம் அவ்வளவு அழகாக இருக்கும். இரண்டு பக்கம் வீடுகளும், முன் பக்கம் சிறு மைதானமும் அதை ஒட்டிய சாலையும், வலது பக்கம் மசூதியும் கடைகளும் இருக்கும்.
அப்போதெல்லாம் பள்ளிக்குச் சுற்றுச்சுவரெல்லாம் கிடையாது. அதனால் எந்தப்பக்கத்தில் இருந்துவேண்டுமானாலும் எளிதில் வரலாம், போகலாம்.
பள்ளியின் முன்புள்ள மைதானத்தின் ஓரத்தில் அருகருகில் ஓர் ஆலமரமும் வேப்பமரமும் இருக்கும். வாரத்தில் ஒருநாள் மாலை அம்மரத்தடியில் எங்களை உட்கார வைத்து,
”எல்லாரும் கைகட்டி வாய்மேல விரல் வைங்க..’’ என்பார், செய்வோம்.
”இதென்ன?”
பாக்கெட் நிறைய மிட்டாய் காண்பித்து கேட்பார். யாவரும் உரக்கக் கத்தி, ”முட்டாயி..’’ என்போம்.
உடனே, ”இதெல்லாம் யாருக்கு?” என்பார்.
”எங்களுக்கு” சிலர், ”எனக்கு” எனச் சொல்லிக் கத்துவோம்.
”எல்லாமே உங்களுக்குத் தான்…
“இன்னிக்கி உங்களுக்கு ஒரு மந்தரவாதி கதை சொல்லப் போறன். அமைதியா எல்லாரும் கேட்டிங்கன்னா கதை முடிஞ்சதும் மிட்டாய் தருவன்..’’ எனச் சொல்லிவிட்டு கதை சொல்லுவார்.
கதை கேட்கிறோமோ இல்லையோ மிட்டாய்க்காகக் கேட்பதுபோல் தலையாட்டுவோம்.
உண்மையில் அவர் அவ்வளவு அழகாக கதை சொல்லுவார். அதோடு அழகாக பாட்டும் பாடுவார். அன்றைக்கவர் பாடிய ஓதாமல் ஒருநாளும், ஆத்திசூடியும் இன்னும் நினைவில் உள்ளது.
வருடத்தில் ஒரு தடவை இலவச பாடப்புத்தகங்கள், ஆடைகள் தருவது போன்று அப்போதெல்லாம் காலணியும் தருவார்கள். உடுத்தும் ஆடை என்றாலே நான் உட்பட எங்கள் அண்ணன்கள் நால்வருக்கும் பள்ளிக்கூட ஆடைதான்.
புத்தாடைகள் என்பது அப்போது பெருங்கனவு. அதிலும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொங்கலுக்கு வாங்கித் தருவார்கள். அதுவும் ஐந்து பேருக்கும் ஒரே மாதிரி பூப்போட்ட சட்டையும் மண் பட்டால் தெரியாதது போன்ற வண்ணத்தில் டவுசரும்.
ஆனால் பள்ளிக்கூடத்தில் காக்கி டவுசரும் வெள்ளைச் சட்டையும் வருடந்தோறும் தவறாமல் வந்துவிடும். அதிலும் அவர் என் உட்பட நான்கைந்து பேரின் குடும்ப வறுமை நன்கறிந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் தந்துவிட்டு மீதமாகும் உடைகளில் ஒன்றிரண்டு உடைகள் கூடுதலாகத் தருவார். அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொள்வோம்.
பள்ளிக்கூடம் செல்லும்போது மட்டுமல்ல… ஊரில் சுற்றித்திரியும் போதும் பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் தந்த காக்கி டவுசரோடுதான் சுற்றித்திரிவேன். அதிலும் அவ்வாடைகள் மிக எளிதில் கிழிந்து விடக்கூடியது. குறிப்பாக டவுசரின் பின்பக்கத்தில்.
அப்படிக் கிழிந்துபோன டவுசரை (அதனை டப்பால் டவுசர் என்போம். அதாவது தபால் போடும் ஓட்டை போன்று இருப்பதால் அப்பெயர்) கூட போட்டுக் கொண்டு பல நாட்கள் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். அப்படியொரு நாள் சென்றபோது உடன் படிக்கும் மாணவர்கள்,
‘ஹே ஹே, டப்பால் டவுசரு… ஹே ஹே, டப்பால் டவுசரு..’ எனச் சொல்லி கிண்டல் செய்வதை தூரத்திலிருந்து பார்த்து விட்டார். உடனே என்னைக் கூப்பிட்டு,
”எங்க திரும்பு..’’ என்றார். திரும்பி நின்றேன்.
”ஏன் கிழிஞ்சிப் போன டவுசரப் போட்டிருக்க?” என்று கேட்டார்.
எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றேன். உடனே பீரோவைத் திறந்து அதிலிருந்து ஒரு புது டவுசரை எடுத்துக் கொடுத்து,
”இப்பவே வீட்டுக்குப் போயி மாத்திட்டு வா..’’ என்றார்.
இப்படி அவரிடம் பள்ளிக்கூட உடைகளும் மண் பலகையும் பல்பமும் அதிகம் வாங்கிய மாணவன் பள்ளியிலேயே நானாகத்தான் இருப்பேன்.
அதிலும் அப்போதெல்லாம் கடைக்குப் போய் மிட்டாய் வாங்கித் தின்பதென்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். அப்படியே போனாலும் ஐந்து பைசா, பத்து பைசா, அதிகபட்சம் 25 பைசா, 50 பைசாவோடுதான் போவேன். ஆனால் அவர் கிட்டத்தட்ட தினந்தோறும் காசு கொடுத்து மிட்டாய் வாங்கித் தின்னச் சொல்வார்.
பதிலாக பள்ளிக்கு வராத மாணவர்களைக் கூட்டி வருவது, பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை மாணவர்கள் நான்கைந்து பேரோடு சேர்ந்து பொறுக்குவது, கரும்பலகைக்கு கோவக்கரி பூசுவது, மாணவர்களை வகுப்புகளில் பேசாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வது, அவர்களுக்கு ஏதேனும் கதை சொல்வது, இப்படி எதையாவது செய்யச் சொல்வார். செய்வேன்.
அப்போது நான் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தேன். என்னையும் உடன் படிக்கும் இன்னொரு நண்பனையும் கூப்பிட்டு ஐந்தாம் வகுப்பு படிக்கும் இன்னும் இருவருடன் எங்களை அனுப்பி பள்ளியில் உள்ள கரும்பலகைக்கு கோவக்கரி பூசச் சொன்னார்.
கரும்பலகையில் நன்றாக எழுத வேண்டும் என்பதற்காக இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கோவக்கரி பூசுவது எங்கள் பள்ளியில் வாடிக்கை.
அன்றப்படி நாங்கள் சென்று சாலையோரத்தில் உள்ள வேப்ப மரத்தில் தொங்கிய கோவைக் கொடியிலிருந்து பழங்களைப் பறித்து சாப்பிட்டுவிட்டு, அதன் இலைகளை எடுத்து வந்து பள்ளிக்குப் பின்புறம் உள்ள பெரிய தட்டையான பலகைக் கல் மீது வைத்து, அத்துடன் அடுப்புக்கரி சேர்த்து இன்னொரு உருண்டையான பெரிய கொய்யாங்கல் கொண்டு நசுக்கினோம்.
நன்கு நசுக்கி பொடிப்பொடியாக (சற்று கொழகொழப்பாக) ஆனதும் அவற்றை எடுத்துச் சென்று கரும்பலகையில் தேய்த்தோம். உடனே கரும்பலகை கருப்பானதோடு, மிருதுவாகவும் புத்தம் புதியது போன்றும் ஆனது. அதுமுதல் அப்பணி எனக்கு வழங்கப்பட்டது.
இப்படி பள்ளியில் பல பணிகளை அவர் எனக்கு வழங்கியிருந்தார். அதில் மிக முக்கியமான ஒன்று, சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வரும் ஊர்த் தலைவரை வரவேற்று வணக்கம் வைத்து அன்றைய தின வழிபாட்டுக் கூட்டத்தை வழிநடத்தும் பொறுப்பு.
அதனை நன்றாக செய்ததால் எனக்கு சிறிய Oxford Dictionary ஒன்று வாங்கித் தந்து,
”இது ஒன்னோட good performance-க்கு நான் தர்றப் பரிசு. இதுமாதிரி வருங்காலத்துல நறயப் பரிச நீ வாங்கணும். அதான் என் ஆசை..’’ என்றார்.
அப்போது எங்களுக்கு Dictionary என்றால் என்னவென்றே தெரியாது. அதிலும் அது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்ததால் ஏதோ பெரிய படிப்பு படிப்பவர்கள் படிப்பதென நினைத்துக்கொண்டு பள்ளியில் ஒரு மாணவர் விடாமல் காட்டி மகிழ்ந்தேன்.
அதன்பிறகு ஒருநாள் உடம்பு சரியில்லாமல் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டில் இருந்த என்னைக் கூட்டிப்போக இரண்டு மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் எனக்கு உடல்நலம் சரியில்லை என சொல்லி அனுப்பியதும் அவர்கள் சென்று பெரிய வாத்தியாரிடம் சொல்லி விட்டார்கள். உடனே அவர் கிளம்பி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்.
வந்தவர் என்னிடம் பிஸ்கட் பாக்கெட்டும் ஒரு பன்னும் தந்துவிட்டு, படுத்திருந்த என் நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்து பார்த்துவிட்டு,
”நல்லா ரெஸ்ட் எடு. நாளான்னிக்கி சனிக்கிழமை நாராயணக்குப்பம் ஸ்கூலுக்கு (எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) Talented Program-க்குப் போறோம். உனக்கு சரி ஆச்சின்னா வா. இல்லனா அடுத்த வாரம் தண்ராம்பட்டு ஸ்கூலுக்குப் போவோம், அப்ப வா..’’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
அவர் சென்ற கொஞ்ச நேரத்திலேயே எழுந்து உட்கார்ந்து,
”எனக்கு ஜொரம் சரியாய்டிச்சு, நான் ஸ்கூலுக்குப் போறன்..’’ என பையை எடுத்து மாட்டிக் கொண்டு போனவன் நேராக அவரிடம் சென்று,
”ஜொரம் எனக்கு சரியாய்ச்சு சார். நாளான்னிக்கி நானும் வரன். கத சொல்லப்போறன்..’’ என்றேன்.
”எங்க கிட்ட வா..’’ என என்னை அருகில் அழைத்து நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துப் பார்த்துவிட்டு,
”ஆமாம், அதுக்குள்ள சரியாயிடுச்சு. சரி என்ன கதை சொல்லப் போற?” என்றார்.
”மந்திரவாதிக் கத’’ என்று சொன்னதும்,
கதையை சொல்லச் சொன்னார். நானும் சொன்னேன். கேட்டுவிட்டு,
”ரொம்ப நல்லாருக்கே. யார் சொல்லித் தந்தது?” எனக் கேட்டார்.
”எங்க ஐயா சொன்னாரு..’’ என்றதும்,
”சூப்பர். ஒனக்குதான் ஃபர்ஸ்ட் பிரைஸ் கெடைக்கும்..’’ என தட்டிக் கொடுத்து அனுப்பினார்.
அடுத்தநாள் காலையில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் ஒன்றாக உட்கார வைத்து,
”நாளக்கி நம்ம ஸ்கூல்லயிருந்து முப்பது பேர் நாராயணக்குப்பம் ஸ்கூல்ல நடக்கப்போற Talented Program-ல கலந்துக்கப் போறாங்க. நம்ம சுத்துவட்டத்துல இருக்க எல்லா ஸ்கூல்ல இருந்தும் நம்மளமாதிரி வந்து கலந்துப்பாங்க. அதுல நம்மப் பள்ளிக்கூட மாணவர் வடிவரசு கதை சொல்லப் போறார். அந்தக் கதைய இப்போ இங்க எல்லார் முன்னாடியும் சொல்லுவார்..’’ என சொல்லிவிட்டு என்னை வருமாறு அழைத்தார்.
மகிழ்ச்சியோடு சென்ற எனக்கு அவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் பயந்து நடுங்க ஆரம்பித்தது. எவ்வளவு முயன்றும், ‘ஒரு ஊர்ல… ஒரு ஊர்ல..’ தாண்டி ஒரு வார்த்தையும் வரவில்லை.
நான் பயந்து நடுங்குவதைப் பார்த்தவர் அருகில் வந்து,
”நம்ம ஸ்கூல்ல நீ ரொம்பப் தெறமயான மாணவர். உன் பக்கத்துல வேண்னா நான் நிக்கிறன். உன்னால முடியும். பயப்படாம நேத்து என்கிட்ட சொன்னத அப்படியே எல்லார் முன்னாடியும் சொல்லு. வேணுன்னா நான் உனக்கு முன்னாடிப் போய் உக்காந்துக்கறன்..’’ என சொல்லிவிட்டு, முன் வரிசையில் போய் மாணவர்களோடு மாணவராக கீழே உட்கார்ந்துகொண்டார்.
ஒருவழியாக தைரியம் வந்து முன்தினம் அவரிடம் சொன்னதைவிட இன்னும் நன்றாகவே கதையை சொல்லி முடிக்க எழுந்து நின்று கை தட்டினார். அவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் கை தட்டினார்கள். சந்தோஷத்தில் என்ன செய்வதென தெரியாமல் அழ ஆரம்பித்துவிட்டேன்.
”ஏ என்னாச்சு..” என அருகில் வந்தவர், தன் பாக்கெட்டிலிருந்து புது ஹீரோ பென்னை எடுத்து அனைத்து மாணவர்கள் முன்னாலும்,
”இந்தப் பரிச வடிவரசுக்கு இப்போ தரப்போறன். இதுமாதிரி இனி வருசா வருசம் ஒரு ஹீரோ பென் தருவன். அத உங்கள்ல யார்லாம் வாங்க போறீங்கன்னு பாக்கலாம்..’’ என்றார்.
அவர் சொன்னது போல் அடுத்தநாள் நடந்தப் போட்டியில் கதைசொல்லி முதல் பரிசு வாங்கி வந்தேன். பத்து ரூபாய் பணமும், Geometry box பரிசையும் நேராக அவரிடம் எடுத்துச் சென்று காட்டினேன்.
”வெரிகுட். இப்படித்தான் எப்பவும் இருக்கணும்..’’ என தட்டிக் கொடுத்தார்.
அவரை பிடிக்காத மாணவர் என ஒருவர் கூட பள்ளியில் இருக்க மாட்டார்கள். அதோடு ஊரில் உள்ள அனைவருக்கும் அவரை தெரியும். காரணம் அவர் இன்றைக்குள்ள ஆசிரியர்கள் போன்று கடமைக்கு வந்து புத்தகத்தில் இருப்பதை மட்டும் சொல்லித் தந்துவிட்டு மாதந்தோறும் சம்பளம் வாங்கிப்போகும் ஆசிரியராக இல்லாமல் ஒவ்வொரு பிள்ளைகளின் குடும்ப சூழலையும் நன்கறிந்தவர்.
அதோடு அவர்களுக்கு என்ன தேவை என தேடிப்போய் தருபவர். பாடப்புத்தகத்தைத் தாண்டி மரம் செடி கொடி பறவைகள் என பலவற்றையும் பற்றிப் பேசுபவர்.
அத்தனைக்கும் மேலாக டவுசரில் பின்பக்க கிழிசலோடு வரும் யாரையும் பார்க்க விரும்பாதவர். அப்படிப் பார்த்தால் உடனே அழைத்து புது டவுசர் தந்து வீட்டுக்குப் போய் மாற்றிவிட்டு வரச்சொல்பவர்.
இன்னும் சொல்லப்போனால் தன் சம்பளத்தில் முக்கால் வாசிக்கும் அதிகமாக பள்ளிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்குமே செலவழிப்பவர்.
ஆம்! அவர் வெறும் ஆசிரியராக மட்டும் இருக்கவில்லை. எங்களுக்கெல்லாம் கல்வியையும் வாழ்க்கையையும் ஒருங்கே சொல்லித்தரும் இன்னொரு தந்தையாக இருந்தார்.
அவரால் பள்ளிக்கு வந்தவர்கள்தான் அதிகம். அவரால் படித்து உயர்ந்தவர்கள்தான் அதிகம். அவரால் கல்வியைத் தாண்டி மனிதத்தை சமத்துவத்தை அன்பை உதவும் குணத்தை கற்றவர்கள்தான் அதிகம்.
இத்தனைக்கும் அவரோர் இஸ்லாமியர். அதனை ஒருநாள் கூட பள்ளியில் காட்டிக்கொண்டதில்லை. அவரைப் பொறுத்தவரை எப்போதும் எதிலும் அனைவரும் சமம். அவ்வளவே!
அடிக்கடி ஒரு விஷயத்தை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
”நாம எல்லாரும் இங்க ஒரு வசதியும் இல்லாம கிராமத்துல உட்காந்துப் படிச்சிட்டிருக்கோம். அங்க டவுன்ல எல்லா வசதியோட ஒரு கூட்டம் சுகமாப் படிச்சிட்டிருக்கு. அவங்கக் கூட போட்டிப் போட்டு நாளிக்கி ஜெயிக்கிறதுக்கு உங்கக் குடும்பத்தோட வறுமைய நெனச்சி ஒவ்வொருத்தரும் நல்லாப் படிக்கணும். வசதியை விட வறுமைதான் அதிக திறமைசாளிகள உருவாக்கும். இதை மட்டும் எப்பயும் மறந்துறாதீங்க பிள்ளைங்களா..’’
அவர் சொல்லி மட்டும் இதனை குறைந்தது ஐம்பது தடவையாவது கேட்டிருப்பேன். அவர் சொன்ன அவ்வார்த்தைகள் தான் பள்ளியில் சராசரி மாணவனாக இருந்தவனை கல்லூரியில் முதல் மாணவனாக வரவழைத்தது. முதுகலைப் படிப்பை இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான லயோலாவில் படிக்க வைத்தது. விகடனில் ஆறு மாதக் காலத்தில் 150-க்கும் அதிகமானக் கட்டுரைகள் எழுதி ‘தலைசிறந்த மாணவ நிருபர் விருது’ வாங்க வைத்தது.
இப்போது சமூகம் சார்ந்த தனிப்பாடல்கள் எழுதவும், திரைப்பாடல் துறையில் பெருங்கனவு நோக்கி நடைபோடவும், எழுத்துலகில் நம்பிக்கையுடன் காலூன்றவும் வைக்கிறது. இன்னும் இன்னும் செய்யவும் சொல்கிறது.
ஆம்! ஆசிரியர்கள் வெறும் ஆசிரியர்கள் மாத்திரமல்லர். தாயைப் போல பூமிக்கு வந்த கண்முன் தெரியும் தெய்வங்கள். அவர்கள்தான் நம் அறிவுக்கண்ணை திறந்து வைக்கிறார்கள். அவர்கள்தான் நம்மை உடன் இருந்தும் இல்லாமலும் வாழ்வின் கடைசி மூச்சுவரை வழி நடத்துகிறார்கள்.
இளங்கலை முதலாமாண்டு படிக்கும்போது முதன்முறையாக என் வாழ்நாளில் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கியதும் முதலில் நினைவுக்கு வந்தது அவர்தான். அவரை சந்தித்து இதனை சொல்ல வேண்டுமென்றும் அதோடு இனிவரும் காலங்களில் அனைத்து தேர்விலும் நான்தான் முதல் மாணவனாக வருவேன் என்றும் சொல்ல நினைத்து இன்னோர் ஆசிரியருக்கு அழைத்து திருவண்ணாமலையிலுள்ள அவர் வீட்டு முகவரியைக் கேட்ட எனக்கு, முகவரிக்குப் பதிலாக அவரது மரணச் செய்திதான் கிடைத்தது.
”ஆமா, அவர் இறந்து இப்போதான் ஒரு மாசம் ஆகுது” என்றார்.
அதோடு, ”கடைசி காலத்துல அவரோட தொண்டையில ஏதோப் பிரச்சினை வந்து பேசுனா குரல் வெளியில கேக்காமப் போச்சு’’ என்றும் சொல்ல, கண்கலங்கி விட்டேன்.
எத்தனை ஆயிரம் மாணவர்களின் காதில் ஒலித்தக் குரலது? எத்தனை பேரின் வாழ்வில் ஒளியேற்றியக் கரமது?
அவரது புன்னகை, முதல்நாள் எனக்காக வாங்கித் தந்த மிட்டாய், என்னை தட்டிக் கொடுத்தது, ஹீரோ பென், oxford dictionary, என் வறுமையை விரட்டக் கொடுத்த உடைகள், பலகைகள், பல்பங்கள் யாவும் கண்முன் வந்துபோனது.
கடைசியாக அவரது முகத்தை ஒரு தடவைகூட பார்க்க முடியாமல் போய்விட்டது என மனது அடித்து துடித்தது. தனியாக நடந்து சென்று ஓரிடத்தில் உட்கார்ந்து என்னையறியாமல் தேம்பித் தேம்பி அழுதேன்.
அவரென் இன்னொரு தந்தையல்லவா? என் முதல் பள்ளிக்கூட ஆசிரியர் அல்லவா? ஆம்! ஆம்!
இந்தக் காலம் போடும் கணக்குக்கு முன்னால் மனிதர்களின் கணக்குகள் செல்லுபடியாகாது என்பதை நான் நன்கறிவேன் என்றபோதும் மனத்துக்கு மிக நெருக்கமானவரின் இழப்பை வெகு சீக்கிரத்தில் ஏன் இந்தக் காலம் தயவு தாட்சண்யமின்றி நிகழ்த்தி விடுகிறதென்றக் கோபம் எப்போதும் எனக்குண்டு.
தன் வாழ்வு முழுக்க பிறர் நலனையே எண்ணியவர். பிறருக்காக வாழ்ந்தவர். பிறரது சிரிப்பிலே தன் சிரிப்பைக் கண்டவர். அப்படிப்பட்டவரை ஏன் இக்காலம் அவ்வளவு சீக்கிரத்தில் இல்லாமல் ஆக்க வேண்டும்?
ஏ… காலமே! நீ அவரை, அதாவது அவரது உடலை இல்லாமல் ஆக்கியிருக்கலாம். ஆனால் அவர் நிகழ்த்திவிட்டுப்போன மேன்மைகளை உன்னால் இல்லாமல் செய்ய முடியுமா? அவர் உருவாக்கிப்போன ஆயிரமாயிரம் பேர் இதோ உன் முன்னால் இருக்கிறோம். எங்களுக்குப் பின் நாங்கள் உருவாக்குபவர்கள் இருப்பார்கள். அவர்களுக்குப் பின் அவர்கள் உருவாக்குபவர்கள். எங்கள் எல்லோருக்குள்ளும் அவர் இல்லாமல் இருப்பார், உன்னால் என்ன செய்ய முடியும்?
என் முதல் புத்தகம் வெளியான பிறகு அப்புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கவாவது அவர் இருந்திருக்கலாம், இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார் என்று தோன்றியது.
ஆம்! ஆசிரியர்கள் மட்டும்தான் தன் மாணவர்களின் உயர்வு தாழ்வு அனைத்துக்கும் பொறுப்பேற்பார்கள். அவ்வகையில் என் வாழ்வின் உயர்வுகள் அனைத்துக்கும் அவரும் பொறுப்பாவார்.
அவரது தியாகத்தையும் அற்பணிப்பையும் ஒரு மாணவனாக இன்று மட்டுமல்ல… எப்போதும் நெஞ்சில் நிறுத்தி வணங்குவேன்; போற்றுவேன்.
ஒரு மாணவனால் தன் ஆசிரியருக்கு இதைவிட வேறென்ன பெரிதாக செய்துவிட முடியும்?!
(ஏப்ரல் 17, 2020)
*