அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 21 : மணவினா

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 20 : எதிர்பாட்டு
அன்புள்ள ஐயாவுக்கு,
ஒருநாள் உங்களுக்கு கடும் காய்ச்சலென்று எங்கும் வெளியில் போகாமல் கட்டுத்தெருவில் போட்டிருந்த கட்டிலில் போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தீர்கள்.
அந்நேரம் பார்த்து யாரோ ஒரு வயதான பாட்டி, தன் மாட்டுக்கு ஏதோ பிரச்சனையென்று சொல்லி, கையோடு மாட்டையும் பிடித்துக்கொண்டு உங்களைத் தேடி வந்திருந்தார்.
அம்மா அவரிடம்,
”அவுரு ஒடம்பு சரில்லாம படுத்துனுர்க்காரு. போய் பொறக்கி மேல வர்றீங்களா?’’ என்று சொல்வதைக் கேட்டுவிட்டு,
மெல்ல எழுந்து கட்டுத்தெருவிலிருந்து வெளியில் வந்து, வாசலருகே நின்று அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் அப்பாட்டியையும், அவரது மாட்டையும் பார்த்துவிட்டு, மாட்டுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லாமலேயே யூகித்தவராய் அருகில் போய், மாட்டை தொட்டுக் குனிந்து அதன் அடிப்பகுதியையும், வாலைத் தூக்கி மலதுவாரத்தையும் பார்த்துவிட்டு,
”மாட்ட இங்கயே ஓரமா கட்டிட்டி, வூட்டுக்கு போய் மத்யானமா வாங்க. நான் அதுக்குள்ளார போய் மர்ந்து பறிச்சினு வந்துர்றன்..’’ எனச் சொல்லிவிட்டு,
தெருவில் இறங்கி கிழக்கு நோக்கி நடந்த உங்களுடன்… அருகில் ஆட்டுப் பட்டிக்குள் உட்கார்ந்து என் சிறுகொடுவாளை கொண்டு, நீங்கள் முன்தினம் வெட்டிவந்த விறகிலிருந்து இருவிரல் அளவுள்ள ஒரு நேரான துரிஞ்சிக்குச்சியை எடுத்து வட்டவட்டமாக தோலுரித்து வர்ணக்கோல் செய்துகொண்டிருந்த நான், அப்படியே போட்டுவிட்டு எழுந்து பின்னாலேயே ஓடி வந்து சேர்ந்துகொண்டேன்.
இரு தினங்களாக விடாமல் பெய்த மழையின் ஈரம் தெருவெங்கும் நிறைந்திருந்தது. முனையில் கம்பத்தருகில் போய் வலதுபக்கம் திரும்பி சின்னக்கோனார் வீட்டு சந்தில் நுழைகையில் சரியாக ஊரப்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பத்துமணிப் பேருந்து போர் மேடேறி சத்தம்போட்டபடி நம்மூருக்குள் நுழைந்துகொண்டிருந்தது.
நேராக முத்துகிருஷ்ணன் அண்ணன் நிலத்து வழியாக நடந்து, குட்டைக் கிணறு தாண்டி, வேடியப்பன் கோயில் – சோமாசம் பாறை – படி சுனை – கந்தக்கோனார் கிணறு – அஜ்ஜில்லா பாய் தென்னந்தோப்பு வழியாக நடந்து, பாம்பாறு அருகிலுள்ள பீவேலம் புதர்களடர்ந்த கரம்புக் காட்டுக்குள் நுழைந்து போய், ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் குமுட்டிக்காய் இலைகள் போன்றிருக்கும் ஏதோவொரு கொடியிலிருந்து இளம் இலைகளாப் பார்த்து இரண்டு மூன்று கைப்பிடி அளவுக்குப் பறித்து, தோள்மீது போட்டிருந்த துண்டில் வைத்துக் கட்டி முடிபோட்டுக்கொண்டு ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தீர்கள்.
மேற்கில் எங்கோ மலையில் முன்னிரவு பெய்த மழைநீர் வெள்ளம் பாம்பாற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வேகவேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் அங்கங்கே நடுநடுவில் சிறுசிறு மரங்களும், குச்சிகளும், கொடிகளும், இலைகளும், பூக்களும், காய்களும் அடித்துப்போவது நன்றாகத் தெரிந்தது.
சற்றுதள்ளி மறுகரையில் அழுக்கான வேட்டி கட்டிக்கொண்டு, சட்டை போடாத தாடிவைத்த முதியவர் ஒருவர்… ஒரு கையில் கோலுடனும், இன்னொரு கையில் சிறு டீப்பனுடனும் ஆற்றோர அவிஞ்சி மரத்து நிழலில் நின்றுகொண்டு, அருகில் கூட்டமாக மேயும் வெள்ளாடுகளையும் நம்மையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தார்.
வழியில் பூத்திருந்த பெரிய காலான் ஒன்றையும், அதன் பக்கத்தில் சற்றுதள்ளி மண்ணோடு சேர்ந்ததுபோல் லேசாக வெளிவந்து முழுதும் பூக்காதிருந்த சிறுகாளானையும் பிடுங்கிக்கொண்டு, உங்கள் பின்னாலேயே நடந்து அங்கங்கே தேங்கி நிற்கும் மழைநீரையும், வேறு எங்கேனும் காளான்கள் பூத்திருக்கிறதா என்று பார்த்தபடியும் வந்துகொண்டிருந்தேன்.
அஜ்ஜில்லா பாய் தோப்புக்குள் நுழைந்து, மறுபக்கம் வரிசையாக நின்றிருக்கும் பனை மரத்தோர மரிசியில் நடந்து, வண்டிப்பட்டை தாண்டி கந்தக்கோனார் கிணற்றருகில் போகும்போது,
”ஐயா..’’ என்றேன்,
முன்னால் எதையோ யோசித்தபடி நடந்துபோகும் உங்களைப் பார்த்து.
மெல்ல நின்று என்னை திரும்பிப் பார்த்த நீங்கள், ‘என்ன?’ என்பதுபோல் தலையாட்டிக் கேட்டீர்கள்.
”ஏன்ய்யா ஒடம்பு சரில்லாதப்பயும்… இவ்ளவு தூரம் நடந்து வந்து மாட்டுக்கு எல பறிச்சினுப் போற?’’
என் கேள்வியைக் கேட்டு மெல்ல சிரித்துவிட்டு,
”எனுக்கு ஒடம்பு சரில்லன்றதுக்காக கண்ணு முன்னாடி ஒரு வாயில்லா ஜீவன் கொஞ்ச கொஞ்சமா செத்துனுர்க்கறத பாத்துனு சும்மார்க்க சொல்றீய்யா..’’ என்று,
நான் சற்றும் எதிர்பார்க்காத வார்த்தைகளைச் சொன்ன நீங்கள்,
”நம்மள நம்பி மாட்டப் புடிச்சினு வந்திர்க்காங்க. அவங்ககிட்டப் போய் எனக்கு ஒடம்பு சரில்ல நாளிக்கி வான்னு சொல்லமுடிமா? இல்ல… மாட்டுக்கு வந்திர்க்க நோவுதான் அதக் கேட்டு ஓடிப் போயிருமா?’’ என்று சொல்லியபடி,
அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு,
”என்னிக்கும் நம்முளுக்காக யாரயும் எதுக்கும் காக்க வக்கக்கூடாது. நம்முளுக்கு தெரிஞ்சத சொல்லவும் செய்யவும் யோசன பண்ணக்கூடாது. வேற யார்னா மாட்டப் புடிச்சினு வந்திர்ந்தா… எடத்தயும் கொடியோட அடயாளத்தயும் சொல்லி அனுப்பிர்க்கலாம். அந்தம்மா வயசானவங்க… என்ன பண்வாங்க பாவம். அதான் மனசு கேக்காம ஏன்ச்சி வந்ட்டன்..’’ என்றதும்,
சற்று தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்த நான், பக்கத்தில் வந்து உங்கள் கையை பிடித்துக்கொண்டு,
”இப்ப ஜொரம் எப்டிர்க்குய்யா… பரவால்லயா..?’’ என்றேன்.
என்னையும், என் முகத்தையும், நான் பரிவுடன் கேட்பதையும் பார்த்த நீங்கள்… என் கையை பிடித்து,
”இவ்ளோ தூரம் நடந்து வந்திர்கன்ல்ல… கொஞ்ச கொஞ்சமா கொறஞ்சிர்ச்சி. சோமாசம் பாற ஏறி எறங்கனா மீதியும் போயிரும் வா போலாம்..’’ என்று சொல்லி சத்தமாக சிரித்துவிட்டு,
முன்னைவிட சற்று வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தீர்கள்.
கடந்த ஒருவாரமாக ஏனோ இச்சம்பவம் அடிக்கடி நினைவுக்கு வருகிறதய்யா. கூடவே… தாங்கள் சொன்ன,
‘எப்பா… என்னிக்கும் நாம பொறந்த இந்த ஊர்க்கும், நம்மள சுத்தி இர்க்க மக்களுக்கும் நம்மளால முடிஞ்ச எதனா செஞ்சினே இர்க்கணும். அப்பதான் நாம நல்ல வாழ்க்க வாழறம்னு அர்த்தம்..’
இவ்வார்த்தைகளும். ஆம்! ஐயா.
தங்களைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும்.
‘எப்டி இந்த மனுசன் இவ்ளோ ஒழக்கிறாரு? அதும் இந்த 95 வயசுலயும் தெனம் காலில சீக்கறம் ஏன்ச்சி இவ்ளோ தூரம் நடந்துபோய் மாட்டப்புடிச்சிக் கட்றது, அதுக்கு தண்ணி வக்கறது, மரிசில இர்க்க பில்லுங்கள அருத்துனுப் போய் போடறது, வேளாவேளக்கி போர்ல இர்ந்து பில்லயும் கொடியயும் எடுத்துப் போட்றது, மோட்ரு போட்டு பயிருங்களுக்கு மடமாத்தி தண்ணிப் பாச்சறது, அது இதுன்னு எப்பயும் தன்னால முடிஞ்ச சின்னச் சின்ன வேலைங்கள செய்ய முடிது? யார் எப்ப வந்து ஆட்டுக்கும் மாட்டுக்கும் என்னப் பிரச்சனன்னு சொன்னாலும், ஒடனே மனசுக் கேக்காம பதறியடிச்சி அதுக்கான வைத்தியம் சொல்லி அனுப்றதும், முடிஞ்சா கூடவே போய் எல காய்ன்னு பறிச்சி தந்தனுப்றதும், அதுங்களுக்கு சரியானதும் சந்தோசப்படறதும்னு… எப்பயும் தன்னப் பத்தி மட்டும் யோசிக்காம மத்தவங்களப் பத்தியும், ஊர் மக்களப் பத்தியும், கூட இர்க்க ஆடு மாடுங்களப் பத்தியும், மரம் செடிகொடிகளப் பத்தியும் யோசிக்க முடிது? பெருசா சொத்து பத்து வசதி வாய்ப்புன்னு இல்லன்னாலும், எப்பயும் இர்க்கர்த வச்சினு சந்தோசமா வாழமுடிது?’
இப்படி ஏதேதோ யோசிப்பேன் ஐயா.
உடனே நீங்கள் எனக்கொரு நல்ல தந்தையாக, உயர் ஆசானாக, உற்ற நண்பனாக கிடைத்தது நினைத்து மகிழ்வும் பெருமையும் கொள்வேன் ஐயா. ஆம்!
என்னிடம் பெரிதாக எதையும் இதுவரை நீங்கள் கேட்டதில்லை. ஆனால் கேட்க நினைத்துக் கேட்காமல் அல்லது கேட்க நினைத்து தயங்கி கேட்க முடியாமல் இருக்கும் கேள்வி ஒன்றுண்டு என உங்களைப் பார்க்கும்போதெல்லாம் மனத்துக்குள் தோன்றுமய்யா. ஆம்!
‘ஒன் ஈடு பொறந்தவங்க, கூடப் படிச்சவங்க எல்லாரும் கல்லியாணம் பண்ணி கொழந்தக் குட்டியோட சந்தோசமா இர்க்காங்க. ஆனா நீ என்னடான்னா இன்னும் அதப்பத்தி யோசிக்காம இர்க்க. எப்பதான் கல்லியாணம் பண்றதா உத்தேசம்?’
சில கேள்விகள் கேட்டுத்தான் தெரியவேண்டும் என்பதில்லை. கேட்காமல் கூட நேசித்தவர்களால் மனத்தால் உணரமுடியும். அப்படித்தான் ஐயா, தங்களின் இக்கேள்வியை உணர்கிறேன்.
அடிக்கடி ஒன்றைச் சொல்வீர்கள்…
‘எப்பா… பொறந்தம் செத்தம்னு இல்லாம, நாம வாழ்ந்துட்டுப்போற இந்த வாழ்க்க மூலிமா, காலத்துக்கும் நம்மப் பேர் சொல்றமாரி எதனா செஞ்சிட்டு போவணும். அப்பதான் இந்த பொறப்பெடுத்ததுக்கான நோக்கம் நெறவாவும்..’
நான் நினைத்திருந்தால் என்னீடு பிறந்தவர்கள் போன்றும், என்னுடன் படித்தவர்கள் போன்றும் சட்டென ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொண்டு… வீடு, குடும்பம், குழந்தை, வேலையென அனைவர் மாதிரியும் வெகு சாதாரண ஒரு வாழ்வை என்னால் வாழ்ந்திருக்க முடியும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் மனம் சொல்வதைக் கேட்டு… என் வாழ்க்கைக்கான, என் இயல்புக்கான, என் கனவுக்கான, என் பாதைக்கான சரியான ஒருத்தியை இணைவியாக கரம்பிடிக்க காத்திருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை ஐயா.
எனக்கான மனைவி என்பவள் வெறும் மனைவியாக மட்டுமல்லாமல்… எது குறித்தும் எப்போதும் வெளிப்படையாகப் பேசி விவாதிக்கும் சகதோழியாக, எங்கும் என்றைக்கும் என்னுடன் கரம்கோத்து உடன் பயணிக்கும் நல்லிணைவியாக, செயலும் செயல் சார்ந்த பொழுதுமாக கழியும் நாட்களில் தள்ளிநின்று ஊக்குவித்து மகிழும் அருந்துணைவியாக, சோர்ந்துபோய் மனமுடைகையில் எல்லாம் அரவணைத்து ஆறுதலுரைத்து தலைகோதி தேற்றுமோர் இரண்டாம் அன்னையாக, சின்னச் சின்னக் குறும்புகள் செய்து வாழ்வை இன்னும் இன்னும் அழகாக ரசிப்புக்குரியதாக்கும் சிறுபிள்ளையாக இருக்கவேண்டுமென நினைக்கிறேன் ஐயா. ஆம்!
பெரும் கனவுகளை நோக்கி, உழைப்பொன்றையே பேராயுதமாகக் கொண்டு, நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் நடைபோடும் எனக்கு… இப்படிப்பட்டவள் இணைவியாக வந்தால்தானே சரியாக இருக்கும்.
சாலைக்கு எப்படி மேடு பள்ளம் அழகோ, அதுபோல் வாழ்க்கைக்கு ஏற்றமும் இறக்கமும் அழகென்பீர்கள். அத்தகைய என் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சமமாகப் பார்க்கும் ஒரு துணைவியாக அவளிருந்தால்தானே பொருத்தமாக இருக்கும்.
பணம், பதவி, அதிகாரம், அந்தஸ்து, சாதி, மதம் போன்ற உயிரற்றவற்றின் மீது பற்று கொள்ளாமல்… நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், ஆடு, மாடு, கோழி, பூனை, நாய், மரம், செடி, கொடி என சக உயிர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் நேசமும் கொண்டிருக்கும் ஒருவர் எனக்கானவளாக அமைந்தால்தானே நன்றாக இருக்கும். ஆம்! ஐயா.
அப்படிப்பட்ட ஒருத்தியை விரைவில் கரம்பிடித்துக் கூட்டி வந்து உங்கள் முன்நிறுத்தி பாதம் பணிந்து ஆசிபெறுவேன் ஐயா.
‘இந்த வாழ்க்கய எப்டி வேணா வாழலாம். ஆனா, இப்டிதான் வாழணும்னு மனசுல நெனச்சி வாழறான் பாரு… அவன்தான் மனுசன்..’ என்பீர்கள்.
நீங்கள் சொன்ன இவ்வார்த்தைகளின்படி எப்போதும் மனிதனாக வாழ்ந்து வருபவன் நான் ஐயா.
அதோடு… தங்களின்,
‘எப்பா… என்னிக்கும் நாம பொறந்த இந்த ஊர்க்கும், நம்மளச் சுத்தி இர்க்க மக்களுக்கும் நம்மளால முடிஞ்ச எதனா செஞ்சினே இர்க்கணும். அப்பதான் நாம நல்ல வாழ்க்க வாழறம்னு அர்த்தம்..’
இவ்வார்த்தைகளின் படியும் என்றும் வாழ நினைப்பவன் நான் ஐயா.
அதனால்தான் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன். அதனால் மட்டும்தான் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன். ஆம்! ஐயா.
வேறு எதற்காகவும் இல்லை ஐயா!
என்றும் தங்கள் சொல்கேட்கும்,
மகன் வடிவரசு
(August 31, 2020)
*
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்
அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை