அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 20 : எதிர்பாட்டு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 19 : இருமந்திரம்

அன்புள்ள ஐயாவுக்கு,

சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் மா மரத்தடிக் கட்டிலில் உட்கார்ந்து கயிறு திரித்துக்கொண்டிருந்த உங்களிடம் வந்து,

”ஏன்ய்யா நம்மூர மொரம்புன்னு சொல்றாங்க?’’ என்றேன்.

கயிறு திரிப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்து லேசாக சிரித்த நீங்கள்… பின்னால் திரும்பி கீழே குனிந்து ஓரமாக எச்சில் துப்பிவிட்டு,

”நம்மூரோட மண்ணு வாட்டம் கல்லும் இல்லாம… பொடி மண்ணாவும் இல்லாம… நடுமத்திமா இர்க்குல்ல, அதவச்சிதான்..’’ என்றீர்கள்.

உடனே நான், ”யார்ய்யா நம்மூர்க்கு மொதமொத இந்தப் பட்டப்பேர வச்சிர்ப்பாங்க?’’ என்றேன்.

அதைக்கேட்டு சத்தமாக சிரித்த நீங்கள்,

”யார்க்கு தெரியும்… கால காலமா அப்டியே இர்க்கர்தான்..’’ என்றீர்கள்.

சட்டென நான்… நம் தமிழ் மொழியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சங்க இலக்கியத்தின் குறுந்தொகை 400-வது பாடலில் வரும்,

‘நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை ஆகி

முரம்புகண் உடைய ஏகி’

என்னும் பேயனார் வரிகளையும், அதில் ஆளப்பட்டிருக்கும் முரம்பு எனும் சொல்லையும், பரற்கற்களையுடைய மேட்டு நிலம் என்னும் அதற்கான பொருளையும் சொல்ல, வியப்போடு என்னைப் பார்த்தீர்கள்.

பின், ”மொரம்புன்னு நம்மூர இன்னிக்கி சொல்ற ‘முரம்பு’ன்ற வார்த்த… ரண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியிர்ந்தே இர்ந்திர்க்குய்யா. அதும் குறுந்தொகையில மட்டுல்லாம… நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, மலைபடுகடாம்ன்னு பலதுலயும் பலபேரு பாடியிர்க்காங்க..’’ என்றதைக் கேட்டு,

லேசாகத் தலையாட்டியபடி எதையோ யோசித்தவராய்,

”நாங்களாம் எந்த புஸ்தகத்த கண்டம். தலமொற தலமொறயா பெரிவங்க சொன்னதக் கேட்டு சொல்லினு வந்தவங்கதான்…’’ என்றீர்கள்.

அதன் பிறகு கடந்தாண்டு ஜூலை மாத இறுதியில் ஊருக்கு வந்திருந்தபோது, ‘முரம்பு’ எனும் சொல்கொண்டு நான் எழுதிய விரிவான இலக்கியக் கட்டுரையை, நகர்பேசியிலிருந்து எடுத்து வரிவரியாக உங்களிடம் வாசித்துக் காட்டினேன்.

கீழே குனிந்து மண்ணையே பார்த்தபடி கேட்ட நீங்கள்,

”நம்மூரு பேர வச்சி இம்மாத்தரம் எழுதிட்டயா நீ?’’ என்றீர்கள், புருவம் உயர்த்தி ஆச்சரியத்தோடு.

தங்களின் அக்கேள்வியையும், கேட்ட விதத்தையும் ரசித்தபடி மெல்லச் சிரித்துவிட்டு,

”இதுமட்டுல்லய்யா… முரம்புன்ற  பேர வச்சியும், நம்ம மொரம்பு நெலத்த வச்சியும், எரநூறு முன்னூறு பக்கத்துல ஒரு நாவலே எழுதலாம்னு இர்க்கன்..’’ என்றதைக் கேட்டு,

பெரிதாக மகிழ்ந்தபடி, ”அதுக்கென்ன நல்லா எழுது. அப்டியாது நம்மூரோடப் பெரும நாலுபேர்க்கு தெரிஞ்சா சந்தோசம்தான..’’ என்றீர்கள்.

அதன்பின் எதையோ நினைத்தவராய்,

”ஆமாம், மொரம்ப வச்சி இவ்ளோத்தரம் எழுதிர்க்கியே… எப்டி எழுதணும்னு தோணுச்சி ஒனக்கு?’’ என்றீர்கள்.

இது நான் சற்றும் எதிர்பாராத கேள்வி. அதிலும் நீங்கள் கேட்டது, பெரும் மகிழ்வைத் தந்தது. அதனால் உற்சாகத்தோடு உங்களைப் பார்த்து,

”சின்ன வயசுலர்ந்து நீதான்யா அடிக்கடி சொல்வ… ‘எப்பா, ஒன்ன சுத்தி இர்க்க மரம், செடி, கொடி, மக்க, மண்ணுன்னு எல்லாத்தயும் படிச்சி வச்சிக்கோ. இன்னிக்கி இல்லன்னாலும் என்னிக்காது ஒர்நாளு அதல்லாம் ஒனக்கு ஒதவும்’ன்னு. அப்டி படிச்சதாலதான்ய்யா, குறுந்தொகப் பாட்டப் படிக்கறப்ப மொரம்பு வார்த்த அங்க இர்க்கர்த பாத்ததும் துள்ளிகுதிச்சி, ‘இத வச்சியே ஒரு கட்டுர எழுதனா என்னா’ன்னு தோனி, ஒடனே அத எழுதிட்டன்..’’ என்றேன்.

எதுவும் சொல்லாமல் லேசாகச் தலையாட்டியபடி என்னைப் பார்த்து புன்னகைத்தீர்கள்.

உடனே நான், ”மொரம்பு மட்டுல்லய்யா… நம்மூர்ல காவாய்க்கடில இர்க்க கண்ணாறு, ஆடு மாடு மேக்கப் போவும்போது சோறும் கூழும் எடுத்துனுப் போற பொனக்கட்டன்னு இன்னும் எவ்ளோதர்த்தப் பத்தி எழுதலாம்னு இர்க்கன். அதோட… மொரம்பு நாவல எழுதனதுக்கப்றம், நம்மூர்ல பேசற சொல்லலாம் வச்சி நம்ம கிராமத்துப் பேர்லயே ‘ஒரு கிராம அகராதி’ கூட தயாரிக்கலாம்னு நெனச்சிட்ருக்கன்யா..’’ என்றதைக் கேட்டு,

மெல்ல என் கையைப் பிடித்துக்கொண்ட நீங்கள்,

”ஒனக்கு எது சரின்னுப் படுதோ அத செய்யி..’’ என்று சொல்லிவிட்டு,

மா மரக்கிளையிலிருந்து இறங்கி பக்கத்திலிருக்கும் தென்னை மரத்தின்மீது வேகவேகமாக ஒன்றன்பின் ஒன்றாக ஓடும் இரு அணில்களைப் பார்த்துவிட்டு,

”நாங்களாம் அந்தக்காலத்துல ஊர் ஊராப் போய் ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி நம்மூர்க்கு நல்லப்பேர வாங்கித் தந்தம். அதுமாரி நீ என்னிக்கும் நல்ல விசயங்கள நாலுபேர்க்கு ஒதவரமாரி எழுதி ஊர்க்கு நல்ல பேரு வாங்கித்தர்ணும்..’’ என்றீர்கள்.

அதைக் கேட்டு மகிழ்வோடு தலையாட்டி,

”கண்டிப்பா வாங்கித் தருவன்ய்யா..’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அதன்பிறகு தங்களைப் பற்றி எழுதிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு, தங்களுக்குப் பிறந்தநாள் பரிசாகத் தர கடந்தாண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி ஊருக்கு வந்திருந்தபோது, புத்தகத்தை உங்கள் கையில் தந்துவிட்டு, அதன்பிறகு அதிலிருக்கும் ஒவ்வொரு கட்டுரையாக படித்துக் காட்டி, கடைசியாக மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஐயா தந்திருந்த முன்னுரையை வாசித்துக் காட்டினேன்.

அதைக் கேட்டுவிட்டு பெரிதாக மகிழ்ந்த நீங்கள்,

”அவரு சொல்லிர்க்காரு பாரு… ஒன்னால இந்த புஸ்தகம் மூலிமா நம்மூருப் பேரு குறிக்குதுன்னு. அதான் எனக்கு இந்தப் பொறந்தநாளிக்கி கெடச்ச பெரிய சந்தோசமே..’’ என்று ஒவ்வொரு வார்த்தையாக உள்ளத்திலிருந்து பேசிவிட்டு,

”நம்ம சுத்துவட்டாரத்துலயே யாரும் எழுதப் போனவங்க கெடயாது. நீதான் மொதமொத எழுதப் போயிருக்க. எப்ப எத எழுதறதுக்கு முன்னாடியும் ஒரு தடவைக்கு நாலு தடவ நல்லா யோசிச்சி எழுது. நீ எழுதர்த்த படிச்சி நாலுபேரு மனசார வாழ்த்துனாங்கன்னா போதும். அதான் என்னிக்கும் எனக்கு நீ செய்ற கைமாறு, ஆச எல்லாம்..’’ என்று,

நான் சற்றும் எதிர்பார்க்காத வார்த்தைகளைச் சொன்னதும், என்னையறியாமல் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.

அதை தங்களிடம் காட்டிக் கொள்ளாதவனாய் பேச்சை வேறு பக்கம் திருப்ப நினைத்து, நம்மூரில் ஆண்டுதோறும் நடக்கும் மன்மதன் தகனம் திருவிழா பற்றி பேச ஆரம்பித்தேன்.

நான் கண் கலங்கியதையும், அதை சாமர்த்தியமாக தங்களிடம் காட்டிக்கொள்ளாமல் பேச்சை திருப்பியதையும் புரிந்துகொண்டவராக லேசாக உதடசைத்து சிரித்துவிட்டு,

”இங்கயே நெவுல்ல ஒக்காந்துனுனிரு, மாட்டப் புடிச்சி வேற எடத்துல மாத்திக் கட்டிட்டு வர்றன்..’’ என எழுந்து கிழக்கு பக்கமாக மெல்ல மரிசிமீது நடந்து போனீர்கள்.

கிணற்று மேட்டருகே மல்லாட்டை பிடுங்கிய வெற்று நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்த மாட்டை அவிழ்த்துப் போய் தொட்டியில் தண்ணீர் காட்டிவிட்டு, பக்கத்து துண்டில் புதரோரமாக கட்டிவிட்டு, திரும்பவும் கிணற்றருகே போய் தொட்டிமீது வைத்திருந்த கிளி கடித்துப்போட்ட இரண்டு கொய்யாப் பழங்களை எடுத்துக்கொண்டு, தென்னந்தோப்பின் நடுவில் மா மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் என்னை நோக்கி நடந்து வந்தீர்கள்.

மதிய வெயில் சுள்ளெனக் கொளுத்தியதை, அனல்காற்று மெல்ல வந்து சுட்டுப் போனதை வைத்து உணர முடிந்தது.

சற்றுமுன்பு ஒன்றன் பின் ஒன்றாக ஓடிய அணிலிரண்டும் கீழே இறங்கி வந்து, கட்டுத்தெருவில் மாட்டுக்கு வைத்திருந்த தண்ணீரை போட்டிபோட்டுக்கொண்டு குடித்துவிட்டு அருகிலிருந்த தேக்குமரத்தில் ஏறிக்கொண்டது.

மெல்ல அருகில் வந்த நீங்கள், கையில் எடுத்துவந்த இரு கொய்யாப் பழங்களையும் என்னிடம் தந்துவிட்டு, பக்கத்தில் மரத்தடியில் குண்டான் மீது கவிழ்த்து வைத்திருந்த ரோட்டா சொம்பை எடுத்து அடி துடைத்துவிட்டு, மூடியிருக்கும் தட்டை மறுகையிலெடுத்து தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு,

”தண்ணிக் குடிக்கிறீயாய்யா..’’ என்றீர்கள்.

”இல்லய்யா வேணாம்..’’ என்றதும்,

தட்டால் குண்டானை மூடிவிட்டு சொம்பை எடுத்தது போல் கவிழ்த்து வைத்துவிட்டு, என்னருகில் வந்து கட்டிலில் உட்கார்ந்து மன்மதன் தகனம் பற்றி பேச ஆரம்பித்தீர்கள்.

எப்போது எதுகுறித்து கேட்டாலும் மகிழ்வோடு பதில் சொல்லும் நீங்கள், மன்மதன் தகனம் பற்றிக் கேட்டால் மட்டும் கூடுதல் உற்சாகத்தோடு பதில் சொல்வதாய் தோன்றுமய்யா.

அன்றப்படி பேசிக்கொண்டிருக்கும்போது… பேச்சின் நடுவில்,

‘முந்திப் பிறந்தவனே –

முக்கண்ணன் தன்மகனே..

கந்தருக்கு முன்பிறந்த –

கணபதிய முன்னிடவா..

வேலவர்க்கு முன்பிறந்த –

விநாயகர முன்னிடவா..

ஐந்து கரத்தோனே –

ஆனை முகத்தோனே..

சாதிக்கொரு புஷ்பம் –

சதிராக மேல்சாத்தி..

ஆத்தி மரத்தடியில் –

வீற்றிருக்கும் மெய்ப்பொருளே..

ஆதிசிவன் தன்மகனே –

சோதிமயம் ஆனவனே..

அண்டமெல்லாம் வாரியுண்ட –

கொண்டல்வண்ணன் தன்மகனே..

அவல் கடல வாழப்பழம் –

அதிரசம் எள்ளுருண்டை..

கொழுக்கட்டை தட்டப்பயிர் –

குணமுள்ள முந்திரியும்..

இத்தனையும் படைப்பன் –

எங்கள் தொப்பை கணபதிக்கு..

வருசத்தில் மாசி மாதம் –

வளர்பிறை தேதி பார்த்து..

அருமையா மதன் சரித்திரம் –

அனைவரும் கொண்டாட..

அனைவரும் கொண்டாட..’

என்ற விநாயகர் பற்றிய தொடக்கப் பாடலை பாடி முடித்ததும்…

‘வருசத்தில் மாசி மாதம் –

வளர்பிறை தேதி பார்த்து..

அருமையா மதன் சரித்திரம் –

அனைவரும் கொண்டாட..

கரும்புவில் கொண்டவன் –

காதலின் கடவுள் அவன்..

மலர்கணை தொடுப்பவன் –

மனங்களை எடுப்பவன்..

ஆசை தீயை மூட்டுபவன் –

ஆழம்வரை வாட்டுபவன்..

அழகுக்கு அழகனவன் –

அடங்காத குமரனவன்..

திருமாலின் மைந்தனவன் –

திகட்டாத ஐயனவன்..

தரணியெங்கும் இருப்பவன் –

தமிழ்போல இனிப்பவன்..

பங்குனி வளர்பிறையில் –

ரதியவளை மணந்தவன்..

மணந்தபின்னும் லீலைகளை –

மனம்போல காட்டியவன்..

கூடாத இடந்தன்னில் –

காட்டியதால் மாட்டியவன்..

கங்கைநதி தரித்தவனின் –

கோபத்தீயில் எரிந்தவன்..

கோபத்தீயில் எரிந்தவன்..’

என்று, நீங்கள் விட்ட அடியிலிருந்து தொடங்கி… சற்றும் எதிர்பாராத வகையில் எதிர்பாடலாக மன்மதன் பற்றி பாடியதைக் கேட்டு மகிழ்ந்தவராக முகம் மலரப் புன்னகைத்து,

”ம்… நல்லார்க்கே..’’ என்றீர்கள்.

அதைக்கேட்டு துள்ளி குதித்தவனாய் அங்கிருந்து புறப்பட்டு, மெல்ல நடந்து வீட்டுக்கு வந்தேன்.

சிறுவயதில் பல தடவை நீங்கள் ஆண் வேஷம் கட்டி, ஒரு கையில் வில்லைப் பிடித்துக்கொண்டு, மறு கையை பறையொலிக்கு ஏற்ப நேர்த்தியாக அசைத்து, நடுநடுவில் பாடல் பாடி ஆடியதைப் பார்த்திருக்கிறேன்.

அதிலும் உங்களோடு அதிகமாக பெண் வேஷம் கட்டி ஆடும் பூங்காவனம் ஆச்சாரி ஐயாவும், ரேணு மாமாவும் பாடும் பாடலுக்கு உடனுக்குடன் எதிர்பாட்டு பாடுவதைக் கேட்டு எத்தனையோ தடவை வியந்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல… அதுபோல் என்றாவது ஒருநாள் உங்கள் பாடலுக்கு எதிர்பாடல் பாடவேண்டும் என்றும் நினைத்திருக்கிறேன். ஆம்! ஐயா.

எனது இவ்வாசை அன்று நிறைவேறியது மட்டுமல்லாமல், அதற்கான பாராட்டும் தங்களிடமிருந்து கிடைத்ததை நினைத்து பெருமகிழ்வோடு வீட்டிலிருந்து சிறுவயதில் நீங்கள் வேஷம் கட்டி ஆடிய தெருக்கள் வழியாக அக்காட்சிகளை மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தபடி மெல்ல நடந்து நம்மூர் பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றேன்.

மேற்கில் சூரியன் இறங்கி மெல்லிருள் பரவ ஆரம்பித்திருந்தது. காலையில் இரைதேடி போயிருந்த பறவைகள் யாவும் கூட்டம் கூட்டமாகத் திரும்பி தன் கூட்டுக்கு சென்றுகொண்டிருந்தது.

தூரத்தில் பேருந்து வரும் சத்தம் கேட்க, மெல்ல சாலையருகில் செல்கிறேன். சட்டென மதியம் நீங்கள் பாடிய பாடலும், அதற்கு நான் பாடிய எதிர்பாடலும் நினைவுக்கு வர, உள்ளுக்குள் சிரித்தபடி வந்து நின்ற பேருந்திலேறி திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டேன்.

உண்மையில் அன்று உங்களிடம் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சொல்லாமல் வந்து விட்டேன் ஐயா.

நமது முரம்பு நிலத்தையும், அதில் நீங்கள் செய்த விவசாயத்தையும், நம்மூர் மக்களின் வாழ்வையும் மட்டுமல்ல… நம் சிறுகிராமத்தில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று நடக்கும் தனித்துவம் வாய்ந்த மன்மதன் தகனம் திருவிழா பற்றியும் வருங்காலத்தில் ஒரு நாவல் எழுத திட்டமிட்டிருக்கிறேன்.

அதில் நீங்கள்தான் நாயகன். அத்தோடதில் அன்று நீங்கள் பாடிய பாடலுக்கு நான் பாடிய எதிர்பாடலையும் நிச்சயம் பதிவு செய்வேன் ஐயா. ஆம்!

தங்களைப் போன்ற எளிய மனிதர்களின் வாழ்வுதான் என்னைப் பொறுத்தவரையில் என்றைக்கும் உயர் இலக்கியமாக்கப்பட வேண்டியது. அவ்வகையில் நான் உங்களைப் பற்றி எழுதிய, ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ முதல் நூல். இன்னும் இதுபோல் பலநூறு படைப்புகளைப் படைப்பேன். அதில் நம்மூர் மக்களின் எளிய வாழ்வையும், உன்னதங்களையும் தொடர்ந்து பதிவு செய்வேன். ஆம்! ஐயா.

இவை யாவற்றுக்கும் மேலாக,

‘நம்ம சுத்துவட்டாரத்துலயே யாரும் எழுதப் போனவங்க கெடயாது. நீதான் மொதமொத எழுதப் போயிருக்க. எப்ப எத எழுதறதுக்கு முன்னாடியும் ஒரு தடவைக்கு நாலு தடவ நல்லா யோசிச்சி எழுது. நீ எழுதர்த்த படிச்சி நாலுபேரு மனசார வாழ்த்துனாங்கன்னா போதும். அதான் என்னிக்கும் எனக்கு நீ செய்ற கைமாறு, ஆச எல்லாம்..’

தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகளையும் என்றும் பின்பற்றுவேன் ஐயா.

என்றும் நம் முரம்புக்காரனாய்,

உங்கள் வடிவரசு

(August 30, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 19 : இருமந்திரம்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=