அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 19 : இருமந்திரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை

அன்புள்ள ஐயாவுக்கு,

சிறுவயது முதல் உங்களிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனித்தும், கற்றும் வருகிறேன்.

எனக்குத் தெரிந்து ஒருநாளும் நீங்கள் வெறுமனே எவ்வேலையும் செய்யாமல் சும்மாயிருந்து பார்த்ததே இல்லை. எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருப்பீர்கள்.

விவசாய வேலை போக, கோயிலுக்குச் சென்று பொங்கலிட்டு சாமி கும்பிடுவது தவிர, வீட்டுக்கு விறகு வெட்டிவருவது, வெட்டி வந்த விறகில் துரிஞ்சி, வேப்பம், பீவேலம் போன்றவற்றின் தோலுரிப்பது, காரை, பூலா, சொத்துக்கெளா, ஆவாரம், உண்ணிமில் போன்றவற்றை சின்னச் சின்னதாக வெட்டிப் பிளப்பது, அண்ணன் தையல் கடையில் கத்தரித்துப் போடும் சிறுசிறு துணிகளைப் பொறுக்கியும் – புளிச்சக்கீரை தண்டெடுத்துவந்து காயவைத்து நாரெடுத்தும் – உர சாக்குப்பையை பிரித்து நூலெடுத்தும் கயிறு திரிப்பது, பெரும் கட்டைகளை ஆப்பும் – சுத்தியும் – கோடாரியும் கொண்டு பிளப்பது, வீட்டையும் வீட்டைச் சுற்றியும் உள்ள இடங்களை சுத்தம் செய்வது, தேவையற்ற முட்செடிகள் முளைத்திருந்தால் பிடுங்கியெறிவது, முளைக்குச்சி சீவி ஆட்டுப்பட்டியில் உடைந்த அல்லது உடையும் நிலையில் இருக்கும் முளைக்குச்சிகளை எடுத்துவிட்டு புதிதாக அடிப்பது, கட்டுக்கொடி எடுத்துவந்து துண்டுத் துண்டாக வெட்டிப் பிளந்து நீரில் ஊறவைத்து கட்டாகக் கட்டி பரணில் அடுக்கி வைப்பது, காய்ந்த தென்னை மட்டையின் ஓலைகளை தனித்தனியாக சீவி கத்தையாக கட்டிவந்து ஓலை தனியாகக் குச்சி தனியாக கீறியெடுத்து தென்னந்துடைப்பம் செய்வது, பூந்துடைப்பம் குச்சி உடைத்துவந்து வெயிலில் காயவைத்து ஊம்பலடித்து கத்தை கத்தையாக கட்டிவைப்பது, மூங்கில் மற்றும் உண்ணிமில் மெளார் வெட்டிவந்து படல் கட்டுவது, எங்காவது படலில் ஆட்டுக் குட்டிகள் நுழையும் அளவுக்கு சந்திருந்தால் பார்த்து அடைப்பது, ஆடு மாடுகளுக்கு உண்ணி எடுப்பது, காலில் முள் குத்தியிருந்தால் முள்வாங்கி கொண்டு நீக்குவது, அம்மாவுக்கு சமையலில் உதவிகள் செய்வது, பூக்கட்டுவது, கல்யாண முருங்கை இலை பறித்துவந்து இலை தைப்பது, பொர்சன் கழி வெட்டிவந்து கோடாரிக்கோ –  மண்வெட்டிக்கோ – களைவெட்டிக்கோ கைப்பிடி இழைத்துப் பொருத்துவது, நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு காட்டுவள்ளிக்கிழங்கு தோண்டிவர காட்டுக்குப் போய் வருவது, வீட்டிலிருக்கும் துப்பட்டிகளை எடுத்துப்போய் கிரீன் குட்டையிலோ, ஆற்றிலோ துவைத்துக் காயவைத்து மடித்து எடுத்துவருவது… இப்படி எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பீர்கள்.

அதையெல்லாம் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும்.

‘ஏன் எப்பப் பாரு ஐயா எதனா செஞ்சினே இர்க்காரு?’ என்றும் தோன்றும்.

‘சரி, அதை உங்களிடமே கேட்டால் என்ன?’ என்று ஒருநாள் தோன்ற… நம் வீட்டிலிருக்கும் நான்கைந்து கொடுவாளை எடுத்துப்போய், துரிஞ்சி மரத்தடியில் உட்கார்ந்து தீட்டுக்கல்லில் ஒவ்வொன்றாக மண்ணள்ளிப் போட்டு தீட்டிக் கொண்டிருந்தீர்கள்.

களி மண்ணில் செய்த சக்கரத்தின் நடுவில் குச்சி நுழைத்துப் பொருத்தி தேர் ஓட்டிக்கொண்டு பூவரச மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த நான், மெதுவாக எழுந்து உங்கள் பக்கத்தில் வந்து, சற்று தள்ளியிருந்த இன்னொரு கல்லின் மீது உட்கார்ந்து,

”ஐயா..’’ என்றேன்.

மெல்ல தீட்டுவதை நிறுத்திவிட்டு தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்து,

”என்னய்யா..’’ என்றீர்கள்.

உடனே நான், ”ஏன்யா எப்பப் பாரு எதனா செஞ்சினே இர்க்க? நீ சும்மா இர்ந்து என்னிக்கும் நான் பாத்ததே இல்ல..’’ என்றேன்.

எனது கேள்வியைக் கேட்டுவிட்டு, என்னைப் பார்த்து உரக்க சிரித்த நீங்கள்,

”அட மடயா… எதுவும் பண்ணாம சும்மா ஒக்காந்துனுர்ந்தா ஒடம்பு சோம்பலாவும்… மனசு கண்டதலாம் நெனக்கும். இது ரண்டும் நல்லாக்கீற நம்ம வாழ்க்கய நாசமாக்கிடும். அதான் எப்பயும் எதனா பண்ணினே இர்க்கன்..’’ என்றீர்கள்.

புரிந்தது போலவும், அதேசமயம் புரியாதது போலவும் இருக்க… எதுவும் சொல்லாமல் உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதை புரிந்துகொண்டவராய்,

”நான் இப்ப எதுவும் பண்ணாம… மத்தவங்களமாரி சொம்மா படுத்துனும், ஒக்காந்துனும் பொழுதினிக்கும் இர்க்கன்னு வையி, எப்பயும் சுறுசுறுப்பா இர்க்க என் ஒடம்பு… கொஞ்ச கொஞ்சமா சொம்மா இர்க்க சொகத்துக்கு கட்டுப்பட ஆரம்பிக்கும். அடுத்த நாளு எதனா செய்ய நெனச்சா நேத்துமாரியே இன்னிக்கும் இர்க்கலான்னு தோணும். அப்டியே தெனக்கும் இர்க்க ஆசப்பட்டு ஒரு கட்டதுக்கப்றம் இப்டியே இர்ந்துட்டா என்னன்னு நம்மள எந்த வேலயும் செய்யவுடாம சோம்பேறியாவே ஆக்கிடும்..’’ என்று சொல்லிவிட்டு,

என் கண்களைப் பார்த்து, ”இப்பப் புரிதா, நான் ஏன் எப்பயும் எதனா பண்ணினே இர்க்கன்னு?’’ என்றீர்கள்.

”ம், புரிதுய்யா..’’ என தலையாட்டினேன்.

அதைப் பார்த்து லேசாக உதடசைத்துச் சிரித்துவிட்டு,

”அதுமாரிதான் நம்மளோட மனசும். இப்ப நான் கொடுவாள தீட்றன்ல… இதலதான் என் மனசோட கவனம் மொத்தம் இர்க்கும். எதயும் செய்யாம இர்ந்தன்னா, கண்டதலாம் பத்தி யோசனப் பண்ணுவன். அது தேவயில்லாதப் பிரச்சனய, கவலயத் தரும். அதான் என்னிக்கும் எதனா வேல செஞ்சினே இர்க்கன்..’’ என்றீர்கள்.

நன்கு தெளிவாகவேப் புரிந்ததால், வேகமாகத் தலையாட்டி புரிந்துவிட்டதை உங்களிடம் சொன்னேன்.

உண்மையில் எப்போதும் எதையாவது செய்வதற்குப் பின்னால் இப்படியொரு சூட்சுமம் இருக்கிறது என நீங்கள் சொன்ன பிறகுதான் உணர ஆரம்பித்தேன் ஐயா. அதுவும் வாழ்வின் உயர் படிப்பினை ஒன்றை இவ்வளவு எளிதாக, போகிற போக்கில் சொல்லிவிட்ட உங்களை நினைக்க நினைக்க வியப்பாக இருந்தது.

அதுமுதல் நானும் தங்களைப் போல் எப்போதும் எதையாவது செய்துகொண்டிருப்பதை வாடிக்கையாகக் கொள்ள ஆரம்பித்தேன். ஆம்! ஐயா.

பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் வீட்டுப்பாடம் எழுதுவது, எதையாவது வரைவது, வீட்டின் பின்னால் செடிகொடிகள் நட்டு வளர்ப்பது, ஏற்கனவே இருக்கும் மரம் செடிகொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தண்ணீரும் புண்ணாக்கும் வைப்பது, உண்ணி எடுத்துவிடுவது, காலில் முள் குத்தியிருந்தால் பிடுங்கி விடுவது, அண்ணனுடன் அல்லது உங்களுடன் மாட்டுக்கு புல்லருக்க வருவது, உங்களோடு அல்லது நண்பர்களோடு சிலசமயம் தனியாக விறகு வெட்டப் போவது, ஆடுகளுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கும் கொடுக்காப்புளி, வேப்பம், புளியம் தழைகள் எடுத்துவருவது, கோவக்கொடி முஷ்டக்கொடி பறித்துவருவது, கருவேலங்காய் பொருக்கிவருவது, அம்மாவுக்கு சமையலில் சிறுசிறு உதவிகள் செய்வது, கோயிலருகிலிருக்கும் போரிலிருந்து தண்ணீர் மொண்டு வந்து தருவது, களிமண் எடுத்து வந்து வீட்டின் பின்னால் பூவரச மரத்தடியில் பந்தல் போட்டு அதற்குள் உட்கார்ந்து பொம்மைகள் செய்துவைத்து விளையாடுவது, வீட்டின் இரு கதவுகள் தொடங்கி அண்ணனின் தையல் இயந்திரம் வரைக்கும் துடைத்து சுத்தப்படுத்துவது… இப்படி எப்போதும் எதையாவது செய்துகொண்டிருக்கப் பழகிக்கொண்டேன்.

ஒரு கட்டத்தில் எப்போதும் எதையாவது செய்துகொண்டிருப்பதன் மகத்துவம் புரிய ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக, கடந்த 2016-ல் வேலையை விட்டுவிட்டு கனவுக்கான முயற்சியில் அடியெடுத்து வைத்த ஆரம்ப நாட்களில், தினமும் காலையில் எழுந்ததும் கிளம்பி அலுவலகம் போய் பழக்கப்பட்ட எனக்கு, செய்வதற்கு ஒன்றும் இல்லாமலிருக்கும் நாட்களில் மனமானது தானாக எதைஎதையோ யோசிக்க ஆரம்பித்தது. 

அதனால் தேவையில்லாத மன வருத்தமும், குழப்பமும் உருவானது. அதிலிருந்து மெல்ல மீண்டு அடுத்த வேலையைச் செய்ய ஆரம்பிப்பதற்குள் பாதிநாள் முடிந்திருக்கும். சிலசமயம் முழுநாளும். பெரும் காட்டாறை கடந்ததுபோல் களைத்திருப்பேன். ஆம்! ஐயா.

அந்நேரத்தில் ஒருநாள் தற்செயலாக பிரபல மனநல மருத்துவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஏற்கனவே விகடன் வழியாக அவரெனக்கு நன்கு பழக்கமானவர். சரி அவரிடம் இதைப் பற்றி சொல்லலாம் எனச் சொன்னால், அவர் இதை ஏதோ மிகப்பெரிய முற்றிப்போனப் பிரச்சனை என்பதுபோல் பெரிதுபடுத்தி, தினமும் காலையில் எழுந்ததும் எனக்கு நானே சொல்லிக் கொள்ள,

‘என் பெயர் வடிவரசு, நான் ஓர் இளம் எழுத்தாளன், கவிஞன், பாடலாசிரியன்..’

‘நான் சாதிக்கப் பிறந்தவன். நிச்சயம் என் கனவுகள் அனைத்தையும் நிஜமாக்குவேன்.’

‘என்னால் எதையும் அர்ப்பணிப்போடும், துணிவோடும் முழுதாக செய்ய முடியும்.’

‘தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள விதத்தில் என்னை எப்போதும் ஈடுபடுத்திக் கொள்வேன்..’

என்பது போன்ற 22 சொற்றொடரை, ஒரு பேப்பர் தந்து அதில் வரிசையாக எழுதச் சொல்லி,

‘தொடர்ந்து முப்பது நாட்களுக்கு காலையில எழுந்ததும் உங்க காதுல கேட்கறமாதிரி வரிசையா ஒவ்வொண்ணையும் மூணு தடவை சொல்லுங்க. கொஞ்ச கொஞ்சமா எதிர்மறை சிந்தனைலாம் மறைந்து சீக்கிரம் சரியாகிடும். இல்லைனா அடுத்த தடவை வரும்போது மாத்திரை எழுதித் தர்றன்..’ என்றார்.

பகிரென்றது எனக்கு.

நம்மூரில் அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார்கள்,

‘கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா… அங்க ரண்டு கொடும ஜிங்கு ஜிங்குன்னு ஆடினுர்ந்துச்சாம்..’

அப்படித்தான் ஐயா இருந்தது, அவரை சந்தித்த பிறகு.

சட்டென நீங்கள் சொன்ன,

‘அட மடயா… எதுவும் பண்ணாம சும்மா ஒக்காந்துனுர்ந்தா ஒடம்பு சோம்பலாவும்… மனசு கண்டதலாம் நெனக்கும். இது ரண்டும் நல்லாக்கீற நம்ம வாழ்க்கய நாசமாக்கிடும். அதான் எப்பயும் எதனா பண்ணினே இர்க்கன்..’

இவ்வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தது.

மெல்ல எழுந்து வெளியில் வந்து, மரங்களடர்ந்த சாலை வழியாக சற்றுதூரம் நடந்துவந்து, அவர் சொல்லி எழுதிய பேப்பரை ஒருதடவை மேலும் கீழும் பார்த்துவிட்டு, துண்டு துண்டாகக் கிழித்து அங்கேயே போட்டுவிட்டு,

‘என் பிரச்சனய இவரு எழுதித் தந்த இந்த 22 வரியும் தீக்கப்போறதில்ல. ஒங்களோட வார்த்தைங்கதான் தீக்கப் போவுது’ என்று உறுதியாக நம்பிக்கொண்டு,

அங்கிருந்து மெதுவாக எதிர்வருவோரின் முகங்களையும், சாலையோரமாக இருக்கும் மரங்களையும், செடிகொடிகளையும் வேடிக்கை பார்த்தபடி, ஐந்து கிலோமீட்டர் நடந்தே அறைக்கு வந்தேன்.

வந்ததும் முதல் வேலையாக… இனி நான் தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரைக்கும் செய்யவேண்டிய வேலைகளின் நீள் பட்டியல் ஒன்றை தயார் செய்தேன்.

அதோடு வாரத்தில் ஒருநாள் முழுக்க சென்னையில் அல்லது சென்னைக்கு அருகாமையில் இருக்கும் ஏதாவது ஓர் இடத்திற்கு ஒருநாள்பயணம் சென்று வரவேண்டும், மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் சிறு பயணமும், மூன்று மாதத்திற்கு ஒருதடவை பெரு பயணமொன்றும் செல்லவேண்டுமென திட்டமிட்டு எனக்குள் ஆழமாக பதிவு செய்து கொண்டேன்.

அதுமுதல் எனக்கான நாட்கள் இன்னும் இன்னும் அழகாக, அர்த்தமுள்ளதாக மாற ஆரம்பித்தது. அத்துடன் தேவையற்ற எதைப் பற்றியும் யோசிக்க நேரம் இல்லாத அளவுக்கு என் நாட்கள் ஒவ்வொன்றும் செயல்கரமாக மாறியது.

அதோடு சிறுசிறு குழப்பங்களும் சோர்வும் என்னை எப்போதாவது நெருங்கும்போது, பிடித்தப் பாடல்களைப் போட்டுவிட்டு, அடுக்கியிருக்கும் புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து மீண்டும் வரிசையாக அடுக்குவது, என் எழுத்து மேசை – அதன் மீதிருக்கும் பொருட்கள் யாவற்றையும் துடைத்து சுத்தப் படுத்துவது, அறையில் ஒட்டடை அடிப்பது, இவை யாவற்றுக்கும் மேலாக விரும்பி மகிழ்வுடன் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்றவற்றால் வரும் குழப்பங்களையும், சோர்வையும் வெல்வதற்கான வழிகளை கண்டடைந்தேன். ஆம்! ஐயா.

எப்போதும் எதையாவது செய்வதென்பது, ஒரு புறவயமான நிகழ்வு மட்டுமல்ல… அகவயமானதும்தான். தொடருழைப்பு அளிக்கும் அக மலர்ச்சியானது, பெருமகிழ்வை மட்டுமல்ல… எதையும் கண்டு அஞ்சாமல் எதிர்கொள்ளும் பெருந்துணிச்சலையும், பெருநம்பிக்கையையும் தரக்கூடியது. இதுவெறும் பொருளியல் செயல்பாடு மாத்திரமல்ல… அதைத் தாண்டியதோர் உயர் வழிபாடு, நற்தியானம் என்பதை மனதார உணர்ந்துகொண்டேன் ஐயா.

சுறுசுறுப்புடன் இருக்கும் என்னையும், நான் எப்போதும் எதையாவது செய்தபடி இருப்பதையும் பார்க்கும் நண்பர்களில் பலர் வியப்போடு என்னிடம் கேட்பார்கள்.

”எப்படி வடிவு, எப்பப் பாரு ரெஸ்டே இல்லாம தொடர்ந்து எதனா செஞ்சிட்டே இருக்க?’’

உடனே நான், சிறுவயதில் நீங்கள் என்னிடம் சொன்ன,

‘எதுவும் பண்ணாம சும்மா ஒக்காந்துனுர்ந்தா ஒடம்பு சோம்பலாவும்… மனசு கண்டதலாம் நெனக்கும். இது ரண்டும் நல்லாக்கீற நம்ம வாழ்க்கய நாசமாக்கிடும். அதான் எப்பயும் எதனா பண்ணினே இர்க்கன்..’

இவ்வார்த்தைகளைச் சொல்வேன்.

சிலர் ஆச்சர்யத்தோடு,

”இத எந்த புத்தகத்துலப் படிச்ச?’’ என்பார்கள்.

நான் சிரித்துக்கொண்டே, ”ஏன் இந்தமாரி விசயத்தலாம் புத்தகத்துலதான் படிச்சி தெரிஞ்சிக்கணுமா?’’ என்று கேட்டுவிட்டு,

”படிக்காத எங்கய்யா கிட்டயிருந்து சின்ன வயசுல கத்துக்கிட்டது..’’ என்று, பெருமையோடு சொல்வேன் ஐயா.

உடலும் உள்ளமும் மனிதர்களின் கிடைத்தற்கரிய இருபெரும் சொத்து. அப்படிப்பட்ட அரிய சொத்தை நலத்தோடும், வளத்தோடும் வைத்திருக்கும் இருமந்திரமே தங்களின் இவ்வார்த்தைகள் என்று எப்போதும் தோன்றுமய்யா.

இதனால்… உடல் உள்ளத்தோடு சேர்ந்து, பெறற்கரிய இவ்வாழ்வும் இன்னும் இன்னும் அழகாகும், இன்னுமின்னும் அர்த்தமுள்ளதாகும் என்றும் தோன்றுமய்யா. ஆம்!

இதைத்தாண்டி வேறென்ன சொல்ல ஐயா?!

எப்போதும் எதையாவது செய்துகொண்டிருக்கும்,
உங்கள் மகன் வடிவரசு

(August 29, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=