அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

அன்புள்ள ஐயாவுக்கு,

‘என்னிக்கும் நமக்குத் தெரிஞ்ச நல்லது கெட்டத மத்தவங்களுக்கு எடுத்து சொல்ல தயங்கக்கூடாது. நாம சின்னதா நெனச்சி செய்ற ஒரு விசயம் இன்னொருத்தருக்கு பெரிய மாத்தத்த தரலாம்..’ என்பீர்கள் அடிக்கடி.

ஒவ்வொரு பாடல், கவிதை, கட்டுரை எழுதுவதற்கு முன்பும் தங்களது இவ்வார்த்தைகளை ஒருதடவை மனத்திற்குள் நினைத்துக்கொண்டுதான் எழுத ஆரம்பிப்பேன் ஐயா. ஆம்!

கற்றுத் தரும் வாய்ப்பு இப்பூமியில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வெகுசிலருக்குத்தான் கிடைக்கிறது.

அத்தகைய கிடைத்தற்கரிய வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது சமூகப் பொறுப்புடனும், கடமையுணர்வுடனும் சொல்லவேண்டியது மிக அவசியமாகிறது.

அதனால்தான் பணத்துக்காக மட்டும் எதையும் எழுதாமல் மனத்துக்குப்படும் நல்ல விஷயங்களையும், கண்முன்னால் நடக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டி எழுதவேண்டும், அதனை பரவலான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதற்காக சமூகம் சார்ந்த தனிப்பாடல்கள் எழுதி தொடர்ந்து வெளியிடும் வழியை நான்காண்டுகளுக்கு முன்னால் நான் தேர்வு செய்தேன்.

அவ்வழியில் 2016-ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி பெண்கள் தினத்திற்கு, ஒட்டுமொத்த ஆண்கள் சார்பாக பெண்களை வாழ்த்தி வணங்கி கொண்டாடி வெளியிட்ட ‘தொப்புள்கொடி’ பாடல் தொடங்கி… இருபதுக்கும் அதிகமான தனிப்பாடல்களை இதுவரைக்கும் எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

அவற்றில் பெண்கள் மீதான தொடர் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த ‘மனிதா மனிதா..’, பாரதப் பிரதமரை நோக்கி விவசாயிகளின் ஒருமித்தக் குரலாக ஒலித்த ‘எஸ்குஸ்மி பி.எம் சார்..’, மூன்றாம் பாலினத்தவரின் மேம்பாட்டை உலகுக்குச் சொன்ன ‘வானம் தாண்டி’, உழைக்கும் விளிம்புநிலை பெண்களைக் கொண்டாடிய ‘பெண்மீகம்’, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளின் உலகை வரிகளாக்கிய ‘பேரன்புடன்’ போன்ற பாடல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இவ்வரிசையில் இன்னும் பல பாடல்களை எழுதியிருக்கிறேன். அவற்றை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறேன். அதில்  இரண்டு பாடல்களின் வரிகளை தங்களிடம் சொல்லவேண்டுமென ஆசைப்படுகிறேன் ஐயா.

ஒன்று… மனிதன் இவ்வுயரிய இயற்கையின் மேன்மையை புரிந்துகொள்ளாமல் அதன் ஒவ்வொரு அங்கத்தையும் சிதைத்து, சுரண்டி, அபகரித்த பிழைகளையெல்லாம் சுட்டிக் காட்டும் விதத்தில் எழுதிய ‘மனிதப்பிழை’ பாடல்.

நம் முன்னவர்கள்… நமது நிலப்பகுதியை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைகளாகப் பிரித்து, ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஏற்ப பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் உருவாக்கி இயற்கையுடன் ஒன்றி மேன்மையுடன் வாழ்ந்தவர்கள்.

ஆனால் நம்மவர்களோ… இயற்கையை மதிக்காமல் கொஞ்ச கொஞ்சமாக சுரண்ட ஆரம்பித்து, பிழைமேல் பிழை செய்து, வரும் தலைமுறையினருக்கு கொத்துக் கொத்தாக நோய்களைத் தாண்டி எதுவும் தந்துவிட்டுப் போக இல்லாத நிலையை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இம்மாபெரும் மனிதப்பிழை இனியும் தொடரக்கூடாது என்னும் உயரிய கருத்தை இப்பாடல் மூலம் யாவருக்கும் சொல்ல நினைத்திருக்கிறேன் ஐயா.

‘மலையும் மலை சார்ந்த இடமும் –

 குறிஞ்சி என்றார்கள் – நாம் 

குவாரிகள் ஆக்கிவிட்டோம்..

காடும் காடு சார்ந்த இடமும் – 

முல்லை என்றார்கள் – நாம் 

தொழிற்சாலைகள் அமைத்துவிட்டோம்..

வயலும் வயல் சார்ந்த இடமும் – 

மருதம் என்றார்கள் – நாம் 

மனைகள் போட்டுவிட்டோம்..

கடலும் கடல் சார்ந்த இடமும் – 

நெய்தல் என்றார்கள் – நாம் 

கழிவுகள் கலந்துவிட்டோம்..

மணலும் மணல் சார்ந்த இடமும் – 

பாலை என்றார்கள் – நாம் 

வாரிச் சுரண்டிவிட்டோம்..

மனிதா மனிதா – 

நீ செய்வது சரியா?

நாளை நாளை – 

நீ எதை உண்ணுவாய்?

புத்தி உண்டு உன்னில் – அதைப்

பயன்படுத்திப் பாரு..

சுத்தி முத்தி இருப்பதை – இனி 

சுற்றமென்றுக் கூறு.. 

**

நீர் நிலைகளை தூர்த்துவிட்டோம் – 

கட்டிடக் காடாய் மாற்றிவிட்டோம்..

மரங்களை வெட்டிவிட்டோம் – 

மழையை அதிசயம் ஆக்கிவிட்டோம்..

குப்பைகளை எங்கும் கொட்டிவிட்டோம் – 

நோய்களை உறவாய்க் கூட்டிவிட்டோம்..

இயற்கையை பண்டமாய் விற்றுவிட்டோம் – 

காற்றைக் காசுக்கு வாங்கிவிட்டோம்..

இப்பிழை இப்படித் தொடர்ந்தால் –

நாளை சந்ததிக்கு எதைத் தருவாய்?

இனியும் திருந்திட வில்லையெனில் – 

நம் பேரர்கள் முகத்தில் துப்புவார்கள்.. 

**

காடுகளை அழித்துவிட்டோம் – 

விலங்கினை ஊருக்குள் அழைத்துவிட்டோம்..

ஆறுகளை மடித்துவிட்டோம் – 

தண்ணீரைப் பணமாய் எண்ணிவிட்டோம்.. 

நிலங்களை எங்கும் சாகவிட்டோம் – 

விஷத்தை உணவாய் ஏற்றுவிட்டோம்..

காற்றினைக் கூட கெடுத்துவிட்டோம் –

தலையில் மண்ணைப் போட்டுவிட்டோம்..

இப்பிழை இப்படித் தொடர்ந்தால் –

நாளை சந்ததிக்கு எதைத் தருவாய்?

இனியும் திருந்திட வில்லையெனில் – 

நம் பேரர்கள் முகத்தில் துப்புவார்கள்..’

**

இந்தப் பாடலை நான் எழுதி கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது. அதுவும் ஒருநாள் நம் ஊரிலிருந்து சென்னைக்கு வரும்போது வழியில் மடிந்துகிடக்கும் பாலாறை பார்த்துவிட்டு வந்த கோபத்திலும், வருத்தத்திலும் நகர்பேசியை எடுத்து எழுதியதுதான் இப்பாடல் ஐயா.

இப்பாடலைப் பொருத்தவரையில் நன்கு நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து, எல்லா தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவேண்டுமென நினைத்து தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா.

அதேபோல் இன்னொரு பாடல், ‘யார் கடவுள்?’ என்னும் நீண்ட பழம்பெரும் கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் எழுதிய ‘யார் கடவுள்’ பாடல்.

இக்கேள்வி எனக்குள் பலதடவை வந்திருக்கிறது. இங்கே ஒவ்வொருவருக்கும் அவரவர் மதம் சார்ந்த, இனம் சார்ந்த, குழு சார்ந்த, குடும்பம் சார்ந்த, தனிநபர் சார்ந்த கடவுள்கள் இருக்கலாம் என்றபோதும், நம்மைச் சுற்றி, நம்மில், நம்மவர்களில், தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் தொடங்கி பெரியபெரிய செயல்கள் வரை எதுவெல்லாம் கடவுள் என இப்பாடல் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறேன் ஐயா.

‘யார் கடவுள்?

எது கடவுள்?

நீ கடவுள் –

நான் கடவுள்.. (2)

அங்கே இங்கே என்று எதை எதையோ –

தேடித் திரியும் மானிடா..

உன்னில் இருக்கும் உன்னைத் தேடிடு – 

உண்மை உயர்வாய்த் தெரியும்..

அது இது என்று பொய்யும் புரட்டிலும் –

சிக்கி அழியும் மூடரே.. 

உன்னில் உதிக்கும் அன்பும் மனிதமும் – 

உலகுக்கு கொடுத்திடுப் புரியும்..

**

பசிப் பிடியில் தவிக்கும் வயித்துக்கு – 

உணவிடும் கைகள் கடவுள்..

விரக்தி நுனியில் வீழும் மனத்துக்கு –

ஆறுதல் வார்த்தைகள் கடவுள்..

நேர் வழியில் செல்லும் போது – 

கிடைக்கும் திருப்தி கடவுள்..

உறவில் என்றும் மாறாதிருக்கும் – 

நேசம் உயரிய கடவுள்..

நட்பு, காதல், ஈதல், கல்வி, –

இயற்கை, உண்மை, நம்பிக்கை..

மன்னிப்பு, புன்னகை, ஆறுதல், உழைப்பு, – 

தாய், தந்தை, தாய்மொழி..

இத்தனைக் கடவுள் இங்கே இருக்க – 

எங்கோ எதையோ தேடுவதேன்?

இல்லை ஆமாம் சண்டைகள் விடுத்து –

இருப்பதை அன்பால் பெருக்குவோம்..

**

தேவையறிந்து வெயில் மழை கொடுக்கும் – 

இயற்கை அன்னை கடவுள்..

எதிரி எனினும் புன்னகை சூடி –

மன்னிக்கும் மனது கடவுள்..

தோல்வி வலையில் சிக்கிய போதும் –

துளிர்க்கும் நம்பிக்கை கடவுள்..

தீரத் தீரப் பகிர்ந்து மகிழும் –

காதல் நிகரில்லாக் கடவுள்..

அன்பு, தேடல், நேர்வழி, –

தேசம், உணவு, தூய்மை..

கலைகள், குழந்தை, வெற்றி, தோல்வி, –

இலக்கு, பொறுமை, ஒற்றுமை.. 

இத்தனைக் கடவுள் இங்கே இருக்க – 

எங்கோ எதையோ தேடுவதேன்?

இல்லை ஆமாம் சண்டைகள் விடுத்து –

இருப்பதை அன்பால் பெருக்குவோம்..’

**

இப்பாடலையும் எழுதி வரும் நவம்பரோடு மூன்றாண்டுகள் ஆகப்போகிறதய்யா. பரவலாக ஒவ்வொருவரிடமும் சென்று சேர வேண்டும், அனைவர் மனத்திலும் ஆழப் பதியவேண்டும், அதற்கேற்ப காட்சிகளும் இருக்கவேண்டுமென திட்டமிட்டிருக்கிறேன் ஐயா.

ஆரம்பத்தில் நான்கைந்து சமூகம் சார்ந்த தனிப்பாடல்கள் எழுதி வெளியிட்டதும் நண்பர் ஒருவர்,

”இப்படி சமூக அக்கறப் பாட்டுலாம் இல்லாம பீப் சாங் மாரி நாலுப் பாட்டு எழுதி உடனே பிரபலம் ஆகலாமே?’’ என்றார் நக்கலாக.

எதுவும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு வந்துவிட்டேன்.

அங்கிருந்து அறைக்குவரும் வழியில், நம்மூரில் யாருக்காவது காய்ச்சல் என்றால் நம்பிக்கையோடு உங்களைத் தேடிவந்து திருநீறு பிடித்துத் தரச்சொல்லிக் கேட்கும் சம்பவமும், ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் வந்து தங்களிடம் மருத்துவம் கேட்டுப்போகும் நிகழ்வுகளும்தான் நினைவுக்கு வந்ததய்யா.

அதிலும் ஒரு தடவை மேட்டுத்தெரு அக்கா ஒருவரின் குழந்தை எதையோ பார்த்து பயந்துபோய் காய்ச்சல் வந்துவிட்டதாக சொல்லி வந்தபோது, அவர்கள் வாங்கிவந்த வெற்றிலைபாக்கு, வத்தி, கற்பூரத்தை எடுத்துப்போய் நம்வீட்டு சாமி அறையில் உட்கார்ந்து… வத்தியையும், கற்பூரத்தையும் ஏற்றிவைத்து கண்மூடி சில நிமிடங்கள் எதையோ உள்ளுக்குள் முணுமுணுத்து வணங்கிவிட்டு, சிறிதளவு திருநீறு எடுத்துவந்து குழந்தையின் நெற்றியிலும் கழுத்திலும் வைத்துவிட்டு, மீதத்தை அக்குழந்தையின் அம்மாவிடம் தந்து,

”பயப்படாம வூட்டுக்குப் போ. இன்னிக்கி ராத்திரிக்குள்ள சரியாய்டும்..’’ என்றீர்கள்.

அதை பக்கத்திலிருந்து பார்த்துவிட்டு, அவர்கள் சென்றதும்,

”எப்டிய்யா ராத்திரிக்குள்ள சரியாய்டும்னு சொல்ற?’’ என்றதற்கு,

”மனசார ஒரு விசயத்த வேண்டிக்கிட்டு, கடவுள்கிட்ட மொறயிட்டம்னா அது நடக்கும்னு ஒரு நம்பிக்க. அதான்..’’ என்றீர்கள்.

அடுத்தநாளே குழந்தைக்கு காய்ச்சல் சரியாகிவிட்டதாக தூக்கிவந்து தங்களிடம் காட்டி நன்றி சொல்லிவிட்டுப் போனார் அக்குழந்தையின் அம்மா.

இன்னொருநாள் அண்ணனின் நண்பர் ஒருவர் வந்து தொடர் வயிற்றுவலி என்று சொன்னதும், தேங்காய் மட்டையிலிருக்கும் சோற்றுத் தூளினை நாரிலிருந்து உதிர்த்தெடுத்து நெருப்பில் பொசுக்கிக் கரியாக்கி, அத்துடன் சற்று தேன் சேர்த்துக் குழைத்து சாப்பிடச் சொன்னீர்கள். அவரும் அவ்வாறே சாப்பிட அடுத்தநாளே வயிற்றுவலி நின்றுவிட்டதாக வந்து சொன்னார்.

அதைக் கேட்டு வியந்துபோய் தங்களை திரும்பிப் பார்த்தேன். லேசாக உதடசைத்து சிரித்துவிட்டு,

”என்னிக்கும் நமக்குத் தெரிஞ்ச நல்லது கெட்டத மத்தவங்களுக்கு எடுத்துச் சொல்ல தயங்கக்கூடாது. நாம சின்னதா நெனச்சி செய்ற ஒரு விசயம் இன்னொருத்தருக்கு பெரிய மாத்தத்த தரலாம்..’’ என்றீர்கள்.

அதுதொடங்கி உங்களுக்குத் தெரிந்த மருத்துவத் தகவல்களை மற்றவர்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சொல்லி அனுப்பும்போதும், யார் ஒருவர் நம்பி வந்து திருநீறு பிடித்துத் தரக் கேட்டாலும் உடனே மனதார வேண்டி பிடித்துத் தந்தனுப்பும்போதும் நீங்கள் சொன்ன இவ்வார்த்தைகள்தான் ஐயா நினைவுக்கு வரும்.

நான் நினைத்திருந்தால் எதையெதையோ எழுதி பிரபலமாகியிருக்க முடியும், பணமும் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், அதுவல்ல என் நோக்கம், அதற்கல்ல நானென உறுதியாக நம்புகிறேன் ஐயா.

‘நம்மால முடிஞ்ச நாலு நல்ல விசயங்கள எடுத்துச் சொல்லணும். தப்புன்னு படறத ஒடனே சுட்டிக்காட்டணும்’ என்பீர்கள்.

இதன்படிதான் ஐயா, இதுநாள் வரைக்கும் இருந்துவருகிறேன்.

சினிமாப் பாடல் எழுதும்போது சூழலுக்குப் பொருந்தும் வரிகளைத்தான் எழுத முடியும். ஆனால் தனிப்பாடல்களில் அப்படிக் கிடையாது. நாம் நினைத்ததை, மனத்துக்கு சரியெனப் பட்டதை அப்படியே எழுதலாம். ஆம்! ஐயா.

இதனால் பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும். சிலருக்கு பகையாகக் கூட நேரிடும். அதனால்தான் பலரும் சமூகம் சார்ந்த தனிப்பாடல்கள் எழுதி வெளியிடும் வழியை தேர்ந்தெடுக்காமல் ஒதுங்கி நிற்கிறார்கள். என்றபோதும் நான் துணிந்து தேர்ந்தெடுக்கக் காரணம்,

‘என்னிக்கும் நமக்குத் தெரிஞ்ச நல்லது கெட்டத மத்தவங்களுக்கு எடுத்து சொல்ல தயங்கக்கூடாது. நாம சின்னதா நெனச்சி செய்ற ஒரு விசயம் இன்னொருத்தருக்கு பெரிய மாத்தத்த தரலாம்..’

தங்களின் இவ்வார்த்தைகள் தான் ஐயா.

இதுவரையான என் தனிப்பாடல்களில், நான் கற்றுக்கொண்டதை, உணர்ந்ததை, சரியென்று மனதுக்குப் படுவதை, தவறென்று தோன்றுவதை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வெளியிட்டிருக்கிறேன். இன்னும் இன்னும் தொடர்ந்து எழுதி வெளியிடவும் செய்வேன் ஐயா.

இதனால் லட்ச லட்சமாகப் பணமோ, பெரும் பதவிகளோ, விருதுகளோ, அங்கீகாரமோ, புகழோ கிடைக்கப்போவதில்லை. ஆனால், அவ்வளவு எளிதில் கிடைத்திடாத பெரும் மனத்திருப்தி கிடைக்கும். அதோடு நாம் எழுதிய வரிகளால் நிகழும் சிறுசிறு மாற்றங்களைக் கண்டு மகிழ்வுறலாம். பெருமிதம் கொள்ளலாம். ஆம்! ஐயா.

மூன்றாம் பாலினத்தவரின் மேம்பாட்டுக்காக எழுதி வெளியிட்ட ‘வானம் தாண்டி’ பாடலைக் கேட்டுவிட்டு ஒரு முகம்தெரியாத திருநங்கை என்னை அழைத்து அழுதுகொண்டே,

‘இனி என் வாழ்க்கையில ஒருநாளும் ஒடம்ப வித்தும், பிச்ச எடுத்தும் வாழமாட்டன். அதுக்கு நீங்க எழுதன பாட்டுதான் காரணம்..’ என்றது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன், நான் அவர்களுக்காக எழுதிய பாடலை பலதடவை போடச் சொல்லிக் கேட்டுவிட்டு, என்னைப் பார்க்க வேண்டுமென விரும்பி வந்து, என் கையை சில நொடிகள் இறுகப்பற்றி புன்னகைத்தது.

இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம் ஐயா.

‘பணம் சம்பாதிக்க எத்தன வழி இர்ந்தாலும், நீ போற வழி ஒன் மனசுக்கு எப்பயும் நிம்மதியத் தர்ற வழியா இருக்கணும்..’ என்பீர்கள்.

ஆம்! ஐயா, நான் தேர்ந்தெடுத்த எழுத்து வழி, என் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை மட்டும் தரவில்லை. அதற்கும் மேலான மன நிம்மதியைத் தருகிறது. நிறைவைத் தருகிறது. நல்லுள்ளங்களை சம்பாதித்து தருகிறது.

யாவற்றுக்கும் காரணம்,

‘என்னிக்கும் நமக்குத் தெரிஞ்ச நல்லது கெட்டத மத்தவங்களுக்கு எடுத்து சொல்ல தயங்கக்கூடாது. நாம சின்னதா நெனச்சி செய்ற ஒரு விசயம் இன்னொருத்தருக்கு பெரிய மாத்தத்த தரலாம்..’

தங்களின் இவ்வார்த்தைகள்தான் ஐயா.

மனநிறைவோடு,

உங்கள் வடிவரசு

(August 26, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=