அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

அன்புள்ள ஐயாவுக்கு,

ஈராண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் மதியம் 12 மணி இருக்கும். கொளுத்தும் மதிய வெயில்.

‘ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் சாப்ட்டா நல்லாருக்கும்ல?’ என்று தோன்றியது.

கூடவே, ‘அத மாமல்லபுரத்துல போய் சாப்ட்டா இன்னும் நல்லாருக்கும்ல?’ என்றும் தோன்றியது.

சட்டென நானிருந்த அசோக் நகரிலிருந்து திருவான்மியூர் சென்று, பின் அங்கிருந்து மாமல்லபுரம் செல்லும் பேருந்தில் போய் இறங்கி, நினைத்ததுபோல் ஐஸ்கிரீம் வாங்கி ரசித்து சாப்பிட்டுவிட்டு, மலையடிவாரத்திலிருக்கும் சிற்பக் கோயில் அருகிலுள்ள வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருந்தேன்.

தோழி ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது.

”எங்க இருக்க வடிவு?’’ என்றார்.

சொன்னேன்.

”ஒரு ஐஸ்கிரீம் சாப்ட யாராவது இவ்ளவு தூரம் போவாங்களா?’’ என்றார், ஏதோ செய்யக் கூடாத காரியத்தை செய்ததுபோன்ற வினாவோடு.

நான் சொன்னேன், ”இவ்ளோ தூரம் வந்து ஐஸ்கிரீம் சாப்டத மட்டும்தான் நீங்கப் பாக்கறீங்க. ஆனா நான்… ‘ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் சாப்ட்டா நல்லாருக்கும்ல’ன்னு தோணனதும் அதுக்காக காத்திருந்து பஸ்ல ஏறனதுல ஆரம்பிச்சு, எத்தனயோ புதுப் புது முகங்களப் பாத்தன். சன்னலோர இருக்கயில ஒக்காந்து வழிநெடுக்க தெரிற மரம், செடி, கொடிகளப் பாத்தன். சாலயோரக் கடைங்களயும், வழியில இருக்க சின்னச் சின்ன ஊருங்களயும், அதோட பேருங்களயும், எந்த சத்தமும் இல்லாம கண்ணுக்கெட்ன தூரம்வரக்கும் பரந்து விரிஞ்சி கெடக்குற கடலயும், விடாம அழுதுனு வந்த மூணு வயசுக் கொழந்தய தட்டித் தோள்லப் போட்டு தூங்க வச்சினு வந்த அம்மாவயும், தூங்கித் தூங்கி சன்னல் கம்பில மண்டய முட்டினு வந்த கட்டம் போட்ட சட்டப் போட்டவரயும், நடுநடுவுல என்னப்பாத்து சிரிச்சினு வந்த மஞ்ச கவுன்போட்ட ரட்டக் கொழந்திங்களன்னு இன்னும் எவ்ளோ விசயங்களப் பாத்து ரசிச்சினு வந்து, ரண்டரமணி நேரக் காத்திருப்புக்கப்றம் நான் சாப்ட நெனச்ச ஐஸ்கிரீம வாங்கி பல மடங்கு சுவயோட சாப்டன்..’’ என்றதும்,

எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.

உடனே நான், ”நான் நின்னுனு இருந்த அசோக் நகர் பஸ் ஸ்டாப்புக்கு எதிர்லயே ஆவின் பார்லர் இருந்தது. நாலெட்டு எடுத்து வச்சிப் போய் வாங்கி சாப்ட அஞ்சுநிமிசம் கூட ஆயிருக்காது. ஆனா மனசு, அத செய்யச் சொல்லாம மாமல்லபுரத்துல வந்து சாப்ட சொன்னதுன்னா… அதுக்குக் காரணம் இவ்ளவு அனுபவங்கள கூடவே சேத்து தர்றதுக்குதான்..’’ என்றதும்,

”ஆமா… நீ சொல்றதும் சரிதான்..” என்றார்.

இப்படி சிறுவயது முதல் மனமானது எத்தனையோவற்றை என்னிடம் சொல்லியிருக்கிறதய்யா. முடிந்தவரை தட்டிக்கழிக்காமல் அதனை உடனுக்குடன் செய்துவிடுவேன். அப்படி கடந்தாண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி இருக்கும். சென்னை – கன்னிமரா நூலகத்தில் உட்கார்ந்து கோவை – கம்பன் கழகம் வெளியிட்ட கம்பராமாயணம் வாசித்துக்கொண்டிருந்தேன்.

சட்டென திருவாசகத்தில் உள்ள சிவபுராணத்தின்,

‘நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க..’

எனும் ஆரம்ப வரிகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வர, அத்தோடு கம்பராமாயணத்தை மூடிவைத்துவிட்டு எழுந்துபோய் திருவாசகம் எடுத்துவந்து வாசிக்க ஆரம்பித்தேன்.

நான்கைந்து வரிகள்தான் படித்திருப்பேன். அதற்குள்,

‘நாம இந்த சிவபுராணத்த… மாணிக்கவாசகர் பாட, சிவபெருமானே நேர்ல வந்து எழுதினதா சொல்ற சிதம்பரம் கோயில்லயே போய் ஒக்காந்து படிச்சா எப்டியிருக்கும்?’ என்று தோன்றியது.  

மறுநொடியே, ‘அதுவும் நாளிக்கே போய் படிச்சா எப்டியிருக்கும்?’ என்றும் தோன்றியது.  

உடனே திருவாசகத்தை மூடிவைத்துவிட்டு, நகர்பேசியை எடுத்து ப்ளே ஸ்டோரில் போய் திருவாசகம் மொத்தப் பாடல்கள் அடங்கிய செயலியை தரவிறக்கம் செய்து நிறுவினேன்.

பின் எழுந்து வாசிக்க எடுத்துவந்த மூன்று நூல்களையும் எடுத்துப் போய் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, கீழிறங்கி வெளியில்வந்து மரங்கள் உயர்ந்திருக்கும் நூலகத்தின் முன்புறப் பகுதியில் நின்றுகொண்டு, சிதம்பரம் செல்வது குறித்து யோசிக்க ஆரம்பித்தேன்.

சில நிமிடங்களே யோசித்திருப்பேன். அதற்குள் திட்டம் உருவாக, அங்கிருந்து நூலகக் கட்டிடத்தின் நேரெதிரில் இருக்கும் சாலையோர தேநீர்க் கடைக்குப் போய் தேநீர் குடித்துவிட்டு, பேருந்தேறி அறைக்கு வந்தேன்.

‘நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க..’

திரும்பவும் சிவபுராண வரிகள் மனத்துக்குள் ஓட ஆரம்பித்தது.

இரண்டு செட் உடைகள் எடுத்து பைக்குள் வைத்துக்கொண்டு, குளித்துக் கிளம்பி இரண்டு தோசைகள் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, சரியாக முன்னிரவு ஒன்பது மணிக்கு அறையிலிருந்து புறப்பட்டு, கோயம்பேடு பேருந்துநிலையம் நோக்கிப் போனேன்.

ஏற்கனவே பத்தாவது படிக்கும்போது பள்ளியிலிருந்து வேளாங்கண்ணி, பூம்புகார் மற்றும் தரங்கம்பாடிக்கு ஒருநாள் சுற்றுலா போயிருந்தபோது, அவசர அவசரமாகப் பார்த்த கோயில். அதன்பிறகு பலதடவை செல்ல நினைத்ததும், அக்கோயில் குறித்து வாசித்தவைகளும் நினைவுக்கு வந்தன.

அதிலும் குறிப்பாக கோயிலின் அமைப்பு குறித்த விளக்கங்களும், அதன் பின்னாலிருக்கும் ரகசியங்களும் எனக்குள் இன்னும் ஆர்வத்தை அதிகமாக்கியது.

‘நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க..’

மீண்டும் சிவபுராண வரிகள்.

சரியாக பத்து மணிக்கு கோயம்பேடு சென்றவன், அங்கிருந்து சிதம்பரம் செல்லும் சாதாரணப் பேருந்தொன்றில் ஏறி சன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். சரியாகப் பத்து முப்பதுக்கு புறப்பட்ட பேருந்து, ஆறரரை மணிநேர பயணத்திற்குப் பிறகு சிதம்பரத்திற்குள் நுழைந்தது. 

‘நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க..’

திரும்பவும் சிவபுராண வரிகள். இம்முறை முதலிரு அடிகளுக்குப் பிறகு,

‘ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமிலன் அடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி..’

என்னும் நான்கு வரிகளும் மாறி மாறி மனத்துக்குள் ஓடுகிறது.

கோயில் கிழக்குகோபுரம் முன்னாலேயே கேட்டு இறங்கிக்கொண்டேன். கோபுரத்திலிருந்து சாலை வரைக்கும் போட்டிருந்த தென்னங்கீற்றுப் பந்தலையும், அதன் மறு முனையில் தெரியும் கோபுர வாசலையும், ஆங்காங்கே மெல்லிருளுக்குள் ஒளிரும் மின் விளக்குகளையும் பார்த்து ரசித்தபடி அருகிலிருந்த தேநீர் கடைக்குப் போய் ஒரு குளம்பி அருந்திவிட்டு, கடைக்காரரிடம் குறைந்த கட்டணத்தில் ஒருநாள் தங்கிக்கொள்ள நல்ல விடுதியொன்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தெற்கு கோபுரத்திற்கு அருகிலிருந்த அவ்விடுதிக்குப் போய் குளித்து உடை மாற்றிக்கொண்டு, கிழக்குகோபுர வழியாக நுழைந்து கோயிலுக்குள் போனேன்.

நூல்கள் வழியாகவே அதிகமறிந்த சிதம்பரம் கோயில் கண்முன் மிகப்பிரம்மாண்டமாக பரந்து விரிந்து காட்சி தந்தது. உள்நுழைந்து அங்குள்ள பிரமாண்டத் தூண்களையும், சிற்பங்களையும், விதானத்து சித்திரங்களையும் ரசித்தபடி உள்ளே போய் பொற்சபையில் வீற்றிருக்கும் நடராஜரைப் பார்த்து வணங்கிவிட்டு, ஒரு மனிதர் நாளொன்றுக்கு  21,600 தடவை மூச்சு விடுவதைக் குறிக்கும் வகையில் 21,600 பொன்ஓடுகளால் வேயப்பட்டிருக்கும் கருவறையின் கூரையையும், அதை மனிதருக்குள் ஓடும் 72,000 நாடிகளைக் குறிக்கும் வகையில் 72,000 பொன்ஆணிகள் கொண்டு நேர்த்தியாக அறையப்பட்டிருக்கும் விதத்தையும் வியந்து பார்த்தபடி மெதுவாக சுற்றி வந்தேன்.

‘நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க..’

மனத்துக்குள் மீண்டும் சிவபுராண வரிகள்.

சில நிமிடங்கள் கருவறை முன்பு நின்று கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே தெரியும் நடராஜரையும், அதற்குப் பக்கத்தில் சிறுதுளைகள் வழியாக திரையகற்றப்பட்டு தீபாராதனை காட்டும்போது, இறைவன் ஆகாய வெளியில் ஆரம்பமும் முடிவும் இல்லாதிருப்பதை உணர்த்தும் விதத்தில் தெரிந்த தங்கத்தாலான வில்வ தளமாலையையும் பார்த்து ரசித்தேன்.

.

பின் திரும்பி நேராக அங்கிருந்து வெளியே வந்து கொடிமரத்தின் பின்னாலுள்ள பெரும் திட்டின் மீதேறி கருவறை நடராஜரின் நேரெதிரில் உட்கார்ந்து, கால்சட்டைப் பையிலிருந்த நகர்பேசியைக் கையிலெடுத்து சிவபுராணப் பாடலைத் திறந்தேன்.

‘நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க..’

ஒவ்வொரு வரியாக, எனக்கு மட்டும் கேட்கும் மென்சத்தத்தில் நடுநடுவில் தூரத்தில் தெரியும் நடராஜரைப் பார்த்தபடி பொருளோடு வாசிக்க ஆரம்பித்தேன்.

சரியாக இரண்டு மணிநேரம் வாசித்திருப்பேன். ஏற்கனவே இரண்டு மூன்றுதடவை முழுதாக வாசித்திருக்கிறேன். என்றபோதும், இம்முறை புதுவித அனுபவம் தந்ததை உணரமுடிந்தது.

சற்றுநேரம் பாடல் வரிகளைப் பற்றியும், அதுதரும் பொருள் குறித்தும் உள்ளுக்குள் அசைபோட்டுவிட்டு, சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

எவ்வளவு பழமையான கோயில். எத்தனை எத்தனை மகான்கள் கால்பட்ட இடம். அப்பர், சுந்தரர், சம்மந்தர், மாணிக்கவாசகர் என எத்தனை எத்தனையோ பெரும்புலவர்களும் அடியார்களும் மனமுருகிப் பாடிய ஆலயம். கோடிக்கணக்கானோர் வந்து வணங்கிவிட்டுப் போன பூமி.

இப்படி எதை எதையோ மனமானது சிந்திக்க ஆரம்பித்தது.

திடீரென,

‘நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க..’

என, நான் இவ்வளவு நேரம் படித்த, என்னை இரு தினங்களாக விடாமல் துரத்திவந்த, எங்கோ இருந்தவனை இங்கே வரவழைத்த சிவபுராணப் பாடலை யாரோ ஒருவர் உரத்த குரலில் பாடக் கேட்டு திரும்பிப்பார்த்தேன்.

அறுபது வயதிருக்கும். வெள்ளை வேட்டியும், இளம் மஞ்சள் நிற சட்டையும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், நெற்றியில் திருநீறும் அணிந்திருந்தவர், கைகளை தலைக்குமேல் உயரக்கூப்பி கொடிமரத்தருகில் நின்றபடி உள்ளே கருவறையிலிருக்கும் நடராஜரை நோக்கி கண்களைமூடி மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தார். 

அவரது குரலும், அவர் உச்சரிக்கும் வார்த்தைகளும் எனக்குள் சென்று ஏதோ செய்வதை உணர்ந்தேன். மெல்ல உட்கார்ந்திருந்த திட்டின் மேலிருந்து இறங்கிப் போய், அவர் நின்றிருந்த இடத்தின் மறுபக்கம் நின்றுகொண்டு, அவரின் ஈர்க்கும் குரலையும் மாணிக்கவாசகர் சொற்களையும் கேட்டபடி கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தேன்.

‘ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமிலன் அடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி..’

காலையில் சிதம்பரத்துக்குள் நுழைந்ததும் மனத்துக்குள் ஓடிய வரிகளைப் பாடுகிறார்.

சட்டெனப் பாட்டொலி குறைய கண்திறந்து பார்த்தேன். அப்பெரியவர் பாடியபடி நடந்து இடதுபக்கம் போய்க் கொண்டிருந்தார். அதைக் கண்டதும் என்னையே அறியாமல் அவர் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தேன்.

என் வாழ்நாளில் இதுவரை அப்படியொரு குரலைக் கேட்டதில்லை. கணீர் குரல். நேர்த்தியான சொல் உச்சரிப்பு. யாவும் என்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூட்டிப்போய், மாணிக்கவாசகரே காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி நடராஜரை நோக்கிப் பாடுவதுபோல் இருந்தது.

‘விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளக்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்..’

அவர் பாடிக்கொண்டு செல்வதைப் பார்த்தப் பலரும் வியந்துபோய் ஒதுங்கி வழிவிட்டு நின்றார்கள். சிலர் என்போல் அவர் பின்னாலேயே பாடலைக் கேட்டுக் கொண்டும், அவருடன் சேர்ந்து பாடிக்கொண்டும் நடந்து வந்தார்கள்.

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்..’

யார் பற்றியும், எதைப் பற்றியும் நினைக்காமல் சிவபெருமான் ஒருவரையே மனத்தில் நிறுத்தியவராய் பாடியபடி சுற்றிவந்து சுற்ற ஆரம்பித்த கொடிமரத்தருகே போய் நின்றார்.

குரலொலி இன்னும் அதிகமானது. அதைக் கேட்ட பலரும் தங்களை மறந்தவர்களாய் அருகில் வந்தார்கள். 

‘தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று..’

பாடலின் இறுதி வரிகளை நோக்கிப் பாடிக்கொண்டிருந்தார்.

என்னோடு அவர் பின்னால் வந்தவர்களில் நான்கைந்து பேர் மட்டும்தான் அவரோடு சேர்ந்து முதலில் பாடிக்கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது பதினைந்துக்கும் அதிகமானோர் அவருடன் பாடிக்கொண்டிருந்தார்கள்.

‘சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து..’

எனும் இறுதி வரிகளை அவர் பாடி முடித்ததும்,

‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றார், குரலை இன்னும் உயர்த்தி, கைகளை உயரக்கூப்பி.

அவர் சொல்லி முடிப்பதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர்களாய் மொத்தக் கூட்டமும், ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றது.

மொத்தம் மூன்று தடவை சொன்னார். ஒவ்வொரு தடவை சொல்லி முடித்ததும் கருவறையில் இருக்கும் நடராஜரையும், கொடிமரத்தையும் பார்த்து வணங்கினார்.

அவரது குரலாலா, இடத்தாலா, வார்த்தைகளாலா என்று தெரியவில்லை, சட்டென உடல் முழுக்க சிலிர்த்தது. கண்கள் மூடி ‘நான் எங்கிருக்கிறேன்? ஏன் இங்கே வந்தேன்?’ என்றெல்லாம் யோசிக்கிறேன். உடனே முன்தினம் நூலகத்தில் உட்கார்ந்து,

‘நாம இந்த சிவபுராணத்த… மாணிக்கவாசகர் பாட, சிவபெருமானே நேர்ல வந்து எழுதினதா சொல்ற சிதம்பரம் கோயில்லயே போய் ஒக்காந்து படிச்சா எப்டியிருக்கும்?’  

‘அதுவும் நாளிக்கே போய் படிச்சா எப்டியிருக்கும்?’

என்ற காட்சி கண்முன் வந்து போனது.

அடுத்த நொடியே சிறுவயதில் நீங்கள் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்ததய்யா.

அதுவும் அன்றைய தினம் காலைமுதலே லேசாக வான் தூறிக்கொண்டிருந்தது. தினமும் காலை மாலை இரு வேளையும் குளிக்கும் பழக்கம் கொண்ட நீங்கள், மாலை நான்கு மணியிருக்கும், கையில் குடை பிடித்துக்கொண்டு தங்கள் நண்பர்களில் ஒருவரான அருணாச்சல செட்டியார் நிலத்திலுள்ள கிணற்றுக்கு குளிக்கக் கிளம்பினீர்கள்.

அதைப் பார்த்த நான்,

”நானும் வரட்டுமாய்யா?’’ என்றதற்கு,

”வா..” என உடன் கூட்டிக்கொண்டு நடந்து போனீர்கள்.

சின்னக்கோனார் வீட்டுக்குப் பின்பக்க வழியாக நடந்து செட்டியார் கிணற்றுக்குப் போய், உடுத்தியிருந்த வேட்டியை அவிழ்த்து அருகிலிருந்த கொட்டகைக்குள் நனையாமல் வைத்துவிட்டு, இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கிப் போனீர்கள்.

மேலே அடிபிடி உடைந்த சிறுகுடையை பிடித்துக்கொண்டு நீங்கள் குளிப்பதையும், நடுநடுவில் சுற்றிலும் தெரியும் மரங்களையும், பக்கத்திலிருந்த தேக்கு மரத்தடியில் கட்டியிருக்கும் மாடுகளையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மெல்ல நீந்திக் குளித்துவிட்டு மேலேறி வந்த நீங்கள், கொட்டகைக்குள் போய் வேட்டியை கட்டிக்கொண்டு, துண்டை பிழிந்து தோல்மேல் போட்டுக்கொண்டு குடைபிடித்தபடி வந்தவழியே திரும்பி நடக்க ஆரம்பித்தீர்கள்.

பின்னாலேயே நடந்து வந்த நான்,

”ஐயா..” என்றேன்.

நின்று மெதுவாக திரும்பிப் பார்த்து,

”என்னய்யா..’’ என்றீர்கள்.

உடனே நான், ”வீட்லதான் குளிக்க நறயாத் தண்ணி இருக்கே, எதுக்குய்யா மழயிலக் கொடப்புடிச்சிக்கினு இவ்ளோதூரம் நடந்து வந்து குளிச்சிட்டுப் போற?’’ என்று கேட்டேன்.

எனதக்கேள்வியையும், கேட்கும் விதத்தையும் பார்த்துவிட்டு, சத்தமாக சிரித்து,

”அட மடயா… வீட்லக் குளிக்க எம்மாந்நேரம் ஆயிருக்கும். அங்கருந்து இவ்ளோ தூரம் நடந்து வந்து குளிச்சிட்டுப் போறன்னா, வீட்லயிருந்து கொடப் புடிச்சினு கெளம்பனதுல இருந்து எவ்ளவு விசயத்த பாத்துனு வந்தன். எத்தன மரத்த செடிகொடியப் பாத்துனு வந்தன். மாடு மக்கன்னு இவ்ளோதர்தயும் பாத்துனு வந்து ஆர அமர ஒக்காந்துக் குளிச்சிட்டுப் போவத்தான்..’’ என்றதும்,

எதுவும் சொல்லாமல் உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

”நம்ம மனசுக்குப் பட்ற சின்னச் சின்ன விசயத்தயும் ரசிச்சி செஞ்சம்னா, நாம நெனச்சிப்பாக்காத எத்தனயோ விசயங்கள அது நமக்கு கேக்காமலயே தரும்..’’ என்றீர்கள்.

அன்று நீங்கள் சொன்ன இவ்வார்த்தைகள்தான் ஐயா… ஓர் ஐஸ்கிரீம் சாப்பிட சென்னை – அசோக் நகரிலிருந்த என்னை அறுபது கிலோமீட்டர் தாண்டியுள்ள மாமல்லபுரம் வரைக்கும் போகவும், எழும்பூர் – கன்னிமரா நூலகத்தில் இருந்து என்னை சிவபுராணம் படிக்க சிதம்பரம் கோயில் வரைக்கும் வரவும் சொன்னது.

சிறு சிறு விஷயங்கள்தான் வாழ்வை இன்னும் இன்னும் அழகாக்கும், அர்த்தமுள்ளதாக்கும் என்பார்கள். அவ்வகையில் நீங்கள் சொன்ன,

‘நம்ம மனசுக்குப் பட்ற சின்னச் சின்ன விசயத்தயும் ரசிச்சி செஞ்சம்னா, நாம நெனச்சிப்பாக்காத எத்தனயோ விசயங்கள அது நமக்கு கேக்காமலயே தரும்..’

இவ்வார்த்தைகள்தான் ஐயா, ஒற்றை தேநீருக்காக பல கிலோமீட்டர்கள் நடந்து போகச் சொல்லும். நான்காண்டுகளுக்கு ஒருமுறை வரும் மிகுநாளாண்டை அதுவரை சென்றிடாத கொல்லிமலையில் போய் இயற்கையோடு கழிக்க சொல்லும். நள்ளிரவு நேரத்தில் யாருமற்ற பாண்டிச்சேரி கடற்கரையில் தனியனாய் உட்கார்ந்து கடலை வேடிக்கைப் பார்க்க சொல்லும். தொடர்ந்து 24 மணி நேரம் பிடித்தப் படங்களை வரிசையாக காணச் சொல்லும். பிறக்கும் புத்தாண்டை கொல்கத்தாவின் ஹவுரா பாலத்தின் மீது நின்று ஹூக்ளி நதியை ரசித்தபடி வரவேற்க சொல்லும்.

இன்னும் இன்னும் ஐயா.

இவ்வாழ்வினை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிமிடமும் ரசித்துவாழ நினைக்கும் யாவருக்கும் தாங்கள் சொன்ன,

‘நம்ம மனசுக்குப் பட்ற சின்னச் சின்ன விசயத்தயும் ரசிச்சி செஞ்சம்னா, நாம நெனச்சிப்பாக்காத எத்தனயோ விசயங்கள அது நமக்கு கேக்காமலயே தரும்..’

இவ்வார்த்தைகளைத் தாண்டி வேறென்ன ஐயா, பெரிதாக சொல்லிவிடமுடியும்?!

என்றும் தீரா ரசிப்புடன்,

உங்கள் வடிவரசு

(August 25, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=