அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

அன்புள்ள ஐயாவுக்கு,

கடந்தாண்டு நான் படித்த லயோலா கல்லூரி உணவகத்தில் நண்பருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அருகிலிருக்கும் மரத்தடி இருக்கையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.

பேச்சு வாக்கில்,

”எப்டி வடிவு இவ்ளோ நல்லா எழுதக் கத்துக்கிட்ட? சின்ன வயசுலர்ந்தே நறய புத்தகம்லாம் படிப்பியா?’’ என்றார்.

ஈருதடையும் உள்மடக்கி லேசாக கடித்தபடி ‘இல்லை’யென தலையாட்டிவிட்டு,

”பாடப் புத்தகம் தாண்டி படிக்க ஆரம்பிச்சதே 2012-ல இருந்துதான்..’’ என்றேன்.

அவரால் இதை நம்பமுடியவில்லை.

”பொய் சொல்லாத வடிவு… எழுத்தாளருங்கலாம் ரொம்பச் சின்ன வயசுலயிருந்தே புத்தகம் படிக்க ஆரம்பிச்சதா சொல்வாங்க. நீ என்னடான்னா அப்படியே நேரெதிரா சொல்ற..’’ என்றார்.

நான் சொன்னேன், ”புத்தகம் படிக்கலனாலும் நம்மள சுத்தியிருக்க இயற்கயயும், மனுசங்களயும், அவங்களோட வாழ்க்கயயும் நறயவே படிச்சிருக்கன்..’’ என்று.

புரியாதவராய் என்னைப் பார்த்தார்.

”பசியோட வலின்னா என்னான்னு எனக்குத் தெரியும். அத பலதடவ அனுபவிச்சிருக்கன். கண்ணாலப் பாத்திருக்கன். அதுமாரி, எந்த மரம் எப்பப் பூக்கும், எப்பக் காய்க்கும், அதோட நன்ம தீம என்னான்னுலாம் ஓரளவுக்கு தெரிஞ்சிவச்சிருக்கன். சின்ன வயசுலர்ந்தே காடு, மேடு, ஏரி, கொளம், குட்ட, ஆறுன்னு… சுத்துசுத்துன்னு சுத்திருக்கன். சொல்லணும்னா, எங்க ஊர சுத்தி இருக்க ஒரு மலய விட்டதில்ல. எல்லா மலயோட உச்சிலயும் ஏறி நின்னுருக்கன். இப்டி எவ்ளவோ படிச்சிருக்கன்..’’ என்றதும்,

புரிந்தவராய் தலையாட்டினார்.

இத்தனைக்கும் அவர் சிறுவயது முதல் புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ளவர். கல்கியில் ஆரம்பித்து, குட்டிரேவதி வரைக்கும் படித்ததாகச் சொல்வார். அவரிடம் ஒரு பேச்சுக்கு கேட்போமெனக் கேட்டேன்,

”என்னிக்காவது உச்சி மலமேல ராத்திரி முழுக்க தனியா ஒக்காந்து வானத்தயும் பூமியயும் பாத்திருக்கியா?’’.

இல்லையென்றார் தலையாட்டி.

”கொறஞ்சது அதுமாரி ஒரு அனுபவத்த எந்த புத்தகத்துலயாவது படிச்சிருக்கியா?’’

அதற்கும் இல்லையென தலையாட்டினார்.

உடனே நான், ”ரண்டுவாட்டி உச்சி மலமேல ராத்திரியெல்லாம் ஒக்காந்து பாத்திருக்கன். ஒண்ணு… ரொம்ப சின்ன வயசுல, எங்க ஊர்ல இருக்க அரசங்கல் மலமேல. இன்னொண்ணு… ரோவர்ல படிக்கிறப்ப திருவண்ணாமல மலமேல..’’ என்றதும்,

வியந்து போய், ”பயமா இருக்காதா?” என்றார்.

அவர் இப்படிக் கேட்டதும் சிறுவயதில் உங்களோடு நம்மூரில் உள்ள அரசங்கல் மலைமீது விறகு வெட்டப் போயிருந்த சம்பவம்தான் முதலில் நினைவுக்கு வந்தது.

அன்றைய தினம் விறகுவெட்டி முடித்ததும் வெட்டிய விறகுகளை அரி அரியாக எடுத்துவந்து ஓரிடத்தில் சேர்த்து, மூன்று கட்டுக்கொடிகளை கீழே போட்டு அதன் மீது ஒவ்வொன்றாக வைத்தடுக்கி சுமை கட்டியதும்,

”ஐய்யாய்யா… மல உச்சில போய் கொஞ்சநேரம் ஒக்காரலாமாய்யா..’’ என்றதற்கு, எதுவும் சொல்லாமல்,

”வா… போய் ஒக்காரலாம்..’’ எனக் கூட்டிப்போய், மலையின் உச்சிக்கல்மீது என்னை உட்கார வைத்துவிட்டு, அதனருகில் சற்று தள்ளியிருக்கும் இன்னொரு கல்மீது சென்று நீங்கள் உட்கார்ந்து கொண்டீர்கள்.

சூரியன் மேற்கில் பெருமேகத்திரள்களுக்குப் பின்னால் மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தது. காற்றின் மென் சத்தம், மைனாவின் விட்டுவிட்டுக் கேட்கும் ஐயொலி தாண்டி எச்சத்தமும் இல்லை அங்கே.

தூரத்தில் தெரியும் ஊர்கள், சிறுசிறு வீடுகள், வடக்கு தெற்காக நீண்டோடும் கால்வாய், மலையின் வடதிசையில் விரிந்திருக்கும் ஏரி, அதனருகில் நின்றிருக்கும் கோடிக்கல், சுற்றிலும் வேடிக்கைப்பார்க்கும் மலைகள், புதூர் மலையை ஒட்டித் தெரியும் சாத்தனூர் அணைக்கட்டு, யாவற்றையும் பார்த்தபடி கால்களை கீழே தொங்கப்போட்டு அமர்ந்திருந்தேன்.

எப்படியும் அரைமணி நேரத்திற்கு மேல் இருந்திருப்போம். இன்னும் கொஞ்ச நேரத்தில் சூரியன் மறைந்து இருட்ட ஆரம்பித்துவிடும் என்பதால் எழுந்து,

”போலாமாய்யா..?’’ என்றேன்.

”ம்… போலாம்..’’ என  எழுந்து மெல்ல அங்கிருந்து இறக்கிக் கூட்டிப்போய், பாதி மலையில் பெரிய கல்லொன்றின் மீது சாய்த்து வைத்திருந்த விறகுக் கட்டை தோளில் போட்டிருந்த தேங்காய்ப்பூ துண்டெடுத்து சிம்மாடு சுற்றி தலையில் வைத்து யாரும் தூக்கிவிடாமல் குனிந்து நீங்களாகவே தூக்கிக்கொள்ள, ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

கண்ணாறு தாண்டி முனியப்பன் கோயிலுக்கு நேராக கால்வாய்க் கரையில் நடந்து வந்துகொண்டிருந்தோம். அதுவரை எதையோ யோசித்தபடி பின்னாலேயே வந்த நான், சட்டென தங்களைக் கூப்பிட்டு,

”ஒருநாள் ராத்திரியெல்லாம் மல உச்சில இர்ந்தா எப்டியிருக்கும்யா?’’ என்றதற்கு, எதுவும் சொல்லாமல்,

”அண்ணன் பால் கறந்தானா இல்லயான்னு தெர்ல. சீக்ரமா வூட்டுக்குப் போவணும், எட்டி வேகமா நட..’’ என்று சொல்லி, என் பேச்சை வேறுபக்கம் திருப்பினீர்கள்.

இது நடந்து இரண்டுமாதம் கழிந்திருக்கும். ஒரு நாள் மாலை பள்ளியிலிருந்து வந்ததும் சாப்பிட்டு சட்டை மாற்றிக்கொண்டு, கோயில் அருகிலுள்ள சிமெண்ட் களத்தில் என் வயது சிறுவர்களுடன் கோட்டிப் புல் விளையாடிக் கொண்டிருந்தேன்.

மணி எப்படியும் ஐந்தரை இருக்கும்.

அங்கே வந்த நீங்கள்,

”வா என்கூட..” என எதுவும் சொல்லாமல் கூட்டிக்கொண்டு, பெரிய கோனார் வீட்டு தென்னந்தோப்பை ஒட்டிய வழியாக நடந்து, காவாங்கரையில் போய், ரங்கன் மாமா கொட்டாய் அருகிலிருக்கும் படிக்கட்டில் இறங்கி மறுகரைக்கு சென்று, கன்னிமார் சுனை அருகில் பாறையில் ஏற்றி மலைமீது கூட்டிப் போனீர்கள்.

அதுவரை எங்கே போகிறோம் எனத் தெரியாமல் வந்த நான், மலையில் ஏற ஆரம்பித்ததும், அன்று நான் உங்களிடம்,

‘ஒருநாள் ராத்திரியெல்லாம் மலமேல இர்ந்தா எப்டியிருக்கும்யா?’

என்று கேட்டதற்கான பதிலை, நிஜத்தில் சொல்ல அழைத்துப்போவதை புரிந்துகொண்டேன்.

மெதுவாக ஒவ்வொரு பாறைமீதும் ஏற்றிக் கூட்டிப்போன நீங்கள், உச்சிமலைக்குப் போனதும் அன்று உட்காரவைத்த அதே கல்மீது என்னை உட்காரவைத்து,

”ஒன் ஆசத்தீர ராத்திரியெல்லாம் ஒக்காந்து பாரு… நான் தோ, அங்க ஒக்காந்திருக்கன். ஏதாது ஒண்ணுன்னா கொரல் கொடு..’’ என்று சொல்லிவிட்டு, நான்கடி எடுத்து வைத்திருப்பீர்கள்.

அதற்குள், ”ராத்திரில பயமா இர்க்காதாய்யா?’’ என்றேன், இரவு முழுக்க உச்சி மலைமீது தனியாக உட்காரப் போவதை நினைத்து லேசான பயத்துடன்.

”என்ன பயம் ஒனக்கு..? ஒரு பயமும் இல்ல… எல்லாம் நம்ம சொந்தங்க… தெகிரியமா ஒக்காந்திரு… நான் இங்கதான் இருக்கன்..’’ என்று சொல்லி லேசாக சிரித்துவிட்டு, அங்கிருந்து இறங்கிப் போய் சற்றுதூரம் தள்ளியிருந்த பெரும் பாறைமீது உட்கார்ந்து கொண்டீர்கள்.

பகல்வெளிச்சம் முழுக்க மறைந்து இரவின் மெல்லிருள் வெளிச்சம் எங்கும் கவிய ஆரம்பித்தது.  இருள் இவ்வளவு வெளிச்சமாக இருக்குமெனக் கண்டது அதுதான் முதல்தடவை ஐயா.

ஆங்காங்கே ஊர்களில் புள்ளியாய் தெரியும் தெருவிளக்கு வெளிச்சத்தைத் தாண்டி எவ்வெளிச்சமும் இல்லை. சிறுசிறு பூச்சிகளின் மென்னொலி தவிர எச்சத்தமும் கேட்கவில்லை.

சரியாக ஒரு மணிநேரம் சென்றிருக்கும். சனிமூலையில் லேசாக வெளுப்பது போல் இருந்தது. அதையே அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் கருவெண்ணிற மேகத்தின் பின்னாலிருந்து நிலவு முளைத்து வெளிவந்தது. பெருநிலவு. அதைப் பார்த்ததும், பவுர்ணமிக்குப் பிறகான நாளிது என புரிந்துகொண்டேன்.

மெல்ல நிலவு மேலேறி வரவர அவ்வொளிப்பட்டு மொத்த மலையும் ஒளிர்வது போலிருந்தது. இதுவரை காணாத புதியதோர் உலகம். அதுவும் மிக உயரத்தில் உட்கார்ந்துகொண்டு, தனியனாய் வானை எட்டித் தொடும் தூரத்தில் உடல் சிலிர்க்க கால்களைத் தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தேன்.

ஆரம்பத்தில் இருந்த லேசான பயம் கொஞ்ச கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. கூப்பிடும் தூரத்தில் நீங்கள் இருப்பதும், அவ்விடம் சற்று நேரத்தில் பழகிப்போனதும்தான் காரணமென உணர்ந்தேன்.

இயற்கை அன்னையின் மடியில் உட்கார்ந்திருக்கும் மெல்லுணர்வும், பாதுகாப்பும், தனித்தெம்பும் மெல்ல எனக்குள் கூடிவருவதாய்த் தோன்றியது.

மனத்தோடு சேர்ந்து உடலும் லேசாகி பஞ்சுபோலாகியது. ஒருவிதப் பரவசம். கனவிலும் நினைத்துப் பார்க்காதது.

ஏதேதோ நினைக்கிறேன். பெரும் பேரரசுக்கு ராஜாவாய், உலகம் மொத்தத்தையும் கட்டியாளும் மன்னவனாய், இன்னும் இன்னும்.

காக்கி டவுசரும், கட்டம் போட்ட நீலநிறச் சட்டையும் அணிந்திருந்த என்னை, காற்று வரிசைகட்டி வந்து தொட்டுப் போனது. அதிலும் காற்றானது, இவ்வளவு அழகாகப் பேசுமென அதன் குரலை உற்றுக் கேட்டபோதுதான் தெரிந்தது.

நிலவு கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி உச்சிவானை வந்தடைந்தது. தலைக்குமேலே வெண்கிரீடம் மிதப்பதாய்த் தோன்ற, இவ்வளவு நேரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்த நட்சத்திரங்கள் சட்டென சொல்லி வைத்ததுபோல் கூட்டம் கூட்டமாகக் கூடி ஒளிர ஆரம்பித்தது.

மெல்ல எழுந்துநின்று உச்சிவானையும், சுற்றிலும் பூத்தொளிரும் விண்மீன்களையும் மிக அருகில் நின்று ஒற்றையனாய் ரசிக்கும் கர்வத்துடன், கைகளைஅகல விரித்து கண்களை மூடிக்கொண்டு, சற்றுமுன் கண்ட காட்சியை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்திப் பார்க்கிறேன்.

உலகை மறந்து, என்னை மறந்து, மொத்த உயிரையும் துளியாக்கி, அதன் ஒற்றைக் கண்ணால் மொத்த வானையும் கண்கொட்டாமல் கண்டால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அக்காட்சி.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்றெல்லாம் தெரியவில்லை ஐயா. சட்டென நினைவு வந்தவனாய், கண்களை மெல்லத் திறந்து பார்க்கிறேன். உச்சி வானில் தலைமீது ஒளிர்ந்த நிலவு, தென்மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் போட்டிப் போட்டுக்கொண்டு ஒளிர்ந்த நட்சத்திரங்கள், போட்டி முடிந்து சாவகாசமாய் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது.

இவ்வளவு நேரம் வலிக்காத கால்கள் லேசாக வலிப்பதாய் உணர்ந்தேன். மெல்ல பக்கத்திலிருந்த கல்லின் மீது உட்கார்ந்து, சுற்றிலும் வேடிக்கைப் பார்க்கிறேன். சற்று தள்ளியிருக்கும் பாறையில் நீங்கள் உட்கார்ந்திருப்பது மங்கலாய்த் தெரிந்தது.

சில நிமிடங்களில் கிழக்கு வானம் வெளுத்து பொழுது விடியப் போகும் அறிகுறி தெரிய ஆரம்பித்தது. கால்வலி குறைந்து பசிக்கத் தொடங்கியது. இவ்வளவுநேரம் பசி பற்றிய எண்ணமே வராதிருந்த எனக்கு, சட்டெனப் பசிக்க ஆரம்பித்ததும்தான் உணர்ந்தேன், நேற்று மாலை ஐந்து மணிக்கு பள்ளியிலிருந்து வந்தவுடன் கடைசியாக சாப்பிட்டது.

அதோடு, மாலை ஊரிலிருந்து வரும்போது நீங்கள் துண்டில் எதையோ மூட்டையாகக் கட்டி வைத்திருந்ததைப் பார்த்ததும். நிச்சயம் அது சாப்பிடும் பொருளாகத்தான் இருக்குமெனத் தோன்றியது. ஒருவேளை நடுவில் பசிக்கிறதென நான் சொன்னால் தரலாமென நினைத்து எடுத்து வந்ததாக இருக்கலாம்.

கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு கிழக்கு வானையே பார்த்துக் கொண்டிருந்தேன். விடியவிடிய இறங்கிய பனியின் ஈரத்தில் போட்டிருந்த டவுசரும் சட்டையும் லேசாக நனைந்திருந்தது.

மெல்ல இருள் விலகி ஒளி பெருக ஆரம்பித்தது. ஓரிரு நிமிடங்களில் செந்நிற ஒளி படர்ந்து மெல்ல வானைக் கிழித்துக்கொண்டு கதிரவன் வெளிவந்தது. எழுந்து நின்று புதுவானில் புத்தொளியில் மிளிரும் புதிய மேகங்களையும், அதன் கீழே பொன்னொளி பெற்ற உலகையும் பார்க்கிறேன்.

இருளொளியில் இரவு முழுக்க உறங்கிக்கொண்டிருந்த பாறைகள், மரங்கள், செடி, கொடிகள் யாவும் கைகளை அகலவிரித்து ஒளியை தன்மேல் முத்தமாய்ப் பொழியும் வெயிலோனை வரவேற்பதாகத் தோன்றியது. பனியில் நனைந்திருந்த ஆடையில் கதிரொளி பட்டு உடல்முழுக்க சிலிர்க்க ஆரம்பித்தது.

பனிஈரம் பட்டிருந்த பாறைகளும், இலைகளும் மெதுவாய் ஒளிபெறுவதைக் கண்டேன். அதிலும் இளம் மஞ்சம் புல்லில் மெல்ல ஊடுருவும் ஒளியழகைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.

மறுநொடியே சத்தமின்றி உயரவானில் தலைமேல் கோடுபோட்டதுபோல் இரைதேடி கிழக்குநோக்கி பறந்துபோகும் பறவைக்கூட்டத்தைக் கண்டு உள்ளம் குதிக்க ஆரம்பித்தது.

தன் நூற்றுக்கணக்கான ஒளிக்கைகளை ஒரே நேரத்தில் நீட்டி முகம், கை, காலென எங்கும் தொட்ட கனலியை எட்டிப் பறிக்கவேண்டும் போலிருந்தது.

காட்டுக் கரும்பல்லி கத்தும் சத்தம் பாறையிடுக்கிலிருந்து கேட்க, மெல்லத் திரும்பி பின்பக்கப் பாறைமீது உட்கார்ந்திருக்கும் உங்களைப் பார்க்கிறேன். அவ்வளவு நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவராய், லேசாக உதடசைத்து சிரித்தீர்கள்.

அச்சிரிப்பு, அன்று நான் கேட்ட,

‘ஒருநாள் ராத்திரியெல்லாம் மலமேல இர்ந்தா எப்டியிருக்கும்யா?’

இக்கேள்விக்கான பெரும்பதிலை தந்துவிட்டதை சொல்லாமல் சொன்னது. ஆம்! ஐயா.

இயற்கையின் முன்னால் நாம் அனைவரும் சிறுதுளி மட்டுமே என்றும், அதன் கோடானக் கோடி பிள்ளைகளில் ஒருவர் நாமென்றும், அது நம்மை அன்போடும் அக்கறையோடும் ஏந்திக்கொள்ள எப்போதும் காத்திருப்பதாகவும், படிக்கப் படிக்கத் தீராத பக்கங்களைக் கொண்ட பிரமாண்ட புத்தகம் அதுவென்றும் உணர்ந்த தருணங்களில் இதனை முதன்மையானதென்று சொல்வேன் ஐயா.

மலைமீதிருந்து பின்பக்க வழியாக இறங்கி, பூங்காவன ஆச்சாரியின் நிலத்தோரமாக நடந்து ஊர் நோக்கி வரும்போது, சட்டென ஓரிடத்தில் நின்று பின்னால் வரும் என்னைப் பார்த்து,

”எப்பா…’’ என்றீர்கள்.

எதையோ கேட்கப்போகிறீர்கள் எனும் ஆர்வத்தோடு,

”சொல்லுய்யா..’’ என்றேன்.

”எப்பயும் ஒனக்குப் புடிச்சத செய். அதான் ஒன்ன என்னிக்கும், நீயா வச்சிர்க்கும்..’’ என்றீர்கள்.

தங்களின் இவ்வார்த்தைகளை இன்றுவரை தவறாமல் பின்பற்றி வருகிறேன் ஐயா. அதனால்தான் சிறுவயது முதல் பாடப் புத்தகங்கள் தாண்டி ஒரு புத்தகம் கூட படிக்காத போதும், அதற்கு நிகரான, சொல்லப்போனால் அதற்கும் ஒருபடி மேலான அனுபவ அறிவைப் பெற்றிருக்கிறேன்.

ஆகையால்தான் அன்று நண்பன் கேட்டபோது,

‘புத்தகம் படிக்கலனாலும் நம்மள சுத்தியிருக்க இயற்கயயும், மனுசங்களயும், அவங்களோட வாழ்க்கயயும் நறயவே படிச்சிருக்கன்..’ என்றேன், மகிழ்வோடு.

நான் சொன்னது சரிதானே ஐயா?!

நில்லா வாசிப்போடு,

மகன் வடிவரசு

(August 24, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=