வாழும் காலத்திலேயே பெற்றோருக்கு செய்த சிறப்பு – எ.த.இளங்கோ

வாழ்த்துகள்…
திரைப்பட பாடலாசிரியர் நண்பர் வடிவரசு Vadivarasu Pradeepan அவர்கள் கிராமத்தில் வாழும் தனது தந்தையார் குறித்து எழுதியுள்ள சிறப்பான நூல் ‘ஐயா!’.
மூன்றாண்டுகளுக்கு முன் வடசென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற ‘சென்னை தின விழா’வில் எனக்கு அறிமுகமானார் வடிவரசு. இடையில் நேரடியாகப் பார்க்கவில்லை, பேசவில்லை என்றாலும் தொடர்ந்து முகநூல் தொடர்பில் இருந்தோம். அவர் தமது பெற்றோரைப் போற்றும் நற்செயல் குறித்து அதன் வழியாகவே நான் அறிந்தும் வைத்திருந்தேன். பிறகு தனது தந்தையார் குறித்து ‘ஐயா’ என்றொரு நூலை வடிவரசு எழுதியிருப்பதை அறிந்து, டிஸ்கவரி புக் பேலசில் அந்நூலை வாங்கிப் படித்தேன். இந்த நூல் குறித்து நான் எழுதப் போவதில்லை. ஏனெனில், நாஞ்சில் நாடன் போன்ற ஆளுமைகள் அது குறித்து எழுதியுள்ளனர்.
ஆனால், பெற்றோரை… குறிப்பாக தந்தையாரை பற்றி அவர்(கள்) வாழும் காலத்திலேயே பதிவு செய்து, அவர்களை சிறப்பிப்பது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. அதுவும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர் குறித்த பதிவாக இதைத் தவிர நூல் வேறெதுவும் வந்துள்ளதாக நான் அறியவில்லை. அதோடு விற்பனையிலும் இந்நூல் முன்ணணியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சிறப்பானதொரு மகனாக விளங்கும் நூலாசிரியர் வடிவரசு அவர்களை சில தினங்களுக்கு முன்பு சென்னை கன்னிமரா நூலககத்தில் சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர்தம் நூல் குறித்து நான் எண்ணியவற்றையெல்லாம் அவரிடத்தில் நேரடியாகவே தெரிவித்தேன். வாழும் காலத்திலேயே பெற்றோருக்கு சிறப்பு செய்திருக்கும் நண்பர் வடிவரசு அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
– எ.த.இளங்கோ
தலைவர், வடசென்னைத் தமிழ்ச் சங்கம்.
*
ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை