திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

சில பயணங்களையும், அதில் எதிர்படும் சில மனிதர்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறக்கமுடியாது. இத்தனைக்கும் சொற்ப நிமிடங்கள்தான் நம்முன் அவர்கள் தோன்றியிருப்பார்கள்; சிலபல வார்த்தைகள்தான் நம்மிடம் பேசியிருப்பார்கள். ஆனாலும் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதவர்களாய் மாறிப் போயிருப்பார்கள். ஆம்!

அப்படியான ஒருவரை கடந்த எட்டாண்டுகளுக்கு முன் ஒரு பயணத்தில் சந்தித்தேன். அதுவும் எதிர்பாராத விதமாக. இன்னும் சொல்லப்போனால் ஒருவகை மோதலோடு. ஆம்!

ஊடக நண்பர்கள் இருவரோடு தமிழகத்தின் மிக அழகிய மலைத்தொடர்களில் ஒன்றான மேகமலையை சுற்றிப் பார்ப்பதற்காக மதுரையிலிருந்து முன்தினம் காலையிலேயே கிளம்பிச் சென்று, கம்பம் அருகிலுள்ள சுருளி அருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு, சின்னமனூரில் மிகக் குறைந்த வாடகையில் ஓர் அறை எடுத்துத் தங்கி அதிகாலை நான்கு மணிக்கு செல்லும் முதல் பேருந்தில் புறப்பட்டோம்.

மேகமலை என்னதான் ஊட்டி, கொடைக்கானல் போன்று மிக அழகான மலைப்பிரதேசமாக இருந்தாலும் சரிவர பேருந்து வசதி இல்லாத இடம். காரணம் போதிய சாலை வசதி இல்லாதது. ஒருவகையில் அது குறையாகத் தெரிந்தாலும், இன்னொரு வகையில் நிறை என்றே தோன்றியது.

ஒருவேளை நல்ல சாலை வசதி இருந்திருந்தால் ஊட்டி, கொடைக்கானல் போன்று தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக மாறி, ஆங்காங்கே புதுப்புது தங்குமிடங்களும், உணவகங்களும், வீடுகளும், கடைகளும் முளைத்து இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு ஆகாமல் இன்னும் இயற்கை அதன் நிறைமுகத்தோடு இருக்கக் காரணம் போதிய சாலை வசதி இல்லாமைதான் என நினைக்கும்போது குறையும் நிறையாகவே தெரிந்தது.

”ஒரு நாளைக்கு மொத்தமே நாலு பஸ்ஸூதான் போகும்’’ என்றார்கள். ‘சரி’ என அவற்றின் நேரங்களை கேட்டுக் குறித்துக்கொண்டு, நாளின் முதல் பேருந்திலேயே ஏறிக்கொண்டோம்.

எங்களோடு சேர்த்து மொத்தமே பத்து பேர்தான் இருந்திருப்பார்கள். ”மூணு மேகமலை’’ என நான்தான் நடத்துநரிடம் பயணச்சீட்டு கேட்டு வாங்கினேன். ஒருவருக்கு 21 ரூபாய். மூவருக்கு 63 ரூபாய். நூறு ரூபாய் தந்தேன். ஆனால் அவர் 63 ரூபாய் போக மீதி 37 ரூபாய் தருவதற்கு பதிலாக வெறும் 25 ரூபாய் மட்டுமே தந்தார்.

உடனே வாங்கிய பயணச்சீட்டைக் காட்டி, ”மூணு டிக்கெட் 63 ரூபாதானே… இன்னும் 37 ரூபா தரணுமே, 25 ரூபாதான் தந்திருக்கீங்க. மீதி எங்கே…?’’ என்று கேட்டேன்.

சட்டெனக் கோபமுற்றவராய், ”ஒருத்தருக்கு 25 ரூபாய்’’ என்றார்.

”அப்போ 25 ரூபா டிக்கெட் தரவேண்டியதானே… எதுக்கு 21 ரூபா டிக்கெட் தந்துட்டு, 25 ரூபா வாங்கறீங்க?’’

எதுவும் பேசாமல் பேருந்தில் இருந்தவர்களை பார்த்துவிட்டு, தன் பையிலிருந்து மீதி சில்லறையை எடுத்துத் தந்துவிட்டு போய் ஓட்டுநர் பக்கத்திலிருந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டார்.

நான்தான் சும்மா இல்லாமல், ”எதுக்கு இப்டி மக்கள ஏமாத்தறீங்க…? எவ்ளோ டிக்கெட்டோ அவ்ளோ மட்டும் காசு வாங்கவேண்டியதுதான…’’ என ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தேன்.

உடன் வந்த நண்பர்கள், ”சரி விடு மச்சான், அதான் மிச்சக் காசு தந்துட்டாருல்ல…’’ என்றார்கள், என்னை சமாதானம் செய்யும்  நோக்கில்.

நானோ அவர்களைப் பார்த்து முறைத்துவிட்டு, ”இப்டி எல்லாரும் விட்டுவிட்டுதான்டா எங்கப் போனாலும் ஏமாத்தக் கத்துக்கிட்டாங்க’’ என்றேன், கோபம் கொப்புளிக்க. சட்டென இருவரும் அமைதியாகி விட்டார்கள்.

எங்கும் நிற்காமல் வேகமாகச் சென்ற பேருந்து ஓரிடத்தில் போய் சட்டென்று நின்றுவிட்டது.  ‘என்ன?’ என்று எட்டிப் பார்த்தோம். செக்போஸ்ட். மலை மேல் சென்றுவரும் வாகனங்களை சோதனை செய்துவிட்டு அனுப்புவதற்காக அமைக்கப்பட்டிருந்தது.

பேருந்துள் ஏறிவந்த வனக்காவலர் ஒருவர் வெறுமனே கடமைக்கு சோதனை செய்வதுபோல் பார்த்துவிட்டு, கீழே இறங்கிப் போய் ‘போகலாம்’ என கை காட்டி செக்போஸ்டை திறந்துவிட்டார்.

இவ்வளவு நேரம் தரைதளத்தில் வந்த பேருந்து மெல்ல மலைமேல் ஏற ஆரம்பித்தது. நாங்கள் சென்றது ஆண்டிறுதி என்பதால் மார்கழி மாதக் குளிர் வேறு. இத்தனைக்கும் எல்லா சன்னல்களும் மூடித்தான் இருந்தன. குளிர் தாங்கமுடியாத நண்பர்கள் இருவரும் பையிலிருந்த என் துண்டையும் சேர்த்து எடுத்துப் போர்த்திக்கொண்டு சற்றுநேரத்திலேயே உறங்கிவிட்டார்கள். எனக்குதான் எவ்வளவு முயன்றும் தூக்கம் வரவில்லை.

சன்னல் வழியாகத் தெரிந்த மலையடிவார கிராமங்களில் எரியும் மின்விளக்கு வெளிச்சத்தையும், பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் தெரிந்த சாலையையும் பார்த்துக்கொண்டு, நடுநடுவில் நடத்துநரைப் பார்த்து முறைத்துக்கொண்டு போனேன்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றிருப்போம். சட்டென எழுந்து பக்கத்தில் வந்த நடத்துநர், ”நீங்க கேட்ட இடம் வரப்போகுது, இறங்கிக்கோங்க’’ என்றார்.

இருளை எழுப்பிக்கொண்டு வளைந்து நெளிந்து சென்ற பேருந்து மெல்ல ஓரிடத்தில் போய் மூச்சுவிட்டுக்கொண்டு நின்றது. நண்பர்கள் இருவரையும் வேகமாக தட்டி எழுப்பிக் கூட்டிக்கொண்டு கீழே இறங்கி சுற்றிலும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஊரைக் காணோம். பழைய உடைந்துபோன பேருந்து நிறுத்தக் கூரை ஒன்றும், சற்று தூரத்தில் தேயிலை தோட்டத்துக்கு அந்தப்பக்கமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயம் ஒன்றும் மட்டுமே இருப்பது தெரிந்தது.

‘சரி, அங்கே போவோம்’ என மெல்ல இருளுக்குள் வழி கண்டுபிடித்து குளிரில் நடுங்கிக்கொண்டு நடந்துபோய் தேவாலயத்தை அடைந்தோம். ஒருத்தரும் அங்கே இல்லை. ஆனால் ஆலயம் திறந்திருந்தது.

உள்ளே சென்று எங்கள் பைகளை ஓரமாக வைத்துவிட்டு, விடியும் வரைக்கும் அங்கேயே உட்கார்ந்து கதைகள் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்து பார்த்தோம். சற்றுதள்ளி ஆங்காங்கே சிறுசிறு வீடுகள் இருப்பது இப்போதுதான் தெரிந்தது.

ஓடிப்போய் பைகளை எடுத்துக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு தேநீர்க் கடையை கண்டுபிடித்து, ஆளுக்கொரு தேநீர் வாங்கிக்கொண்டு அங்கிருந்த இருக்கையில் குளிருக்கு இதமாக ஓட்டிக்கொண்டு உட்கார்ந்தோம்.

எங்களைப் பார்த்த கடைக்கார அம்மா, ”எங்கிருந்து வர்ரீங்க தம்பி?’’ என்று கேட்டார். சொன்னோம்.

”இங்கே யாருனா தெரிஞ்சவங்க இருக்காங்களா?’’ என்று கேட்டார். ‘இல்லை’ எனத் தலையாட்டிவிட்டு, ”ஆனா செந்தில்னு ஒரு அண்ணா இங்கே கடை வச்சிருக்கார். அவர்கூட ஒருவாட்டி போன்ல மட்டும் பேசியிருக்கோம்’’ என்றேன்.

சட்டென முகம் மலர்ந்தவராய், ”ஓ, செந்தில் கடையா… அது ரோடுவேஸ்லல்ல இருக்கு’’ என்றார்.

”அப்போ இதும்மா…?’’

”இது மலமேல இருக்க மொத கிராமம்’’

”இங்கேருந்து எவ்ளவு தூரம்மா அங்கே போக?’’

”ஏழெட்டு கிலோமீட்டர் இருக்கும் தம்பி, அடுத்த பஸ் பத்து மணிக்குதான் வரும்’’

மெல்லத் திரும்பி பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர்களை பார்த்தேன். அடிக்காத குறையாக முறைத்துக்கொண்டு, ”சண்ட போட்டல்ல கண்டக்டர்கிட்ட… அதான் அந்தாளு கடுப்புல இங்கயே எறக்கிவிட்டுட்டுப் போய்ட்டான்’’ என்றார்கள்.

உள்ளுக்குள் அந்த கண்டக்டரை திட்டிக்கொண்டு, ”சரி, இப்ப என்ன பண்ணலாம்?’’ என்று கேட்டேன்.

”நடந்து போகலாம், இல்லனா இங்கயே இருந்து பஸ்ல போகலாம்’’

நான் சொன்னேன், ”நாலு மணிநேரம் இங்கயே இருக்கறதுக்கு… வேடிக்கப் பாத்துனு பொறுமையா நடந்து போகலாம்’’.

தயக்கத்தோடு இருவரும் ‘சரி’ என்றார்கள்.

தேநீர் குடித்துவிட்டு அதற்கான பணத்தை தந்துவிட்டு அந்த அம்மாவிடம், ”சரிம்மா, நாங்க நடந்தே போறோம்’’ எனச் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

உடனே அந்தம்மா, ”தம்பி தம்பி, இப்பயேவா போறீங்க…?’’ என்று கேட்டுவிட்டு, ”வேணாம் தம்பி, நல்லா விடிஞ்சதும் போங்க. இப்பதான் அந்தப்பக்கம் ரோடுகிட்ட நாலு யான போச்சுன்னு சொன்னாங்க’’ என்றார்.

”என்னது யானையா?’’ என்று அதிர்ச்சியோடு கேட்க, ‘ஆமாம்’ எனப் புன்னகைத்தவர், ”இங்க யான அதிகமா இருக்கும் தம்பி. விடிஞ்சதும் பார்த்துப் பொறுமையா போங்க’’ என்றார்.

‘சரி’ எனத் தலையாட்டிவிட்டு வெளியில் வந்து அங்கிருந்த திண்ணையில் உட்கார்ந்திருந்துவிட்டு, நன்றாக விடிந்து சூரிய ஒளி எங்கள் மேல் விழ ஆரம்பித்ததும் எழுந்து நடக்க ஆரம்பித்தோம்.

அத்தனை அழகான நீண்ட நெடிய மலை. எப்பக்கம் பார்த்தாலும் மரங்களும், செடிகொடிகளும், சிறுசிறு அருவிகளும், ஏரிகளும், குட்டைகளுமாக இயற்கையின் பசுங்கையை பிடித்துக்கொண்டு நடப்பது போலிருந்தது.

மொத்த அழகையும் வியக்க வியக்க ரசித்துக்கொண்டு, அடுத்து வந்த சிறுகிராமத்தில் இருந்த உணவகத்தில் காலை உணவு உண்டுவிட்டு, மிக மகிழ்ச்சியாக பேசிச் சிரித்துக்கொண்டு, நடுநடுவில் ஆங்காங்கே நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டு, இரண்டு மணிநேரம் போனதே தெரியாமல் நடந்து நாங்கள் வர வேண்டிய ரோடுவேஸ்க்கு வந்தோம்.

பெரிய ஏரியை ஒட்டிய மலைச்சரிவில் வீடுகளும் கடையுமாக அவ்விடமே பார்க்க அத்தனை ரம்மியமாக இருந்தது. பையை அங்கிருந்த செந்தில் அண்ணன் கடையில் வைத்துவிட்டு, ஆளுக்கொரு தேநீர் அருந்திவிட்டு பின்னாலிருந்த ஏரிக்குள் இறங்கிப் போய் கை கால் முகம் கழுவிக்கொண்டு, அதன் மேல் பக்கமாக இருந்த அருவியில் சென்று ஆடிப் பாடி குளித்துவிட்டு, மனம் போன போக்கில் மாலை வரை சுற்றித் திரிந்துகொண்டிருந்தோம்..

தூரத்தில் பேருந்து ஒன்று வருவதை பார்த்துவிட்டு நண்பர்களிடம், ”வர்ற பஸ்ல ஏறி அது எங்கே போகுதோ அதுவரைக்கும் போயிட்டு, திரும்பவும் அதே பஸ்ல வந்து இங்கே இறங்கிக்கலாம்’’ என்றேன். அவர்களும் உடனே ‘சரி’ எனச் சொல்ல, மூவரும் கைகாட்டி ஏறிக்கொண்டோம்.

காலையில் நாங்கள் வந்த அதே பேருந்து, அதே நடத்துநர். நான்தான் இப்போதும் பயணச்சீட்டு வாங்கினேன். இம்முறை சரியாக டிக்கெட்டுக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தந்துவிட்டார். உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

மூவரும் தனித்தனி இருக்கைகளில் சன்னலோரமாக உட்கார்ந்துகொண்டு, வழியில் வந்த கிராமங்களையும் அவ்வூர் மக்களையும் பசுமைபோர்த்திய மலைகளையும் ஏரிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, மேகமலையின் கடைசி கிராமம் வரைக்கும் சென்று அங்கே ஆளுக்கொரு தேநீர் குடித்துவிட்டு, திரும்பவும் அதே பேருந்தில் ஏறி ரோடுவேஸ்க்கு வந்திறங்கினோம்.

அதுதான் மேகமலைக்கு வந்து செல்லும் கடைசிப் பேருந்து என்றார்கள். இறங்கி அங்கிருந்த சிறு கோயிலருகில் போய் நின்ற என்னிடம் அப்பேருந்தில் வந்திறங்கிய பெரியவர் ஒருவர்தான் கேட்டார், ”நீங்கதான தம்பி காலையில சில்லற தரலன்னு பஸ்ல சண்டப் போட்டது…?’’. மெல்லத் தலையாட்டி, ”ஆமாங்கய்யா’’ என்றேன்.

”ஒனுக்கு ஒண்ணு தெரியுமா தம்பி…? இன்னைக்கு நாங்கலாம் பஸ்ல நிம்மதியா கீழ போயிட்டு வர்றோம்னா… அதுக்கு காரணம் அந்த கண்டெக்டரும், டைவரும்தான். ரோடு நல்லா இல்லன்னு ஒருத்தரு கூட இந்த வழியில வரமாட்டேன்ட்டாங்க. நாங்களும் மனு மேல மனுவா தந்து பாத்துட்டோம். இவங்கதான் வந்து நாங்கப் படற கஷ்டத்தலாம் பாத்துட்டு, தான்உயிர பணயம் வச்சி பதனஞ்சி வருசமா தெனம் வந்துட்டுப் போறாங்க.

தெரியாமதான் கேக்கறன், படிச்ச புள்ளதான நீ…? அவங்களுக்கு அப்படி என்ன சம்பளம் கவுருமண்ட்டுல தந்துருவாங்கன்னு நெனக்கிற…? அதான் நாங்களாப் பேசி, எங்களால முடிஞ்ச அஞ்சுபத்த டிக்கெட்டோட சேத்து கூடலா தர்றோம்.

மொதல்ல வேணாம்னுதான் சொன்னாங்க. நாங்கதான் ‘புண்ணியமா போவும், வாங்கிக்கங்க சாமி’ன்னு கையெடுத்து கும்புட்டு தந்தோம். அப்பதான் வாங்கினாங்க.

என்னிக்கும் எங்கக்கிட்ட ‘இவ்ளோ தாங்க, அவ்ளோ தாங்க’ன்னு கேட்டதில்ல. நாங்களா தந்தா வாங்கிப்பாங்க, இல்லனா விட்ருவாங்க. நம்மமூரு புள்ளைங்கன்னு நெனச்சிதான் காலைல உங்கக்கிட்ட உரிமையா வாங்கியிருக்காரு. பாவம், நீங்க சண்டப் போட்டத நெனச்சி ரொம்ப கலங்கிட்டாரு’’.

பெரியவர் சொன்னதைக் கேட்டதும் ஒருமாதிரி ஆகிவிட்டது. ‘ச்ச, இது தெரியாம 12 ரூபாய்க்கு சண்டப் போட்டுட்டமே’ என உள்ளுக்குள் உறுத்தலாக இருந்தது. உடன் வந்த நண்பர்களிடம் சொல்லி பெரிதும் வருத்தப்பட்டேன்.

பின் இரண்டு நாட்கள் அங்கே சுற்றித் திரிந்துவிட்டு சென்னை வந்ததும் முதல் வேலையாக தேனியில் இருந்த மாணவப் பத்திரிகையாளர் தம்பியை அழைத்து, அவள் விகடன் பொங்கல் சிறப்பிதழுக்கு உடனே அவர்கள் இருவரையும் குடும்பத்தோடு பேட்டி எடுத்து புகைப்படத்தோடு அனுப்பச்சொல்லி அதை அழகுற வெளியிட்டோம்.

பேட்டி எடுத்த தம்பியிடம் அந்த நடத்துநர் புறப்படும்போது கேட்டிருக்கிறார், ”எப்படி சார் உங்களுக்கு எங்களப் பத்தி தெரியும்?’’.

தம்பி புன்னகைத்துக் கொண்டு, ”நாலுநாள் முன்னாடி உங்கக்கிட்ட சில்லற தரலன்னு ஒரு அண்ணன் சண்டப் போட்டாருல்ல… அவர் சொல்லிதான்’’ என்றிருக்கிறார்.

கேட்டுவிட்டு மெல்லக் கண்கலங்கிப் புன்னகைத்துக்கொண்டு போய் பேருந்திலேறி விசிலடித்து மேகமலை நோக்கி புறப்பட்டிருக்கிறார். ஆம்!

சில பயணங்களையும் அதில் எதிர்படும் சில மனிதர்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறக்கமுடியாது. அவ்வகையில் இம்மேகமலை பயணமும், அதில் எதிர்பட்ட இப்பேருந்து நடத்துநரும் மிக முக்கியமானது; முக்கியமானவர். ஆம், அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

*

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=