திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்
முன்பின் தெரியாத அந்நியர்களிடம் சட்டெனப் போய் பேசக்கூடியவன் அல்ல நான். எனினும் சில தருணங்களில், அதிலும் குறிப்பாக பயணங்களின் போது என்னை அறியாமல் ஏதோ ஓர் உந்துதலில் சென்று சிலரிடம் பேசிவிடுவதுண்டு. நான் இங்கே சொல்வது வழி கேட்பது போன்ற எளிய பேச்சல்ல. அதையும் தாண்டிய பேச்சு.
உதாரணமாக கடந்த 2020 மார்ச் ஒன்றாம் தேதி கொல்லிமலையில் மனம் போன போக்கில் தனியனாய் சுற்றித் திரிந்தபோது, அங்குள்ள பழைய பாழடைந்த சிவன் கோயில் ஒன்றின் அருகிலிருந்த தேநீர் கடை பக்கத்தில் ஓர் அம்மாவைக் கண்டேன். கொத்துக் கொத்தாக பறித்து வந்திருந்த மிளகினை மெல்ல ஆய்ந்துகொண்டிருந்தார்.
ஏற்கனவே நண்பர்களோடு வால்பாறையில் மிளகு விளைவதை கண்டிருக்கிறேன். என்றபோதும் அது எவ்வாறு வளர்க்கப்படுகிறது, பறிக்கப்படுகிறது, பதப்படுத்தப்படுகிறது போன்ற எத்தகவலும் தெரியாது. சில நிமிடம் நின்று அவர் என்ன செய்கிறார் எனப் பார்த்தவன், ஏதோ ஓர் உந்துதலில் போய் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
சட்டென தலை நிமிர்த்திப் பார்த்தவர் என் புதுமுகத்தையும், அவ்விடத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத அந்நியன் நான் என்பதையும் நொடியில் கண்டுகொண்டவராய் கூப்பிட்டு பக்கத்தில் உட்காரச் சொல்லி, மிளகு பற்றி ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தார்.
நன்கு முற்றிய மிளகை பறித்து வந்து (பச்சை வண்ணத்துடனே) வெயிலில் காயவைத்து எடுத்தால் அது கருமிளகு என்றும், நன்கு பழுத்த மிளகை மூன்று நாட்கள் நீரில் ஊறவைத்து தோல் நீக்கப்பட்டு எடுத்தால் அது வெண்மிளகு என்றும் சொன்னார்.
உண்மையில் அவர் சொல்லிவிட்டு கை நிறைய வெண்மிளகை அள்ளிக் காட்டும் வரைக்கும் மிளகில் வெண்மிளகு என ஒன்று இருப்பதே எனக்குத் தெரியாது.
எதுவும் பேசாமல் வியப்போடு அவர் கையிலிருந்த வெண்மிளகையே பார்த்துக்கொண்டிருந்தேன். கை நீட்டச் சொல்லி நான்கைந்து மிளகினை போட்டவர், இருவகை மிளகும் பெரும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றும், தினந்தோறும் அவற்றை உணவில் சேர்த்து வந்தால் எந்நோயும் நம்மை நெருங்காது என்றும், அதனால்தான் இதன் அருமை தெரிந்த வெளிநாட்டினர் நம் நாட்டினரை விட அதிகமாக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் சொன்னார்.
மெல்ல தலையாட்டி புரிந்ததாகச் சொல்லி அம்மிளகை திரும்பவும் அவரிடமே தந்துவிட்டு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னான சங்க இலக்கியப் பாடல்கள் மிளகை கறி என்று சொல்வதாகச் சொன்னேன். கேட்டுவிட்டு கண்கள் அகல விரியப் பார்த்தார்.
ஒய்மா நாட்டு நல்லியக் கோடனிடம் பரிசில் பெற்று மீளும் சிறுபாணன் ஒருவன், வழியில் கண்ட வறுமையால் வாடும் இன்னொரு பாணனை அந்த வள்ளலிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ள சிறுபாணாற்றுப்படை பாடலில் (41 – 46), வளவிய இதழையுடைய செங்கழுநீர்ப் பூவை விரும்பித் தின்ற எருமையானது, பசிய மிளகுக்கொடி படர்ந்த பலா மரத்தினது குளிர்ந்த நிழலில், மஞ்சளினது மெல்லிய இலை தன் மயிர் நிறைந்த முதுகைத் தடவ, காட்டு மல்லிகைக் கொடியாகிய படுக்கையின் மேல் கள் மணம் கமழ அசையிட்டுத் துயில் கொள்ளும் என்று அழகுற பதிவு செய்திருக்கிறார் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.
‘……….. வள்இதழ்க்
கழுநீர் மேய்ந்த கடவாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயரா,
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்’
பைங்கறி எனில் பசிய மிளகுக்கொடி. எத்தனை அழகானச் சொல் பாருங்கள். இன்றைக்கு ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவற்றின் இறைச்சியை மட்டுமே சொல்ல கறி எனும் சொல்லை பயன்படுத்தும் நம்மில் எத்தனைப் பேருக்கு இச்சொல் ஈராயிரமாண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழ் இலக்கியங்களில் மிளகை குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியும்?

சங்க இலக்கியத்தில் மிளகு பற்றின மற்றோர் அழகானப் பாடலுண்டு குறுந்தொகையில். பாடல் எண் 288. கபிலர் பாடியது.
‘கறிவளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும்….’
அடுக்காக உள்ள மலைகளைக் கொண்ட அவ்விடத்தில் மிளகுக் கொடியில் வளர்ந்துள்ள தளிர்களை அருந்தக் குரங்குகள் ஒருங்கு கூடித் தங்கியிருக்கும் என்றிதற்கு பொருள் கொள்ளலாம்.
இப்பாடல் மூலமாக குரங்குகள் இனிய கனியை உண்ணும்போது தம் கிளையுடன் அதாவது தம் சுற்றத்துடன் ஒன்றாகக் கூடி இருப்பதுபோல, இன்னாத காரமுடைய மிளகின் தளிர்களை உண்ணும்போதும் கிளையுடன் ஒன்றுகூடி இருக்கும் என்பதை அறியலாம்.
மேலும் மிளகினை மிளகு என்னும் சொல் கொண்டே அழைக்கும் சங்க இலக்கியப் பாடல்களும் உண்டு. பரணர் பாடிய பதிற்றுப்பத்து – ஐந்தாம் பத்து – 41 ஆவது பாடலின் (வென்றிச் சிறப்பு) 21 ஆவது வரி,
‘மிளகு எறி உலக்கையின், இருந்தலை, இடித்து’
என்கிறது. அதாவது பகைவரது கரிய தலையை உலக்கையால் இடித்த மிளகைப்போல இடித்து என்னும் பொருளில்.
கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு 187 ஆவது வரி,
‘பழுமிளகு உக்க பாறை நெடுஞ் சுனை…’
என்கிறது, பழுத்த மிளகு சிந்திக் கிடக்கின்ற கற்பாறையில் உள்ள நீண்ட சுனையில் எனும் பொருளில்.
மிளகுக்கு மிளகு, கறி தவிர்த்து அகுட்டம், அதிட்டம், அமிரம், அரிசம், அரிசு, அலர், அழற்காய், ஆபனம், இரம்பிலம், இவனட்டம், உசிரம், கந்தநாகுலி, கமி, கலிங்கம், கலினை, காயம், கிருட்டிணம், கேவலதிரவியம், கோலை, கோனகம், சந்திரகம், சருமபந்தம், சனுகம், சாகாங்கம், சிரோவிருத்தம், சுள்ளிடுவான், சூர், செவ்வியம், தாத்துவாசம், தார்மபத்தனம், திரங்கம், தீச்சனம், தீட்சணம், நாகரேணு, நெட்டம், நெரியல், பலினி, மரிசம், மருக்கம், மல்லசம், மலைவசம்பு, மாரிசி, மாருசி, மிரியம் உள்ளிட்ட இன்னும் பல சொற்கள் இருக்கின்றன நம் தமிழ் மொழியில்.
இவ்வளவு சொற்கள் கொண்டு மிளகு அழைக்கப்படுவதை பார்த்தால் நம் மூதாததையர் வாழ்வில் எவ்வளவு நீண்ட நெடிய தொடர்புடைய ஒன்றாக அவை இருந்துள்ளது என்பதை எளிதில் அறியலாம். இவற்றில் சந்திரகம் மட்டும் நேரடியாக வெண்மிளகைக் குறிக்கும் சொல்லென அறியமுடிகிறது.
அங்கிருந்து புறப்படும்போது வேண்டுமென்றே அந்த அம்மாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். ”மிளகு பார்க்க அப்படியே பப்பாளி விதை மாதிரி இருக்கேம்மா?”. ‘ஆமா’மென தலையாட்டி மெல்ல முறுவலித்தவர், ”அதனாலதான் அதை இதுக்கூட கலந்து உங்களமாதிரி ஊருக்குள்ள இருக்கவங்கள சுலுவா ஏமாத்தறாங்க’’ என்றார்.
பதிலுக்கு நானும் புன்னகைத்துவிட்டு அவரிடம் கேட்டு நான்கைந்து கருமிளகையும், வெண்மிளகையும் கையில் எடுத்துக்கொண்டு,
‘கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி’
என்னும் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பாடிய மலைபடுகடாம் பாடல் வரிகளை உள்ளுக்குள் அசைபோட்டுக்கொண்டு, அங்கிருந்து மெல்ல நடந்து இருபக்கமும் ஆங்காங்கே பலா மரத்தின் மீதும், பாக்கு மரத்தின் மீதும், மா மரத்தின் மீதும், வேறொரு பெயர்தெரியாத மரத்தின் மீதும் ஏறி காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்த பசும் மிளகினைப் பார்த்துக்கொண்டு வந்தேன்.
[மிளகு, கறி என இரண்டு சொற்களையும் ஒரே பாடலின் ஒரே வரியில் கொண்டு… கரிய மிளகுக் கொடிகளில் காய்த்த பசிய மிளகு எனப் பொருள்படப் பாடியப் பாடலிது.]
இப்படித்தான் பயணங்களில் எளிய முன்பின் தெரியாத அந்நிய மனிதர்களிடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் புதுப்புது விஷயங்களை கண்டும் கேட்டும் உணர்ந்தும் கற்றுக்கொள்கிறேன். ஆம்!
கற்றல் இனிது. கற்றுக்கொண்டே இருத்தல் அதனினும் இனிது. வேறென்ன சொல்ல?
*