‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

”பயணசுகம்”

பயணங்கள்தான் என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாகச் சொல்வேன். ஒவ்வொரு தடவை சோர்வில் துவளும் போதும், ஏதேனும் கவலையில் உழலும்போதும், சின்னஞ்சிறு நடையோ அல்லது நெடுந்தூரப் பயணமோ என்னுள் நிகழ்த்தும் அற்புதம் ஒருபோதும் வார்த்தைகளால் சொல்லக் கூடியதன்று.

‘எப்பா… ஏன்யா சாமி ஒருமாரி கீற? ஏன்ச்சி காவாங்கரைக்கா போயி வாய்யா’ என்னும் ஐயாவின் வார்த்தைகள்தான் முதன்முதலில் எனக்குள் பயண சுகத்தை விதைத்ததாக இப்போது நினைத்துப் பார்க்கையில் தோன்றுகிறது.

பயணங்கள் எப்போதும் ஒருவித சில்லிப்பை, சிலிர்ப்பை, மலர்வை போகிற போக்கில் நம்முள் தூவக்கூடியது.

பயணம் என்பது தேவையான அனைத்தையும் ஒன்றுவிடாமல் மூட்டை கட்டிக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பியது தொடங்கி வந்துசேரும் வரைக்கும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்த்தக் கூடிய ஒன்றல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்வதுதான்.

மனத்தின் பேச்சை கேட்டு, இயற்கையின் கரம் பற்றி, திசைகளின் வழியில், நிலத்தையும் நீரையும் காற்றையும் நெருப்பையும் வானையும் துணையாக்கி, ஒளியையும் இருளையும் அன்பால் வாசித்து, உடலையும் உள்ளத்தையும் ஆயுதமாகக் கொண்டு, நம் இடத்திலிருந்து நமக்கான இடத்தைத் தேடி செல்வதுதான் உண்மையில் பயணம் என்பது.

‘உலகின் அனைத்து சாலைகளும் நம் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன’ என்பார்கள். அது எத்தனை நிஜமானது என்பதை என் போன்ற ஊர்சுற்றிகளால் மட்டுமே உணர முடியும். அவ்வாறு உணர்ந்தோர்க்கு உலகிலுள்ள எந்நாட்டின் எல்லைக் கோடுகளும் சாதாரணக் கோடுகளாய், எத்திசைகளும் பாதைகளாய், எவ்வூரும் தம்மூராய் இருப்பதைக் காணலாம்.

‘இப்படி ஊர் ஊரா சுத்துறதுலாம் ஒரு வேலையா’ என்பார்கள், பயண சுகத்தை அனுபவிக்காதவர்கள்; பயண வரத்தை பெறாதவர்கள்.

பயணம் எத்தனைப் பெரிய வலியையும், வேதனையையும், இழப்பையும், தத்தளிப்பையும், தடையையும், கேள்வியையும் சட்டென சுகமாக, பாடமாக, விடையாக மாற்றும் விந்தை மிக்கது. அதனால்தான் உலகின் மகத்தான ஆளுமைகள் யாவரும் பெரும் பயணிகளாய், நாடோடிகளாய், ஊர்சுற்றிகளாய் திரிந்தவர்களாய் / திரிபவர்களாய் இருந்திருக்கிறார்கள் / இருக்கிறார்கள்.

‘நேத்து வரைக்கும் அடுத்து என்ன எழுதுறதுன்னு தெரியாம தவிச்சிட்டிருந்தேன். சின்னதா ஒரு பயணம் போயிட்டு வந்தேன். இப்போ இந்த பயண நூல எழுத ஆரம்பிச்சிட்டேன்.’ ஆம்!

பயணங்கள் நம்மை புதுத்திடும். படிப்பினை நம்மில் புகுத்திடும். இவை யாவற்றுக்கும் மேலாக நினைத்துப் பாரா அதிசயங்களை நம்முள் நிகழ்ந்திடும். தேடிக் கிடையா விடைகளை நமக்குள் துளிர்த்திடும். ஆம்!

பயணியாகவும் பயணிக்கவும் தயாராகுங்கள்.

ஒரு பயணத்தின் நடுவிலிருந்து,

வடிவரசு (எ) திருவாளர் ஊர்சுற்றி.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=