திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

”அடிக்கடி இப்படி ஊர் சுத்த கிளம்பிடறீங்களே… பயணம்னா முதல்ல உங்களுக்கு நினைவுக்கு வர்ற பயணம்னு எத சொல்வீங்க?’’ என்று சில தினங்களுக்கு முன் கேட்டாள் மனைவி கோமதி.

நொடியும் தாமதிக்காமல் 2017 ஆம் ஆண்டு புத்தாண்டை இதுவரை செல்லாத ஓரிடத்தில் அதுவும் தனியனாய் போய் நின்றுகொண்டு வரவேற்க நினைத்து, கொல்கத்தாவின் ஊக்லி நதியில் கட்டப்பட்டுள்ள ஹெளரா பாலத்தின் நடுவில் சென்று நின்று வரவேற்றதை சொன்னேன். இதழசைத்து மெல்ல புன்னகைத்துவிட்டு போனாள்.

அதன் முன்பும் சரி பின்பும் சரி, எத்தனையோ இடங்களுக்கு பயணித்திருக்கிறேன். எனினும் இதனைச் சொல்ல முக்கியக் காரணம் மனத்துக்கு மிக நெருக்கமான பயணமாக இவை அமைந்ததுதான்.

சரியாக ஐந்தாண்டுகள் ஆகின்றன இப்பயணம் சென்று வந்து. இப்போதும் அப்படியே கண்முன்னால் உயிரோட்டமாய் உள்ளது. இன்று மட்டுமல்ல… இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் அப்படித்தான் இருக்கும். இதைதான் வெறுமே சுற்றுலா செல்வதற்கும் மானசீகமாய் பயணிப்பதற்குமான மிக முக்கியமான வேறுபாடாக எப்போதும் சொல்வேன்.

எந்தவித திட்டமிடலும் கிடையாது. அக்கா ஒருவர் தான் மேற்கொள்ளப்போகும் வித்தியாசமான பயணம் ஒன்றைப் பற்றி (இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாதையில் பயணிப்பது) சொல்லி, ”முடிந்தா நீங்களும் வாங்களேன்” என்றார். சட்டென மனத்துள் அப்பயணத்தை ஒட்டி தோன்றியதை அவரிடம் சொன்னேன். முகம் மலர்ந்து, ”செம” என்றார். உடனே தம்பி ஒருவரை உடன் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டோம். ஆம்! வெறும் இருபது நொடிக்குள் முடிவான பயணம்.

இப்படித்தான் பல அற்புதப் பயணங்கள் எவ்வித திட்டமிடலும், மெனக்கிடலும் இல்லாமல் போகிற போக்கில் கருகொண்டு வளர்ந்து ஓர் அழகிய கவிதைபோல் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிடுவதுண்டு.

கொல்கத்தா பெருநகரத்தை அதற்கு முன்புவரை இந்திய வரைபடத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம். முன்னாள் இந்தியத் தலைநகரம். சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியப் பங்குவகித்த இடம். ரவிந்திரநாத் தாகூர், சத்யஜித்ரே, விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை தெரேசா, மகாத்மா காந்தி, சுபாஸ் சந்திரபோஸ் போன்ற எத்தனை எத்தனையோ ஆளுமைகளின் பாதம் பட்ட பூமி.   

இருபக்க வழிநெடுகிலும் மரங்களும் ஊர்களும் சாலைகளும் நதிகளும் கடந்தோடிய ரயிலுக்குள் சன்னலோர இருக்கையில் உட்கார்ந்துகொண்டு நகருக்குள் நுழையும் வரைக்கும் நகரத்தின் முகத்தை கற்பனையால் உள்ளத்துள் திரும்பத் திரும்ப வரைந்து, அழித்து மறுபடியும் வரைந்துகொண்டிருந்தேன்.

பெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் சென்று இறங்கி வெளியில் வந்து அகலமான சாலைகளை பார்க்கும் வரைக்கும் நான் கற்பனையில் வரைந்த கொல்கத்தாக்கள் தந்த சுகத்தை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

நெடுந்தூர பயணத்துக்குப் பின் கொல்கத்தாவை அடைந்தும் எங்களில் துளி அயர்வோ சோம்பலோ எட்டிப் பார்க்கவில்லை. மாறாக இன்னும் உற்சாகமாய், இன்னும் இன்னும் புதிதாய் மலர்ந்து காணப்பட்டோம்.

எங்கே பார்த்தாலும் மஞ்சள் நிற வாடகை கார்கள். அனைத்தும் பழைய அம்பாசிடர்கள். ஆங்காங்கே சாலையின் நடுவில் வாகனங்களோடு வாகனங்களாய் ஓடும் தண்டுப் பேருந்து என்று சொல்லக்கூடிய டிராம் வண்டிகள். ஒருபக்கம் அழுக்காக, இன்னொரு பக்கம் அழகாக காணப்படும் இரட்டை நகரம். இதுவரை பார்த்திடாத புதிய முகங்களுடன், புதிய புதிய சொற்களுடன், நீளும் சாலைகளுடன், கம்பீரமான கட்டிடங்களுடன், வண்ண வண்ண விளக்குகளுடன் எங்களை வரவேற்றது.

பெரிதாகத் தேடி விசாரித்து அலையவெல்லாம் இல்லை. ஹெளரா பாலத்தின் அருகில் ஒரு சிறு ஹோட்டலில் மிகக் குறைந்த கட்டணத்தில் இரண்டு அறை எடுத்து கொண்டுபோன பைகளை வைத்துவிட்டு வேகவேகமாகக் குளித்துக் கிளம்பி வெளியில் வந்தோம்.

உடன் வந்த அக்காவும் தம்பியும் பசிப்பதாக சொன்னார்கள். நேரம் பார்த்தேன். முன்னிரவு பத்தரை. சரியென அருகில் இருந்த ஓர் உணவகத்தில் போய் ஆளுக்கொரு பிரியாணி வாங்கி உண்டுவிட்டு, மூவரும் தனித்தனியாகப் புறப்பட்டு போனோம்.

கோயிலுக்கும் களவுக்கும் தனியாகச் செல்லவேண்டும் என்பார்கள். என்னைக் கேட்டால் அவற்றோடு பயணத்தையும் சேர்த்து சொல்வேன். தனித்து சென்றால்தான் பயணமானது முழுக்க முழுக்க நல்அனுபவமாக மாறும். வேண்டுமென்றால் ஒத்த சிந்தையுடைய ஓரிருவரை உடன் சேர்த்துக்கொள்ளலாம். எனினும் பயணத்தின் நடுநடுவே தனியாகிவிடுவதும், தொலைந்துவிடுவதும் பயணத்தை மேலும் இனிதாக்கும் என்பதை அனுபவத்தால் பலதடவை உணர்ந்திருக்கிறேன்.   

ஊக்லி நதி கொல்கத்தா நகரத்துள் ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கும் மிக அழகான ஆறு. ஏறத்தாழ 260 கி.மீ நீளம் கொண்ட கங்கை ஆற்றின் கிளை நதிகளில் ஒன்று. அதன்மீது 705 மீட்டர் நீளமும் முப்பது மீட்டர் அகலமும் கொண்டு முற்றிலும் இரும்பால் 1937 முதல் 1943 வரையிலான காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதே மிகப் பிரமாண்டமான ஹெளரா பாலம்.

அகல விரிந்த இரு கரைகளை இணைத்துக்கொண்டு ராட்சத இரும்பு மலை போல் கொட்டும் பனியில் நனைந்துகொண்டு மென் வெளிச்சத்தில் ஒளிர்ந்து நின்றிருந்த பாலத்தை நெருங்க நெருங்க மனமானது துள்ளி குதிக்க ஆரம்பித்தது.

பெரிதாக ஆள் நடமாட்டமின்றி ஓரிரு வாகனங்கள் மட்டுமே சென்றும் வந்தும் கொண்டிருந்தன. ஒருபக்கம் மொத்த நகரமே பெரும் கொண்டாட்டத்துக்கு தயாராவது போலவும், இன்னொரு பக்கம் நெடும் கொண்டாட்டத்துக்குப் பின்னான ஓய்வில் லயித்திருப்பது போன்றும் தோன்றியது.

சென்று பாலத்தின் நடுமத்தியில் நின்றுகொண்டு கீழே சத்தமின்றி ஓடும் நதியையும், அதில் மென் அசைவுகளுடன் வரிசைகட்டி தெரிந்த மின்விளக்கு ஒளியையும், கரையின் இருபக்கமும் ஓவியம்போல் மிளிர்ந்த கொல்கத்தா நகரத்தையும், தூரத்து விரிவானையும், அதில் ஆங்காங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இந்நதி நீரானது எங்கெங்கிருந்து எப்படியெப்படியெல்லாம் இங்கே வந்திருக்கும்? நான் காணும் இந்த ஆறையும், ஆகாயத்தையும், காற்றையும்தான் தாகூரும், தெரேசாவும், சத்யஜித்ரேவும், விவேகானந்தரும் கண்டிருப்பார்களா? எங்கோ ஒரு சிறுகிராமத்தில் பிறந்த என்னை இங்கே இப்படி வந்து புத்தாண்டை வரவேற்கச் செய்வது எதுவாக இருக்கும்? இத்தனைப் பெரிய நகரத்தில் நான் மட்டும்தான் இப்படி வந்திருப்பேனா, இல்லை என்போன்று இன்னும் எத்தனையோ பேர் வந்திருப்பார்களா?

மெல்ல வருடிப் போகும் குளிர் காற்றில் தாகூரின் கவிதை வரிகள் கலந்து வந்து எதையோ சொல்லாமல் சொல்லிவிட்டுப் போவது போலவும், கூடவே ஆழ்நதியின் மவுனக்குரல் செவிக்குள் நுழைந்து தானறிந்த ரகசியங்களை எனக்கு மட்டும் உரைப்பது போலவும் இருந்தது.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தேன் தெரியாது. சட்டென நாலா பக்கமிருந்தும் வெடிச் சத்தம் கேட்க, நினைவு வந்தவனாய் திடுக்கிட்டுப் பார்த்தேன். நான்கு முகம் தெரியாத பெங்காலி வாலிபர்கள் கூட்டாக அருகில் வந்து, ”ஹாப்பி நியூ இயர் பைய்யா’’ எனச் சொல்லி ஒருவர் பின் ஒருவராக கை குலுக்கிவிட்டு வந்ததைவிட வேகமாக நடந்துபோனார்கள்.

அப்போதுதான் கவனித்தேன், நதிக்கரையின் இரு பக்கமிருந்தும் சாரை சாரையாக விளக்கேற்றி அதை வான்நோக்கி பறக்க விட்டிருந்தார்கள். அது மெல்ல காற்றில் அசைந்து மேலேறிக்கொண்டிருந்தது.

மேலேற மேலேற இன்னும் சிறிதாகி நட்சத்திரங்களோடு நட்சத்திரங்களாக கலந்து வான் முழுக்க நட்சத்திரப் பட்டாளம் கூடி நின்று புத்தாண்டை வரவேற்று வாழ்த்து சொல்வது போல் இருந்தது. பதிலுக்கு மனத்துள் நானும் உள்குரலில் அவைகளுக்கு என் வாழ்த்தை சொன்னேன்.

சட்டென மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறு கப்பல் ஒன்று பெரும் சத்தத்தில் பாடல் ஒலிக்கவிட்டு, அதன் நடுவில் ஏழெட்டு பேர் தங்களை மறந்து போதையில் ஆடிக்கொண்டிருக்க, அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் கையில் மதுவோடு வேடிக்கைப் பார்க்க, பாலத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதே இடத்தில் நின்றுகொண்டு சென்றாண்டின் நினைவுகளையும், வரும் ஆண்டின் திட்டங்களையும் அசைபோட்டுவிட்டு மெல்ல நடந்து பாலத்தின் மறுமுனைக்கு வந்தேன்.

அங்கே உடன் வந்திருந்த அக்காவும் தம்பியும் சாலையோரத் திட்டில் உட்கார்ந்து தங்களுக்குள் ஏதோ பேசியபடி சிறு மண் குவளையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்துவிட்டு எழுந்து அருகிலிருந்த சைக்கில் கடையில் ஒரு தேநீர் வாங்கி வந்து நீட்டி புத்தாண்டு வாழ்த்து சொன்னார்கள்.

மெல்ல முகம் மலர்த்தி வாங்கிக்கொண்டு என் வாழ்த்தை அவர்களுக்கு சொல்லிவிட்டு தேநீரை வாயில் வைத்து ஒரு மிடர் பருகினேன். அச்சுவை கொல்கத்தா மாநகரை என் ஊராய், அங்குள்ள சாலைகளையும் கட்டிடங்களையும் நதியையும் பாலத்தையும் எனக்குச் சொந்தமானதாய், அங்கே வாழும் பலதரப்பட்ட மனிதர்களையும் மரஞ்செடிகொடிகளையும் எனது உறவினர்களாய் காட்டியது.

சட்டென்று அகம் பூரித்துப்போய் உள்ளத்துள் என் முப்பாட்டன் கணியன் பூங்குன்றனின் வரிகளை எனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொல்லிக்கொண்டேன்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

*

திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=