திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

மாரியம்மன், பெரியாயி, வடுவச்சியம்மன், பொறடியாத்தா, வேடியப்பன், முனியப்பன், ஊமை வேடியப்பன், ஒத்த வேடியப்பன், ஐயனாரப்பன், எல்லைசாமி, கன்னிமார் போன்ற சிறுதெய்வங்களின் பெயர்களையும்… சிவன், பெருமாள், பிரம்மன், முருகன், விநாயகர் போன்ற பெருதெய்வங்களின் பெயர்களையும் மட்டுமே கேள்விப்பட்டிருந்த எனக்கு அப்பயணத்தில் கேள்வியுற்ற தெய்வத்தின் பெயர் ஒன்று சட்டென திடுக்கிட வைத்தது.

அதுவும் நம்மூரில் பொதுவெளியில் சகஜமாய் சொல்லத் தயங்குகிற பெயர் கொண்டு, மிகுந்த ரகசியமாகவும் ஒரு வகையில் பூடகமாகவும் சமூகத்தில் இன்றுவரை பார்க்கப்படும் யோனி என்னும் பெண்குறியை கருவறை தெய்வமாகக் கொண்ட காமாக்கியா பற்றி. ஆம்!

அசாம் மாநிலம் கவுகாத்தி பெருநகரின் மேற்குப் பகுதியில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள நீலாச்சல் என்னும் குன்றில் அமைந்துள்ள காமாக்கியா கோயில், ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் (தாட்சாயிணியின்) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுவது. இந்தியா முழுக்க உள்ள 51 சக்தி பீடங்களில் முதன்மையானது. காமகிரி பீடம் எனச் சொல்லப்படுவது.

திதலை  அல்குல் (27), மாண்வரி அல்குல் (101), தழைஅணி அல்குல் (125), தழை அணி அல்குல் (159), அல்குல் அவ்வரி வாட (180), திருந்து இழை அல்குல் (214), மணிமிடை அல்குல் (274), துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல் (294), தழைதாழ் அல்குல் (345) என சங்க இலக்கிய அகநூல்களில் ஒன்றான குறுந்தொகையில் மட்டும் ஒன்பது பாடல்களில் பாடப்பட்டுள்ள அல்குல் என்னும் பெண்குறியை மூல தெய்வமாகக் கொண்டது.

சக்தி பீடம் எனில் சக்தியின் அமர்விடம் என்றும், இந்தியா முழுக்க உள்ள சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆதி சக்தி பீடங்களான காமாக்கியா கோயில் உள்ளிட்ட நன்கையாவது (கல்கத்தாவின் காளிகாட் காளி கோயில், ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி கோயில் மற்றும் ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோயில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி) வாழ்வில் ஒரு தடவையாவது தரிசிக்கவேண்டும் என்றும் சொல்வார்கள்.

நதிகளில் கிட்டத்தட்ட எல்லா நதிகளும் பெண் பெயரை கொண்டிருப்பதாலோ என்னவோ ஆண் பெயர் கொண்ட பிரம்மபுத்திரா மேல் பெரும் பிரியம் உண்டெனக்கு. அழகிய அதன் கரையோரக் குன்றின் மீது அமைந்திருக்கும் காமாக்கியா கோயிலின் பெயரை முதன் முதலில் என்னிடம் சொன்னது ஓர் அக்கா.

அதுவும் அவர் சொல்லக் கேட்டதும் முதலில் திடுக்கிட்டாலும், அவை உண்டாக்கிய அதிர்வால் அல்லது ஆர்வத்தால், ‘அங்கே அப்படி என்னதான் இருக்கப்போகிறது, போய் பார்ப்போமே’ எனும் எண்ணத்தோடவே என்னை அக்கோயில் நோக்கி புறப்பட வைத்தது.

கோயிலுக்குச் சென்று வருவதற்காகவே தனியாக விடப்பட்டிருந்த செந்நிறப் பேருந்து ஒன்றில் ஏறி சன்னலோர இருக்கையில் உட்கார்ந்துகொண்டு மலைமீது செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக அவ்விடம் செவ்வண்ணம் கொண்டு மாறி வந்த காட்சி எனக்குள் கூடுதல் ஆர்வத்தை உண்டாக்கி வந்தன.

மெல்ல பேருந்திலிருந்து இறங்கி இருபக்கமும் கடைகளால் நிரம்பி வழிந்த சிறு பாதை வழியாக நடந்து கோயில் வளாகத்துள் நுழைந்தோம். அதிகமும் இல்லாமல் அதேநேரம் மிகக் குறைவாகவும் இல்லாமல் மிதமானக் கூட்டம் இருந்தது. மிகுதியும் வடகிழக்கு மாநிலத்தவர்கள். அதிலும் மிகுதி அசாமியர் [எங்கள் மூவரைத் தவிர எத்தமிழ்முகமும் அங்கே கண்ணில் படவில்லை].

‘நடை திறக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்’ என்றார்கள். சென்று கோயிலையொட்டி வரிசையாக மேல்நோக்கி கட்டியிருந்த படிக்கட்டில் ஏறிப் போய் உட்கார்ந்துகொண்டு கீழே தெரியும் கோயிலையும் அதைச் சுற்றியிருந்த இடங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

கோயிலின் வடிவமே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியது. எழுந்து தனியாக இறங்கிப் போய் கோயிலை வெளிப்புறமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து உட்கார்ந்தேன்.

எங்கும் செந்நிறம். ரத்தத்தை அவை குறிப்பதாகச் சொன்னார்கள். அம்மன்கோயில் அதிலும் சக்தி பீடங்களில் ஒன்று என்பதால் இருக்கும் என முதலில் நினைத்தேன். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருவதுபோல் சிலர் செந்நிற உடையணிந்து வந்திருந்தார்கள்.

கோயில் திறக்கப்போவதாக நீள் தாடி வைத்த [சாமியார்] ஒருவர் இந்தி அசாமி பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் மாறி மாறிச் சொல்லி எல்லோரையும் எழுந்து வந்து வரிசையில் நிற்கச் சொன்னார். கூட்டத்தோடு கூட்டமாக சென்று நாங்களும் நின்றுகொண்டோம்.

எக்கோயிலுக்கு சென்றாலும் அங்கு வருபவர்களின் முகங்களை பார்ப்பதும், அவர்களது முணுமுணுப்புக் குரலையும் அதில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளையும் கேட்பது மிகப் பிடித்த ஒன்றெனக்கு. ஆனால் இக்கோயிலில் அதிசயமாக எம்முணுமுணுப்புச் சத்தமும் இல்லாமல் முகத்தை ஒருமாதிரி இருக்கமாக வைத்துக்கொண்டு எதையோ பறிகொடுத்தவர்கள் போல எல்லோரும் நின்றிருப்பதை கண்டதும் வியப்பாக இருந்தது.

நாங்கள் மூவர் மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் மிதமான சத்தத்தில் மிக சகஜமாக உரையாடிக்கொண்டிருந்தோம். எங்களை ஒருமாதிரி பார்த்தவர்கள் வாயில் விரல் வைத்துக் காட்டி ‘பேசக்கூடாது’ என்றார்கள். சரியென அமைதியாகி வேடிக்கை பார்த்துக்கொண்டு போனோம்.

மெல்ல வரிசை கோயிலுக்குள் நுழைந்தது. அதுவரைக்கும் பல்வேறு கேள்விகளோடு சென்ற எனக்கு அக்கோயிலின் உட்பக்கமும், அங்கே கருவறையில் இருந்த பெண்குறியின் வடிவமும், அதன் செந்நிறமும், அதை யாவரும் ஒருவித அதிர்ச்சி கலந்த பக்தியோடு வணங்குவதையும் பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது.

சட்டென எனக்கு சிறுவயதாக இருக்கும்போது என் போன்ற சிறுவர்களுக்கு விதவிதமான கதைகள் சொல்லி மகிழ்த்திய எங்களூர் கதை தாத்தாவும் அவர் சொன்ன கதையொன்றும் நினைவுக்கு வந்தது.

நன்றாக நினைவுள்ளது, அப்போது நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் தற்செயலாக கோயில் முன்னாலிருந்த காலியிடத்தில் கப்பை விளையாடிக்கொண்டிருந்த எங்களை கூப்பிட்டு, ”டேய் புள்ளிங்களா, ஒங்குளுக்குலாம் காமாத்திய தெரியுமாடா?’’ என்று கேட்டார். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, ”காமாச்சியா தாத்தா?’’ என்றோம். ”காமாச்சி இல்லாடா காமாத்தி’’ என்றார். ”தெரியாது’’ என்றோம்.

உடனே ‘ஹாஹாஹா’ என சத்தமாக சிரித்துவிட்டு, ”வா, வந்து ஒக்காருங்க சொல்றன்’’ என்று தன்னருகில் எங்களை வட்டமாக உட்காரச் சொல்லி நடுவிலிருந்த கல்லில் அவர் உட்கார்ந்துகொண்டு, ”ஒரு ஊர்ல காமாத்தி காமாத்தினு ஒருத்தி இருந்தா. அவ யாரு கண்ணுக்கும் சுலுவுல தெரியமாட்டா. ஆனா, அவள மீறி ஒண்ணுமே நடக்காதுன்னு சொல்லுவாங்க. அவ எப்புடி இருப்பா, அவள எப்புடி கும்புடலாம்னு எல்லாரும் கும்பலு கும்பலாக் கூடி ஒருநாளு பேசிக்கினாங்க. ஒடனே அவ என்னா பண்ணா தெரிமா…? ஒரு பொம்பள மேல வந்து ஆடுஆடுன்னு ஆடி, அவ கட்டினிருந்த பாவாடைய தூக்கிக் காட்டி ‘இந்தக் குறிதான்டா நானு’ன்னு சொல்லிட்டுப் போயிட்டா. அதுலருந்து அந்த ஊரு மக்கிங்க பொம்பளகுறிய செலயா செஞ்சிவச்சி காமாத்திய கும்டுக்குனு வந்தாங்க. எங்க, எல்லாரும் கண்ணமூடி காமாத்திய கும்டுட்டு போயி வெளாடுங்க பாப்பம்’’ என்றுவிட்டு, எங்களை கண்மூடி வணங்கச் சொல்லிவிட்டு அவர்பாட்டுக்கு எழுந்து சென்றுவிட்டார்.

இப்படி அவர் சொல்லும் கதைகள் அனைத்தும் ஒருவித நம்பாத் தன்மையுடன் இருந்தாலும், பொருள் பொதிந்ததாக இருப்பதை பல தடவை உணர்ந்திருக்கிறேன். அதிலும் இக்கதை பெரும் அதிர்ச்சியை எங்களுக்கு தந்ததோடு, திரும்பத் திரும்ப அவரை தேடிப்போய் சொல்லச் சொல்லி கேட்கும் ஆர்வத்தையும் உண்டாக்கியது.

சற்று ஆசுவாசமாகி மெல்ல அவ்வடிவத்தை உள்வாங்கினேன். ஒருவித அதிர்வு உடலெங்கும் உருவானது. அவ்வதிர்வோடவே வெளியில் வந்து பக்கத்திலிருந்த படிக்கட்டில் போய் உட்கார்ந்து, கண்டுவிட்டு வந்த காட்சியை மனத்திரையில் ஓட்டிப் பார்த்தேன்.

புரிந்தது போலவும் அதேநேரம் புரியாததுபோலவும் இருந்தது.

அதிலும் கோயிலின் வெளித்தோற்றம் பார்க்க கோயில் போன்று இருந்தாலும், உள்ளே சென்று பார்க்கையில் இருண்ட பாதாள குகை போல் இருந்ததையும், அதன் மூலத்தில் அதாவது கருவறையில் சிலை எதுவும் இல்லாமல் யோனி வடிவத்தில் ஒரு தட்டையான பாறை மட்டுமே இருப்பதையும், அது காமாக்கியா தேவியின் குறி என்றும், அதை தரிசிப்பவர்கள் அங்கிருந்து வந்த செந்நிற நீரூற்றை அவளது உதிரமாக எண்ணிப் போற்றியதையும் நினைத்துப் பார்த்தேன். 

மறுபடியும் சிறுவயது நினைவுகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. அதுவும் எங்கள் கிராமத்தில் கண்ட காட்சிகள். ஒரு பெண் பூப்படைந்ததும் ஊருக்கெல்லாம் சொல்லி கொண்டாடியவர்கள், ஒவ்வொரு மாதம் உதிரப்போக்காகும் போதும் அவளை ஒதுக்கி வைத்து தீட்டெனச் சொல்லி எதையும் தொடவிடாமல் செய்த கொடுமைகளும், அச்சமயத்தில் சிவப்பு நிற ஆடைகளை அணியச் சொல்லி நிர்பந்தித்ததும்.

கூடவே, என்னதான் பெண்களை ஆக்க சக்தியாக சொல்லி பழம்பெரும் இலக்கியங்கள் தொடங்கி கோயில்கள் வரைக்கும் சொன்னாலும், வழிபட்டு வந்தாலும் அவர்களுக்கான மதிப்பையும், மரியாதையையும் இன்றுவரை நாம் சரிவர தருகிறோமா என்றால் இல்லை என்றும் தோன்றியது.

காமாக்கியா தலத்தை காமரூபம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம் என பல்வேறு பெயர்களில் குறிப்பிடும் புராணங்கள்… காமாக்கியா தேவியை திரிபுர பைரவி, காமா, காமதா, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, அமிர்தா, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி, மங்கள கௌரி, இரத்தப்போக்கு தேவி போன்ற இன்னும் எத்தனையோ பெயர்களில் குறிப்பிடுகின்றன.  

ஒரு விஷயத்தை மிக உன்னிப்பாக கவனித்தேன். கோயிலுக்கு வந்திருந்த பெரும்பாலான பெண்களின் முகத்தில் தெரிந்த கர்வமும் பெருமையும் வேறு எந்த கோயிலிலும் கண்டதில்லை. ஒருவேளை ‘எங்கள் பிறப்புறுப்பைதான் இங்கே தெய்வமாக எல்லோரும் வணங்குகிறார்கள், அதன் முன்னால் அடிபணிகிறார்கள். அதுதான் மானுட குலத்துக்கே பிறப்புவாயில், ஆக்கும் சக்தி. அதிலிருந்து வழிந்து வரும் உதிரத்தைதான் உயரிய பிரசாதமாக பெறுகிறார்கள்’ என தம்முள் நினைப்பதால் இருக்குமோ என உள்ளுக்குள் எண்ணிக்கொண்டேன்.

உடன் வந்திருந்த அக்காவும் தம்பியும் நான் தனியாய் அங்கே உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு அருகில் வந்து ”என்னாச்சு?’’ என்றார்கள். மெல்லத் தலையாட்டி ”ஒண்ணுமில்ல’’ என்றேன். ”சரி, பொறுமையா பார்த்துட்டு வாங்க. நாங்க வெளியே இருக்கோம்’’ எனச் சொல்லிவிட்டு போனார்கள்.

இன்னொரு தடவை கோயிலுக்குள் போய் வரவேண்டும் போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். வரிசை முன்னைவிட சிறிதாகத்தான் இருந்தது. சென்று இம்முறை இன்னும் நிதானமாக வந்திருந்தோரின் முகங்கள் தொடங்கி கோயில் கருவறையில் இருந்த பெண்குறி வடிவம் வரைக்கும் கண்டு உள்வாங்கிக்கொண்டு, மானசீகமாக அவற்றை வணங்கிவிட்டு வெளியில் வந்தேன்.

சட்டென மனம் இளகி உடல் எடை இழந்து தக்கையானதுபோல் இருந்தது. எந்த கோயிலிலும் இதுபோல் ஆனதில்லை. ‘ஏன் இக்கோயிலில் மட்டும் இப்படி ஆகவேண்டும்?’ எனும் கேள்வியோடவே கருவறை வெளிப்புறம் இருந்த பெரிய சுவரருகில் போய் நின்று மெல்லத் தொட்டு வருடிப் பார்த்தேன்.

என்னையும் எனது அச்செயலையும் கண்ட அவ்வழியாக வந்த ரவிக்கை அணியாத மூதாட்டி ஒருவர், தன் கறைபடிந்த பல் தெரிய சிரித்துவிட்டு கடந்து போனார். அச்சிரிப்பு தந்த சிலிர்ப்போடவும், கருவறை பெண்குறி வடிவம் தந்த அதிர்வோடவும் அங்கிருந்து வர மனமின்றி திரும்பித் திரும்பிக் கோயிலை பார்த்துக்கொண்டு வெளியில் வந்தேன்.

மூங்கிலால் செய்யப்பட்ட விதவிதமான பொருட்கள் மாத்திரமே விற்பனைக்கு வைத்திருந்த கடை ஒன்றில் உடன் வந்திருந்த அக்காவும் தம்பியும் எதையோ வாங்கிக்கொண்டிருந்தார்கள். மெல்ல அக்கடை வாயிலில் போய் நின்றேன். என்னையும் என்முகத்தையும் பார்த்துவிட்டு எதுவும் கேட்காமல், ”போலாமா?’’ என்றார்கள். ”ம்’’ என தலையாட்டினேன்.

அங்கிருந்து சற்றுதூரம் நடந்து வந்து புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு முக்கால் மணிநேரம் பயணித்து, அகண்டு கடல்போல் விரிந்திருந்த பிரம்மபுத்திரா நதியை ஒட்டியிருந்த எங்கள் தங்குமிடம் வரும் வரைக்கும் ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசவில்லை.

காமாக்கியா கோயில் தந்த அதிர்வும் திடுக்கிடலும் அன்று மட்டுமல்ல… இதோ, ஐந்தாண்டுகள் கழித்து இதை எழுதும் இப்போதும் என்னுள் இருக்கிறது. இது எப்போதும் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

பயணத்தின் பெருவரமே இதுதான். இதுபோன்ற வரங்களை பெறுவதற்காகவே இன்னும் இன்னும் பயணிக்கவேண்டும். அப்பயணங்கள் அனைத்தும் சாதிகளை மதங்களை மொழிகளை எல்லைகளை கடந்ததாக இருக்கவேண்டும். ஆம், இதைவிட வேறென்ன இவ்வாழ்வில் பெரிதாகக் கேட்டுவிடப் போகிறேன்.

*

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=