திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

பயணங்களின்போது மட்டும்தான் நம் கண்களோடு சேர்ந்து உள்ளமும் உடலும் திறந்துகொள்வதாகத் தோன்றும். அதனால்தான் சிறுசிறு அசைவுகளைக் கூட அவை தம்முள் சேகரித்து வைத்து வேண்டிய மட்டும் விரித்துப் பெருக்கி உவகை கொள்வதாகப் படும்.

மிகச் சிறுவயதில் எங்கோ ஒரு காட்சியை நம் கண்கள் போகிறபோக்கில் கண்டிருக்கும். ஆனால் உள்ளமானது அதை மிகுந்த சிரத்தையோடு அழுந்த ரசித்து தன்னுள்ளே பதித்திருக்கும். அது கண்களின் நோக்கில் அவ்வளவு முக்கியம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும். உள்ளத்தின் நோக்கிலோ பெரும் முக்கியம் வாய்ந்ததாக இருந்து, அது பின்னாளில் நிலையும் கொண்டிருக்கும். இதைதான் உள்ளமும் உடலும் திறந்துகொண்டு கண்ட காட்சி என்கிறேன்.

அப்படியான இரு காட்சிகளை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊட்டி சென்றிருந்தபோது அதுவும் ஒரேநாளில் கண்டதை என் வாழ்வில் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

அன்றைய தினம் காலை உணவு உண்டுவிட்டு, நான் தங்கியிருந்த அக்கா ஒருவரின் சித்தப்பா காட்டேஜிலிருந்து எதிரில் தெரிந்த மிகப் பெரிய மலையை கண்டு ஏதோவோர் உந்துதலில் அதன்மீது ஏறலாம் எனப் புறப்பட்டு போனேன்.

முதலில் என் பார்வைக்கு மிகச் சாதாரண மலை போன்றுதான் தெரிந்தது. அருகே செல்லச் செல்ல பெருத்து பேருருகொண்டு, ‘என்னையா சின்ன மலைன்னு நெனச்ச… வா, வந்து ஏறு பார்க்கலாம்’ என எக்களித்து சீண்டுவது போன்றிருந்தது.

மிகச் சிறு வயதிலிருந்தே மலைகளில் ஏறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் எனக்கு, மலையின் அச்சீண்டல் ஒருவித உசுப்பேற்றலையும் அதை மிஞ்சின ஆர்வத்தையும் ஒருங்கே தர, சென்று நினைத்ததை விட வேகமாக ஏற ஆரம்பித்தேன்.

மலையின் அடிவாரத்தில் நின்றிருந்த பெரியவர் ஒருவர் என்னையும், நான் தனியனாய் அம்மலையில் ஏற வந்திருப்பதையும் பார்த்துவிட்டு ஒருமாதிரி தலையை சாய்த்துப் பார்த்தார். ஏதோ சொல்லப்போகிறார் என நினைத்தேன். ஒன்றும் சொல்லாமல் மேலிருந்து கீழ்வரைக்கும் ஒருதடவை பார்த்துவிட்டு, பாக்கெட்டிலிருந்த பீடிக்கட்டை எடுத்து ஒரு பீடியை பற்றவைத்து புகைத்துக்கொண்டு அங்கிருந்து சாலைநோக்கி நடந்துபோனார்.

அவர் சென்ற மறுநொடியே அருகிலிருந்த புதரிலிருந்து ஒரு நீண்ட சலசலப்பு சத்தம் கேட்டது. அவற்றை கண்டும் காணாமல் கடந்து ஒரே மூச்சில் பாதி மலை வரைக்கும் ஏறிவிட்டேன்.

பெரிய பாறையை ஒட்டிய குகையுடன் அங்கே ஒரு சிறு கோயில் இருப்பதும், அவ்வப்போது அதில் அருகமை ஊர்க்காரர்கள் வந்து பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு செல்வதுண்டு என்பதும் அவ்விடத்தை பார்த்ததுமே தெரிந்தது.

அருகிலிருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று சுற்றிலும் பார்த்தேன். அதற்கு மேலே மலையில் ஏறும் வழி எதுவும் இருப்பதாகப் படவில்லை. இருந்தும் மனம் போன போக்கில் ‘இப்படி போனால் மலை உச்சிக்கு சென்றுவிடலாம்’ என்னும் நம்பிக்கையில் குத்துமதிப்பாக ஏறிப் போனேன்.

வழித்தடம் எதுவும் இன்றி அடர்ந்த காடு போல் இருந்த மலை, மேலே ஏற ஏற பழக்கப்பட்ட இடம் போன்று அவ்வளவு ரம்மியமாக, அதேநேரம் காட்டின் குரலன்றி வேறு எக்குரலும் கேட்டிடாத, இயற்கையின் மொழியன்றி பிரிதெம்மொழியும் ஒலித்திடாத அழகிடமாக இருந்தது.

எந்த தைரியத்தில் அத்தனை வேகமாக ஏறி வந்தேன் தெரியாது. ஆனால் மிகச் சரியாக மலையுச்சியை சென்றடைந்தேன். கீழே ஓர் எறும்பை போல நின்றுகொண்டு அண்ணாந்து பார்த்த மலையுச்சி. என்னைப் பார்த்து ‘எங்கே வந்து ஏறிப்பாரு’ எனச் சீண்டிய மலைமுகடு. அதன்மீது ஏறிப்போய் ஓய்யாரமாய் நின்றிருக்கும் எண்ணமே புதுவித சுகத்தை தந்துகொண்டிருந்தது.

மலைகள் மண்ணின் மீதான கொப்புலங்கள் என்றொரு வரியை எங்கோ வாசித்திருக்கிறேன். அதிலும் நம் முன்னால் கம்பீரமாய் நின்றிருக்கும் மலையின் உச்சியில் ஏறி நின்று, அம்மலையை விட உயர்ந்தவனாய் சுற்றிலும் தெரியும் காட்சிகளைக் காண்பது எத்தனைப் பெரிய போதையை தரக்கூடியது என்பதை பலதடவை அனுபவித்திருக்கிறேன்.

அதனால்தான் எங்கே எவ்வூருக்கு சென்றாலும் அங்குள்ள மலைகளில் ஏற மனமானது முதலில் விருப்புரும். அப்படி ஏறிய மலைகள் மட்டும் இதுவரைக்கும் இருநூறு தாண்டியிருக்கும்.

ஓரிரு நிமிடங்கள்தான் ஆசுவாசமாய் அங்கே நின்று சுற்றியிருந்த மலைகளையும், தூரத்தில் ஆங்காங்கே தெரிந்த சிறுசிறு கிராமங்களையும், விவசாய நிலங்களையும் பார்த்திருப்பேன். சட்டென்று இருட்டிக்கொண்டு சூழல் மாறி பெரு மழைக்கு முன்னான குளிர்வை தந்தது.

‘இந்த உச்சி மலையில் எங்கே போய் இப்போது மழைக்கு ஒதுங்குவது?’ என சுதாரித்து ஒரு மரத்தடியை தேடுவதற்குள் மழை ஒன்று வந்ததைவிட வேகமாக, அதாவது கண்ணுக்குத் தெரியாமல் நம்மை தொட்டுவிட்டு ஓடிப்போகும் காற்றைப் போல தன் ஈரக்கரங்களால் மொத்த மலைமுகட்டையும், அதன் மீதிருந்த சிறு மரமொன்றின் அடியில் ஒதுங்கி நின்றிருந்த என்னையும் நனைத்துவிட்டு சென்றுவிட்டது.

ஏற்கெனவே கடும் குளிர் வேறு. நல்லவேளை வீட்டிலிருந்து கிளம்பும்போதே அக்கா, ”டேய் தம்பி, நீ நெனக்கிறமாதிரி இது சாதாரண குளிரில்லடா. எதுக்கும் இந்த ஜர்கின போட்டுட்டுப் போ’’ என்று சொல்லி தன் கருநிற ஜர்கினை தந்தனுப்பினார். நானும், ”இதெல்லாம் ஒரு குளிராக்கா’’ என்று வீர வசனம் எதுவும் பேசாமல் அதைப் போட்டுக்கொண்டு வந்ததால் ஓரளவுக்கு தப்பித்தேன். இல்லையென்றால் அதோ கதிதான்.

என்ன நடந்தது எனப் புரிந்து கொள்வதற்குள் மலையின் ஒருபக்கச் சரிவில் ஏதேர்ச்சையாகப் பார்த்தேன். அதுவும் யாரோ ஒருவர் என் போன்று மழைக்கு ஒதுங்கி அங்கே நின்றிருப்பது போல் தோன்ற. நீண்டு வளர்ந்திருந்த யூகலிப்டஸ் என்னும் நீலகிரி மரமொன்றின் அருகில் பெரிய கண்ணாடி ஒன்று சூரிய ஒளியில் வண்ணம் காட்டிக்கொண்டு ஒளிர்வது போன்று தெரிந்தது.

முதலில் கண்டதும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ சாதாரணதென்று நினைத்து சட்டெனத் திரும்பி அங்கிருந்து இரண்டடி எடுத்து வைத்திருப்பேன். உள்ளத்துள் கண்ட காட்சி புதுவித உணர்வை மீட்ட திரும்பி மறுபடியும் பத்தேன். ஆம், வானவில். அதுவும் இத்தனை ஆண்டுகளாய் கண்டுவந்த முழுமையடையாத வளைந்த வானவில் போன்றில்லாமல் முழுமைபெற்று வட்டமாக இருந்தது.

‘வானவில் வட்டமாகக் கூட இருக்குமா?’ என யோசிப்பதற்குள் முற்றிலும் மறைந்திருந்தது. திரும்பத் திரும்பப் பார்த்தேன். இல்லை. சில நொடிகளே தோன்றி மறைந்த இயற்கையின் வர்ணஜாலம். ஒருபக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் வருத்தம். என்ன செய்வது, கண்டதை யாரிடம் சொல்வது?

உடனே எனக்குத் தெரிந்த அறிவியல் அறிஞர் ஒருவரை நகர்பேசியில் அழைத்து சொன்னேன். ”ஆமாம், வட்ட வானவில்தான்” என்றார். அந்தப் பரவசக் காட்சியை எப்படி சொல்வதென்று தெரியாமல் மேலும்மேலும் சொல்லடுக்கி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தேன்.

சிறுவயதில் எங்களூர் அரசங்கல் மலையுச்சியில் இருக்கும் குகை வாயிலில் மழைக்கு ஒதுக்கமாக உட்கார்ந்துகொண்டு தூரத்தில் மங்கலாய்த் தெரிந்த வானவில்லைக் காட்டி, ”அது ஏன் முழுசா இல்லாம பாதி வட்டமா இருக்கு? முழுசா சக்கரம் மாதிரி மட்டும் இருந்திருந்தா, எவ்ளோ அழகா இருந்திருக்கும்ல…?’’ என்று என் வயதுடைய சிறார்களிடம் சொன்ன சம்பவத்தையும் வார்த்தைகளையும் நினைவு கூர்ந்தேன்.

அம்மகிழ்விலேயே அது தந்த பரவசத்திலேயே மலையிலிருந்து கீழே இறங்கி வந்து மனம் போன போக்கில் எதிர்பட்ட சாலைகளிலெல்லாம் பசியின்றி வெறும் தேநீர் மட்டுமே பருகிக்கொண்டு மாலை வரைக்கும் நடந்து திரிந்தேன்.

நடுநடுவில், ‘ச்ச… எத்தன அரிய காட்சிய கண்டும் ஓர் ஒளிப்படம் கூட எடுக்க முடியாமப் போச்சே’ என்று வருத்தப்பட்டும், ‘அட, கண்ணாலப் பார்த்து ரசிச்சதவிட… ஒளிப்படம் எடுத்து வச்சி பார்க்குறது பெரிய சுகத்த தந்துடப் போகுதா என்ன?’ என்று சமாதானம் சொல்லியும் கொண்டேன்.

சரியாக இருட்டும் நேரத்தில் வீடுகளற்ற ஒரு சிறு சாலை வழியாக வந்துகொண்டிருக்கும் போது சட்டென்று மீண்டும் மழை வர ஆரம்பித்துவிட்டது. அதுவும் பெருமழை. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வீடுகளோ மனிதர்களோ கிடையாது. சாலையும் சரியாகத் தெரியவில்லை. என்ன செய்வதெனத் தெரியாமல் சிறிது தூரம் மழையில் நனைந்துகொண்டு ஓடிவந்தேன்.

வலது பக்கச் சரிவில் ஓரிடத்தில் சின்னதாக வழியொன்று இறங்கியது. நின்று எட்டிப் பார்த்தேன். நீண்ட படிக்கட்டு, அதுவும் கொஞ்சம்தான் தெரிந்தது. அதில் இறங்கிப்போனால் எப்படியும் வீடுகள் இருக்கும் எனத் தோன்றியது.

வேகமாக இறங்கிப் போனேன். நினைத்ததுபோல் ஒரு வீடு இருந்தது. ஆனால் அதில் ஆட்கள் யாரும் இல்லை. மூடியிருந்தது. ஒதுங்கி சுவரோரமாக நின்றுகொண்டேன்.

விடாமல் அரை மணி நேரத்திற்கு மேல் மழை பெய்திருக்கும். திடுமென அருகில் யாரோ நின்றுகொண்டு என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது போன்று ஓர் உணர்வு உடலெங்கும் உருவானது. திரும்பி உற்று உற்றுப் பார்த்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.

சட்டென நீள்வெடிப்பு போல் ஒரு மின்னல்வெட்டு வானைக் கிழித்தோடியது. அதில் உண்டான நொடிநேர வெளிச்சத்தில் அங்கே நாயொன்று என்னைப்போல் மழைக்காக ஒதுங்கி நின்றிருக்கக் கண்டேன்.

பெருத்த கரிய நாய். பார்க்கவே மிகுந்த அச்சமாக இருந்தது. அதன் அருகிலா அதுவும் இவ்வளவு நேரமாக நின்றிருந்தோம் என்ற அதிர்ச்சியோடவே அங்கிருந்து வேகமாக நடந்து தங்கியிருந்த இடத்துக்கு வந்தேன்.

ஈர உடைகளை மாற்றிக்கொண்டு இரவு உணவு உண்டுவிட்டு வெகு நேரமாகப் படுத்திருந்தும் துளியும் தூக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப காலை முதல் கண்ட காட்சிகளே வந்துவந்து போனது. அதிலும் கண்கள் காணாததை உள்ளமும் உடலும் கண்டு சொன்னதை நினைக்க நினைக்க வியப்பாக இருந்தது.

கூடவே, பயணங்களை அதுவும் இலக்கின்றி அப்போதைக்கப்போது மனத்தில் பட்டபடி நிகழ்த்திச் செல்லும்போது மட்டும்தான் இதுபோன்ற எதிர்பாராத காட்சிகளையும் நிகழ்வுகளையும் வாழ்நாளில் காண முடியும் என்றும் தோன்றியது. ஆம்!

பெறற்கரிய எத்தனையோ அற்புதங்கள் மிகுந்து கிடக்கும் இப்பூமியில், இப்படி காணற்கரிய காட்சிகளைக் கண்டு லயிக்க முதலில் நாம் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். அடுத்து உலகையே வீடாகக் காணவேண்டும் என எண்ணிக்கொண்டு அவ்வெண்ணத்திலேயே அடுத்த சில நிமிடங்களில் உறங்கிப்போனேன்.

*

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=