திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி
இயற்கையானது எப்போதும் தன்னை திறந்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஊனக் கண் கொண்டு பார்க்கும் நம்மால்தான் அவற்றின் பேரழகை, பேரமைதியை, ஆர்ப்பரிப்பை, ஆழுள்ளத்தை, கருணையை, கதகதப்பை பார்க்க முடிவதில்லை; உணர முடிவதில்லை. ஆனால் ஞானக் கண் கொண்டு பார்க்கும் குழந்தைகளால், ஞானிகளால் எளிதில் அவற்றையெல்லாம் பார்க்க முடிகிறது; உணரமுடிகிறது.
இருந்தும் பெருங்கருணை கொண்ட இயற்கையானது நமக்கு இன்னும் எத்தனையோ வாய்ப்புகளை வாரி வழங்குகின்றன. அவற்றில் முதன்மையானது பயணம் என்றால், முடிவானதும் அப்பயணம்தான். ஆம்!
அத்தகைய பயணத்தை நம்மில் எத்தனைபேர் துணைகொண்டு இயற்கையை அதன் உள்முகத்தோடு காண்கிறோம்; மெய்அன்போடு தரிசிக்கிறோம் என்று பார்த்தால் மிக சொற்பமானவர்களே.
சிறுவனாக இருக்கும்போது ஒருநாள் ஐயாவுடன் எங்களூர் தென்புறமாக ஓடும் காட்டாறான பாம்பாறருகில் இருக்கும் பெரிய கல்லாக்குட்டைக்கு மாட்டுக்கு வைத்தியத்திற்காக பச்சிலை ஒன்று பறிக்கப் போயிருந்தேன்.
மழை பெய்துவிட்டிருந்த காலைப்பொழுது. வழிநெடுக எதிர்ப்பட்ட மரஞ்செடிகொடிகளை காட்டி ஏதேதோ கேட்டுக்கொண்டு சென்றவன், அங்கே போனதும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுகொண்டு, தான் தேடிவந்த பச்சிலையை ஐயா பார்த்துப் பார்த்து பறிப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன்.
தோளில் போட்டிருந்த தன் கட்டம்போட்ட துண்டில் வேண்டிய அளவுக்கு பச்சிலை பறித்துவைத்து கட்டிக்கொண்டவர், சுற்றுமுற்றும் பார்த்தார். எதைப் பார்க்கிறார் என நானும் பார்த்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் அவரோ, சட்டென பக்கத்திலிருந்த மரிசியோரத்தில் பூத்திருந்த காளானை பார்த்துவிட்டுப் போய் பிடுங்கினார்.
மறுபடியும் அதேபோல் சுற்றிலும் பார்த்தார். சற்று தள்ளி இன்னோர் இடத்தில் இன்னொரு காளான். இப்படி அடுத்தடுத்து ஆறு காளான்களை வரிசையாகப் பிடுங்கிவிட்டார். ஆச்சரியமாக இருந்தது.
இத்தனைக்கும் அந்த இடத்தில் நானும் இருந்தேன். அவர் போன்று சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். ஒரு காளான் கூட கண்ணில் படவில்லை. ஏமாற்றத்தோடு போய் அவரிடமே கேட்டேன். ”எப்டிய்யா ஒன் கண்ணுக்கு மட்டும் இத்தினி காளான் தெரின்ச்சி?’’.
மெல்லச் சிரித்துவிட்டு, ”அட, மடையா… ஒனுக்கு எனுக்குனுலாம் இந்த மண்ணு எதயும் தனியா பிரிச்சித் தரல. எல்லாத்துக்கும் பொதுவாதான் தர்து. நாமதான் அத செரியா கவனிக்க மாட்றோம்’’ எனச் சொல்லிவிட்டு, ”வா’’ எனக் கூட்டிக்கொண்டு, ”எந்த எடத்தயும் மொதல்ல நல்லா உள்வாங்கணும். அப்பதான் அந்த எடம் நம்முளுக்கு தன்ன காமிக்கும். நீ பாட்டுனு எங்க காளான் காளான்னு அவசர அவசரமா பாத்திருப்ப. அதான் கண்ணுமுன்னால இருந்தும் தெரியாமப் போயிருக்கும். அதுவே நீ உன்னிப்பா பாத்திருந்தன்னு வையி, கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்’’ என்றுவிட்டு என் முகத்தை பார்த்து அந்த வார்த்தைகளை மிக அழுத்தமாகச் சொன்னார்.
”என்னிக்கி எங்க போனாலும் செரி, அந்த எடத்துல செத்தநேரம் கம்முனு நின்னோ… இல்லனா ஒக்காந்தோ உன்னிப்பா உள்வாங்கிப் பாரு. அது வெறும் எடம் இல்ல, இயற்கயோட அங்கமுன்னு நென. அப்பதான் மத்தவுங்குளுக்கு காட்டாத்த ஒனுக்கு தொறந்து காமிக்கும்’’.
இதை அவர் சொல்லி முடித்ததும் பெரும் பாடம் ஒன்றை கற்றுக்கொண்டது போல் இருந்தது. உடனே அவரிடம், ”இங்கயே இருய்யா வர்றன்’’ எனச் சொல்லிவிட்டு, திரும்பி சற்றுதூரம் நடந்துபோய் அவர் காளான் பிடுங்கிய இடத்தருகில் நின்று மிக உன்னிப்பாக சுற்றிலும் பார்த்தேன். ஒரு காளான் கூட கண்ணில் படவில்லை.
மெல்ல ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து நடந்து இன்னும் உன்னிப்பாய் பார்த்தேன். மண்ணுக்குள்ளிருந்து ஒரு காளான் பாதி மட்டுமே வெளிவந்த நிலையில் நடுமரிசியில் பூத்திருந்தது. இத்தனைக்கும் அதன் அருகில்தான் ஐயா பச்சிலை பறிக்கும்போது நின்றிருந்தேன். அப்போது கண்ணில் படாதது இப்போது பட்டது.
குனிந்து அடியோடு அதைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தேன். சற்று தூரத்தில் இன்னொரு பெரிய காளான் கொள்ளுக்கா பூண்டின் பக்கத்தில் இருந்தது. சென்று அதையும் பிடுங்கிக்கொண்டு கைக்கொன்றாய் பிடித்துப்போய் ஐயாவிடம் காட்டினேன். எதுவும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு நடந்தார்.
ஒவ்வோர் இடி இடிக்கும்போதும் ஒரு நல்ல காளான் மண்ணைப் பிளந்துகொண்டு பூக்கும் என்பார்கள் ஊரில். காளான்களில் மரத்தில் பூக்கும் மரக்காளான், குப்பையில் பூக்கும் குப்பை காளான், சாதாரணமாய் நிலத்தில் பூக்கும் நல்ல காளான், புற்றில் பூக்கும் பச்சரிசி காளான் என்னும் புற்றுக் காளான் என பல வகைகள் இருந்தாலும் அவற்றில் நல்ல காளானும் புற்றுக் காளானும் மட்டுமே உண்ணத் தகுந்தவை.
அதன் பிறகு பல தடவை என் வயதொத்த சிறுவர்களுடன் கூடிக்கொண்டும், தனியாகவும் காளான் பிடுங்கப் போயிருக்கிறேன். அவற்றின் மூலமாக காளான் எப்போதும் தனியாகப் பூக்காது என்பதையும், ஓரிடத்தில் பூத்தால் அவ்விடத்திலிருந்து பத்திருபது அடிக்குள் குறைந்தது நான்காவது பூத்திருக்கும் என்பதையும், அவை அவ்விடத்தை நன்கு உள்வாங்கினால் மட்டுமே தெரியக்கூடும் என்பதையும் கற்றிருக்கிறேன். ஆம்!
ஐயா அன்று சொன்ன வார்த்தைகளைதான் எப்போது எங்கே சென்றாலும் மந்திரமாக பின்பற்றி வருகிறேன். அதிலும் குறிப்பாக பயணங்களில் எவ்விடத்திற்கு போனாலும் சில நிமிடங்கள் அங்கே ஆசுவாசமாய் நின்றோ அல்லது உட்கார்ந்தோ அவ்விடத்தை மெல்ல உள்வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
அவ்வாறு ஓரிடத்தை உள்வாங்கும்போது அவ்விடம் காட்சியாக நம்முள் பதிவதோடு, யார் கண்ணுக்கும் தெரியாத பல விஷயங்கள் நம் கண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கும். சிறு புழு பூச்சிகள் தொடங்கி பல அரிய காட்சிகள் வரைக்கும் அவற்றுள் அடக்கம். ஆம், அதுதான் இயற்கையின் பெருங்கருணையே.
நண்பர்கள் பலர் கேட்பதுண்டு, ”நானும் அந்த வழியாதானே வந்தேன், அங்கேதானே இருந்தேன். அதெப்படி எங்க கண்ணுக்கு தெரியாததுலாம் உன் கண்ணுக்கு மட்டும் தெரியுது?’’.
மெல்லப் புன்னகைத்துவிட்டு நான் சொல்வேன், ”நாம சரியா பார்த்தா, அது நமக்கு தன்ன சரியா காட்டும்’’. கேட்டுவிட்டு புரிந்தும் புரியாததுபோல் கடந்து போவார்கள்.
சென்ற 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் திரைத்துறை நண்பர்கள் இருவரோடு படப்பிடிப்புக்கான இடங்களை பார்ப்பதற்காக அந்தமான் தீவுக்குச் சென்றிருந்தேன்.
பல தீவுகளை தன்னகத்தே கொண்ட அந்தமானின் மிக அழகான ஹேவ்லாக் தீவிலுள்ள உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான ராதாநகர் கடற்கரைக்கு ஒருநாள் மாலை வேளையில் போயிருந்தோம்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் இயற்கை தன் மொத்த அழகையும் திறந்து காட்டிக்கொண்டிருந்தது. மிக ரம்மியமான நீண்ட நெடிய கடற்கரை. ஒருபக்கம் கடல் என்றால் இன்னொரு பக்கம் காடுபோல் அடர்ந்த மரங்களும் மலையும். அத்தனை சுத்தமாக இருந்தது கரையும் நீரும்.
உலகெங்கிலும் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் கடலில் குளித்துக் கொண்டும், மற்றவர்கள் கடற்கரையோரத்தில் நடந்துகொண்டும், ஆங்காங்கே மணலில் உட்கார்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் இருந்தார்கள்.
நண்பர்கள் இருவரும் எதையோ தீவிரமாக தங்களுக்குள் பேசிக்கொண்டு ஓரிடத்தில் நின்றுவிட்டார்கள். நான் மட்டும் அங்கிருந்து தனியாக நடந்து சூரியன் தன் செந்நிறக் கதிர்களை நீர்ப்பரப்பெங்கும் சிந்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கடலுள் இறங்கிக் கொண்டிருந்த மேற்குப் பக்கமாக சென்றுகொண்டிருந்தேன்.
வழிநெடுக மணல் பரப்பெங்கும் ஆங்காங்கே பெயர் தெரியாத பூச்சி ஒன்று தன் கலைக் கால்களால் போட்டிருந்த அழகழகான மணற்கோலங்களை பார்த்து ரசித்துக்கொண்டு எதைப் பற்றியும் சிந்தியாமல் திறந்த மனத்தோடு நடந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வந்திருப்பேன்.
மனிதர்கள் நடமாட்டமின்றி அலைகளின் மெல்லொலியும், அதன் எதிர்பக்கமிருந்த அடர் வனத்தின் பேரமைதியும் மட்டுமே அங்கே நிறைந்திருந்தது.
சுற்றிலும் பார்த்தேன். அத்தனை அழகான ஓர் இடத்தில் தனியனாய் நின்றிருக்கும் எண்ணமே பெருஞ்சுகத்தை தந்தது. மெல்ல காலில் போட்டிருந்த செருப்பை ஓரமாக கழட்டிவிட்டு, மணலில் பாதம் படிய சற்றுதூரம் நடந்துபோய் வந்தேன்.
நொடிக்கு நொடி புதிது புதிதாய், காணக் காணத் திகட்டாததாய் அவ்விடம் முழுக்கவே தன்னை இன்னும் இன்னுமாய் எனக்கு திறந்து காட்டுவதாய் தோன்றியது.
அந்தமான் கடற்கரைகளே ஒருவகையில் விந்தையானதுதான். நம்மூர் கடற்கரைகள் போல் இல்லாமல் ஓரிடத்தில் ஒருநாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே நீர் நிறைந்திருந்து சட்டென்று உள்ளே ஒரு கிலோமீட்டர் தூரம் வரைக்கும் போய்விடக்கூடியது. மீண்டும் தன் நேரத்துக்கு சரியாக வெளியே வரக்கூடியது.
[எந்தெந்த கடற்கரையில் என்னென்ன நேரத்திற்கு நீர் உள்ளே போகும், வெளியே வரும் என்று இதற்கெனத் தனியாக கால அட்டவணை போட்ட ஏடுகள் கூட விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.]
ஏற்கெனவே மலேசியாவில் இதுபோல் கண்டிருக்கிறேன் என்றாலும், அந்தமானில் கண்ட கடற்கரை காட்சிகள் அத்தனை எளிதில் மறக்கக்கூடியதன்று.
உள்ளமெங்கும் மகிழ்ச்சி நிறைந்தவனாய் அங்கே நின்றுகொண்டு, இன்னும் சொல்லப்போனால் ஒரு சிறு குழந்தைபோல் உள்ளுக்குள் துள்ளி குதித்துக்கொண்டு, இயற்கையின் பேரழகு முன்னால் முழுவதும் என்னை ஒப்புவித்து, அவற்றின் அடுத்தடுத்த தரிசனத்துக்காக காத்திருந்தேன்.
ஓர் ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். சட்டென உடல் சிலிர்க்க, இதுவரை கேட்டிறாத புதுவிதச் சத்தம் ஒன்று பின்பக்கமாக ஒலிக்க, மரங்கள் அடர்ந்திருந்த வனத்துப் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.
சிறு நட்சத்திர ஆமைக் கூட்டமொன்று, பிறந்து சில தினங்களே ஆனவையாக இருக்கவேண்டும். எப்படியும் ஐம்பதிருக்கும். அதற்குள்ளிருந்து மெல்லியச் சத்தத்துடன் கத்திக்கொண்டு வேகமாக என்னை நோக்கி ஓடிவந்தது.
திடுமென திடுக்கிட்டு என்னவென்று சுதாரிப்பதற்குள், அவை என் கால்களை தொட்டுக் கொண்டும், என்னைச் சுற்றிக்கொண்டும் வேகமாக ஓடிப்போய் கடல் நீருக்குள் புகுந்துகொண்டது.
மொத்தமே பத்து நொடிகள்தான் இருக்கும். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரைக்கும் சிலிர்த்துப் போய் நின்றேன். அப்படியொரு காட்சியை அங்கே காண்பேன் என துளியும் நினைக்கவில்லை. அதுவும் அத்தனை நட்சத்திர ஆமைகள் ஓரிடத்தில் ஒரே நேரத்தில் அவையாக வந்து என்னைத் தொட்டுக்கொண்டு ஓடும் என கனவில் கூட எண்ணவில்லை.
முதலில் கொஞ்சம் திடுக்கிட்டு பயந்து போனாலும், நடந்ததை எண்ணி மகிழ்ந்தவனாய் திரும்பி மறுபடியும் அவை வருகிறதா என வந்த வழியையும், ஓடிப்போய் நீருக்குள் நுழைந்த இடத்தையும் பார்த்தேன். வரவில்லை.
மெல்ல கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்து சிறு கோடு போல் மண்ணை கீறிக்கொண்டு ஆமைகள் சென்ற சுவடுகளை தொட்டுப் பார்த்துவிட்டு எழுந்து, சூரியன் தன்னை கடைசிப் புள்ளிவரை கடலுக்குள் புகுத்தி மறைக்கும் வரைக்கும் அவ்விடத்திலேயே இருந்துவிட்டு, கழட்டிவிட்ட செருப்பை மாட்டிக்கொண்டு அலையோரமாக நடந்து நண்பர்கள் மணலில் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்தேன்.
வானம் வெளிச்சம் குறைந்து ஓரளவுக்கு இருண்டிருந்தது. எங்களுடன் வந்திருந்த அந்தமானைச் சேர்ந்த சோட்டா என்னும் வாலிபன் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் இருப்பதை பார்த்துவிட்டு, ”என்னாச்சு பைய்யா?’’ என்று இந்தியும் தமிழும் கலந்து கேட்டான். சொன்னேன்.
”என்னது?’’ எனக் கண்கள் விரிய வியப்பின் உச்சத்திற்கு போனவன், ”இருபது வருஷமா அந்தமான்ல இருக்கேன். எப்படியும் முன்னூறு தடவையாவது இந்த பீச்சுக்கு வந்திருப்பேன். ஒருவாட்டி கூட அதுமாதிரி காட்சிய நான் பார்த்ததில்லை. you are gifted பைய்யா’’ என்றான்.
மெல்லப் புன்னகைத்துக்கொண்டு ஐயா அன்று சொன்ன வார்த்தைகளை உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆம்!
‘இயற்கையானது எப்போதும் தன்னை திறந்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஊனக் கண் கொண்டு பார்க்கும் நம்மால்தான் அவற்றின் பேரழகை, பேரமைதியை, ஆர்ப்பரிப்பை, ஆழுள்ளத்தை, கருணையை, கதகதப்பை பார்க்க முடிவதில்லை; உணர முடிவதில்லை.’
எனினும் பயணத்தை துணையாகக் கொண்டு இயற்கையின் உள்முகத்தை கண்ட அந்நாளையும் அவ்விடத்தையும் அவ்வளவு சீக்கிரத்தில் நான் மறக்கமாட்டேன். ஆம், ஆம்!
*
‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்
திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி
திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்
திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்
திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை