‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் முடிவு

திருவாளர் ஊர்சுற்றி – 16 : அவுரருவி

”தன்னைக் கண்டடைதல்”

ஒருவர் பயணியாகவும் ஊர்சுற்றியாகவும் இருக்க முதல் தேவை பணத்தை காட்டிலும் மனம்தான் என்பேன். மனம் இருந்தால் பணம் ஒரு பிரச்சினையே இல்லையென்று எப்போதும் தோன்றும்.

அடுத்ததாக ‘ஒரு பயணம் என்ன செய்யும்?’ எனக் கேட்டால், ‘எல்லாவற்றையும் செய்யும்’ என்றுதான் சொல்வேன். அதென்ன எல்லாவற்றையும்? புத்தகங்களில் இல்லாத எத்தனையோ பாடங்களை கற்றுத்தரும். ஒருபோதும் வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு வாழ்நாளில் காணவே முடியாத அரிய காட்சிகளையும், இயற்கையின் உள்முகத்தையும் தரிசனங்களையும் காட்டும்; உணர்த்தும். வாழ்வில் அவசியம் கிடைக்கவேண்டிய பல உன்னத அனுபவங்களையும், நினைத்துப் பார்க்காத திடீர் உறவுகளையும் போகிறபோக்கில் தந்துவிடும். இவை யாவற்றுக்கும் மேலாக நம்மை நாம் கண்டடைய பெரும் திறவுகோலாக இருக்கும்.

ஆக, ஒருவர் பயணியாகவும் ஊர்சுற்றியாகவும் இருக்க முதல் தேவை மனம் என்றால், பயணத்தின் உச்சபட்ச திருப்பிஅளிப்பு நம்மை நாம் கண்டடைதல்தான். ஆம்!

புறவயமாகப் பார்த்தால் நாம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு பயணப்படுவதுபோல் தோன்றினாலும், ஒவ்வொரு பயணத்திலும் அகவயமாக நம்மை நாமே கண்டடைதலை உணரலாம். அவ்வாறு அமையும் பயணம்தான் உண்மையில் உயரிய பயணமாக எப்போதும் சொல்வேன்.

இதை இப்படியும் சொல்லலாம். ஒவ்வொரு பயணத்தின் மூலமாகவும் நாம் நம்மை முன் கண்டடைந்ததைவிட இன்னும் அதிகமாக கண்டடைந்து உள்ளூர நோக்கினால் அறியமுடியும். அப்படியான பல பயணங்களை இதுவரையான என் பயணவாழ்வில் மேற்கொண்டிருக்கிறேன் [;இனியும் மேற்கொள்வேன்] என இப்போது எண்ணிப் பார்க்கையில் தோன்றுகிறது. ஆம்!

பயண தாகம் ஒருபோதும் தீராதது. பயண சுகமோ ஒருநாளும் மாறாதது. இதுதான் மற்ற யாவற்றிலிருந்தும் பயணத்தை வேறுபடுத்தி ஓர் உயரிய இடத்தில் எப்போதும் வைத்திருக்கக் காரணம்.

பயண நூல் எழுத வேண்டுமென்பது என் நெடுநாளைய விருப்பம். அதுவும் இன்னதுதான் என்றில்லாமல் இதுநாளைய பயண அனுபவங்களையும், அவற்றில் யான் கண்ட அரிய காட்சிகளையும், தரிசனங்களையும், முகங்களையும் முடிந்தவரை சொல்வழியாக வாசிக்கும் வாசக மனத்துள் கடத்திவிட வேண்டுமென நினைத்தேன்.

அவ்வகையில் கடந்த பதினாறு நாட்களாக என் இணையதளத்தில் திருவாளர் ஊர்சுற்றி’ எனும் தலைப்பில் பயணக் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு அமைந்தது. அவற்றின் வாயிலாக என்னோடு சேர்ந்து நீங்களும் பயணித்திருப்பீர்கள்; கூடவே, அதுபோல் பயணிக்கவும் நினைத்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

வரும் காலங்களில் இன்னும் இதுபோல் பல பயண நூல்கள் எழுதக்கூடும். என்றாலும் இதுதான் அவற்றில் முதல் நூல்; அதுவும் முக்கிய நூல். ஆம், அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

ஒரு புறப்பயணத்திற்கு முடிவிருப்பதுபோல் அகப்பயணத்திற்கு எப்படி முடிவில்லையோ, அதுபோன்றுதான் பயண அனுபவங்களை எழுதவும் முடிவில்லையென சொல்வேன்.

பயணத்தின் சில்லிப்பையும், சிலிர்ப்பையும், மலர்வையும், கதகதப்பையும், சுகத்தையும், மேன்மையையும் அடைய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இப்பயணக் கட்டுரைகள் ஏதேனும் ஒருவகையில் பயன்படலாம்.

இறுதியாக, ஏற்கெனவே சொன்னதைதான் இங்கேயும் சொல்ல நினைக்கிறேன். பெருங்கருணை கொண்ட இயற்கையானது நமக்கு எத்தனையோ வாய்ப்புகளை வாரி வழங்குகின்றன. அவற்றில் முதன்மையானது பயணம் என்றால், முடிவானதும் அப்பயணம்தான். ஆம்!

ஆதலால் என்னருமை முந்நாள் / இந்நாள் / வருநாள் பயணிகளே / ஊர்சுற்றிகளே… இன்னும் இன்னும் பெரிய பயணியாகவும், பல உன்னத பயணங்களை மேற்கொள்ளவும் மனதார வாழ்த்துகிறேன்.

இதோ இன்னொரு பயணத்திலிருந்து,

வடிவரசு (எ) திருவாளர் ஊர்சுற்றி

*

திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

திருவாளர் ஊர்சுற்றி – 11 : மயிலிறகீசன்

திருவாளர் ஊர்சுற்றி – 12 : எக்கரணை

திருவாளர் ஊர்சுற்றி – 13 : கிறுக்குப்பயணம்

திருவாளர் ஊர்சுற்றி – 14 : தடக்தடக்வண்டி

திருவாளர் ஊர்சுற்றி – 15 : செங்கோடு

திருவாளர் ஊர்சுற்றி – 16 : அவுரருவி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=