திருவாளர் ஊர்சுற்றி – 12 : எக்கரணை

திருவாளர் ஊர்சுற்றி – 11 : மயிலிறகீசன்
ஒன்றை நினைத்திருப்போம். அது ஏற்கெனவே நடந்ததுபோல இருக்கும். ஆனால் அப்போதுதான் முதல்தடவையாக நடக்கும். அப்படியான பயண நிகழ்வொன்று கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நிகழ்ந்தது.
அதுவும் யாருமற்ற அழகிய கடற்கரை ஒன்றில் என்னை மறந்து, என் பெயர் ஊர் வயது எல்லாம் மறந்து, மணிக்கணக்காக யாதொரு சிந்தையும் இல்லாமல் மணலில் சிறுகுழந்தை போல் விளையாடிக்கொண்டிருந்ததாய் எப்போதோ நினைத்திருக்கிறேன். ஆனால் அது அப்போதுதான் நடந்தது. அதுவும் நடக்கும் போதுதான், ‘இது இப்போதான் நடக்குதா…? ஏற்கனவே நடந்த மாதிரில்ல இருக்கு’ எனும் எண்ணமே எழுந்தது. ஆம்!
நண்பர்கள் இருவரோடு சேர்ந்துகொண்டு நாங்கள் தங்கியிருந்த கோவாவின் மிக அழகான, அதுவும் மரத்தின்மீது இருப்பது போல் மரத்தோடு சேர்த்து முழுக்கமுழுக்க மரப்பொருட்களை மாத்திரமே கொண்டு அமைக்கப்பட்டிருந்த ஹோட்டலிருந்து காலை உணவு உண்டுவிட்டு, ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஒன்றரை மணிநேரம் பயணித்து ஊரைவிட்டு மிகத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்தக் கடற்கரையை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.
அவ்வளவு நேரம் நேர்த்தியான சாலையில் போய்க் கொண்டிருந்த வாகனம் சட்டென வலது பக்கமாகத் திரும்பி, மரஞ்செடிகொடிகள் சூழ இருந்த சிறு மண்பாதையில் நுழைந்து இரண்டு கிலோமீட்டர் தாண்டிச் சென்று நின்றது.
”இதுக்கு மேல வண்டி போகாது, நடந்துதான் போகணும்’’ என்றார் வாகன ஓட்டி. ‘சரி’ என இறங்கி அங்கிருந்து எண்ணி இருபதடி எடுத்துவைத்து நடந்திருப்போம். சட்டென்று அங்கிருந்த சரிவின் கீழே கடற்கரை இருப்பது கண்ணில் பட்டது. அதுவும் அத்தனை அழகான ஒரு கடற்கரை அங்கே இருக்கும் என துளியும் நினைக்கவில்லை.
ஓரிரு நொடிதான் நின்று பார்த்திருப்பேன். உடனே உடன் வந்தவர்களை மறந்துவிட்டு அங்கிருந்து வளைந்து வளைந்து கீழே இறங்கிப் போன சிறு கொடிவழியில் நடப்பதுபோல் ஓடிப்போய் கடற்கரை மணலில் அத்தனை உற்சாகத்துடன் குதித்து அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தேன்.
என் தவிர அங்கே கடற்கரையில் யாருமே இல்லை. அத்தனை தூய்மையான கடல் நீரையும், அந்த ரம்மியமான இடத்தையும் பார்த்ததும் என்னை அறியாமல் போட்டிருந்த மேல்சட்டையை முதலில் கழட்டிவிட்டு, பாக்கெட்டிலிருந்த நகர்பேசியையும் பர்சையும் பேப்பர் பேனாவையும் எடுத்து அதற்குள் போட்டு மடித்து வைத்துவிட்டு, பின் கீழ்சட்டையையும் கழட்டிவிட்டு வெறும் ஜட்டியோடு ஓடிச்சென்று கடலுக்குள் இறங்கி இடுப்பளவு நீர் வரைக்கும் நடந்துபோய் நீந்திக் குளிக்க ஆரம்பித்துவிட்டேன்.
அடிக்கடி ஒன்று தோன்றும். நீச்சல் தெரியாதவர்களை போல பாவப்பட்ட மனிதர்கள் இப்பூமியில் இல்லவே இல்லை. அதுவும் இதுபோன்ற பயணங்களில் அவர்கள் இழப்பவை கொஞ்ச நஞ்சமல்ல. ஆம், அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
பின்னாலேயே சற்றுநேரம் கழித்து வந்த நண்பர்கள் என்னை பார்த்தும் பார்க்காதது போல் தொந்தரவு செய்யாமல் கடந்து, கடற்கரையின் இன்னொரு பக்கமாக இருந்த கற்கள் நிறைந்த இடத்துக்குப் போய் சிறிதுநேரம் நின்றும் உட்கார்ந்தும் வேடிக்கை பார்த்துவிட்டு, கொண்டு வந்திருந்த பையை திறந்து அதனுள்ளிருந்த கேமராவை வெளியே எடுத்து ஒரு பாடலுக்கான காட்சியை பதிவுசெய்ய ஆரம்பித்தார்கள்.
நானோ அவர்கள் உடன் வந்ததையே மறந்தவனாய் கடலுக்குள் ஐம்பதடி தூரத்துக்கு மேல் நீந்திப் போய், அங்கிருந்து கரையையும் அதில் தெரிந்த மரங்களையும் சிறு மலைகளையும் கற்களையும் ஆசைதீர பார்த்து ரசித்துவிட்டு மெல்ல கரைக்கு வந்தேன்.
மணலில் ஆசுவாசமாய் படுத்துக்கொண்டு உச்சி வானையும், பின் அம்மொத்த கடற்கரையையும் பார்க்கவேண்டும் போல இருந்தது. உடனே ஓடிப்போய் படுத்துக்கொண்டு பார்த்தேன்.
பின் கடற்கரையின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் அலைகளோடு கால்களால் பேசிக்கொண்டு மெல்ல நடந்துபோய் வரவேண்டும் போலிருந்தது. எழுந்து சென்று அப்படியே செய்தேன்.
பிறகு கடலுள் சற்று தூரத்தில் இருந்த சிறு பாறையில் போய் ஏறி உட்கார்ந்துகொண்டு உலகோசையின்றி கடலோசையை மட்டுமே கேட்கவேண்டும் போல இருந்தது. சட்டென நீருக்குள் இறங்கி நீந்திப்போய் அப்பாறை மீது ஏறி அதன் ஒரு முனையில் அமர்ந்து கால்களை நீருள் நீட்டிக்கொண்டு, நீண்டு விரிந்திருந்த ஆழிப்பரப்பையும், அதற்கு போட்டியாக மேலே விரிந்து பரந்திருந்த ஆகாசவெளியையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.
திரும்பவும் கடலுக்குள் வெகுதூரத்திற்கு நீந்தி செல்லவேண்டும் போலிருந்தது. உடனே எழுந்து நின்று தொம்மென எக்கி நீருக்குள் குதித்து சற்றுதூரம் உள்ளேயே மூழ்கிப்போய் மேலே வந்து, முன்னைவிட இன்னும் தூரமாகச் சென்று அங்கே ஓரிடத்தில் நான்கைந்து நிமிடம் கை கால்களை அசைத்து நிலையாக நீந்திக்கொண்டு சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கடற்கரையில் நின்றுகொண்டு கடலுள் பார்ப்பது ஒருவகை இன்பமென்றால், கடலுள் இருந்துகொண்டு கடற்கரையை பார்ப்பது இன்னொரு வகையான இன்பம் என்பதை அப்போதுதான் முதல் தடவையாக உணர்ந்தேன். இன்னும் சொல்லப்போனால் ஒருபடி மேலான சுகத்தை தரக்கூடியது என்றுகூட சொல்லலாம்.
கடல், யானை, மலை மூன்றையும் எவ்வளவு பார்த்தாலும் தீராது என்பார்கள் ஊரில். கடலை சங்க இலக்கியம் முந்நீர் என்கிறது. அதாவது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது; அல்லது பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது என்னுமிரு பொருளில்.
‘விலங்கு இரு முந்நீர்’ – (குறுந்தொகை 130)
‘முந்நீர் விழவின், நெடியோன்’ (புறம் 9)
கடலுக்கு முந்நீர் தவிர்த்து வீரமாமுனிவர் தம் சதுரகராதியில் பட்டியலிட்ட அத்தி, அப்பு, அம்பரம், அம்புராசி, அம்போதி, அரி, அருணவம், அலை, அளக்கர், ஆழி, ஆர்கலி, உத்தி, உந்தி, உப்பு, உவரி, உவர், ஓதம், கலி, கார்கோள், குரவை, சக்கரம், சமுத்திரம், சல்தி, சலநதி, சலராதி, சாகரம், சிந்து, தெண்டிரை, நதிபதி, நரலை, நீராழி, நேமி, யயோத்தி, பரப்பு, பரவை, பாராவாரம், புணரி, பெருநீர், பௌவம், மகராலயம், மகோத்தி, வாரம், வாரணம், வாரி, வாரிதி, வாருணம், வீரை, வெள்ளம், வேலாவலயம், வேலை உள்ளிட்ட வேறு பல பெயர்களும் இருப்பதை மெல்ல மனத்துள் நினைத்துக்கொண்டு, அங்கிருந்து வேகமாக நீந்தி நீச்சல் போட்டியில் செல்வது போல் ‘நூறு எண்ணுவதற்குள் கரையை போய் தொடவேண்டும்’ என எனக்கு நானே சொல்லி எண்ணிக்கொண்டு, அதேபோல் நீந்தி கரைக்கு வந்து மூச்சுவாங்க மணலில் உட்கார்ந்தேன்.
இயற்கையின் பேரங்கமான ஐம்பூதங்களில் மண்ணும் (அதிலும் குறிப்பாக மணல்) நீரும் நெருப்பும் அவ்வளவு பிடிக்கும் என்பேன். அதிலும் குறிப்பாக மணலை எங்கே கண்டாலும் உடனே ஓடிப்போய் சிலநிமிடமாவது அதில் உட்கார்ந்து விளையாடுவதை சிறுவயது முதல் வாடிக்கையாக வைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு இத்தனை அழகான மணற்பரப்பில் அமர்ந்திருக்கும் எண்ணமே நிகரிலா பேரின்பமாக இருந்தது.
சட்டென எழுந்து ஓரிடத்தில் மலையிலிருந்து வழிந்துவந்த ஊற்றுநீர் மணலில் இறங்கி மெல்லமாக சென்று கடல்நீருடன் கலந்துகொண்டிருந்ததை பார்த்துவிட்டு, அதன் அருகில் போய் குத்துக்காலிட்டு உட்கார்ந்து மணலை இரு கை நிறைய அள்ளிப்போட்டு குறுக்காக ஒரு தடுப்பு கட்ட ஆரம்பித்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக கட்டிய தடுப்புக்குள் நீரானது நிரம்ப நிரம்ப இன்னும் மண்ணள்ளிப் போட்டு பெரிதாக்கி, அதன் ஒருபக்க ஓரமாக நிறையும் நீர் வழிந்து செல்வதுபோல் சிறுபாதை ஒன்றை அமைத்து, பின் அப்பாதையை நீட்டிக்கொண்டு போய் கடல் நீருக்குள் கலக்கச் செய்துவிட்டு வந்து பார்த்தேன்.
மெல்ல தடுப்புக்குள் ஓடிவந்து நிறைந்த நீரானது, சரியாக நான் அமைத்திருந்த பாதை வழியாக வெளியேறிச் சென்று கடலுக்குள் கலந்தது. மகிழ்ச்சியோடு அவை செல்லும் வழியில் போய் அதேபோல் ஆனால் கொஞ்சம் சின்னதாக இன்னொரு தடுப்பு அமைத்து, அதில் நிரம்பும் நீர் மூன்றாகப் பிரிந்து செல்வது போன்று உருவாக்கினேன்.
அதாவது முதலில் கட்டியது பெரிய அணை. இரண்டாவதாக கட்டியது சிறிய அணை. அப்படியே எங்களூர் அருகிலோடும் தென்பெண்ணை ஆறை தடுத்து கட்டியுள்ள சாத்தனூர் அணையையும், பிக்கப் டேம் என்னும் சின்ன அணையையும் மனத்தில் வைத்துக் கட்டினேன். ஆம்!
மெல்ல நான் கட்டிய பெரிய அணையின் பக்கத்தில் உட்கார்ந்து, மேலே மலையிலிருந்து ஒவ்வொரு துளிகளாக சேர்ந்து பஃறுளிகளாகி வந்து அணைக்குள் நிரம்பி, பின் அங்கிருந்து வழிந்து ஆற்றில் சென்று மீண்டும் இன்னோர் அணையில் நிறைந்து மூன்றாகப் பிரிந்து கடலுக்குள் ஓடிப்போய் கலப்பதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.
சட்டென மனத்துள் ஓர் உணர்வு. அதுவும் இந்நிகழ்வு ஏற்கெனவே என் வாழ்வில் எப்போதோ நடந்தது போன்று தோன்றியது. ‘இல்லயே இப்பதான நடக்குது’, ‘ஆமா இப்பதான் நடக்குது’, ‘அப்போ ஏன் இதுமாதிரி நமக்கு தோனணும்?’, ‘ஒருவேள நாம மனசுக்குள்ள என்னைக்கோ எங்கயோ நெனச்ச ஒண்ணு… நடந்தமாதிரி நமக்குள்ள பதிஞ்ச ஒண்ணு… அதுவாவே நடக்கும், இல்ல அதுமாதிரியே நடத்திடுமோ?’ என எண்ணிக்கொண்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தேன்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் தெரியாது. ”என்ன பாஸ், டேம்லாம் கட்டியாச்சு போல…?’’ என்ற நண்பரின் குரல் கேட்டு திடுக்கிட்டு நினைவு வந்தவனாய் மெல்லப் புன்னகைத்துக்கொண்டு தலை நிமிர்த்திப் பார்த்தேன். கேமராவும் கையுமாக நண்பர்கள் இருவரும் நின்றிருந்தார்கள்.
”டேம் கட்டிட்டீங்க சரி, அதுக்கொரு பேரு வச்சீங்களா பாஸ்?’’ என்று கேட்டார் இன்னொரு நண்பர்.
இதழ் விரித்து மெல்லச் சிரித்துக்கொண்டு எழுந்து, ”இனிமேதான் வைக்கணும் பாஸ்’’ என்றேன்.
எனது பதிலை கேட்டு ‘ஹாஹா’ என கம்மிய குரலில் சிரித்தவர், ”சரி, சீக்கிரமா வச்சிட்டு வாங்க. நாங்க போய் அந்த மரத்தடியில உட்கார்ந்திருக்கோம்’’ என்று சொல்லிவிட்டு பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு நண்பரை கூட்டிக்கொண்டு போனார்.
மெல்ல அண்ணாந்து மேலே பார்த்தேன். வேகமாக உச்சிவானை எட்டியிருந்த கதிரோன், இன்னும் இன்னும் அதிகமாக வெயிலை கொட்டத் தொடங்கியிருந்தது.
சட்டென்று கீழே குனிந்து மணலில் கட்டிய அணையையும் அதில் நிறைந்து வழிந்தோடிய நீரையும் ஒருதடவை பார்த்துவிட்டு, ‘கரிகாலன் கல்லக்கொண்டு அணை கட்டினதால அதுக்கு கல்லணைன்னு பேரு வச்சாங்க. நாமளோ இங்க மணலக்கொண்டு அணை கட்டியிருக்கோம். அப்போ மணலணைன்னு பேரு வைக்கலாம். இல்லனா மணலையும் மணல்குன்றயும் சங்க இலக்கியத்துல சொல்ற எக்கர்ன்ற சொல்லக்கொண்டு எக்கரணைன்னு பேரு வைக்கலாம்’ என நினைத்துக்கொண்டு, ‘முதலாம் மாமன்னர் வடிவரசர் கட்டிய எக்கரணை (எ) மணலணை’ என்று மனதிற்குள் அதற்கொரு பெயரிட்டுவிட்டுப் போய், கை கால்களில் ஒட்டியிருந்த மணலை கடல்நீரில் கழுவிட்டு வந்து, ஓரமாக வைத்திருந்த என் ஆடைகளை எடுத்துப் போட்டுக்கொண்டு மறுபடியும் அணைக்கருகில் சென்று நின்று கடைசியாக ஒருவாட்டி அணையினையும் அவ்விடத்தையும் மனதாரப் பார்த்துவிட்டு, திரும்பி நண்பர்கள் உட்கார்ந்திருக்கும் தென்னை மரத்தடி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆம்!
என்றோ நடந்ததுபோல் இருந்த நிகழ்விது. ஆனால் அன்றுதான் உண்மையில் நடந்தது. இன்னும் இன்னும் அழகாக; இன்னும் இன்னும் இனிதாக. ஆம், அவ்வாறு மட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது.
*
‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்
திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி
திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்
திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்
திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை
திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்
திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி
திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்
திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்
திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி