ஒவ்வொரு வரியும் காட்சியாய் ஓடியது – வைரமணி

ஆம் இந்த புத்தகத்தை படித்த பிறகுதான் தெரிகிறது ஐயா ஒரு குழந்தையென… நான் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும்போது தான் வடிவரசு அவர்கள் ஐயாவைப் பற்றி முகநூலில் அதிகளவில் பதிவுகளைப் பதிவிட்டார். அதை கல்லூரி பேருந்தில் காலையோ அல்லது மாலையோ படித்துவிடுவேன். அப்படி படித்த போது ஐயாவை பார்க்க வேண்டுமென அதிகளவில் நினைத்திருக்கிறேன்.
அன்று முகநூல் பதிவுகளில் படித்தவை இன்று புத்தகமாக என் கைகளில் தவழும் என்பதை நினைத்துகூட பார்த்ததில்லை. என் கைகளில் கிடைத்து கிட்டத்தட்ட ஒரு மாதமே ஆக போகிறது. சில காரணங்களால் ஐயா புத்தகத்தை இன்றுதான் படித்து முடித்தேன். பேரன்பும் பெரும் நன்றியும் வடிவரசு…
இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியை படிக்கையிலே காட்சியாய் என்முன் ஓடியது. ஐயாவை நீ நுட்பமாக அறிந்து எழுதியிருந்ததால் மட்டுமே இது சாத்தியம். நடைமுறை வாழ்வில் பயன்படுத்தப்படும் சொற்கள், என்றோ பயன்படுத்தப்பட்டுள்ள நமக்கு தெரியாத (நகர்புறங்களில் உள்ளவர்க்கு) பல சொற்களை அறிய முடிந்தது. “கஷ்டப்படுறதுல தப்பில்ல.. நல்லாக் கஷ்டப்படு. எல்லாக் கஷ்டத்துக்கும் கண்டிப்பா ஒரு நாள் பலன்கெடைக்கும்” இவ்வார்த்தை, ஒரு வாரமாக ஏதோ நினைவில் துவண்டுபோகிருந்த எனக்கு அய்யா கூறிய அந்த வார்த்தைகள் இன்று புத்துணர்ச்சிக்கு வித்திட்டது.
எனக்கு தெரிந்தவரை இந்த உலகத்துல பொறந்த எந்தவொரு மகனும் தன்னுடைய தந்தைக்கு ஒரு புத்தகம் எழுதியத்தில்லை. அதை நீ செய்துவிட்டாயடா வடிவரசு. அதை மட்டுமா நீ செய்தாய்.. ஐயா கூறிய ஆசைகளான கல்லூரியை பார்க்க வேண்டுமென்பதையும், பழனிக்கு போக வேண்டுமென்பதையும், அவர் உன்னிடம் கேட்காத ஆசையாய் இருந்தது விமானத்தில் செல்வது அதையும் நீ நிறைவேற்றினாய்…
நான் அறியப்படாத பல சொற்களான சில்லாக்கோல், ஊத்தா, ஆக்கருவா போன்ற பெயர்களையும், பல வகையான செடி, கொடி, மரங்களைப் பற்றியும், முக்கியமாக காட்டு வள்ளிக்கிழங்கு, ஆதாண்டங்காய், சூரப்பழம், காரப்பழம் போன்றவை பற்றியும் அறிந்தேன்.
அந்த காட்டுக்குள்ளும், மலைக்குள்ளும், கோவிலுக்குள்ளும் பயணித்த மகிழ்ச்சி மனதுள். விவசாயி, பாடலாசிரியர், பாடகர், நடனமாடுபவர், கதைச்சொல்லி, இயற்கை மருத்துவர், இயற்கையின் ரசிகன், ரசனைக்காரன், இன்னும் பல என ஐயாவின் பல கதாபாத்திரங்கள் என் கண்முன்னே நிற்கிறது.
இப்படியொரு புத்தகத்தை செதுக்கிய வடிவரசுக்கு வாழ்த்துகள். மேலும் இதே போல் இன்னும் இன்னும் பல புத்தகங்களை உனது எழுத்துகளாய் படைக்க வாழ்த்துகள்.
– வைரமணி, சேலம்
*
ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை