திருவாளர் ஊர்சுற்றி – 16 : அவுரருவி

திருவாளர் ஊர்சுற்றி – 15 : செங்கோடு

சிறுவயதில் என்றோ எப்படியோ ஆரம்பித்த ஒரு பழக்கம் வாழ்நாளெல்லாம் நம்முடன் வருவது குறித்து பலதடவை யோசித்திருக்கிறேன்.

அதுவும் விளையாட்டுத்தனமாக தொடங்கிய பழக்கம், பயணங்களில் கூடுதல் சுவையை விளைவிப்பதை நினைத்தால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை. அப்படியான பழக்கமொன்று என்னுடன் எப்போதும் இருந்து வருகிறது. ஆம்!

அன்றைய தினம் காலை கோத்தகிரியில் நான் தங்கியிருந்த நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து சீக்கிரம் எழுந்து புறப்பட்டு, மனம்போன போக்கில் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக சுற்றித் திரிந்துவிட்டு வந்து குளித்துக் கிளம்பி காலைஉணவு உண்டுவிட்டு, அருகிலிருந்த அரவேனு  என்கிற கிராமத்திற்கு சாலையோரமாக நடந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு போய், அங்கிருந்த ஆட்டோக்காரரிடம் ஐந்து கிலோமீட்டர் தாண்டியுள்ள கேத்தரின் அருவிக்குச் செல்ல வழி கேட்டேன்.

”இந்த வழியாதான் போகணும். பஸ்லாம் எதுவும் போகாது, ஆட்டோதான்’’ என்றார், ஒருவழியைக் காட்டி. ”எவ்வளவு ஆகும்?’’ எனக் கேட்டதற்கு, ”முன்னூறு ரூபாய்’’ என்றார். ‘என்னது, ஐந்து கிலோ மீட்டருக்கு முன்னூறா?’ என நினைத்துக்கொண்டு, ”இல்லண்ணா, நான் நடந்தே பொறுமையா போறன்’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த கடையொன்றில் போய் கருந்தேநீர் அருந்திவிட்டு அவ்வழியில் மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

வழிநெடுகிலும் அத்தனை அழகான காட்சிகள். பெயர் தெரிந்த / தெரியாத எத்தனை எத்தனையோ மரஞ்செடிகொடிகள். சிறுசிறு கிராமங்களையும், வீடுகளையும், மனிதர்களையும், பூக்களையும், பறவைகளையும் பார்த்து ரசித்துக்கொண்டு, எங்கும் யாரிடமும் அதன்பின் வழி கேட்காமல் நடுவில் ஓரிடத்தில் மட்டும் நின்று சுடச்சுட தேநீர் பருகிவிட்டு உற்சாகமாக போய்க்கொண்டிருந்தேன்.

சட்டென ஓரிடத்தில் இடது பக்கமாக சிறு சரிவை தாண்டியிருந்த மேட்டுப் பகுதியில், சிறிய மலை என்று கூட அதை சொல்லலாம், சிறு அருவி ஒன்று வெண்ணிற பென்சிலால் தீட்டப்பட்ட ஓர் அசைவுரு ஓவியம் போல கொட்டிக்கொண்டிருப்பது கண்ணில்பட, அடுத்தநொடியே அதனருகில் போக ஆசையுற்று பள்ளத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

சுற்றியும் கண்ணெட்டும் தூரம் வரைக்கும் பூமி பைம்மையாடை உடுத்தினதுபோல் தேயிலை தோட்டங்கள். ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக அதன் நடுவில் ஒன்றிரண்டாய் தொழிலாளர்கள் தங்கி வேலைபார்க்க கட்டப்பட்ட சிறுசிறு ஓட்டு வீடுகள். தொலைவிலிருந்த மேட்டுமேல் புள்ளிகளாய் ஏழெட்டு பெண்கள் தேயிலை பறித்துக்கொண்டிருந்தார்கள்.

மெல்ல நடந்து அங்கிருந்த சிறு ஓட்டு வீட்டைக் கடந்து மேடேறி, தேயிலை தோட்டத்தின் நடுவிலிருந்த கொடிவழியாக சற்றுதூரம் சென்று, பின் குத்துமதிப்பாக ஒரு வழியில் போய் அச்சிறு அருவியை அடைந்தேன்.

[அருவியை அருவி என்னும் சொல்கொண்டு அழைப்பதை விட நீரூற்று, மலையின் வீழ்புனல், வரைநீர் போன்ற சொற்களால் அழைப்பதுதான் பொருத்தமாக இருக்குமென எப்போதும் தோன்றும்.]

குற்றால அருவியோடு ஒப்பிடுகையில் மிகச் சிறிய அருவிதான். ஆனால் அத்தனை சிலிர்ப்பானது. அதனருகில் நின்றுகொண்டு கீழ்நோக்கி நீர்விழும் மெல்லோசையை கேட்டவனாய் நாற்புறமும் பார்த்தேன். ஒருத்தரும் தெரியவில்லை. உடனே போட்டிருந்த லோயரை முட்டிக்கு மேலாக மடித்துவிட்டு நீருக்குள் இறங்கி, கைகளையும் கால்களையும் நீட்டி நனைத்து சிறு குழந்தைபோல் அருவியோடு பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் விளையாட ஆரம்பித்தேன்.

சட்டென்று எங்களூர் பெரிய கால்வாயிலும், தென்பெண்ணை ஆறிலும், கிணறிலும், ஏரியிலும், குட்டையிலும் [குதித்து] குளித்து விளையாடிய சிறுவயது நாட்களும்… கூடவே, அந்நாட்களை நினைத்து சில தினங்களுக்கு முன்பாக எழுதிய பாடல் வரிகளும் நினைவுக்கு வந்தன.

‘தாயப்போல தண்ணி –

பழிச்சிப்புட்டா மன்னி…

எடுக்கமுடியாதெண்ணி –

அடுப்புலவச்சா வெந்நீ… ஓ…

தாகத்துக்கு எதிரி –

குதிச்சாவோடும் செதரி…

மீனிருக்கும் உள்ள –

உத்துப்பாரு மெல்ல… ஓ…

அட, மழையா விழுந்துடும் –

அருவியா கொட்டிடும்…

ஆறா ஓடிடும் –

ஆழியா நின்னுடும்… ஓ…

அட, அலையா பாடிடும் –

அழகா அழுக்க நீக்கிடும்…

இனிதா பயிர வளத்திடும் –

இதமா உயிர்கள காத்திடும்… ஓ…’

நேரம்போனதே தெரியாத அளவுக்கு அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அங்கே விளையாடிக்கொண்டிருந்துவிட்டு, வர மனமின்றி கிளம்பி வந்தவழி இல்லாமல் இம்முறை வேறுவழியாக நடந்து பள்ளத்திலிருந்த வீட்டருகில் வந்தேன்.

சட்டென, ”யார்ப்பா நீ…?’’ என ஒரு குரல் கேட்டது. அதுவும் வீட்டுக்கு எதிர்பக்கமாக இருந்த தேயிலை தோட்டத்திலிருந்து.

ஒரு வயதானப் பாட்டி. அதன் நடுவிலிருந்த கல்லின்மீது உட்கார்ந்திருந்துவிட்டு, எழுந்து நடக்க முடியாமல் என்னை நோக்கி மெல்ல நடந்து வந்தார்.

பக்கத்தில் வந்தவர், ”யார்ரு, புதுசாருக்கு…?’’ என்று கேட்டார், என் முகத்தை ஒருதடவைக்கு இருதடவை நன்றாகப் பார்த்துவிட்டு.

”நான் வெளியூர் பாட்டி, மெட்ராஸ்’’ என்றேன்.

உடனே அவர், ”ஓ, வெளியூரா…? செரி செரி, வந்து டீத்தண்ணி குடிச்சிட்டு போ’’ என்றார்.

ஆச்சரியமாக இருந்தது. அதுவும் யாரென்று தெரியாத வெளியூர்க்காரன் எனத் தெரிந்தும், தெரிந்தவரை கூப்பிடுவது போல் அத்தனை உரிமையாக வந்து தேநீர் குடிக்கச் சொல்லிவிட்டு, அவர்பாட்டுக்கு என் பதிலுக்கு காத்திராதவராய் வேகமாக வீட்டுக்குள் போய் அடுப்பு பற்றவைத்து தேநீர் வைத்துவிட்டு வந்து வாசல்படியில் நின்று, ”ஏன் இன்னும் அங்கயே நிக்கிற…? வா, வந்து ஒக்காரு… டீத்தண்ணி வச்சிருக்கன்’’ என்றார்.

எதுவும் சொல்லாமல் ‘சரி’ எனப் போய் அங்கிருந்த சிறு திட்டின்மீது உட்கார்ந்தேன். என்னைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தவர், சட்டென்று திரும்பி தூரத்தில் மேட்டுமீது தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண்களை தலையை முன்பக்கமாக நீட்டி உற்றுப் பார்த்துவிட்டு, ”இரு, சுட்டுருக்கும் எடுத்தாறன்’’ எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்று, இரு பழைய கருத்த மண் குவளையில் தேநீர் ஊற்றி எடுத்துவந்து ஒன்றை என்னிடம் தந்துவிட்டு, இன்னொன்றை தான் எடுத்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்தார்.

என்ன பேசுவதென்று தெரியாமல் ஒரு மிடறு தேநீர் குடித்துவிட்டு, ”டீ நல்லாருக்கு பாட்டி’’ என்றேன்.

கேட்டுவிட்டு சிறிதாய் புன்னகைத்தவர், ”எனக்கு தெரியும், அவுரும் அன்னைக்கு அதான் சொன்னாரு’’ என்றார்.

‘பாட்டி யாரைப் பற்றி சொல்கிறார்…? சரி, அவராக சொல்லட்டும்’ என விட்டுவிட்டு மெல்ல சிரித்துக்கொண்டு தலையாட்டினேன்.

சட்டென்று எதையோ மறந்தவர் போல வேகமாக எழுந்து உள்ளே போய் இன்னொரு குவளை நிறைய தேநீர் எடுத்துவந்து பக்கத்திலிருந்த திட்டின் மீது வைத்துவிட்டு, என்னைப் பார்த்து நொடிநேரம் கண்கள் மூடி குழந்தைபோன்று புன்னகைத்தார். நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்.

உடனே அவராக, ”இது அவுருக்கு’’ என்றார்.

திரும்பி சாதாரணமாக பார்ப்பதுபோல் சுற்றிலும் பார்த்தேன். யாரும் வருவதாய் தெரியவில்லை. ‘ஒருவேளை உள்ளே வீட்டுக்குள் யாராவது இருக்கிறார்களா…?’ என நினைத்துக்கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தேன். அங்கும் இல்லை.

‘அப்ப இது யாருக்கா இருக்கும்…? பாட்டி யார அவுருன்னு சொல்றாங்க…?’ எனும் யோசனையோடவே மீதித் தேநீரை  குடித்துவிட்டு, குவளையை கீழே வைக்காமல் கையில் எடுத்துக்கொண்டு அதைக் கழுவ எங்கே தண்ணீர் இருக்கிறதென பார்த்தேன்.

சட்டென்று பாட்டி என்னையும், நான் எதையோ தேடுவதையும் பார்த்துவிட்டு, ”யார தேடற நீ…?’’ என்று கேட்டார்.

அடுத்தநொடியே, ”எதுவுமில்ல பாட்டி’’ என்றேன்.

மெல்லிய சத்தத்தில் என் முகத்தை பார்த்துக்கொண்டு சிரித்தவர், ”எதுவும் இல்லயா… இல்ல, எதாவது இருக்கா…?’’ என்று கேட்டார்.

இனியும் மறைக்கவேண்டாமென, ”இதக் கழுவ தண்ணி எங்க இருக்குன்னு பார்த்தன் பாட்டி’’ என நான் சொல்லி முடிக்கும் முன்னமே கை நீட்டி குவளையை தன்னிடம் தரச் சொன்னார். தயக்கத்தோடு தந்தேன்.

”அவுரும் ஒன்னமாதிரிதான் மொதல்ல தண்ணிய தேடுனாரு. நான் கேட்டதும் என்கிட்ட தந்துட்டாரு’’.

பெரும் குழப்பமாக இருந்தது. ‘இவர் யாரை சொல்கிறார்…? எதற்கு தனியாக ஒரு குவளையில் தேநீர் எடுத்துவந்து வைத்தார்…? அதற்குமுன் நமக்கேன் தேநீர் போட்டுத் தந்தார், நம்மிடம் எதற்கு மூச்சுக்கொரு தடவை அவுரு அவுருன்னு யாரையோ பற்றி சொல்லவேண்டும்…? பேசாமல் கேட்டுவிடுவோமா, இல்லை எதுவும் சொல்லாமல் எழுந்து நாம்பாட்டுக்கு சென்றுவிடுவோமா?’

நான் உள்ளுக்குள் யோசித்துக்கொண்டிருப்பதை எப்படியோ தெரிந்துகொண்டவராய், ”என்ன, எதாவது தெரிஞ்சுக்குணுமா…?’’ என்று கேட்டார்.

ஆச்சரியமாக இருந்தது. சரி, இதுதான் சரியான வாய்ப்பென வேகமாக தலையாட்டி, ”ஆமாம் பாட்டி’’ என்றேன்.

மிதமான சத்தத்தில் சிரித்தவர் பக்கத்திலிருந்த தேநீர்க் குவளையை பார்த்துவிட்டு ஒவ்வொரு சொல்லாக என் கண்களை பார்த்து, ”நாப்பது வருசத்துக்கு முன்னால உன்னமாதிரியே அருவி பார்க்க வந்தவுரு, அதுக்கப்புறம் இங்கேருந்து போகவே இல்ல’’ என்றுவிட்டு எழுந்து நின்று, மேட்டுமேல் நான் போய் பார்த்துவந்த அருவியை எக்கி பார்த்துக்கொண்டு சொன்னார்.

”உன்ன மாதிரிதான் அவுரும் நரம்பாட்டம் இருப்பாரு. ஆனா ரொம்ப பெரிய உழப்பாளி. இந்த கண்ணுக்கெட்டன தூரம் வரைக்கும் அவுரோட வேர்வ வாசம் கலந்திருக்கு. அதுதான் அவுரு போனதுக்கப்புறமும் என்ன மூச்சோட  வச்சிருக்கு’’.

இதை அவர் சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த ஆறிப்போன தேநீர்க் குவளையை எடுத்துப்போய் எதிரிலிருந்த தேயிலை தோட்டத்தில் ஊற்றிவிட்டு வந்ததும் நான் எழுந்து நின்றேன்.

என்னைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தவர், ”நீ இங்கே எதுக்கு வந்தியோ, அதுதான் அவுரும் நானும் சேர கார்ணமா இருந்துச்சு. அதான் அதப் பார்க்க வந்த உனக்கு என் கையால ஒரு டீத்தண்ணி போட்டுத்தரணும்னு ஓடியாந்தன்’’ என்றார்.

கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் எனக்கு புரிய ஆரம்பித்தது. பாட்டி ஒரு கோர்வையாக தான் சொல்ல வந்ததை சொல்லவில்லை என்றாலும், சொல்ல நினைத்ததை அல்லது சொல்ல வேண்டியதை போதும் என்ற அளவுக்கு சொல்லிவிட்டார் என்றே தோன்றியது.

மெல்ல சிரித்துவிட்டு, ”சரி பாட்டி, நான் போயிட்டு வர்றன்’’ என்றேன்.

‘சரி’ என தலையாட்டியவர் எதையோ நினைத்தவராய், ”இரு வர்றன்’’ எனச் சொல்லிவிட்டு வேகமாக தான் கையில் வைத்திருந்த குவளையோடு சேர்த்து நாங்கள் பருகிய குவளையையும் எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு வந்து, என்னையும், நான் சென்றுவந்த அருவியையும், போகப் போகும் வழியையும் பார்த்துவிட்டு கேட்டார்.

”செரி, நீ போய் பார்த்துட்டு வந்தியே அருவி, அதோட பேரென்னன்னு உனக்கு தெரியுமா…?’’

உடனே ‘தெரியாது’ என்பதுபோல் தலையாட்டினேன்.

மெலிதாகச் சிரித்தவர், ”அப்போ நீயே போறதுக்கு முன்னாடி அதுக்கொரு பேரு வச்சுட்டு போ. ஆனா என்கிட்ட அத சொல்லக்கூடாது’’ என்றார்.

‘ஏன், எதற்கென’ எதுவும் கேட்கவில்லை. ”சரி, பாட்டி’’ என தலையாட்டிவிட்டு, மனத்திற்குள் அவ்வருவிக்கு அவரைபோன்று அழகானதொரு பெயரிட்டு, ‘வச்சிட்டன் பாட்டி’ என புன்னகையால் சொல்லிவிட்டு, அங்கிருந்து மெல்ல நடந்து மேடேறி சாலைக்கு வந்து இடது பக்கமாக செல்வதற்கு பதிலாக வலதுபக்கமாக திரும்பி, ‘நாம பார்க்க வேண்டிய அருவி இதுதான், பார்த்தாச்சு’ என வந்த வழியாகவே அரவேனு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆம்!

சிறுவயதில் என்றோ எப்படியோ வீட்டிலிருந்த ஆடு மாடுகளுக்கும், மரஞ்செடிகொடிகளுக்கும் பெயர் வைப்பதில் ஆரம்பித்த இப்பெயரிடுபழக்கம்… இப்பயணத்தில் கண்ட அருவி கடந்து, இதோ இந்நாள் வரைக்கும் என்னோடு இருந்து வருகிறது.

‘எது ஒண்ணுக்கும் நாம பேரு வச்சாதான், அது நம்முளோட ஒண்ணா என்னிக்கும் நெருக்கமாருக்கும்’ என்பார் ஐயா.

நிச்சயம் இப்பழக்கம் நான் கண்டுவிட்டு வந்த பாட்டிக்கும், அவரின் அவுருக்கும் இருந்திருக்கும். அதனால்தான் அவரின் அவுர்போல் அங்கே வந்திருந்த எனக்கு, அவுருக்கு தந்ததுபோல் தேநீர் போட்டுத் தந்து, அவுரும் அவரும் சேரக் காரணமாக இருந்த அருவிக்கு என்னை பெயரிடச் சொல்லியிருக்கிறார். ஆம்!

அவ்வருவிக்கு அவுரும் அவரும் சேர்ந்து அல்லது அவர் மட்டும் தனியாக ஒரு பெயரிட்டிருக்கலாம். ஒருவேளை அப்பெயரும் நானிட்ட பெயரும் ஒன்றாகக்கூட இருக்கலாம்.

மெல்லத் திரும்பி பள்ளத்திலிருந்த வீட்டின் முன்னால் நின்றிருந்த பாட்டியையும், அவரைத் தாண்டி மேட்டுமேல் இருந்த சிற்றருவியையும் பார்த்துவிட்டு, அவ்வருவிக்கு நானிட்ட பெயரை உள்குரலில் எனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொல்லிக்கொண்டு நடந்தேன்.

ஆம், நிச்சயம் அது அருவியின் மெல்லொலியோடு கலந்து அவருக்கும், அவரின் அவுருக்கும் கேட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.

*

திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

திருவாளர் ஊர்சுற்றி – 11 : மயிலிறகீசன்

திருவாளர் ஊர்சுற்றி – 12 : எக்கரணை

திருவாளர் ஊர்சுற்றி – 13 : கிறுக்குப்பயணம்

திருவாளர் ஊர்சுற்றி – 14 : தடக்தடக்வண்டி

திருவாளர் ஊர்சுற்றி – 15 : செங்கோடு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=