திருவாளர் ஊர்சுற்றி – 15 : செங்கோடு

திருவாளர் ஊர்சுற்றி – 14 : தடக்தடக்வண்டி

அடிக்கடி ஒன்று தோன்றுவதுண்டு. அதிலும் குறிப்பாக பயணங்களின்போது. ‘ஏன் இப்படி சில விஷயம் மட்டும் அதுவா நடக்குது? அதுவும் நம்மளக் கொண்டு நடத்திக்கிது?’.

நினைக்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். அப்படியான இருநிகழ்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஒரே நாளில் ஒரே இடத்தில் நிகழ்ந்தது. அதுவும் சற்றும் எதிர்பாராத விதமாக. ஆம்!

என் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’க்கு சிகரம் சிற்றிதழ் நடத்திய இலக்கியப் போட்டியில் கட்டுரை பிரிவில் முதல் பரிசு அறிவித்திருந்தார்கள். அதை பெறுவதற்காக முன்தினம் காலையிலேயே சென்னையிலிருந்து ரயிலில் கிளம்பி சேலம் சென்று, அங்கிருந்து நாமக்கல் போய் கோட்டை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, அருகிலிருக்கும் பரமத்திவேலூரில் உள்ள தம்பி ஒருவர் வீட்டில் இரவு தங்கிவிட்டு, அடுத்தநாள் காலையில் நடந்த விழாவில் பங்கேற்று பரிசு பெற்றுக்கொண்டு, ‘கோடு’ என பழந்தமிழ் இலக்கியங்கள் மலையை குறித்த சொல்லை இப்போதும் தம்பெயரில் தாங்கியிருக்கும் திருச்செங்கோடு மலைமீதிருக்கும் அர்த்தநாரீசுவரரை வணங்கிவிட்டு வருவதற்காக பேருந்தில் புறப்பட்டுப் போனேன்.

பலதடவை செல்ல நினைத்த கோயில். அதுவும் குறிப்பாக எல்லா கோயில்களிலும் சிவபெருமான் லிங்க மூர்த்தமாக இருக்க, சிதம்பரம் (நடராஜர்), திருவாரூருக்கு (தியாகராஜர்) அடுத்தபடியாக இங்கே அர்த்தநாரீசுவரராக, அதாவது பாதியுடம்பு குழை அணிந்த சிவனாகவும், மீதப்பாதியுடம்பு தோடணிந்த பார்வதியாகவும் மாதொருபாகனாக இருப்பதை பார்ப்பதற்காகவே போக வேண்டுமென நினைத்திருக்கிறேன்.

கூடவே, இன்னொரு காரணமான செங்கோடு என்னும் பெயர் தந்த ஈர்ப்பு. செங்குத்தான மலை அல்லது செம்மையான மலை.  

‘அதெப்படி மலை போய் சிவப்பாக இருக்கும்?’ எனும் கேள்வியோடவே பேருந்து நடத்துநரிடம் ‘கோயிலுக்குச் செல்ல எங்கே இறங்கவேண்டும்?’ எனக் கேட்டு அவர் சொன்ன இடத்தில் இறங்கி, அங்கிருந்து நடந்து மலையடிவாரத்துக்கு வந்தேன்.

ஏற்கனவே மலைமேல் இருக்கும் கோயிலின் ஒளிப்படங்கள் ஒன்றிரண்டை இணையத்தில் கண்டிருக்கிறேன். பார்த்த நண்பரொருவர் சொல்லவும் கேட்டிருக்கிறேன். எனினும் அதற்கு அப்படியே நேர்மாறாக இருப்பதுபோல் தோன்றியது.

”மலமேல பஸ்ல கூட போகலாம்” என்றார்கள். ‘எதுக்கு பஸ்லலாம் போயிக்கிட்டு… வேணும்னா போகும்போது நடந்து ஏறிட்டு, திரும்ப வரும்போது பஸ்ல வந்துக்கலாம்’ என நினைத்துக்கொண்டு மலையேற ஆரம்பித்தேன்.

எங்களூர் அரசங்கல் மலை தொடங்கி மலேசியாவின் புகழ்பெற்ற முருகன் கோயிலிருக்கும் பத்துமலை வரைக்கும் எத்தனையோ மலைகளை பார்த்திருக்கிறேன்; ஏறியிருக்கிறேன். ஆனால் இம்மலை அவைகளிலிருந்து வேறுபட்டதாய் தெரிந்தது.

இத்தனைக்கும் கோயில் பாதி மலையில்தான் இருந்தது. ஆனால் என் மனமோ மலையை கண்டதும் கோயிலை தாண்டி, அதற்கும் மேலாக நீண்டு உயர்ந்திருந்த உச்சிமலை மீது சென்றது.

மெல்ல ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டு, வழியில் இருந்த  மண்டபங்களையும் சிறுசிறு கோயில்களையும் ரசித்துக்கொண்டு,

‘கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர்’

‘மலையா ரிளவாழைக் குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர்’

‘கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர்’

‘குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர்’

‘கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர்’

‘கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர்’

‘கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர்’

‘வரிக்குயில்கள் கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர்’

என திருஞானசம்பந்தர் கொடிமாடச் செங்குன்றூர் என்னும் திருச்செங்கோடை தம் தேவாரத்தில் [முதலாம் திருமுறையில்] குறிப்பிட்டுப் பாடிய வரிகளையெல்லாம் உள்ளுக்குள் அசைபோட்டு காட்சியாக விரித்துப் பார்த்துக்கொண்டு போனேன்.

சட்டென ஓரிடத்தில் கூட்டமாக ஆங்காங்கே உட்கார்ந்து பொங்கலிட்டுக்கொண்டும், இட்ட பொங்கலை வரிசையாகவும் வட்டமாகவும் உட்கார்ந்து உண்டுகொண்டும் இருந்தார்கள்.

‘எதுக்காக மலமேல இருக்க கோயில விட்டுட்டு இங்க பொங்கல் வைக்கிறாங்க?’ என்ற கேள்வியுடன் அவர்களை கடக்க, அங்கே நீண்டு விரிந்திரிந்த பெரும் பாறையில் அதுவும் ஏறிப் போகும் வழியோரத்தில் பேருருகொண்ட பாம்பின் வடிவம் ஒன்று செதுக்கப்பட்டிருப்பதையும், அதை கூட்டமாக பலரும் நின்று வழிபட்டுக் கொண்டிருந்ததையும் கண்டதும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது.

மெல்ல அருகில் சென்று பார்த்தேன். அத்தனை நீளமான (எப்படியும் இருபதடி இருக்கும்), அழகான பாறையில் செதுக்கப்பட்ட பாம்புருவை வேறு எங்குமே நான் கண்டதில்லை. ஒருபக்கம் அதிர்வாகவும் இன்னொரு பக்கம் ஈர்ப்பாகவும் இருந்தது.

நின்று சிலநொடி அதன் முழு உருவத்தையும் கண்டு ரசித்து வணங்கிவிட்டு,  அங்கிருந்து திரும்பி கீழே பொங்கலிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும், மலையடிவாரத்தில் தெரிந்த மற்றொரு கோயில் கோபுரத்தையும் ஒருதடவை பார்த்துவிட்டு மேல்நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கோடு என்னும் சொல்லுக்கு என்னதான் வளைவு, நடுநிலை நீங்குகை, யானை பன்றிகளின் தந்தம், விலங்கின் கொம்பு,  ஊது கொம்பு, நீர்விசுங்கொம்பு, யாழ்த்தண்டு, ‘கெ’ ‘கோ’ முதலியவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு, பிறைமதி, சங்கு, குலை, மயிர்முடி, மேட்டுநிலம், வரி, ஆட்டம் முதலியவற்றுக்காக வகுத்த தானம், நீர்க்கரை, குளம், காலவட்டம், வரம்பு, ஆடைக்கரை, முனை, பக்கம், அரணிருக்கை என எத்தனையோ பொருள்களை அகராதி பட்டியலிட்டாலும், அவற்றில் மலையையும், மலைச்சிகரத்தையும் குறிப்பதுதான் அத்தனை அழகாகவும் பொருத்தமாகவும் இருப்பதாகத் தோன்றும்.

‘பொற் கோட்டு இமயமும், பொதியமும்’  (புறம் – 2)

‘குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’ (சிலப்பதிகாரம் – 11)

‘செங்கோடு பாய்துமே யென்றாள்மன்’ (நாலடியார் – 372)

‘சீர்கெழு செந்திலும் செங்கோடும்’ (சிலப்பதிகாரம் – 24)

வழியெங்கும் இருந்த மண்டபங்களில் அத்தனை நேர்த்தியான சிற்பங்கள். அங்கங்கே சிலநிமிடம் நின்று ரசித்துவிட்டு, ஈரிடங்களில் ஓய்வாக சற்றுநேரம் உட்கார்ந்துவிட்டு, அறுபதாம் படி தாண்டி மலையெங்கும் இருந்த பாம்புருக்களை கண்டு, ‘ஏன் இந்த மலையில மட்டும் இவ்ளோ பாம்புங்கள செதுக்கி வச்சிருக்காங்க?’ என்று உள்ளுள் கேட்டுக்கொண்டு, எதிர்வந்தவர்களையும், கீழிருந்த பேரூரையும், தூரத்தில் தெரிந்த மலைகளையும் பார்த்துக்கொண்டு, அடுத்த அரைமணி நேரத்தில் மேலிருந்த கோயிலை அடைந்தேன்.

உண்மையில் நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு வந்த கோயிலே அங்கே இல்லை. முற்றிலும் வேறுவிதமாக அதுவும் ஒருபக்கம் முருகனுக்கும், இன்னொரு பக்கம் சிவனுக்கும், அதன் மற்றொரு பக்கம் பெருமாளுக்குமென ஒரே கோயிலுள் முக்கோயில்கள் அமைத்திருந்தார்கள்.

எங்கே சென்று எதை முதலில் பார்க்கவேண்டும் எனத் தெரியாமல் குரங்குகள் கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் தாவி விளையாடிக்கொண்டிருந்த மிக அழகான கலைவேலைப்பாடுகள் மிக்க ராஜகோபுரத்துள் நுழைந்து போய் இடது பக்கமாக திரும்பி அங்கிருந்த கொடிமரத்து முன்னால் நின்று வணங்கிவிட்டு, உள்சென்று செங்கோட்டு வேலவனை தரிசித்துவிட்டு, அதன் பின்பக்கமாக இருந்த அர்த்தநாரீசுவரரை பார்க்கப் போனேன்.

சிவனுக்கு எத்தனை வடிவங்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மையான வடிவமாக நடராஜரை எல்லோரும் சொல்வார்கள். எனினும் அர்த்தநாரீசுவரர் வடிவம் அதனை விட கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகத் தோன்றும். காரணம், சிவன் நடராஜர் வடிவத்தில் தன்னுடலில் பாதியை தனது நாரிக்கு, அதாவது தன்னவளான சிவகாமிக்கு அளித்திருந்தாலும் பெயரில் அளிக்காமல் நடராஜர், கூத்தர், சபாபதி, சிற்றம்பலவன் என தன்னை மட்டுமே பிரதானப்படுத்தியிருப்பார். ஆனால் அர்த்தநாரீசுவரர் வடிவத்திலோ உடலில் பாதியை தந்ததுபோல் பெயரிலும் தந்து மாதொருபாகனாக இருப்பார்.

[அர்த்த என்றால் பாதி, நாரி என்றால் பெண். பாதியுடலை தன் நாரிக்கு தந்த ஈசுவரர், அர்த்தநாரீசுவரர்.]

கோயிலுள் சென்று கருவறையில் இருந்த அர்த்தநாரீசுவரரை கண்டதும் எத்தனை ஆர்வத்தோடு வந்தேனோ அதைவிட அதிகமான பேரதிர்ச்சியை தந்தது அவ்வடிவம். ஆம், நான் நினைத்த வடிவம் அது அல்ல.

ஆண் பாதி பெண் பாதி கலந்த வடிவம் என்றார்கள். ஆனால் அங்கே அப்படியோர் வடிவமே இல்லை. அல்லது இருந்த வடிவம் எனக்கு அப்படியாகத் தெரியவில்லை. எனினும் அலங்காரம் மட்டும், அதிலும் குறிப்பாக உடுத்தியிருந்த வேட்டியும் புடவையும் பார்க்க மாதொருபாகனாகக் காட்டியது.

திரும்பத் திரும்ப பார்த்தேன். ம்…ஹூம். கொஞ்சம் கூட  பிடிபடவில்லை. வெளியிலிருந்த உற்சவர் வடிவத்தை பார்த்தேன். நடராஜர் வடிவம் போன்று மிக நேர்த்தியாக கண்டதும் உள்வாங்கும்படி இருந்தது. ஆனால் கருவறையில் இருந்த மூலவர் மட்டும் பார்க்கப் பார்க்கப் பிடிபடாததாய், இன்னும் இன்னும் கேள்விகளை எழுப்பக்கூடியதாய் இருந்தது.

‘என்ன செய்யலாம், பேசாமல் இங்கிருக்கும் யாரிடமாவது கேட்கலாமா?’ என நினைத்தேன். உடனே, ‘கேட்டால் மட்டும் என்ன பெரிதாக சொல்லிவிடுவார்கள்?’ எனத் தோன்றியது. ‘சரி, கோயிலை போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் பார்ப்போம்’ எனச் சென்று நன்றாக சுற்றிப் பார்த்துவிட்டு வந்து பார்த்தேன். இப்போதும் அதே கதைதான்.

‘உருவம் போன்றிருந்த அருவம், அருவமான உருவம், அருவுருவம்’ என அங்கிருந்த அர்த்தநாரீசுவரர் வடிவத்தை எனக்குள் ஒரு வரையறை படுத்திக்கொண்டு, வெளியிலிருந்த ஆமை மண்டபத்தையும், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆதிகேசவப் பெருமாளையும், அர்த்தநாரீசுவரி என்னும் பாகம்பிரியாளையும், தனியாக வைக்கபட்டிருந்த நடராஜரையும் பார்த்துவிட்டு வெளியே வந்து உச்சிமலைக்கு செல்லும் வழியை கண்டுபிடித்து ஏற ஆரம்பித்தேன்.

சற்று தூரம் வரைக்கும் நல்ல பாதைபோல் சென்ற வழி, அதன்பின் ஒங்கான பாதையில்லாமல் ஆனால் பாதுகாப்புக்கு பிடித்துக்கொண்டு ஏற ஏதுவாக நெடுகிலும் இரும்புப் பழுப்பு பொருத்தப்பட்டு, நடுநடுவில் பாறையை செதுக்கி படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது.

இருந்தும் ஓரிருவர் தவிர யாரும் ஏறுவதாகத் தெரியவில்லை. அவர்களும் பாதியிலேயே நின்றுவிட்டதால் நான் மட்டுமே ஏறிக்கொண்டிருப்பதாகப் பட்டது.

‘சரி, நாம வேகமா ஏறிப்போய் பார்த்துட்டு… சீக்கிரம் எறங்கி வந்துடுவோம்’ என நினைத்துக்கொண்டு மலையுச்சி நோக்கி செல்லச் செல்ல அம்மலையே வித்தியாசமாக, அதுவும் ஒருவித செந்தன்மையுடனும் செங்குத்தாகவும் இருக்கக் கண்டு, ‘ஓ, இதனாலதான் இந்த மலைக்கு செங்கோடு’ன்னு பேரு வச்சிருக்காங்களா’ என வியந்துகொண்டு, ஏறியும் இறங்கியும் வளைந்தும் நேராகவும், மொத்தத்தில் ஒருவித ராட்சத தன்மையுடன் கரணம் தப்பினால் மரணம் என்பார்களே, அவ்வாறிருந்த மலையுச்சியை அடைந்தேன்.

நீண்டு பாம்பு போல் விரிந்த மலை. அந்திச் சூரியனின் செவ்வொளி பட்டு நெருப்பு போன்று தகதகத்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது. கூடவே, கடும் காற்று வேறு. விட்டால் அப்படியே தூக்கிப் போய் கீழே போட்டுவிடும் அளவுக்கு வீசிக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு மலையுச்சியில் ஏறி நிற்கும்போதும் கனவுலகில் நிற்பதுபோல் இருக்கும். ஆனால் இம்மலையிலோ அவ்வெண்ணம் சற்றுமாறி வானுலகில் நிற்பதாய் தோன்றியது. காரணம் மலையின் உயரமும் வடிவமும் வழியமைப்பும். ஆம்!

சில மலைகள் மட்டும்தான் இதுபோன்ற பிரமிப்பையும் பரவசத்தையும் ஒருங்கு தருவதுண்டு. அவ்வகையில் [எங்கள்] திருவண்ணாமலை மலைக்கு அடுத்தபடியாக இம்மலையினை எப்போதும் சொல்வேன்.

உச்சி மலையில் சிறு கோயிலொன்று இருந்தது. மிகப் பழமையானதாக இருக்கவேண்டும். அத்தனை அழகான இடத்தில் கட்டப்பட்ட ஆர்ப்பாட்டமில்லாத கோயில். மெல்ல அதன் முன்னால் நின்று ஏறிவந்த வழிகளையும், கண்ட அர்த்தநாரீசுவரர் வடிவத்தையும், நின்றிருக்கும் மலையுச்சியையும் நினைத்துக்கொண்டு அங்கிருந்த பிள்ளையாரை வணங்கிவிட்டு சுற்றிலும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் யாரும் இல்லை. ஆம்!

அப்படித்தான் முதலில் நினைத்தேன். ஆனால் அக்கோயிலை சுற்றிப் பார்க்கலாம், பின்பக்கமாக இருந்து ஒளிப்படம் எடுக்கலாம் எனப் போய் பார்த்த எனக்கு, அங்கே ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு பெரியவர், பார்க்க சாமியார் போல இருந்தார். பின்பக்க சுவரோரமாக இருந்த சிறுபள்ளத்தில் பாறையில் சாய்ந்து படுத்துக்கொண்டிருந்தார். ‘இவர் ஏன் இங்கு வந்து படுத்திருக்கார், அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டப்போகுது’ என அவரை உற்றுப் பார்க்க, ‘அவர் படுத்திருக்கவில்லை, மயங்கி விழுந்திருக்கிறார்’ எனப் புரிந்தது. அதுவும் அவர் கையிலும் காலிலும் இருந்த காயங்களை வைத்தே முடிவுசெய்தேன்.

உடனே அவரருகில் போய் ‘ஐயா… ஐயா…’ எனக் கூப்பிட்டுப் பார்த்தேன். எந்தவோர் அசைவும் இல்லை. ஆனால் உதடுகள் மட்டும் லேசாக அசைவுற்று எதையோ சொல்வதுபோல இருந்தது.

இன்னும் சத்தமாகக் கூப்பிட்டுப் பார்த்துவிட்டு, பின் அவரைத் தொட்டு ‘ஐயா… ஐயா…’ என்றேன். லேசாகக் கண் திறந்து பார்த்தவர், தன் வறண்டு வெடித்துப் போயிருந்த உதடுகளை இன்னும் வேகமாக அசைத்துக் காட்டி ‘தண்ணி தண்ணி’ என்றார்.

உடனே புரிந்துகொண்டவனாய் பின்பக்கமாக மாட்டியிருந்த என் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினேன். கை நீட்டி அவரால் அதை வாங்கக் கூட முடியவில்லை. பின் வாயருகில் கொண்டுபோய் நானே சாய்த்துக் குடிப்பாட்டினேன்.

‘மொட மொட’வென கன்னம் கழித்து மார்பெங்கும் வழிந்தோட பருகியவர் மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து, ‘தான் மலையேறி வந்த அசதியில் தாகம் எடுத்து மயங்கி அங்கே விழுந்துவிட்டதாகவும், நல்லவேளை பக்கத்திலிருந்த பெரிய பள்ளத்தில் விழவில்லை என்றும், தயவுசெய்து தன்னை கூட்டிப் போய் கோயில் கோபுரத்தருகில் விட்டுவிடுமாறும், தான் இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் இறங்கி கீழே சென்றுவிடுவதாகவும்’ சொல்லிவிட்டு,

”மதியானத்துலருந்து இங்கேதான் விழுந்து கிடக்கிறேன். ஒருத்தரும் வந்து எட்டிப் பார்க்கல. வர்றவங்க சத்தம்லாம் காதுல கேட்குது. ஆனா என்னால கொரல் கொடுத்து அவுங்கள கூப்புட முடியல. நீ மட்டும் பாக்கலைன்னா நான் இங்கயே செத்துதான் போயிருப்பேன். அந்த நாரீசன்தான் ஒன்ன இங்கே அனுப்பி வச்சிருக்கான்’’ என்று கண்கலங்கி அழுதுகொண்டு கையெடுத்து கும்பிட்டார்.

என்ன சொல்வதென்று தெரியாமல், ”சரி, வாங்கய்யா… உங்கள பத்தரமா கோயில்கிட்ட விட்டுட்றன்’’ எனச் சொல்லி அவரை அங்கிருந்து மெல்ல கை பிடித்து நடத்திக் கூட்டிக்கொண்டு வந்து கோயில் கோபுரத்தருகில் விட்டுவிட்டு, ”சரிங்கய்யா, நான் ஈரோடு போய் ரயிலேறனும். இப்பவே நேரம் ஆய்டிச்சு. பாத்து பத்தரமா இருங்க, நான் போயிட்டு வர்றன்’’ எனச் சொல்லிவிட்டு, பையிலிருந்த பிஸ்கேட் பாக்கெட்டையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து அவரிடம் தந்துவிட்டு முன்பக்கமாக ஓடிவந்து பார்த்தேன்.

கடைகள் எல்லாம் மூடப்பட்டு ஓரிருவர் மட்டுமே கண்ணில் பட்டார்கள். மூச்சுவாங்க அவர்களிடம் கேட்டேன், ”கடைசி பஸ் இந்நேரம் போயிருக்கும். எதுக்கும் அங்கே கீழ போய் பாருங்க’’ என்றார்கள். போய் பார்த்தேன். இல்லை.

‘எவ்வளவு வேகமாக இறங்கிப்போனாலும் ரயிலை பிடிக்கமுடியாது’ எனத் தோன்றியது. என்ன செய்வதெனத் தெரியாமல் கோயில் நோக்கி வேகமாக ஓடிவந்தேன்.

இவ்வளவு நேரம் வெளிச்சமாக இருந்த வானம் சட்டென நொடியில் பகல் களைந்து இரவுக்கு மாறிவிட்டதாய் தோன்றியது.

கோயிலை பூட்டிவிட்டு வந்த சிவாச்சாரியாரில் ஒருவர் என்னை பார்த்துவிட்டு ‘சாமி பார்க்கத்தான் வந்திருக்கிறேன்’ என நினைத்துக்கொண்டு, ”கோயில் நடை சாத்தியாச்சுங்களே… திரும்பவும் நாளைக்கு காலையிலதான் நடைதிறப்போம்” என்றார்.

உடனே நான், ”இல்ல, நான் சாமிய முன்னாடியே பார்த்துட்டன். கீழ போற கடைசி பஸ்ச விட்டுட்டன். ஒன்பது மணிக்கு ஈரோட்ல சென்னைக்கு ட்ரெயின் ஏறனும். நடந்துபோய் பஸ் புடிச்சிப்போனா ரயில புடிக்கமுடியாது. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம ஓடிவந்தன்’’ என்றேன்.

யோசிக்கவெல்லாம் இல்லை. சட்டென பின்னாலிருந்த கோயிலை திரும்பிப் பார்த்துவிட்டு, ”சரி, என் கூட வாங்கோ. நான் கீழே மலையடில விட்டுடறேன்… அங்கேயிருந்து ஆட்டோ புடிச்சுப் போய் பஸ்ல போனீங்கனா, ட்ரெயின் புடிச்சிடலாம்’’ என்றார்.

இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘அப்பாடா’ என அவரது இரு சக்கர வாகனத்தில் போய் உட்கார்ந்துகொண்டு கீழே இறங்கி வருவதற்குள் இருவரும் நண்பராகிவிட்டோம்.  மலையடிவாரத்தில் விடுவதாக சொன்னவர், பேருந்து நிலையத்திற்கே கூட்டிவந்து ஈரோடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர்தான் நான் அர்த்தநாரீசுவரரை வணங்கச் சென்றபோது  அடியார்களுக்குக் கண்ட சுரப்பிணி நீங்க ஞானசம்பந்தர் இங்கே வந்தபோது பாடிய ‘அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு’ எனும் புகழ்பெற்ற பதிகத்தை பாடி தீபாராதனை காட்டிவிட்டு வந்து திருநீறு தந்தவர்.

சட்டென்று அவரிடம் அவ்வடிவம் எனக்கு பிடிபடாததை  சொன்னேன். மெல்ல இதழசைத்து புன்னகைத்தவர், ”அடுத்து எப்போ முடியுமோ வாங்கோ. நான் இருப்பேன், அப்படி இல்லன்னா நம்ம ஆட்கள்தான் இருப்பாங்கோ. உங்களை சாமி பக்கத்துலே கூட்டிட்டிப் போய் உட்கார வைக்கிறேன். நல்லா ஆசை தீர எவ்ளோநேரம் வேணுமோ பாருங்க, நிச்சயமா பிடிபடும்’’ என்றார்.

மகிழ்வோடு புன்னகைத்து, ”கண்டிப்பா சீக்கிரமே வருவேன்’’ என்று சொல்லிவிட்டு ‘நன்றி’ சொன்னேன்.

மெல்ல பேருந்து புறப்பட்டு நிலையத்திலிருந்து வெளியே வந்தது. சட்டெனத் திரும்பி இருளுக்குள் மின்விளக்குகளால் மலைமேல் ஒளிர்ந்துகொண்டிருந்த கோயிலை பார்த்துவிட்டு கண்கள்மூடி, அடுத்த தடவை நான் திருச்செங்கோடு வந்து அர்த்தநாரீசுவரரை மிகப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கப் போவதையும், பிடிபடாத அவ்வடிவம் அப்போதெனக்கு பிடிபடப்போவதையும் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன்.

கூடவே, மலையுச்சியில் கண்ட பெரியவரையும், கீழே கூட்டிவந்து பேருந்தேற்றி விட்டுவிட்டுப் போன புது நண்பரையும். ஆம்!

சில விஷயம் அதுவாக நடப்பதுண்டு. அதுவும் நம்மைக் கொண்டு நடத்திக் கொள்வதுண்டு. அவ்வகையில் இத்திருச்செங்கோடு பயணத்தில் நிகழ்ந்த இவ்விரு சம்வங்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டேன். வேறென்ன சொல்ல?!

*

திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

திருவாளர் ஊர்சுற்றி – 11 : மயிலிறகீசன்

திருவாளர் ஊர்சுற்றி – 12 : எக்கரணை

திருவாளர் ஊர்சுற்றி – 13 : கிறுக்குப்பயணம்

திருவாளர் ஊர்சுற்றி – 14 : தடக்தடக்வண்டி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=