திருவாளர் ஊர்சுற்றி – 14 : தடக்தடக்வண்டி

திருவாளர் ஊர்சுற்றி – 13 : கிறுக்குப்பயணம்
சிறுவனாக இருக்கும்போது எங்கள் கிராமத்துக்கு வந்து போகும் ஒரே பச்சை நிற அரசுப் பேருந்தினை ஓடிப்போய் சாலையோரமாக நின்றுகொண்டு பார்க்கும்போதெல்லாம், ‘எப்டிதான் இதுக்குள்ள ஒக்காந்துகினு திர்ணாமல வரக்கும் போறாங்களோ…?’ எனத் தோன்றும்.
கொஞ்சம் வளர்ந்த பிறகு முதல்தடவை ரயிலை பார்த்தபோது இதே கேள்வி சற்று மாறி வேறுவிதமாகத் தோன்றியது, ‘எப்டிதான் இந்த ஓடற ரயிலுக்குள்ளயே சாப்ட்டு, தூங்கி ஏன்ச்சி நாளுகணக்கா போவாங்களோ…?’
[அதன்பின் விமானம், கப்பல் என என் கேள்வி விரிந்து பெருகியது தனிக்கதை.]
பயணங்களில் ரயில் பயணங்களுக்கு எப்போதும் தனித்ததோர் இடமுண்டு என்பேன். அதுவும் தொடர்ந்து நான்கு நாட்கள் ஒரு ரயிலில் பயணித்துப்போய் இறங்கியபோது இவ்வெண்ணம் இன்னும் அதிகமானதை நினைத்தால் இப்போதும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆம்!
அன்றைய தினம் முன்னிரவு 10.30 மணிக்கு சென்னை – எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலம் திப்ருகர் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக சென்னையின் மூன்று வெவ்வேறு பக்கங்களிலிருந்து நானும், ஓர் அக்காவும், ஒரு தம்பியும் புறப்பட்டுப் போனோம்.
சென்று ரயிலில் எங்களுக்கான பெட்டியை கண்டுபிடித்து ஏறும் வரைக்கும் இருந்த, ‘எப்படி நாலு நாளைக்கு ஒரு பெட்டிக்குள்ளயே இருக்கப்போறோம்…?’ எனும் கேள்வி, பெட்டிக்குள் ஏறியதும் மறைந்துபோய் அல்லது ஒடுங்கிப்போய் பேரதிர்ச்சியாக மாறியது.
அதுவும் முன்பதிவு செய்திருந்த எங்கள் பெட்டிக்குள் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் இருப்பதுபோல் நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு கூட்டமாகயிருந்தது. முழுக்க முழுக்க வடமாநிலத்தவர். அதிலும் குறிப்பாக பீகார், ஒரிசாவினர். கண்டதும் அதிர்ந்துபோய் பெட்டி மாறி ஏறிவிட்டதாய் நினைத்து இறங்கிப் பார்த்தோம். சரியாகத்தான் இருந்தது.
இத்தனைக்கும் அந்தப் பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய முன்பதிவாளர்களின் பெயர்களை வெளியில் ஒட்டியிருந்தார்கள். எண்ணிப் பார்த்தால் எழுபதிலிருந்து எண்பது பேர்தான் இருப்பார்கள். ஆனாலும் அதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் ஆட்டு மந்தைபோல் ஏறிக்கொண்டு, இருக்கைகளில் மட்டுமல்லாமல் சந்து பொந்து என ஓர் இடம் கூட விடாமல் நெருக்கியடித்து உட்கார்ந்திருந்தார்கள்.
”வழிவிட சொல்லி ஒதுங்கி உள்ள போங்க வடிவரசு… அவங்க அப்படித்தான் வந்து உட்கார்ந்திருப்பாங்க’’ என்றார் உடனிருந்த அக்கா.
மெல்ல வழிவிடச் சொல்லி ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்துப் போய் எங்கள் இருக்கைகளை தேடிக் கண்டுபிடித்து அதில் உட்கார்ந்திருந்தவர்களிடம், ”இது எங்க இடம்’’ என முதலில் தமிழிலும், பின் ஆங்கிலத்திலும் சொன்னோம். கேட்டும் கேட்காதவர்கள் போல அவர்கள் பாட்டுக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு திரும்பி வேறு எங்கேயோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.
மறுபடியும் அவர்களை கூப்பிட்டு சொன்னதையே எங்களுக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் சொன்னோம். இம்முறை கொஞ்சம் காதுகொடுத்து கேட்டவர்கள், ‘அதுக்காகலாம் உட்கார்ந்திருக்க இடத்தை விட்டுத்தர முடியாது, போ போ…’ எனும் தோரணையில் எங்களை பார்த்துவிட்டு அதேபோல் திரும்பிக் கொண்டார்கள்.
சட்டெனக் கோபமுற்ற அக்கா இத்தடவை சத்தமாக, ”இப்போ எங்க சீட்ட மட்டும் விடலைன்னா டி.டி.ஆர்-கிட்டயே சொல்வோம். இல்லனா வெளியே நிற்கிற போலீஸ கூப்பிட்டு சொல்வோம்’’ என்றார்.
உடனே அவர்களில் ஒருவன் மட்டும் எழுந்து, ”நீங்க உட்காருங்க அக்கா’’ என்று இந்தியில் சொல்லிவிட்டு கீழே சீட்டுக்கு அடியில் வைத்திருந்த தன் அழுக்குப் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேறு இடத்துக்கு போய்விட்டான்.
மறுபடியும் அங்கிருந்தவர்களிடம் அதேபோல் சத்தம் போட, ஒவ்வொருவராக எழுந்து எங்கள் இருக்கைகளை விட்டார்கள். அதுவும் அவர்களது சீட்டை ஏதோ நாங்கள் ஏமாற்றி மிரட்டிப் பிடுங்குவதுபோல் எங்களை திட்டி அடிக்காத குறையாக பார்த்து முறைத்துக்கொண்டு.
இத்தனைக்கும் எங்கள் மூவருக்கும் தனித்தனி படுக்கை சீட்டாக முன்பதிவு செய்திருந்தோம். கடைசி நேர நெருக்கடி காரணமாக ஒருவருக்கு மட்டும்தான் கிடைத்தது. மற்ற இருவருக்கும் ஆர்.ஈ.சி வகையில் ஒரு சீட்டை பகிர்ந்து தந்திருந்தார்கள். அதுவும் வழியோரச் சீட்டு. ‘சரி, அதுவாவது கிடைத்ததே’ என்று சந்தோசப்பட்டுக்கொண்டோம்.
மெல்ல எங்கள் பைகளை கீழிருந்த பகிர்வு சீட்டுக்கு அடியிலும், மேலிருந்த படுக்கை சீட்டிலும் வைத்துவிட்டு, ‘அப்பாடா’ என பெருமூச்சு விட்டுக்கொண்டு உட்கார்ந்து அங்கிருந்தவர்களை பார்த்தோம்.
ஒருவித பீதியாகவும், இன்னும் சொல்லப்போனால் எரிச்சலாகவும், கோபமாகவும் இருந்தது. அதுவும் பதிவு செய்த எங்கள் இருக்கைகளில் நிம்மதியாக உட்கார்ந்தும் படுத்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நெடுந்தூரம் பயணிக்கலாம் என நினைத்து வந்திருந்த எங்களுக்கு அப்பெருங்கூட்டத்தை கண்டதும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த அக்காவிடம் வருத்தத்தோடு கேட்டேன், ”என்னக்கா, இவனுங்க பாட்டுக்கு இப்டி இஷ்டத்துக்கு வந்து புக்கிங் கோச்ல உட்கார்ந்திருக்காங்க…?’’.
மெல்ல புன்னகைத்துவிட்டு சொன்னார், ”நம்மூர்லயும் கேரளாவுலயும் மட்டும்தான் வடிவரசு, கொஞ்சமாவது ஒழுங்கா இருப்பாங்க. ஆந்தராவ தாண்டிட்டா மருந்துக்கு கூட அதெல்லாம் இருக்காது’’.
கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. மெதுவாகத் திரும்பி அங்கிருந்தவர்களை உள்ளுக்குள் திட்டிக்கொண்டு பார்த்துவிட்டு, ”எப்டிக்கா இவங்க கூட நாலுநாள் இந்த பெட்டிக்குள்ளார போகப் போறோம்?’’ என்று கேட்டேன்.
‘ஹா ஹா’ என மிதமான சத்தத்தில் சிரித்தவர், ”போய்தான ஆகணும் வடிவரசு’’ என்றார். ரயில் மெல்ல நகர்ந்து புறப்பட்டது.
வந்து ரயிலில் ஏறியதும் முதல்வேலையாக பையை வைத்துவிட்டு கழிவறைக்குப் போய் சிறுநீர் கழிக்கலாம் என வெகுநேரமாக அடக்கிக்கொண்டு வந்த எனக்கு, இங்கே கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சியால் அந்த எண்ணமே கிட்டத்தட்ட மறைந்துபோயிருந்தது.
‘சரி, இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் போகலாம்’ எனப் பார்த்தால், வழி நெடுக மூட்டை முடிச்சுகள் போல ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
‘முன்பதிவு செய்த பெட்டியிலயே இந்த நிலமைன்னா, பதிவு செய்யாத பெட்டியில இன்னும் எப்படி இருக்குமோ?’ என்று பீதியோடு எண்ணிக்கொண்டு, அவர்களது பான்பராக் நாற்றம் தாங்கமுடியாமல் திரும்பி சன்னல் பக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.
என்னதான் ஒருபக்கம் அவர்களை பார்த்தால் எரிச்சலாக வந்தாலும், இன்னொரு பக்கம் எங்கெங்கிருந்தோ சொந்த பந்தங்களை விட்டுவிட்டு இங்கே நம்மூருக்கு பிழைப்புக்காக வந்து கிடைத்த வேலையெல்லாம் இழுத்துப்போட்டு அடிமாட்டுக் கூலிக்கு செய்து குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு தம் குடும்பத்தினரை பார்க்க அத்தனை ஆசைஆசையாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும்போது பாவமாகவும் இருந்தது.
மிதமான வேகத்தில் இவ்வளவு நேரமாக சென்றுகொண்டிருந்த வண்டி, சென்னையை கடந்ததும் வேகம் கூடி இருளை கிழித்துக்கொண்டு விரைய ஆரம்பித்தது.
பக்கத்திலிருந்த அக்காவிடம், ”டி.டி.ஆர்-லாம் இவங்கள எதுவும் கேட்க மாட்டாங்களா அக்கா…?’’ என்று கேட்டேன்.
”யாரு டி.டி.ஆரா…? கொஞ்சநேரம் இருந்து பாருங்க, எப்படி கேட்பாருன்னு உங்களுக்கே தெரியும்’’ என்றார்.
அவர் சொன்னதுபோல் அடுத்த செத்த நேரத்தில் டி.டி.ஆர் வந்தார். உடனே கூட்டத்தினர் மத்தியில் ஒரு சலசலப்பு. வழியில் இருந்தவர்கள் எழுந்தும் ஒதுங்கியும் வழிவிட்டார்கள். ‘என்னடா’ என்று எட்டிப் பார்த்தால், ஒவ்வொருவராக எழுந்து தங்கள் முன்பதிவில்லாத பயணச்சீட்டை காட்டி, அத்துடன் ஐம்பது ரூபாய் பணம் தந்து அதில் அவர் கையெழுத்தை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
அதாவது நாங்கள் பல நாட்களுக்கு முன்னால் எங்களது பெயர், வயது உள்ளிட்ட தகவல்களை சரியாகத் தந்து கூடுதல் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு முன்பதிவு செய்து பயணிக்கும் பெட்டியில், அவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் தம் பெயர் வயது உள்ளிட்ட எத்தகவலும் தராமல், ரயில் கிளம்புவதற்கு சற்று முன்னால் வாங்கிய முன்பதிவில்லாத பயணச்சீட்டோடு கூடுதலாக ஐம்பது ரூபாய் மட்டும் செலுத்தி, அதையும் டி.டி.ஆரிடம் தந்துவிட்டு, எங்கள் பெட்டிக்குள் சுதந்திரமாக பயணிக்க மறைமுக அனுமதி பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
இதில் ஆறுதலான ஒரே விஷயம் என்னவென்றால், முன்பதிவு செய்தவர்கள் வந்து பயணச்சீட்டைக் காட்டி தம் இருக்கையை கேட்டால் தந்துவிடவேண்டும். அவ்வளவுதான்.
‘இதென்னடா கொடுமையே’ என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக, ”என்னக்கா இப்படிலாம் பண்றாங்க…? நாம பாதுகாப்பா போகணும்னுதான முன்னாடியே டிக்கெட் புக் பண்ணிட்டு வர்றோம். ஆனா இங்க எந்த பாதுகாப்பும் இருக்கமாதிரி தெரியலையேக்கா’’ என்றேன் மிக வருத்தத்தோடு, பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்து வந்த அக்காவிடம்.
இயலாமையுடன் புன்னகைத்தவர், ”வேற வழி இல்ல வடிவரசு… இவனுங்க கூடதான் நாம போயாகணும்’’ என்றார்.
ஒருநாள் என்றால் பரவாயில்லை. மூன்று இரவு, மூன்று பகல் என மொத்தமாக நான்கு நாட்களை தொட்டுக்கொண்டு, அறுபத்தி ஏழரை மணி நேரத்தில் 3346 கிலோமீட்டர் பயணித்துச் செல்லவேண்டும். நினைக்கவே உள்ளுக்குள் பெருநடுக்கமாக இருந்தது.
மெல்ல எழுந்து சீட்டுக்கடியில் வைத்திருந்த எங்கள் பைகளையெல்லாம் ஒன்றாக ஒரு சங்கிலியில் பிணைத்து இருக்கையோடு சேர்த்து பூட்டிவிட்டு, என்னை மேலே சென்று படுத்துக்கொள்ள சொன்னார்கள்.
‘சரி’ என்றுவிட்டுப் போய் வெகுநேரமாக அடக்கிக்கொண்டிருந்த சிறுநீரை ஒருவழியாக கழித்துவிட்டு வந்து மேலேறி தூக்கமின்றி அரைமணிநேரம் வெறுமே படுத்துக்கொண்டிருந்துவிட்டு, ஒருகட்டத்தில் அசதியில் அப்படியே தூங்கிவிட்டேன்.
‘எப்டிதான் இன்னிக்கு ராத்திரி தூங்கப்போறமோ?’ என பயந்துகொண்டிருந்தவன், அப்படியே நேர்மாறாக அடித்துப்போட்டதுபோல் தூங்கிவிட்டு காலையில் சற்று முன்னமே எழுந்து கீழே எட்டிப் பார்த்தேன். இருவரும் தூங்காமல் சன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
‘சரி, தூங்கினது போதும்’ என இறங்கி நான் கீழே வந்ததும், ”நான் போய் மேல படுத்துத் தூங்குறேன்க்கா” எனச் சொல்லிவிட்டு மேலே ஏறி படுத்துக்கொண்டார் தம்பி.
உடனே நான் கீழிருந்த என் பையை திறந்து துண்டையும், பேஸ்ட் பிரஷையும் எடுத்துக்கொண்டு போய் கழிவரையில் மூக்கை மூடிக்கொண்டு வேறுவழியின்றி காலைக்கடன் கழித்துவிட்டு, பல் துலக்கிக்கொண்டு கை கால் முகம் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தேன்.
”காபி குடிக்கலாமா வடிவரசு?’’ என்றார் அக்கா. ”சரிக்கா’’ என்றேன்.
உடனே ஆளுக்கொரு காபி வாங்கி குடித்துக்கொண்டு, கடல்போல் நீண்டு விரிந்திருந்த கோதாவரி ஆறை சன்னல் வழியாகப் பார்த்து ரசித்துவிட்டு, உடன் பெட்டியில் வந்த முகங்களை வேண்டா வெறுப்போடு திரும்பிப் பார்த்தேன்.
சட்டென ஒற்றை இரவுக்குள் எல்லா முகங்களும் பழகிய நெருக்கமான முகங்களாய் மாறியிருந்தது. அதோடு சரிவர தூக்கமின்றி உழைத்து உழைத்து முறுக்கேறிய தம் உடல்களை கிடைத்த இடத்திலெல்லாம் சாய்த்து உறங்கிக்கொண்டும், வெறுமே படுத்துக்கொண்டும் இருப்பதாய் பட்டது.
பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த பீகாரி ஒருவர் என்னைப் பார்த்து மெல்லிதாய் புன்னகைத்துவிட்டு, ”குட் மார்னிங் பையா” என்றார்.
‘என்னிடம்தான் சொல்கிறாரா?’ என உறுதிப்படுத்திக்கொண்டு பதிலுக்கு நானும் புன்னகைத்து, ”குட்மார்னிங் பையா” என்றேன்.
மறுபடியும் புன்னகைத்தவர், ”நல்லா தூங்குனிங்களா பையா?’’ என்று கேட்டார்.
‘இவர் எதுக்கு நம்மக்கிட்ட இதெல்லாம் கேட்கிறார்?’ என நினைத்துக்கொண்டு, ”ம், தூங்கினேன்’’ என தலையாட்டி கடமைக்கு சொன்னேன்.
பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்துகொண்டு எங்களை பார்த்துக்கொண்டிருந்த அக்கா, ”வடிவரசு, உங்கக்கிட்ட சொல்ல மறந்துட்டேன். இவர் பேரு ராஜ். நம்ம சென்னையிலதான் ரண்டுவருசமா ஒரு டீக்கடையில வேலை பார்த்துட்டு, பீகார்ல இருக்க சொந்தவூருக்குப் போறாரு. நைட்டோட நைட்டா நாங்கலாம் பேசி ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்’’ என்றார் மெல்லச் சிரித்துக்கொண்டு.
வியப்போடு திரும்பி அவரை பார்த்தேன். வேகமாக தலையசைத்து ”ஆமும் பைய்யா’’ என்றார், தனக்குத் தெரிந்த தமிழில்.
காலை ஒன்பது மணியிருக்கும். எழுந்து தம்பியை எழுப்பிவிட்டு, எங்கள் இருவரையும் போய் கை கழுவிக்கொண்டு வந்து சாப்பிடச் சொன்னார் அக்கா. மூவரும் வரிசையாக உட்கார்ந்து வீட்டிலிருந்து கட்டிவந்த சப்பாத்திப் பொட்டலத்தை பிரித்து உண்டோம்.
பின் கொஞ்சநேரம் கதைகள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, தனித்தனியாக பாடல்கள் கேட்டோம். அதன்பின் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டும் (நடுநடுவில் நான் பாடல்களும், கவிதைகளும் எழுதிக்கொண்டும்), உடன் பெட்டியில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டும், அவ்வப்போது எழுந்து ரயிலின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரைக்கும் பெட்டிகளுக்குள்ளாக நடந்து போய் வந்துகொண்டும், நிற்கும் ரயில் நிலையங்களிலெல்லாம் உற்சாகமாக இறங்கி அவ்வூர் பெயர் பதித்த பலகையின் முன்னால் நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டும், வழியில் விற்கும் அந்தந்தவூர் உணவுகளை வாங்கி ருசித்துக்கொண்டும், ஒருவர் மாற்றி ஒருவரென மேலிருந்த படுக்கை சீட்டில் ஏறி படுத்துத் தூங்கிக்கொண்டும், மிக முக்கியமாக ஒரு நாளைக்கு குறைந்தது ஏழெட்டு தேநீரும் குளம்பியும் அருந்திக்கொண்டும், தொடர்ந்து மூன்று நாள் குளிக்காமல் கைகால் முகம் மட்டுமே கழுவி உடைகள் மாற்றிக்கொண்டும், ஒவ்வொரு மாநிலமாக கடக்கக் கடக்க அம்மாநில நிலங்களையும் ஊர்களையும் மனிதர்களையும் மரங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டும், பெட்டியிலிருந்த ஒவ்வொருவரையும் அவர்கள் ஊர் வந்ததும் இறங்கும்போது கையசைத்து வழியனுப்பிக்கொண்டும், டிசம்பர் 22 முன்னிரவில் சென்னை எழும்பூரில் புறப்பட்டவர்கள்… டிசம்பர் 25 மாலை சரியாக ஆறு மணிக்கு அசாம் மாநிலத்தின் கிழக்கு முனையில் அழகிய பிரம்மபுத்திரா நதிக்கரையில் இருக்கும் தேயிலை நகரமான திப்ரூகரில் சென்று அத்தனை பரவசத்தோடு இறங்கினோம். ஆம்!
சட்டென்று மனத்துள், ‘எப்டிதான் இந்த ஓடற ரயிலுக்குள்ளயே சாப்ட்டு, தூங்கி ஏன்ச்சி நாளுகணக்கா போவாங்களோ…?’ என்னும் எனது சிறுவயது கேள்வி மங்கின குரலில் ஒலிக்க ஆரம்பித்தது.
மெல்லத் திரும்பி வந்திறங்கிய ரயிலை பார்த்து புன்னகைத்துவிட்டு, ‘போலாம் போலாம்… அதெல்லாம் எத்தன நாள் வேணா போலாம்’ எனும் பதிலை உள்குரலில் உச்சரித்துக்கொண்டு ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தேன்.
அங்கே எங்கள் மூவரையும் ஆதிக்குளுமையோடு வரவேற்றுக் காத்திருந்தது, மொழி தெரியாத ஒருவரையும் அறிமுகமில்லாத அழகான அத்திப்ருகர் நகரம்.
*
‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்
திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி
திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்
திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்
திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை
திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்
திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி
திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்
திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்
திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி
திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்