திருவாளர் ஊர்சுற்றி – 13 : கிறுக்குப்பயணம்

திருவாளர் ஊர்சுற்றி – 12 : எக்கரணை

பயணங்களில் கிறுக்குத்தனமான பயணம் என ஒன்று இருப்பதாக எப்போதும் தோன்றும். அது மற்ற பயணங்களை காட்டிலும் கூடுதல் சுவையானது. நிமிடத்திற்கு நிமிடம், ஏன் நொடிக்கு நொடி புதுப்புது அனுபவங்களையும், பாடங்களையும், அடுத்தென்ன அடுத்தென்ன எனும் எதிர்பார்ப்பையும் தரக்கூடியது. அப்படியான இரு பயணங்களை கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அடுத்தடுத்து மேற்கொண்டிருக்கிறேன். ஆம்!

முதல் பயணம், சென்னை – போரூர் கார்டனில் இருந்த என் அறையிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் – தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் எங்கள் கிராமத்துக்கு முழுக்கமுழுக்க அரசு டவுன் பஸ்களில், அதாவது அரசு உள்ளூர் பேருந்துகளில் மட்டுமே பயணித்துப் போய் அங்கிருந்து திரும்பவும் அதேபோல் வர வேண்டும். இதுதான் எனக்கு நான் விதித்துக்கொண்ட பயண விதிமுறை.

அன்றைய தினம் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்துக் கிளம்பி, அறையிலிருந்து லேசானப் பனியில் நனைந்துகொண்டு போரூர் ஏரி அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு போய் நான் ஏறப்போகும் முதல் பேருந்துக்காக காத்திருந்தேன்.

பயணங்கள் எப்போதும் அலாதியாகத் தோன்றினாலும், அதிகாலை பயணங்கள் அவற்றில் கூடுதல் அலாதியாகத் தோன்றுவதுண்டு. அதனால் முடிந்தவரை பயணங்களை அதிகாலையில் தொடங்கவேண்டுமென நினைப்பேன். அப்படி நினைத்துக் கிளம்பிவந்து காத்திருந்த அடுத்த ஆறாவது நிமிடத்தில் பிராட்வே செல்லும் பேருந்தொன்று வந்து நின்றது. ஏறி சன்னலோர இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்துகொண்டு கிண்டி செல்ல பயணச்சீட்டு வாங்கினேன்.

எப்போது ஊருக்கு செல்வதென்றாலும் என் அறையிலிருந்து மிக அருகிலிருக்கும் போரூர் டோல்கேட்டுக்குப் போய் நேராக திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்வது வழக்கம். ஆனால் இம்முறை டவுன் பஸ்களில் மட்டுமே போகவேண்டும் என்பதால் முதல் பேருந்தில் கிண்டிக்கு வந்திறங்கினேன்.

‘ஒரு டீ குடிச்சா என்ன’ என்று தோன்றியது. உடனே அங்கிருந்த தேநீர்க் கடை ஒன்றில் போய் குடித்துவிட்டு, சுரங்கப்பாதை வழியாக சாலையின் மறுபக்கம் சென்று ரயில்வே மேம்பாலம் ஏறி இறங்கி ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் கால்மணிநேரம் காத்திருந்து அடுத்துவந்த தாம்பரம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.

சரியாகப் பேருந்து பல்லாவரம் தாண்டுவதற்குள் மொத்த இருளும் விலகிப் போய் பகலவனின் கதிர்களால் நகரம் மிளிரத் தொடங்கியிருந்தது. சாலையில் பெரிதாக வாகனங்கள் எதுவும் இல்லாமல் காலியாக இருந்ததால் நான் சென்ற பேருந்து மிகச் சீக்கிரமாகவே தாம்பரத்தை அடைந்தது.

பேருந்திலிருந்து இறங்கிய சில நிமிடத்திலேயே வந்த செங்கல்பட்டு போகும் பேருந்தில் ஏறிச் சென்று, அங்கிருந்து மதுராந்தகம், பின் அச்சிறுப்பாக்கம், அதன்பின் திண்டிவனம் என அடுத்த நான்கு மணிநேரமாகப் பயணித்துப்போனேன்.

வயிறு நன்றாகவே பசிக்க ஆரம்பித்திருந்தது. அருகிலிருந்த சிறு உணவகம் ஒன்றில் போய் நான்கு இட்லியும் ஒரு வடையும் சாப்பிட்டுவிட்டு, மேம்பாலம் ஏறி இறங்கி அதன் மறுபக்கமாக இருந்த பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று அங்கிருந்து செஞ்சிக்கும், பின் கீழ்பெண்ணாத்தூருக்கும், அதன்பின் இன்னொரு பேருந்து பிடித்து திருவண்ணாமலைக்கும் சென்றேன்.

எண்ணிப் பார்த்தேன். சரியாக ஒன்பது பேருந்துகள் மாறி வந்திருக்கிறேன். எப்போதும் ஒரே பேருந்தேறி நேராக திருவண்ணாமலைக்கு வந்துவிடும் எனக்கு, இப்படி மாறிமாறி அதுவும் டவுன் பஸ்களில் மட்டுமே பயணித்து வந்தது புதுவித அனுபவமாக இருந்தது.

அதிலும் ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வோர் வகையான மனிதர்கள். கண்ட காட்சிகளும், கிடைத்த அனுபவங்களும் வித்தியாசமானவை. இவைகளோடு நான்கு மணி நேரத்திற்குள் அடையும் தூரத்தை ஏழு மணி நேரத்தில் அடைந்ததும், அதற்கான செலவு மிகக் குறைவாக இருந்ததும்தான். ஆம்!

மெல்ல எனதிந்த கிறுக்குப் பயணத்தை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு, அடுத்து வந்த தானிப்பாடி செல்லும் பேருந்திலேறி தென்பெண்ணை ஆறையொட்டியுள்ள எங்கள் பக்கத்து கிராமத்தில் போய் இறங்கி, அங்கிருந்து எங்களூருக்குச் சென்றேன்.

மொத்தம் பத்து பேருந்துகள். அதேபோல் அடுத்த நாள் காலையில் எழுந்து குளித்துக் கிளம்பி காலை உணவு உண்டுவிட்டு, ஊரிலிருந்து புறப்பட்டு மாலைக்குள் பன்னிரண்டு பேருந்துகள் மாறி என் போரூர் கார்டன் அறைக்கு அதைவிட குறைந்த கட்டணத்தில், இன்னும் கூடுதல் நேரம் பயணித்து வந்து சேர்ந்தேன்.

இது முதல் கிறுக்குப்பயணம் என்றால், இரண்டாவது பயணம் இதைவிட இன்னும் கிறுக்கானப் பயணம். ஆம், அறையிலிருந்து புறப்பட்டு சரியாக ஐம்பது மணிநேரம்  பயணிக்க வேண்டும். அதாவது இரண்டு நாட்களும் இரண்டு மணி நேரமும்.

‘இதிலென்ன இருக்கிறது?’ எனக் கேட்கலாம். இப்பயணத்தில் நான் எங்குமே தங்கக்கூடாது. பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். எந்த சுற்றுலா தலங்களுக்கும் சென்று சுற்றிப்பார்க்கக் கூடாது. எந்நண்பர்கள் வீட்டுக்கும் போகக்கூடாது, யாரையும் சந்திக்கக் கூடாது. உடன் தேவையான ஆடைகள் உள்ளிட்ட எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. இவை யாவற்றுக்கும் மேலாக என் நகர்பேசியை அணைத்து அறையில் வைத்துவிட்டு ‘வெறும் நானாக’ போய் வரவேண்டும், இங்குதான் என்றில்லாமல் எந்தப் பேருந்து கண்ணில் படுகிறதோ அதிலேறி அங்கே செல்லவேண்டும். ஆம்!

இப்படி ஒரு பயணம் செல்லப் போவதாக முன்நாள் இரவு அறை நண்பனிடம் சொன்னேன். கேட்டுவிட்டு ஒருமாதிரி பார்த்தவன், ”இதுக்கு பேரு கிறுக்குப் பயணம் இல்ல; பயணம் போற உனக்குதான் கிறுக்கு’’ என்றான்.

மெல்ல புன்னகைத்துவிட்டு படுத்தவன், அடுத்தநாள் காலையில் அவன் எழும் முன்னமே எழுந்து சீக்கிரம் குளித்துவிட்டு ஒரு டீ-சட்டையும் லோயரும் போட்டுக்கொண்டு, சரியாக ஆறு மணிக்கு நகர்பேசியை அணைத்து மேசைமேல் வைத்துவிட்டு அறையிலிருந்து புறப்பட்டேன்.

அதுவரைக்கும் எத்தனையோ பயணங்கள் சென்று வந்திருப்பேன். ஆனால் அவை எல்லாவற்றையும் விட இப்பயணம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கப்போவதை அப்போதே உள்ளத்துள் உணர ஆரம்பித்துவிட்டேன்.

மெதுவாக நடந்து வழியிலிருந்த தேநீர்க் கடை ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு டோல்கேட் அருகில் போய் நின்று பேருந்துக்காக காத்திருந்தேன். அடுத்த இரண்டாவது நிமிடமே விழுப்புரம் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று வந்து நின்றது. சட்டென அதில் ஏறிக்கொண்டேன்.

பெரிய கூட்டமெல்லாம் இல்லை. பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. நல்ல இருக்கையாகப் பார்த்து சன்னலோரமாக உட்கார்ந்துகொண்டு, விழுப்புரம் செல்லும் வரைக்கும் எதைப்பற்றியும் யோசிக்காமல் வெறுமே வேடிக்கை பார்த்துக்கொண்டு போனேன்.

இதில் விந்தை என்னவென்றால் நான்கைந்து தடவை என்னையறியாமல் கை தானாகச் சென்று லோயர் பாக்கெட்டிலிருந்து நகர்பேசி எடுக்க நினைத்ததும், அது அங்கே இல்லை என்றதும் நான் புன்னகைத்துக் கொண்டதும், அவை இல்லாதது பெரும் விடுதலையாக இருந்ததும்தான்.

அடுத்த மூன்றரை மணிநேரத்தில் விழுப்புரம் வந்து இறங்கியவன், முதல் வேலையாக பக்கத்திலிருந்த உணவகம் ஒன்றை தேடிக் கண்டுபிடித்துப் போய் காலை உணவை மிகத் தாமதமாக உண்டுவிட்டு பேருந்து நிலையத்துக்குள் வந்தேன். வரிசையாக பாண்டிச்சேரி செல்லும் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன. சென்று முதல் பேருந்தில் ஏறி உட்கார்ந்துகொண்டேன்.

‘பஸ் எடுக்க இன்னும் பத்து நிமிசம் ஆகும்’ என்றார்கள். ‘சரி’ என தலையாட்டிவிட்டு பக்கத்தில் இருந்த பெரியவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். பின் பேருந்து எடுத்ததும் முன் சீட்டில் தன் தம்பியோடும் அம்மாவோடும் வந்து உட்கார்ந்த சிறுமியிடம் பேசி விளையாடிக்கொண்டு பாண்டிச்சேரி வரைக்கும் சென்றேன்.

இறங்கியதும் கடலூர் செல்லும் பேருந்துதான் முதலில் கண்ணுக்கு பட்டது. அதுவும் புறப்பட்டு மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. வேகமாக ஓடி ஏறிக்கொண்டவன், கடைசி இருக்கையின் கடைசிச்சீட்டு மட்டுமே காலியாக இருந்ததை பார்த்துவிட்டு அதில்போய் உட்கார்ந்துகொண்டேன்.

சட்டென மனத்துள், ‘எதுக்கு நாம இப்படிலாம் ஊர் ஊரா சுத்தணும்?’ எனும் கேள்வி எழுந்தது. பின்னாலேயே, ‘இப்படி ஊர் ஊரா சுத்தாத வாழ்க்கலாம் ஒரு வாழ்க்கையா, போடா’ என அதற்கான பதிலும் வந்தது.

மெல்ல எனக்குள் நானே புன்னகைத்துக்கொண்டு போய் கடலூரில் இறங்கி ஒரு தேநீர் பருகிவிட்டு, அடுத்து வந்த விருத்தாச்சலம் செல்லும் பேருந்தில் ஏறிச் சென்று மதிய உணவை அங்கே உண்டுவிட்டு, அங்கிருந்து ஜெயங்கொண்டம், பின் காட்டுமன்னார்கோயில், அதன்பின் சிதம்பரம், பிறகு மறுபடியும் விருத்தாச்சலம் வந்து மதியம் உண்ட அதே உணவகத்தில் இரவும் சாப்பிட்டுவிட்டு, அதன்பிறகு அங்கேயிருந்து திருச்சி என தொடர்ச்சியாக அடுத்தடுத்த பேருந்துகளில் ஏறிப்போய் நள்ளிரவு இரண்டு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கி ஓரமாக இருந்த கழிவறையில் சிறுநீர் கழித்துவிட்டு, வெளியே போய் ஒரு தேநீர் வாங்கிக் குடித்துவிட்டு உள்ளே வந்தேன்.

‘தஞ்சாவூர்… தஞ்சாவூர்…’ எனும் நடந்துநரின் குரல்தான் முதலில் கேட்டது. உடனே சென்று அப்பேருந்தில் ஏறிக்கொண்டேன். கொஞ்சம் தாமதமாகத்தான் எடுத்தார்கள்.

மெல்லப் புறப்பட்டு நகரின் சாலைகளுக்குள்  போய் திரும்பி பைபாஸ் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் வளைந்து திரும்பியது. சன்னலோர இருக்கையில் உட்கார்ந்துகொண்டு இரவின் இருளில் மின்விளக்குகளால் ஒளிந்துகொண்டிருந்த மலைக்கோட்டையையும், திருவரங்கம் ராஜகோபுரத்தையும் பார்த்துக்கொண்டு சென்றவன், சரியாக விடிய இரண்டு மணிநேரம் இருக்கும்போது தஞ்சாவூரில் போய் இறங்கினேன்.

வயிறு லேசாக கலக்கிக்கொண்டிருந்தது. உடனே ஓடிப்போய் கழிவறை எங்கே என தேடிக் கண்டுபிடித்து காலைக்கடன் முடித்துவிட்டு, கை கால் முகம் கழுவிக்கொண்டு பக்கத்தில் இருந்த தேநீர்க் கடையில் தேநீர் அருந்திவிட்டு கண்ணில்பட்ட முதல் பேருந்தான சேலம் பேருந்தில் வழியில் சாப்பிட ஒரு பிஸ்கேட் பாக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டு ஏறி உட்கார்ந்து முன்மதியத்திற்குள் சேலத்தை அடைந்தவன், மதிய உணவை அங்கே உண்டுவிட்டு தர்மபுரி சென்று, பின் அங்கிருந்து மறுபடியும் சேலம், அதன்பின் விழுப்புரம், பிறகு பாண்டிச்சேரி, அதன்பிறகு வேலூர், அதற்கப்புறம் திருப்பதி என அடுத்த நாள் காலை வரைக்கும் சுற்றித் திரிந்துவிட்டு, அருகிலிருந்த பேருந்து நிலைய மணிக்காட்டியில் நேரம் பார்த்தேன். சரியாக இன்னும் நாற்பத்தைந்து நிமிடம் இருந்தது ஐம்பது மணி நேரம் ஆக.

‘சரி, போய் காலைக்கடன் முடித்துவிட்டு ஒரு தேநீர் குடித்து வருவோம்’ எனச் சென்று அடுத்த அரை மணி நேரம் கழித்து வந்தேன். திருத்தணி செல்லும் தமிழ்நாடு பேருந்து ஒன்று அங்கிருந்து புறப்படத் தயாராக இருந்தது.

ஓடிப்போய் அதில் ஏறி உட்கார்ந்துகொண்டு பக்கத்திலிருந்த அண்ணனிடம் நேரம் கேட்டேன். ”எட்டாக இன்னும் பத்து நிமிஷம் இருக்கு’’ என்றார்.

மெல்ல இருக்கையில் சாய்ந்துகொண்டு கண்களை மூடி அறையிலிருந்து இரு தினங்களுக்கு முன்னால் கிளம்பியது தொடங்கி… ஏறிய பேருந்துகளையும், இறங்கிய ஊர்களையும், பார்த்த மனிதர்களையும், அருந்திய தேநீர்க் கடைகளையும், உண்ட உணவகங்களையும் காட்சிகளாக மனத்திற்குள் ஓட்டிப் பார்த்துவிட்டு கண்களை திறந்து அந்த அண்ணனிடம், ”இப்போ எட்டு மணி ஆயிடிச்சாண்ணா?’’ என்று கேட்டேன்.

ஒருமாதிரி பார்த்தவர் ‘ஏன்டா இந்த வாட்ச்ச கட்டிட்டு வந்தோம்’ எனும் தோரணையில் தன் கை கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு, ”இப்பதான் ஆச்சி’’ என்றார்.

உடனே அவருக்கு ‘நன்றி’ சொல்லி புன்னகைத்துக்கொண்டு, நினைத்தது போல் பயணத்தை நிறைவு செய்ததை எண்ணி மகிழ்ந்தவனாய் உள்ளுக்குள் துள்ளிகுதிக்க ஆரம்பித்தேன். ஆம்!

பயணங்களில் கிறுக்குத்தனமான பயணம் என ஒன்று இருப்பதாக எப்போதும் தோன்றும். ‘அது, எப்படி இருக்கும்?’ என யாராவது கேட்டால், ‘இப்படித்தான் இருக்கும்’ என புன்னகைத்துக்கொண்டு சொல்வேன். என்ன, நான் சொன்னது சரிதானே?!

*

திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

திருவாளர் ஊர்சுற்றி – 11 : மயிலிறகீசன்

திருவாளர் ஊர்சுற்றி – 12 : எக்கரணை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=