இரண்டாவது சுயபேட்டி

பத்திரிகையாளர் வடிவரசு, பாடலாசிரியர் வடிவரசை எடுத்த இரண்டாவது பேட்டி இது. அதுவும் அவர் அண்மையில் எழுதி வெளியிட்டு, பலரும் விரும்பி வாங்கி வரும் அவரது முதல் புத்தகமான, ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூலுக்காக எடுத்தது.
**
”95 வயது தந்தைக்கு… மகன் தந்த பிறந்தநாள் பரிசு!’’ – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
வருடத்தில் ஒருநாள் மட்டுமே வரக்கூடிய பிறந்தநாள் என்பது பூமியில் பிறந்த அனைவருக்கும் சிறப்பான ஒன்று. அதிலும் 95-வது பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பானது. அதிலும் உலகத்தில் எந்தவொரு மகனும் இதுவரைத் தராத பிறந்தநாள் பரிசை பெறுதல் என்பது சிறப்புக்கெல்லாம் சிறப்பானது எனலாம். ஆம்… அப்படியோர் உயர்ந்தப் பரிசைதான் திருவண்ணாமலை மாவட்டம் திருவடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மூத்த விவசாயி சாமிக்கண்ணு என்பவர் அண்மையில் பெற்றிருக்கிறார். அந்தப் பரிசை தந்தவர் அவரது கடைசி மகனும், இளம் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வடிவரசு என்பவர்.
ஓர் அழகிய மாலை வேளையில் வள்ளுவர்கோட்டம் பின்புறமுள்ள சுதந்திர தினப் பூங்காவில் அவரை சந்தித்து வாழ்த்தோடு உரையாடலைத் தொடங்கினோம்.
”நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே எங்கள் கிராமத்தில்தான். சரிவர பேருந்து வசதிகள் இல்லாத, அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டக் குடும்பத்தில்தான் ஐந்தாவது மகனாகப் பிறந்தேன். வறுமை, குடும்பச்சூழல் காரணமாக வீட்டில் யாரும் படிக்கவில்லை. அதனால் கடைசி மகனான என்னை எல்லோரும் சேர்ந்து கஷ்டப்பட்டு பட்டம் படிக்கவைத்தார்கள். அவர்கள் பட்டக் கஷ்டம் எல்லாவற்றையும் அருகிலிருந்து பார்த்ததால், இனியும் இவர்களை கஷ்டப்படுத்தக்கூடாதென முடிவெடுத்து கல்விக் கடன், பகுதிநேர வேலையென லயோலா கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் படித்து முடித்தேன்.
சிறுவயது முதல் தந்தையின் கைப்பிடித்து வளர்ந்ததால் அவரிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எத்தனையோ விஷயங்களை என்னால் கற்கமுடிந்தது. அதில் முக்கியமானது… இருப்பதைக் கொண்டு இன்பமுடன் வாழ்வதும், மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்வதும்.
முதுகலை முடித்தவுடன் படித்த படிப்புக்கான ஐ.டி வேலை ஒருபக்கம். மனதுக்குப் பிடித்த பத்திரிகை வேலை ஒருபக்கம். என் கனவு பாடலாசிரியர் ஆகவேண்டும், நல்ல நல்ல படைப்பிலக்கியங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என்பதால் எழுத்து சார்ந்த பத்திரிகை வேலையை தேர்ந்தெடுத்தேன். வீட்டில் ஐயா (என் அப்பா) தவிர அனைவரும் எதிர்த்தார்கள். மீறியும் சேர்ந்தேன். ஒரு கட்டத்தில் கனவை நோக்கிப் பயணிக்க இதுதான் தக்க சமயம் என மனம் சொல்ல அந்த வேலையை விட்டுவிட்டு, பாடலெழுத வந்துவிட்டேன்.
இப்போது திரைப்படப் பாடல் வேலைகளும், முயற்சிகளும் ஒருபக்கம். நான் வாழும் சமூகத்துக்குத் தேவையான தனிப்பாடல்களும், எழுத்துகளும் ஒரு பக்கமென எனக்கானப் பாதையை நானே உருவாக்கிக்கொண்டேன்.
ஐயாவும் அம்மாவும் படாதக் கஷ்டமே இல்லை என்னும் அளவுக்கு கஷ்டப்பட்டவர்கள். அதையெல்லாம் சிறுவயது முதல் பார்த்தவன் என்பதால் அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென அடிக்கடி நினைப்பேன். அப்படி நினைத்து கடந்த ஆண்டு ஐயாவின் 94-வது பிறந்தநாளுக்கு ஆச்சர்யப்பரிசு கொடுக்க எண்ணி, எதுவும் சொல்லாமல் கிராமத்திலிருந்து சென்னை விமான நிலையம் கூட்டிவந்து, நேராக உள்ளே அழைத்துப்போய் விமானத்தில் ஏற்றி மகிழ்ச்சியில் ஆழ்த்தினேன். அதை சற்றும் எதிர்பார்க்காதவர்கள் இன்பத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.
அது குறித்து தோழி ஒருவர் முகநூலில் எழுதச் சொல்லிக் கேட்க நீளமானப் பதிவு ஒன்று எழுதினேன். அதை படித்தப் பலரும் நெகிழ்ந்தது, கண்ணீர் விட்டதோடு இதுவரை 10-க்கும் அதிகமானோர் தங்களது பெற்றோர்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி என்னைப் பார்த்து தந்தை – மகன் உறவின் உன்னதம் உணர்ந்ததாகவும், வாழ்வின் மீதான புரிதலும், அன்பும் பெருகியதாகவும் சொல்ல பெரிதும் மகிழ்ந்தேன்.
அத்தோடு பலரும் ’நீங்க ஏன் உங்க ஐயா பத்தி ஒரு புத்தகம் எழுதக்கூடாது?’ எனக் கேட்டார்கள். அதுவரை அப்படியோர் எண்ணம் இருக்கவில்லை. அவர்கள் கேட்டதும் ’எழுததான் எவ்வளவோ இருக்கே, எழுதினாதான் என்ன?’ எனத் தோன்ற அடுத்த சில மாதங்களிலேயே எழுதிமுடித்துவிட்டேன்..’’ என புன்னகையோடு சொல்லி இடைவெளி விட்டவர்,
‘’மனதுக்கு மிக நெருக்கமாக ஐயாவப் பத்தின புத்தகம் எழுதி முடித்ததும், ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ என அதற்குப் பெயரிட்டு, முன்னுரைக்காக நான் பெரிதும் மதிக்கும் மூத்த எழுத்தாளுமை நாஞ்சில் நாடன் ஐயாவிடம் கேட்டேன். படித்துப்பார்த்தவர் கொண்டாடி உயர்வானதோர் முன்னுரை வழங்கினார். அதுதொடங்கி அப்புத்தகம் நான் கனவிலும் நினைத்துப்பார்க்காத அளவுக்கு அட்டைப்படம் உருவானது தொடங்கி, புத்தகத்தை விஜயா பதிப்பகம் வெளியிட்டது வரை எல்லாம் சிறப்பாக அமைந்தது.
கடந்த ஆண்டு செம்டம்பர் 1-ம் தேதி ஐயாவுக்கு 95-வது பிறந்தநாள். அன்றைய தினம் அதிகாலையில் சென்னையிலிருந்துப் புறப்பட்டு, எங்கள் கிராமத்தை அடைந்தவன், நேராக ஐயா இருக்கும் நிலத்துக்குப் போனேன். அங்கே எப்போதும்போல் ஓய்வறியாமல் தன்னால் முடிந்த வேலைகளை செய்துகொண்டிருந்த ஐயா என்னைப் பார்த்து புன்னகையோடு வரவேற்றார்.
உடனே அவர் கையில் செய்தித்தாள்களுக்கு நடுவில் மறைத்துவைத்திருந்த புத்தகத்தைக் கொடுத்து பிரிக்கச் சொன்னேன். எதுவும் புரியாமல் பிரித்தவர், உள்ளே புத்தகம் இருப்பதையும், அதன் அட்டையில் தன்னை வரைந்திருப்பதையும் பார்த்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே என்னைப் பார்த்து, ‘என்ன மாதிரியே யாரோ இருக்காங்க?’ என்றார். நான் லேசாகப் புன்னகைத்துவிட்டு, ‘ஒங்கள வரஞ்சா ஒங்களமாதிரிதான இருப்பாங்க’ என்றதும், ஆச்சர்யத்தோடு என்னைப் பார்த்தார். உடனே அவரிடம், ‘இன்னிக்கி ஒங்களோட 95-வது பொறந்தநாள். அதுக்கு ஒரு மகனா என்னப் பரிசு தரலாம்னு யோசிச்சி, ஒங்களப் பத்தி ஒரு புத்தகமே எழுதி பரிசாக் கொண்டுவந்துட்டன்’ என்றதும், மகிழ்வின் உச்சத்துக்கேப் போய்விட்டார்.
சில நிமிடம் புத்தகத்தின் முன்பக்கம், பின்பக்கம், உள்ளே எனப் பார்த்தவர், ‘என்னப் பத்தியாப் புத்தகம்?’ என்றார். ’ஆமாம்யா. ஒங்களுக்கும் எனக்கும் தெரிஞ்சப் பல விஷயத்த இனி இந்த தமிழ் உலகமே படிச்சித் தெரிஞ்சிக்கப் போவுது’ என்று சொல்லி, ஒவ்வொருக் கட்டுரையாகப் படித்துக் காட்டினேன். அமைதியாக குழந்தையைப் போல் கேட்டவர், என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘நானே மறந்துட்ட விசயத்தலாம் ஞாபகம் வச்சிருந்து எழுதிருக்கல்ல. புத்தகம்னா என்னான்னுலாம் தெரியாது. ஆனா, ஏதோப் பெரிய விஷயம்னு மட்டும் தெரிது..’ என சொல்லும்போதே அவரது கண்கள் கலங்கிவிட்டது.
அந்த நிமிஷம் ஒரு மகனாக என் தந்தைக்கு உலகத்தில் எந்தவொரு மகனும் செய்யாத உயர்ந்த ஒன்றை செய்ததாக உணர்ந்தேன். இதைவிட எனக்கு என்ன சந்தோஷம் இருக்கப்போவுது சொல்லுங்க..’’ என மகிழ்வோடு சொன்ன பாடலாசிரியர் வடிவரசு எழுதி, தன் தந்தைக்கு பிறந்தநாள் பரிசாகத் தந்த, ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ புத்தகம், ஒரு புத்தகம் என்பதைத் தாண்டி பல சிறப்புகளை நிகழ்த்திவருகிறது.
சமீப காலத்தில் பலரும் விரும்பி வாங்கும் புத்தகமான இதனை… பலரும் 5, 10, 20 புத்தகங்கள் என மொத்தமாக வாங்கி தங்கள் விருப்பமானவர்களுக்கு உயர்வானதொருப் பரிசாக கொடுத்துவருகிறார்கள். அச்சிட்ட 3 மாதத்தில் இரண்டாம் பதிப்பு கண்ட இப்புத்தகத்தின் மூன்றாம் பதிப்பு தற்போது வரவுள்ளது.
இது அவரது தந்தையை முகாந்திரமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், இதில் கிராம வாழ்வும், அன்பின் நிழலும், உறவின் மகத்துவமும், மரம் செடி கொடிகள் பற்றிய அறியத் தகவல்களும் தாங்கிய நிறைவானதொரு புத்தகமாக இவை இருப்பதே அதற்கான காரணம் எனலாம். அத்தோடு இப்படியோர் புத்தகம் உலகமொழிகளில் இதுதான் முதன்முதலில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘’நான் படித்து வியந்த எழுத்தாளுமை நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள், ‘இந்த புத்தகம் மூலமாக, என்னால், என்னுடைய ஊர், தமிழிலக்கிய வரைபடத்தில் குறிக்கப்படுகிறது’ என்றதை, என் வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன்.’’ என பெருமிதத்தோடு சொல்லி முடித்த வடிவரசிடம்,
‘எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொன்னதுபோல் தமிழிலக்கிய வரைபடத்தில் மட்டுமல்ல, அனைத்து தந்தை – மகன் நெஞ்சங்களிலும் உங்கள் பேர் இந்நூல் மூலமாக குறிக்கப்படுகிறது’ என சொல்லி வாழ்த்தி விடைபெற்றேன்.
– சா. வடிவரசு
(ஏப்ரல் 06, 2020)
*
ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை