முகங்கள் – 9 : வக்கீலண்ணா

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

**

‘நினைவுகள் சுருங்கித்

துளிக்கண்ணீராகும் மாலைவேளை

வெற்றிலை நுரைக்கும்

பாட்டிகளின் நீளப்பேச்சாய்

மழையின் இரைச்சல்

ஓடிக்கொண்டிருப் போரெல்லாம்

வீடு திரும்பும் பெருஞ்சுக நினைவில்

நின்று பார்க்கும்

நெஞ்சத்திலிருந்து நீளும் கைகளோ

ஒரு குடைவானம்.’

 – குட்டி ரேவதி

**

‘வருங்காலத்துல நீ என்ன ஆகப் போற?’ – மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் குறைந்தது ஒரு தடவையாவது எதிர்கொள்ளும் கேள்வியென இதனைச் சொல்லலாம்.

வீட்டில் பள்ளியில் கல்லூரியில், சொந்தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என யார் யாரோ இக்கேள்வியை கேட்டிருக்க நேரிடும். நாமும் அப்போதைக்கு ஒரு பதிலை மனத்தில் தோன்றுவதை மருத்துவர், பொறியாளர், விமான ஓட்டி, ஆசிரியர், காவல்துறை அதிகாரி, பத்திரிகையாளர் என ஏதாவது ஒன்றை அடித்துவிடுவோம்.

இப்பதிலானது காலத்திற்கேற்ப, வயதிற்கேற்ப, வளரும் சூழலுக்கேற்ப மாறக்கூடிய ஒன்றாக இருக்கும். அதுவும் சிறுவயதில் கண்ணால் பார்த்த, காதால் கேட்ட அல்லது தொலைக்காட்சியில் பார்த்த அல்லது பெற்றோர்கள் சொல்லித்தந்த ஒன்றையே பெரும்பாலும் சொல்வோம். பின் அது வேறொன்றாக மாறி வேறு வேறாகி கடைசியில் 20, 25 வயதில், சிலருக்கு 30, 35 வயதில் கூட ‘நாம் என்னவாக ஆகப் போகிறோம்?’ என்ற உள்ளுக்குள் எழும் கேள்விக்குப் பதிலாக மாறுவோம்.

மிகச் சிலர் மட்டுமே ஆரம்பம் முதல் ஒன்றையே பதிலாகச் சொல்லி அதையே வாழ்வாக மாற்றியிருப்பர். அப்படி மாற்றியோரில் அதிகமானோரின் வாழ்க்கை அவர்களது பெற்றோர்கள் அல்லது குடும்பத்தினர் சொன்னதாகத் தான் இருக்கும்.

ஆரம்பப் பள்ளிக் காலங்களில் யார் என்னிடம், ‘நீ படிச்சி வருங்காலத்துல என்னாகப் போற?’ என்று கேட்டாலும், ‘சத்தார் வாத்தியார் மாதிரி பெரிய ஆசிரியராவப் போறன்..’ என்பேன். காரணம், என் முன்னால் அப்போது அவர் ஒரு ஹீரோவாகத் தெரிந்தார். அதன்பின் ஐந்தாவது படிக்கும்போது பக்கத்து ஊரைச் சேர்ந்த வக்கீல் அண்ணன் ஒருவர் ஹீரோவாகத் தோன்ற ஆரம்பித்தார். அதனால் சட்டென ஆசிரியரிலிருந்து வக்கீலுக்கு மாறிவிட்டேன்.

அதன்பின் பத்தாம் வகுப்பு வரைக்கும் அதுதான் என் பதிலாக இருந்தது. பிறகு பதினோராம் வகுப்பு சேரும்போது கணிப்பொறி அறிவியல் பிரிவில் சேர்ந்து ‘கம்ப்யூட்டர் இன்ஜினீயராகப் போறன்’ என்பது என் வருங்காலக் கனவாக மாறியது. காரணம் அப்போது எங்கள் ஊரைச் சேர்ந்த அண்ணன் ஒருவர் இளங்கலை கணிப்பொறி அறிவியல் முடித்துவிட்டு MCA சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.

அதன்பின் முதுகலை கணிப்பொறி அறிவியல் லயோலா கல்லூரியில் படிக்கும்போது, ‘ஒரு கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்து நம்ம வாழ்க்க முடியக் கூடாது..’ என்று தோன்ற, பத்திரிகையாளர் ஆகி, பின் அதிலிருந்து வெளியேறி பாடலாசிரியராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறேன் இப்போது.

இப்படி பலரும் பல்வேறு பதில்களை காலந்தோறும் உதிர்த்திருப்போம். அப்படி உதிர்த்த பதில்களில் மிகச் சிலர் மட்டுமே அந்த பதிலாக மாறியிருப்போம். அதிகமானோர் அது நடக்காமல் அல்லது சரிவர முயற்சி செய்து எட்டாமல் கிடைத்த பதிலை வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்போம்.

ஆம்! இது எப்போதும் எல்லோருக்கும் நிகழும் ஒன்றுதான் எனினும் சிலர் மட்டும் இவ்விஷயத்தில் மாறாக இருந்திருக்கிறார்கள். அப்படி ஓர் அண்ணன் குறித்து முதல் தடவை கேள்விப்பட்டபோது நான் எங்களூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவோடு சுற்றிக் கொண்டிருந்தேன்.

என் இரண்டாவது அண்ணனுக்கு அவர் என்றால் ரொம்பப் பிடிக்கும். காரணம், அவரது கனவு. அதுவாகவே வாழும் அவரது வாழ்க்கை. அது தரும் மதிப்பும் மரியாதையும். அதையும் தாண்டி அவர் எங்களுக்கு ஒரு வகையில் உறவினர் என்பது.

அண்ணனுக்கு மட்டுமல்ல… அவரின் வயதொத்த பலருக்கும் அவர்தான் அப்போது ஹீரோ. அதிலும் எங்கள் ஊரில் நடக்கவுள்ள தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு (எங்கள் ஊர் மற்றும் பக்கத்து ஊருக்கும் சேர்த்து) வேறு அவர் போட்டியிடுகிறார். அவர் மட்டும் வென்றால் எங்களூரே வேறு மாதிரி ஆகிவிடும். இன்னும் என்னென்னவோ பேசிக்கொண்டார்கள் ஊரில்.

ஆம்! எங்கள் ஊர் இயற்கை எழில் பொங்கும் தென் பெண்ணை ஆற்றையொட்டி உள்ளதால் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் சிறு கிராமம் எனலாம். பட்டம் வரைக்கும் படித்தவர் என எடுத்துக்கொண்டால் அன்றைய சூழலில் கை விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகச் சிலரே அப்பகுதியில் இருப்பார்கள். அவர்களில் அவர் யாரும் படிக்காத சட்டப்படிப்பு படித்து வக்கீலானதால் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறிப்போயிருந்தார்.

‘சின்ன வயசுலயே படிச்சி வக்கீல் ஆவணும்னு நெனச்சி சொன்ன மாதிரியே நம்ம சுத்து வட்டத்துலயே மொத ஆளா ஆனவரு. அவருப் பேசுனா கேட்டுனே இருக்கலாம், அப்டிப் பேசுவாரு. என்ன நட, என்ன கம்பீரம், ப்ப்பா… அவரு மட்டும் இந்த எலெக்சன்ல ஜெயிக்கட்டும். அப்றம் பாரு நம்ம ஊர..’ என்று அண்ணன் தன் நண்பர்களிடம் சொன்னபோது நானும் அருகிலுள்ள துரிஞ்ச மரத்தடியில் உட்கார்ந்து ஏதோ விளையாடியபடி கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘இந்த வாட்டி கவுன்சிலருக்கு நிக்கறவன் என் மாமன் மவன். சின்ன வயசுலயே அவ்ளோ துடிப்பா இருப்பான்..’ என எதிர்வீட்டு அண்ணியிடம் அம்மா சொன்னார்.

இப்படி எங்கே திரும்பினாலும் அவர் குறித்த பேச்சுதான். தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒட்டுமொத்த இளைஞர்களின் ஹீரோவாகவே அவர் மாறிவிட்டதை ஒவ்வொருவர் வீட்டுச் சுவரிலும் இடம்பெற்றிருக்கும் அவரது பெயரையும் சின்னத்தையும் வீட்டின் மீது பறக்கும் கொடியையும் வைத்தே தெரிந்து கொண்டேன்.

சொல்லப்போனால் என்னையே அறியாமல் நானும் அவரது ரசிகன் ஆகிவிட்டேன். ஆம்!

அப்போது என் அண்ணன்கள் (அண்ணன்களில் மூவர் நன்றாக துணி தைப்பார்கள். நானும் இன்னொரு அண்ணனும் மட்டும் அரைகுறையாக தையல் அடிப்பதோடும் பட்டன் கட்டுவதோடும் சரி) துணி தைக்கும் தையல் கடை ஒன்று வைத்திருந்தார்கள். அது தினந்தோறும் இரண்டு பேருந்துகள் மட்டுமே வந்துசெல்லும் சாலையோரமாக இஸ்லாமியர் ஒருவரது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொட்டகை வீட்டில் இருந்தது. அங்குதான் அண்ணனின் நண்பர்கள் எப்போதும் கூடியிருப்பார்கள்.

அன்றப்படி அண்ணன் இல்லாத நேரம் பார்த்து அண்ணனின் நண்பரிடம் சென்று ‘எனக்கும் ஒரு கொடி வேணும்..’ என வாங்கிவந்து, எங்கள் வீட்டு கட்டுத்தெருவில் இருக்கும் துரிஞ்சி மரத்தின் உச்சியில் ஏறி யாவரும் பார்க்கும் வண்ணம் நீளமானக் குச்சி ஒன்றில் கட்டி மிக உயரத்தில் பறக்க விட்டேன்.

‘நாளிக்கி சாயந்தரம் அண்ணன் நம்மத் தெருவுக்கு ஓட்டுக் கேட்டு வர்றாரு. அவர் வரும்போது நம்மத் தெருவே திருவிழா மாதிரி இருக்கணும்..’ எனச் சொல்லிக்கொண்டு, அண்ணனும் அவரது நண்பர்களும் சேர்ந்து வேப்பிலையும் மாவிலையும் ஒடித்து வந்து இரவு முழுக்க விழித்திருந்து தோரணம் கட்டி தெரு முழுக்க அமர்க்களப்படுத்தினார்கள்.

அதோடு வீட்டுக்கொரு தேங்காய் கொடுத்து அவர் வரும்போது அதில் கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து உடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.  

‘எப்படா நாளைக்கி வரும்?’ என்றிருந்தது எனக்கு.

அடுத்தநாள் மாலை நாற்பது ஐம்பது பேருடன் கூட்டமாக தெருமுனையில் வரும்போதே அவரை அடையாளம் கண்டுகொண்டேன். வெள்ளை வேட்டி கறுப்பு சட்டை அணிந்து கூட்டத்தின் முதல் வரிசையில் கம்பீரமாக நடந்து ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டு வந்தார்.

எங்கள் வீட்டின் முன்பு வரும்போது நான் ஓரமாக இருக்கும் கோழிக்கூண்டின் மீது ஏறி நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வந்தவர் எங்கம்மாவை அத்தை என்றதும், வீட்டார் குறித்து விசாரித்ததும், அம்மா என்னைக் காட்டி சின்னவன் எனச் சொன்னதும், என்னை அருகில் கை காட்டி அழைத்து ”பேரென்ன ஐயாவுக்கு?’’ எனக் கேட்டதும், நான் என் பெயரை சொன்னதும், ”நல்லப் பேரு. நல்லாப் படிக்கணும் சரியா?’’ எனச் சொல்லி தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனதும், பின் அங்கிருந்து அடுத்தடுத்த வீடுகளுக்குச் சென்று வாக்கு கேட்டதும், அவர் பின்னாலேயே நான் சென்று ஊர்முழுக்க அவரையேப் பார்த்து சுற்றிவிட்டு வீடு வந்து சேர்ந்ததும் இன்னும் அப்படியே நினைவில் உள்ளது.

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் அதிமுகவினர் தான் அதிகம். அதனால் யார் அதிமுகவில் நின்றாலும் அவர் எம்ஜிஆர் கட்சி என்பதற்காகவே எதைப்பற்றியும் யோசிக்காமல் வாக்களித்து வெற்றிபெற வைத்துவிடுவார்கள்.

அதோடு ஊர் பஞ்சாயத்து சார்பாக தேர்தலில் நிற்பவர்களை போய் சந்தித்து… ஊருக்கு சாலை போட்டு தர வேண்டும், கோயிலுக்கு அது செய்ய வேண்டும், தண்ணீர் தொட்டி கட்டித்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து அதற்கு யார் சரியென சம்மதிக்கிறார்களோ, அவர்களுக்கு வாக்களிப்பதென பொதுவில் தீர்மானிப்பார்கள்.

அப்படி அந்த வருடம் ஒவ்வொரு கட்சியில் போட்டியிடும் நபரையும் சந்தித்து வேண்டியதையெல்லாம் கேட்டுவிட்டு அதுவரை ஊரில் பலரும் கேள்வியே படாத ஒரு கட்சியில் நின்ற அவரை கடைசியாகப் போய் பார்த்து தங்கள் கோரிக்கை பட்டியலை வாசித்தனர். அமைதியாக ஒவ்வொன்றையும் கேட்டவர்,

‘நீங்க கேட்டதவிட பல மடங்கு நம்ம ஊருக்காக செய்வன். நான் பெருசா பணம் சம்பாதிக்கவோ, கொள்ள அடிக்கவோ இந்தப் பதவிக்கு வர ஆசப்படல. நம்ம ஊருக்கும் நம்ம மக்களுக்கும் சேவகனா இருக்கவே நெனக்கிறன். அதனால எல்லாரும் பாத்துப் போயிட்டு வாங்க..’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

அவர் அப்படிப் பேசியது குறித்து ஊரில் பலரும் பேசிக்கொண்டார்கள். அதோடு… அவர் எந்தக் கட்சியாக இருந்தால் என்ன? படித்தவர், பெரிய உத்தியோகத்தில் இருப்பவர், நாலும் தெரிந்தவர், அதனால் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பது என்றும் பேசிக்கொண்டனர்.

எப்படியும் அவர் வென்றுவிடுவார் என்று அண்ணனும் அவரது நண்பர்களும் ஓடியாடி இரவு பகலாக அவருக்காகக் கட்சி வேலை பார்த்தார்கள்.

அப்போதுதான் என் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவு மொத்தமாக மாறி, அவரைப் போன்று பெரிய வக்கீல் ஆக வேண்டும் என்றானது. அதோடு பின்னாளில் அவர் மாதிரி நாமும் தேர்தலில் நின்று ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் தோன்றியது.

இரவு விடிந்தால் அடுத்த நாள் தேர்தல். எங்கும் அவர் பற்றிய பேச்சுதான். இரவோடு இரவாக இரு கட்சிக்காரர்களும் வீட்டுக்கு வீடு வந்து ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என பணமும், பணத்தோடு வீட்டுக்கொரு புடவையும் வேட்டியும் தந்துவிட்டுப் போனார்கள்.

எனக்கது வேடிக்கையாக இருந்தது. எப்படியும் அவர்தான் வெல்லப்போகிறார். இது தெரிந்தும் ஏன் இவர்கள் முட்டாள்தனமாக வீடு வீடாக வந்து பணமும் வேட்டியும் புடவையும் தர வேண்டும். இதெல்லாம் வீண் செலவுதானே என்று தோன்றியது.

அடுத்த நாள் தேர்தல் திருவிழா மாதிரி நடந்தது. அண்ணனின் முகத்திலும் அவரது நண்பர்களின் முகத்திலும் தெரிந்த அளவுகடந்த மகிழ்ச்சியானது அவர் இப்போதே வெற்றி பெற்றுவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்லியது.

அன்றைய தினம் மாலை தேர்தல் முடிந்ததும் வந்தவர்… அண்ணனின் நண்பர்களோடு ஊர் கோயில் அருகில் உள்ள சிமென்ட் களத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது நானும் என் வயதொத்த சிறுவர்கள் சிலரும் அவர் பேசுவதை கோயில் இடும்பன் சிலை வைத்திருக்கும் பொர்ச மரத்தின் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்தோம்.

‘நிச்சயம் நாம் இந்த தேர்தலில் வென்றுவிடுவோம். அப்படி வெல்லும்போது அது எனக்குமட்டுமான வெற்றி கிடையாது. நம் ஒவ்வொரின் வெற்றி. இந்த வெற்றி மூலமாக நாம் நமது ஊரை தமிழகத்தின் முன்மாதிரியான கிராமமாக மாற்றப்போகிறோம். இதுதான் நம் முதல்கட்ட திட்டம்..’ என நீண்டது அவர் பேச்சு.

அதை அப்படியே போய் எங்கள் வீட்டில் அம்மாவிடம் அவர் பேசுவதுபோன்று கம்பீரமாக நடந்தபடி பேசிக்காட்டினேன். அதோடு, இதுபோன்று நாமும் வருங்காலத்தில் பல மேடைகளில் நின்று பேச வேண்டும். கைதட்டல் வாங்க வேண்டும், ஏராளமான விருதுகளும் பரிசுகளும் பெற வேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

ஒரு வாரம் கழித்து தேர்தல் முடிவு வெளியானது. பலரும் எதிர்பார்த்தது போல் அவர் அதில் வெல்லவில்லை. மாறாக டெபாசிட் கூட வாங்காமல் வெறும் 38 வாக்குகள் மட்டுமே பெற்று பெரும் தோல்வியடைந்தார்.

பலருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. எங்களால் நம்பவே முடியவில்லை. தேர்தலில் வெற்றிபெற்றவர் யாருக்கோ பணம் தந்து ஏமாற்றி திட்டமிட்டு அவரை தோற்கடித்துவிட்டார் என்றே தோன்றியது.

அண்ணனும் அவர் நண்பர்களும் பெரிதாய் உடைந்து விட்டார்கள். அவர்களால் அத்தோல்வியை சற்றும் ஜீரணிக்க முடியவில்லை. எனக்கும் அது பெரு வருத்தமாக இருந்தது.

அடுத்தநாள் மாலை அவர் மட்டும் தனியாக நடந்து ஊருக்குள் வந்தார். ஒருவருக்கும் அவரை எதிர்கொள்ள துணிச்சலில்லை. அதனால் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேராக எங்கள் வீடிருக்கும் மாரியம்மன் கோயில் தெருவுக்குள் நுழைந்தவர், ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே நடந்து போனார். ஒருவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கிட்டத்தட்ட ஊரில் ஒரு தெரு விடாமல் நடந்தவர், அந்தி சாய்ந்து இருட்டும் நேரத்தில் பக்கத்தூர் செல்லும் கிழக்கு நோக்கிய சாலை வழியாக நடந்தார். 

அதுதான் அவரை அவராகக் கண்ட கடைசி காட்சி. அதன்பின் அவர் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. யாருடனும் பேசவில்லை. சரிவர உண்ணவில்லை. அதற்கும் மேலாக அவர் அன்று உடுத்திய உடையைக் கூட மாற்றவில்லை.

நாட்கள் வாரங்கள் பல சென்றும் அவர் அப்படியேதான் இருந்தார். என்னென்னவோ சொல்லிப் பார்த்தார்கள். ஏதேதோ செய்தும் பார்த்துவிட்டார்கள். சிறு மாற்றம் கூட அவரில் நிகழவில்லை.

இரண்டு மூன்று மாதம் கழிந்திருக்கும். ஒருநாள் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் வீட்டை விட்டு வெளியில் வந்தவர், அன்று கடைசியாக ஊருக்குள் வந்தது போன்று நடந்து வந்தார்.

வந்தவர் அதே போன்று ஊரிலுள்ள அனைத்து தெருக்களிலும்  நடந்து சென்றார். இம்முறை அவராக அல்ல; வேறு ஒருவராக. ஆம்! முழுக்க முழுக்க வேறு யாரோவாக அவர் மாறியிருந்தார்.

அழுக்கு வேட்டி (அன்றைக்கு கட்டியிருந்த அதே வேட்டி), கறுப்பு சட்டை (அன்றைக்கு அணிந்திருந்த அதே சட்டை), நீண்டு வளர்ந்த தாடி, பல நாட்கள் விளக்காத கருமஞ்சளேறிய பல், கை மடித்து விடாத சட்டை, செருப்பு போடாத அழுக்கேறிய கால்…

பார்த்த ஒவ்வொருவரும் கலங்கிப் போனார்கள். ஒருவரையும் அவர் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. எல்லாத் தெருவையும் நடந்து சுற்றிவிட்டு கடைசியாக அன்று சென்ற அதே கிழக்கு நோக்கிய ஊரின் வெளிப்புற சாலையில் நடந்துபோனார்.

அவர் பின்னாலேயே கண்கலங்கியபடி போன எனக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. ஓடிச்சென்று சற்று பின்னால் நின்று,

”வக்கீலண்ணா..’’ என்றேன்.

என்குரல் கேட்டு மெல்ல நின்றார்.

அருகில் ஓடிப்போய் அவரது கையைப் பிடித்தேன். மெல்ல என் கையை விடுவித்து தலையில் மென்மையாக தொட்டு சின்னதாகப் புன்னகைத்துவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து வேகவேகமாக நடந்து போனார்.

சாலை நுனியில் போய் வலது பக்கம் திரும்பி மறையும் வரைக்கும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘அவருக்கு என்னாச்சு? ஏன் இப்டி ஆனாரு? ஊர் மக்க நம்ப வச்சி தோக்கடிச்சதால இப்டி ஆய்ட்டாரா? இல்ல வேணும்னு நடிக்கறாரா?’

‘ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டிருந்தா ஏன் அன்னிக்கி வந்துட்டுப் போனமாரியே இன்னிக்கும் வந்துட்டுப் போவணும்? ஒங்களாலதான்டா இப்டியானன்னு ஒருவேள சொல்லாம சொல்லிட்டுப் போறாரா?’

இப்படி ஏதேதோ மனதுக்குள் தோன்றியது.

‘அவன் எலெக்சன்ல தோத்துட்டதால பைத்தியம் ஆயிட்டான்..’

ஊரில் பலரும் இதையே பேசிக் கொண்டார்கள்.

எனக்கென்னவோ அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தோன்றவில்லை. தான் தேர்தலில் வெற்றிபெற்று ஏதேதோ நன்மைகள் செய்ய வேண்டும் என நினைத்த ஊர்மக்கள் ஒன்றுகூடி தன்னை தோற்கடித்து விட்டதை எண்ணி எண்ணி சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறார்.

அதனால் நம்பவைத்து கழுத்தறுத்த ஒவ்வொருவரின் மனசாட்சியையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் வாழ்நாள் முழுக்க தன் வாழ்வின் மூலம் உலுக்கவே நினைக்கிறார். அதற்காகவே இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்.

ஆம்! அப்படித்தான் தோன்றியது எனக்கு. அன்று மட்டுமல்ல; இன்று வரைக்கும்.

அவர் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். அதேபோன்று மாதத்தில் ஒருதடவையோ இரு மாதத்திற்கு ஒரு தடவையோ ஊரின் தெருக்கள் தோறும் நடந்து வருவார். எதிர்படும் ஒருவரையும் பொருட்படுத்த மாட்டார். ஒருவரிடமும் சிறு வார்த்தை கூட பேசமாட்டார். தன் பாட்டுக்கு வருவார். போவார். அவ்வளவுதான்.

அவர் அப்படி ஒவ்வொரு தடவை வந்து செல்லும் போதும்,

‘என்னோட இந்த வாழ்க்கைக்கு நீங்கதான்டா காரணம்..?’ என்று ஒவ்வொருவரையும் சட்டையைப் பிடித்துக் கேட்டுவிட்டு செல்வது போல இருக்கும்.

கடைசியாக கடந்தாண்டு ஊருக்கு சென்றிருந்தபோது தெரு வழியாக நடந்துசென்ற அவரைப் பார்த்தது. பல தடவை அவர் குறித்தும் அவரது இத்தகைய நிலை குறித்தும் சிந்தித்திருக்கிறேன்.

அப்படி சிந்திக்கும்போதெல்லாம் நான் யாரைப்போல் ஆக வேண்டும் என சிறுவயதில் நினைத்துக் கண்முன் கண்டு ரசித்தேனோ அவர் இப்படியானது குறித்து பெரிதாக வருந்தியும் இருக்கிறேன். சில நேரம் கண்கூட கலங்கியிருக்கிறேன்.

ஆம்! அவர் என் ஒரு காலத்திய முன்மாதிரி. என்னை தட்டிக் கொடுத்தவர். தலையில் தொட்டு ஆசீர்வதித்தவர்.

அன்பும் சிவனும் ஒன்றென்பார்கள். அவ்வகையில் ஊராருக்கு பைத்தியமாகத் தெரியும் அவர் எனக்கு எப்போதும் சிவனே!

(ஏப்ரல் 09, 2020)

*

முகங்களின் முதலில்

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 6 : நகலி

முகங்கள் – 7 : மோனன்

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=