திருவாளர் ஊர்சுற்றி – 11 : மயிலிறகீசன்

திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

‘நாம் ஒன்று நினைத்துப் போனால், அது ஒன்றாக இருக்கும்’ என்பார்களே… அது எங்கே பொருந்துகிறதோ இல்லையோ, பயணத்தில் மிகச் சரியாக பொருந்திவிடுவதுண்டு. ஆம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு நண்பர்கள் இருவரோடு கொல்லிமலைக்கு போயிருந்தேன். முதல்நாள் அங்கிருந்த அறப்பளீஸ்வர் கோயில் உள்ளிட்ட சில இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு படுத்தவர்கள், மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து ஆளுக்கொரு தேநீர் குடித்துவிட்டு, நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து நடந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்துக்கு மேல்பக்கமாக, அதாவது அருவி கீழே கொட்டுவதற்கு மேலாகச் சென்று பார்க்கலாம் என நினைத்து, இருவரையும் குத்துமதிப்பாக ஒரு வழியில் கூட்டிப்போய் நீண்டநடைக்குப் பின் மேலிருந்து கீழாக ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவியை கண்களும் உள்ளமும் குளிர பார்த்துவிட்டு வந்தேன்.

அவை தந்த உற்சாகத்தில் அல்லது அசதியில் இருவரும் அறையில் சுருண்டு படுத்துவிட, நான் மட்டும் தனியாகக் கிளம்பி அங்கிருந்து பேருந்து பிடித்து செம்மேடு வந்து, ‘பிறங்கு மிசைக் கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’ என பெருஞ்சித்திரனாரும் (புறம் 158), ‘வல்வில் ஓரி கொல்லிக் குடவரை’ என கபிலரும் (குறுந்தொகை 100), ‘ஓரி, பல்பழப் பலவின் பயம்கெழு கொல்லி’ என பரணரும் (அகம் 208), ‘விடர்ச் சிமை ஓங்கு இருங் கொல்லிப் பொருநன்’ என வன்பரணரும் (புறம் 152) சிறப்பித்துப் பாடிய கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறப்பை போற்றும் விதமாக அங்கே குதிரைமீது அவன் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்த சிலையை பார்த்துவிட்டு, பக்கத்திலிருந்த தேநீர்க் கடையில் போய் கருந்தேநீர் ஒன்று குடித்துவிட்டு, அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தாண்டியிருக்கும் பூங்காவையும், அதன் பக்கத்தில் இருப்பதாகச் சொன்ன மிகப்பழமையான சிவன் கோயிலையும் காண்பதற்காகப் புறப்பட்டேன்.

இறங்கி ஏறி, ஏறி இறங்கி என சென்ற அழகிய மேடுபள்ளமான சாலையில் இருமருங்கும் இருந்த வீடுகளையும் விதவிதமான மரங்களையும் செடிகொடிகளையும் எதிர்வந்த மனிதர்களையும் பார்த்துக்கொண்டு, ‘பழமையான அந்த சிவன் கோயில் எப்படி இருக்கும்? சித்தர்கள் அதிகம் வசிப்பதாகச் சொல்லும் இச்சித்தர்பூமியில் இருக்கக்கூடிய மிகப் பழமையான கோயில் என்கிறார்களே… அங்கிருக்கும் சிவனின் பெயர் என்னவாக இருக்கும்? கோயில் இந்நேரம் திறந்திருக்குமா, கூட்டம் அதிகமாக இருப்பார்களா? நாம் போனால் சரிவரக் கோயிலை சுற்றிப் பார்க்க முடியுமா? கண்ணுக்குத் தெரியாமல் சித்தர்களும் வந்து உட்கார்ந்துகொண்டு சிவனை நோக்கி அங்கே தவம் இருப்பார்களா? சித்தர்கள் யாரையாவது பார்க்க முடியுமா, அவர்களிடம் பேச முடியுமா?’ என வரிசையாகக் கேள்விகள் கேட்டுக்கொண்டு ஒருவழியாக யாரிடமும் வழிகேட்காமல் பூங்காவை வந்தடைந்து, அதன் அருகில் ஒற்றையடிப்பாதை போல் சென்ற வழியில் நடந்து காடுபோல் மரங்கள் அடர்ந்திருந்த வனத்துக்குள் நுழைந்து போனேன்.

அது கோயிலுக்குச் செல்லும் வழிதான் என உறுதியாகத் தெரிந்தாலும், ஒருவர் கூட அங்கே இல்லாததைக் கண்டதும் சற்று சந்தேகமாக இருந்தது. ‘சரி, இன்னும் கொஞ்ச தூரம் போய் பார்ப்போம். கோயில் இல்லையென்றால் திரும்பிவந்து பூங்கா அருகில் யாரிடமாவது கேட்கலாம்’ என நினைத்துக்கொண்டு மெல்ல நடந்து சென்றேன்.

சட்டென்று அங்கிருந்த புதரில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தேன். நான்கைந்து ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. ‘சரி, அப்ப ஆள் யாரோ இருக்காங்க போல’ என எண்ணிக் கொண்டு சுற்றிலும் பார்த்தேன். யாரும் இல்லை. ‘குரல் கொடுப்போமா?’ என நினைத்து, ‘எதற்கு, நாம் வந்த வேலையை பார்ப்போம்’ என்று நடந்து இன்னும் கொஞ்சம் தூரம் போயிருப்பேன்.

திடுமென அவ்விடமே சற்று வித்தியாசமாக இருக்கக் கண்டு ஆர்வம் மேலிட கண்களை அகல விரித்துப் பார்த்தேன். ஆம்!

யாருமற்ற அந்த அடர் வனத்துள் பலாசம் என பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் பலா மரத்தடியில் பாழடைந்த மிகப் பழமையான சிவாலயம் ஒன்றிருப்பது கண்டதும் உள்ளுக்குள் உற்சாகம் தாளவில்லை.

இத்தனைக்கும் அந்த இடம் யாருமற்று ஒருவித பீதியை தரக்கூடியதாய்தான் இருந்தது. எனினும் அக்கோயிலின் பழமையும், அதன் ஈர்க்கும் வடிவமைப்பும் எனக்குள் பேரானந்தத்தை தந்தது.

சிறிய கோயில்தான். ஆனால் மிகப் புராதனமானது. பெரிதும் சிதிலமடைந்ததுதான். ஆனாலும் அத்தனை அழகாக இருந்தது. பார்த்ததுமே எப்படியும் குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்குமெனத் தோன்றியது.

கூடவே, பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் வந்து இங்கே வழிபட்டிருக்கவேண்டும்; இப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் பலநூறு சித்தர்கள் வணங்கிக் கொண்டிருக்கக்கூடும் என்றும் தோன்றியது.

மெல்ல ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்துப் போய் ஓர் ஓரமாக காலணியை கழட்டிவிட்டு, வெட்டி சீர் செய்திருந்த அதுவும் சில தினங்களுக்கு முன்பாகத்தான் இருக்கவேண்டும், மண் தரையில் நடந்து உடைந்துபோயிருந்த சிறு கற்கோயிலின் முன்னால் சென்று நின்று, கீழே குனிந்து உள்ளே கருவறையில் இருந்த மிக அழகான சிவலிங்கத்தை பார்த்துவிட்டு என்னையறியாமல் கையெடுத்துக் கும்பிட்டேன்.

பின் கண்கள் மூடி நான் கண்ட லிங்கத்தையும், நின்றிருக்கும் இடத்தையும் உள்ளுக்குள் சிலநொடி காட்சியாக ஓட்டிப்பார்த்தேன். சட்டென்று என் கூப்பிய கரத்தின் மீது ஏதோ ஒன்று வந்து மெல்லிதாக விழுந்தது போன்ற உணர்வு. திடுக்கிட்டுப் போய் உடனே கண்களை திறந்து பார்த்தேன்.

அழகிய சிறு மயிலிறகு ஒன்று என்னிரு கட்டைவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட சிறுசந்தில் வந்து அணிபோல் பொருந்த விழுந்திருந்தது. பார்த்ததும் உடல் சிலிர்த்துப்போய் மகிழ்ந்தவனாய் மேலே அண்ணாந்து பார்த்தேன்.

மரங்களுக்கு இடைப்பட்ட வெற்று ஆகாசவெளி, அதுவும் இன்னதென்று சொல்லமுடியாத அருவுருவாய் கண்களோடு சேர்த்து உள்ளத்தையும் ஈர்ப்பதுபோல் தெரிந்துகொண்டிருந்தது.

‘எங்கிருந்து வந்து இம்மயிலிறகு விழுந்திருக்கும்?’ எனும் கேள்வியோடு சுற்றிலும் பார்த்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. அப்போதுதான் கோயிலுக்குள் யாரோ இருப்பது போன்ற உணர்வு எழுந்தது. சட்டென்று திரும்பி உள்ளே பார்த்தேன். யாரும் இல்லை.

மெல்ல கையிலிருந்த மயிலிறகின் கவின்மிகு கண்ணை பார்த்துவிட்டு, கீழே குனிந்து மேற்கூரை இல்லாமல் உடைந்துபோய் இருந்த கருவறை லிங்கத்தை கண்டு இன்னொருமுறை வணங்கிவிட்டு, அதிக உயரமில்லாத கோயில் முன் மண்டபத்துள் நுழைந்து போய், அங்கே ஓர் ஓரமாக சிறு மண் தட்டில் வைக்கப்பட்டிருந்த திருநீறை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியில் பார்த்தேன்.

நொடி நேரம்தான் இருக்கும், பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் ஆங்காங்கே வனமெங்கும் உட்கார்ந்துகொண்டு கண்களை மூடி தவம் செய்துகொண்டிருக்க… அவர்களுக்கு நடுவில் ஒருவர் மட்டும் சிறு கல்லின்மீது அமர்ந்துகொண்டு கண்களை திறந்தவராய் தம் கையில் நீள நீளமான மயிலிறகுகளை  வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து இதழசைத்து புன்னகைப்பதாய் தோன்றி மறைந்தது.

‘என்னடா இது?’ என திடுக்கிட்டு அங்கிருந்து வேகமாக வெளியே ஓடிவந்து நின்று சுற்றிலும் பார்த்தேன். ஓர் ஈ, காக்கா கூட இல்லை. எட்டி கோயிலின் பின்புறமாக சற்று தள்ளி புதரில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளாவது இருக்கிறதா எனப் பார்த்தேன். அதுவும் இல்லை.

என்ன ஏதென்று புரியாமல் உள்ளுக்குள் திரும்பத் திரும்பக் கண்ட காட்சியை நினைத்துப் பார்த்தேன். நம்ப முடியவில்லை. அதேநேரம் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

‘ஏன் இப்படியொரு காட்சி எனக்கு தோன்ற வேண்டும்?’ என எனக்கு நானே கேட்டுக்கொண்டு போய் கோயில் முன்னால் உட்கார்ந்து, கருவறையில் இருந்த லிங்கத்தை விடையோடு சேர்த்து பார்த்தேன்.

சற்றுமுன் பார்த்தது போல் இல்லாமல் மிகமிக அழகாக, அதுவும் உச்சிவான் வந்திருந்த அருக்கனொளி மரக்கிளைகள் ஊடாகப் புகுந்து வந்து பட்டு ஒளிர்ந்துகொண்டிருந்தது. பார்க்கவே அத்தனை சிலிர்ப்பாகவும், பிரமிப்பாகவும் இருந்தது.

‘இதனை பார்க்கத்தான் இத்தனை தூரம் கடந்து இந்த கொல்லிமலைக்கு வந்தோமோ?’ எனத் தோன்றியது.  உடனே கைகூப்பி வணங்கிவிட்டு எழுந்து கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து முன் மண்டபத்தின் கல்சுவரை தொட்டுப் பார்த்தேன். மிகக் குளுமையாக, அதேநேரம் லேசான கதகதப்புடன் இருந்தது.

‘உள்ளிருக்கும் அருவமான லிங்கத்தை தொட்டுப் பார்த்தாலும் இப்படித்தான் இருக்குமோ?’ என நினைத்துக்கொண்டு அச்சுவரை சிலநொடி மெல்ல வருடிவிட்டு, அங்கிருந்து சற்றுதூரம் நடந்து வந்து நின்று திரும்பி மொத்தக் கோயிலையும் ஒற்றைப் பார்வையில் பார்த்தேன்.

அத்தனை நேர்த்தியுடன் அம்மலைக்கு சூட்டப்பட்ட மிக உயரிய அணி போல இருந்தது. சட்டென, ‘இக்கோயில் மட்டும் இவ்வாறு சிதிலமடையாமல் கட்டப்பட்ட காலத்தில் இருந்ததுபோல் இருந்திருந்தால் இந்நேரம் எப்படி இருந்திருக்கும்?’ என எண்ணிப் பார்த்தேன்.

‘இத்தனை அழகான கோயில் ஒன்று இப்பூமி மீது எங்குமே இல்லை’ எனப் பார்த்தவர்கள் எல்லாம் வியந்து சொல்லும் அளவுக்கு இருந்திருக்கும் எனத் தோன்றியது.

கூடவே, பழமையான சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான புறநானூறின் கடவுள் வாழ்த்துப் பாடலும் நினைவுக்கு வந்தது.

‘கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாரும் கொன்றை :

ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த

சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப :

கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை

மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே :

பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் :

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே –

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,

நீர் அறவு அறியாக் கரகத்து,

தாழ்சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே.’

யாருமற்ற அந்த வனத்துக்குள் தனியனாய் நின்றுகொண்டு, தன் திருமுடியிலும் மார்பிலும் கொன்றைப் பூ மாலையணிந்த சிவபெருமானை பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய இப்பாடலை எனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் மெல்ல பாடிக்கொண்டு சிலநிமிடம் அங்கேயே இருந்துவிட்டு, மறுபடியும் கோயில் முகப்பு மண்டபத்தின் முன்னால் வந்து கீழே குனிந்து கருவறை லிங்கத்தை பார்த்து இன்னொரு தடவை வணங்கிவிட்டு, அங்கிருந்து மிதமான வேகத்தில் நடந்து, ‘இக்கோயிலில் இருக்கும் ஈசனின் நாமம் என்னவாக இருக்கும்?’ எனக் கேள்வி கேட்டுக்கொண்டு, ‘கொல்லிமலைநாதர் அல்லது மயிலிறகீசன்’ என அதற்கொரு பதிலும் நானே சொல்லிக்கொண்டு பூங்காவின் எதிரிருந்த தேநீர்க் கடை நோக்கி சென்றேன்.

சட்டென மனத்துள் தோன்றியது, ‘பழமையான சிவன்கோயில் என நாம் ஒன்றை உள்ளுக்குள் காட்சியாக பெருக்கிப் பார்த்துக்கொண்டு வந்தோம். ஆனால் இங்கே இருந்ததே வேறல்லவா…?’. ஆம்!

மெல்ல பாக்கெட்டுக்குள் கைவிட்டு மடித்துவைத்திருந்த தாள்களுக்கு நடுவில் பத்திரமாக இருந்த மயிலிறகை வெளியே எடுத்து ஒருதடவை பார்த்துவிட்டு, எனக்கு நானே புன்னகைத்துக்கொண்டு போய் ஒரு கருந்தேநீர் வாங்கிப் பருக ஆரம்பித்தேன்.

அத்தேநீரில் கண்டுவிட்டு வந்த மிகப் பழமையான சிவாலயத்தின் ஆதிச்சுவை கலந்திருப்பதாய் தோன்றியது. ஆம், ஆம்! 

*

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=