திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

பயணத்தில் ஒரு நாள் என்பது இரண்டு நாட்களுக்குச் சமம் எனத் தோன்றும். காரணம் நாம் பார்க்கும் இடங்கள் தொடங்கி மனிதர்கள் வரைக்கும் அனைத்துமே இரட்டிப்பு அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். இருந்தும் சில பயண தினங்கள் அதிசயமாக ஒரு வாரத்துக்கு மேலான அனுபவத்தை தரக் கூடியதாக அமைந்துவிடுவதுண்டு. அத்தகைய பயண தினம் ஒன்று கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் அமைந்ததை இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஆம்!

இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாதையில் (கன்னியாகுமரி – திப்ரூகர்) நான்கு நாட்கள் தொடர்ந்து பயணித்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு சென்றிருந்தோம், நானும், ஓர் அக்காவும், ஒரு தம்பியும்.

இந்தியாவின் தேயிலை தலைநகரமான அங்கே… முன்நாள் இரவு தொடங்கி மறுநாள் முன்னிரவு வரைக்கும் சுற்றித் திரிந்துவிட்டு, இரவு உணவை ஒரு சாலையோரக் கடையில் உண்டுவிட்டு, நாகலாந்தின் முக்கிய நகரமான திம்மாப்பூருக்கு பேருந்தில் புறப்பட்டு அடுத்தநாள் காலை நான்கு மணிக்கு வந்துசேர்ந்தோம்.

கடும் குளிரில் ரயில் நிலையத்தை தேடிக் கண்டுபிடித்து, ஓர் ஓரமாகப் போய் விடியும் வரைக்கும் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்துவிட்டு, அருகிலிருந்த பயணிகள் காத்திருப்பு அறையில் சென்று ஒவ்வொருவராகக் குளித்துக் கிளம்பி, கொண்டுபோயிருந்த பைகளை அங்கிருந்த லாக்கரில் வைத்துவிட்டு வெளியில் வந்தோம்.

நாகலாந்தின் தலைநகர் திஸ்பூர் என்பதைத் தாண்டி வேறொன்றும் தெரியாமல் போயிருந்தேன் என்பதால், சென்று இறங்கியதுமே பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது எனக்கு.

எங்கும் கையில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் நின்றிருக்க, மக்கள் யாவரும் ஒருவித பயத்தோடும் இயலாமை கலந்த சினத்தோடும் சுதந்திரமற்ற கைதிகள் போல் சென்று வந்துகொண்டிருந்தார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்த ராணுவ வீரர்கள் முழுசுதந்திரம் கொண்டவர்களாக, யார் மீது சந்தேகம் என்றாலும் (கோபம் என்றாலும் கூட) எக்கேள்வியும் கேட்காமல் உடனே அவர்களை கைது செய்யவும், சுட்டுக் கொல்லவும் அதிகாரம் வழங்கப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில்  மொத்த மாநிலத்தையுமே வைத்திருந்ததுதான்.

[இதன் அண்மைய உதாரணமாக கடந்தாண்டு டிசம்பர் நான்காம் தேதி இரவு தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவி பொதுமக்கள் பதிமூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை சொல்லலாம்.]

உடன் வந்த அக்காவிடம் இது குறித்து மிக விரிவாகவே பேசிக்கொண்டு போனேன். நாகலாந்து போன்று இன்னும் அங்கே பல மாநிலங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொன்னார். ஒருபக்கம் அரசாங்கத்தை நினைத்து கோபமாகவும், இன்னொரு பக்கம் அம்மக்களை எண்ணி வருத்தமாகவும் இருந்தது.

அங்கே சாலையோரமாக நின்றிருந்த ராணுவ வீரர் ஒருவர் எங்களை பார்த்துவிட்டு கைகாட்டி பக்கத்தில் கூப்பிட்டு, ”எங்கே இருந்து வர்றீங்க?’’ என்று கேட்டார் இந்தியில்.

உள்ளுக்குள் பயமாக இருந்தாலும் வெளியில் அதைக் காட்டிக்கொள்ளாமல், ”சென்னை’’ என்றோம். உடனே அவர், ”இங்கே எதுக்கு வந்தீங்க?’’ என்று கேட்டார். ”சுற்றிப் பார்க்க வந்தோம்’’ என்றோம்.

ஒரு மாதிரி எங்களை மேலும் கீழும் பார்த்தவர், ”சரி, போய் சுற்றிப் பாருங்க’’ என்று எள்ளல் தொனியில் சொல்லி போகச் சொன்னார்.

‘அப்பாடா’ என்றிருந்தது. கூடவே, ‘எங்கே போகவிட்டு பின்னாலிருந்து சுட்டுவிடுவார்களோ’ என அச்சமாகவும் இருந்தது.

‘வந்து இறங்கிய கொஞ்ச நேரத்திற்கே இப்படி என்றால்… வாழ்நாள் முழுக்க இங்கேயே இருக்கிறார்களே, இவர்கள் நிலைமை என்ன?’ என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு, அருகிலிருந்த தேநீர்க்கடை ஒன்றில் போய் தேநீர் அருந்துவிட்டு, அங்கிருந்து நேராகச் செல்லும் மேடுபள்ளமான சாலை வழியாக நடந்து அந்நகரின் முக்கிய மார்க்கெட் இருக்கும் இடத்துக்கு சென்றோம்.

நம்மூர் மார்க்கெட் போன்று இல்லாமல் சிறுசிறு கடைகளாக ஓர் ஒழுங்கின்றி காணப்பட்டது. உள்ளே நுழைந்து ஒவ்வொரு கடையாக என்னென்ன பொருட்கள் விற்கிறார்கள் என வரிசையாகப் பார்த்துக்கொண்டு வந்தோம்.

‘எந்த ஊருக்குச் சென்றாலும் அவ்வூரிலுள்ள கோயில்களுக்கு அடுத்தபடியாக அங்குள்ள காய்கறி கடைகளைப் போய் பார்க்கவேண்டும்’ என்பார் அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்கள். ‘ஏன்?’ எனக் கேட்டதற்கு, ‘அப்போதுதான் அந்த ஊரின் பண்பாடும் வாழ்வியலும் ஓரளவுக்காவது நமக்கு தெரியவரும்’ என்றார். உண்மையென நினைத்துக்கொண்டு அதுதொடங்கி முடிந்தவரை அவற்றை பின்பற்றி வருகிறேன்.

அங்கிருந்த கடை ஒன்றில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பார்க்க மிக வித்தியாசமாக இருந்ததால் சட்டென நின்றுவிட்டேன். அதோடு எங்கோ அவற்றை பார்த்தது போலவும் இருந்தது. தயக்கத்தோடு கடைக்கார அம்மாவிடம், ”இது என்ன?’’ என்று கேட்டேன். எடைபோடுவது போல் என்னை பார்த்தவர், தன் கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் ஒருமாதிரி அசைத்துக் காட்டி, ”புழு’’ என்றார்.

‘என்னது, புழுவா?’ என்று அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தேன். மெல்லப் புன்னகைத்து, ”நீங்க மதராஸியா?’’ என்று கேட்டார். ”ஆமாம்’’ என்றேன். மறுபடியும் புன்னகைத்து, ”நாகலாந்தின் முக்கிய உணவு இது’’ என்றார், கீழே பரப்பப் போட்டிருந்த விதவிதமான புழுக்களிலிருந்து கை நிறைய அள்ளிக் காட்டி.

அடிவயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வந்தது. ‘சரி’ என தலையாட்டி அந்தம்மாவிடம் சொல்லிவிட்டு, அருகிலிருந்த சிறு சந்து ஒன்றில் நுழைந்து மார்க்கெட்டின் வெளிப்பக்கமாக ஓடிவந்து அங்கிருந்த கட்டைமீது போய் உட்கார்ந்தேன்.

தூரத்திலிருந்து பார்த்துவிட்ட அக்கா வேகமாக வந்து, ”என்னாச்சு வடிவரசு?’’ என்று கேட்டார். சொன்னேன். ‘ஹாஹா’ என சத்தமாக சிரித்துவிட்டு, ”இதுக்கே இப்படின்னா, இன்னும் மார்க்கெட்டோட அந்தப் பக்கம் போய் பார்த்தா அவ்ளோதான் போலயே’’ என்றார்.

ஒன்றும் புரியாதவனாய் அவர் முகத்தை பார்த்தேன். எதையோ சொல்ல வந்தவர் சொல்லாமல் ‘எதுவும் இல்லை’ என தலையாட்டிவிட்டு, ”சரி, நாம போய் ஏதாவது சாப்பிடுவோம்’’ என்றார். ”எதயோ சொல்லவந்து நிறுத்திட்டீங்க’’ என்றேன்.

”அதுவா… நாம போய் முதல்ல சாப்பிடுவோம். அப்புறம் சொல்றேன்’’ என்றார். ‘ஏன்?’ என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு, ”சரிக்கா’’ என்றேன்.

அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து போய் ஓர் உணவகம் தேடிக் கண்டுபிடித்து ஆளுக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு, பக்கத்திலிருந்த தேநீர்க்கடையில் தேநீர் குடித்துவிட்டு திரும்பவும் மார்க்கெட் நோக்கி வந்தோம்.

”வடிவரசு, நீங்க கேட்டீங்களே… அதுக்கு இப்போ பதில் சொல்லட்டுமா?’’ என்றார் அக்கா.

அதற்காகவே காத்திருந்தவனாய் உடனே திரும்பி அவரைப் பார்த்து ஆர்வத்தோடு, ”சொல்லுங்க அக்கா’’ என்றேன்.

உடன் வந்த தம்பியை பார்த்துவிட்டு, ”மார்க்கெட்டோட பின்னாலப் பக்கம் நான்வெஜ் ஏரியா. நம்ம ஊரு மாதிரி இங்க சிக்கன் மட்டன்லாம் பெருசா சாப்பிட மாட்டாங்க. இந்த ஊரோட சிறப்பே நாய்கறிதான்’’ என்றுவிட்டு சத்தமின்றி சிரித்தார்.

”என்னது நாய்கறியா?’’ அதிர்ச்சியோடு கேட்டேன்.

‘ஆமாம்’ எனத் தலையாட்டியவர், ”இந்த ஊருல நாய்கறியும், பன்னிக்கறியும், புழுவும்தான் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. சிலர் பாம்பக் கூட சாப்பிடுறதா சொல்றாங்க. என்ன, நாமளும் சாப்பிடுவோமா…?’’ என்று கேட்டுவிட்டு மென்சத்தத்தில் சிரித்தார்.

முதலில் கேட்க ஒருமாதிரி இருந்தாலும் அதன்பிறகு ‘இதில் என்ன தப்பிருக்கு?’ என்று தோன்றியது. ஏற்கெனவே பாட்டி ஊரில் பன்றி வெட்டுவதை பார்த்திருக்கிறேன் என்பதால், நாய் வெட்டும் இடத்துக்குப் போய் பார்க்கலாம் எனத் தோன்றியது. சொன்னேன். ”நீங்கப் போய் பார்த்துட்டு வாங்க, நாங்க இங்கேயே இருக்கோம்’’ என்றார்கள்.

‘சரி’ எனச் சொல்லிவிட்டு நான் மட்டும் தனியாகப் புறப்பட்டேன்.

”எதுக்கும் முகத்துல  கைக்குட்டைய கட்டிட்டுப் போங்க, நாத்தம் அதிகமா இருக்கும்’’ என்றார்கள். உடனே பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து மூக்கையும் வாயையும் மறைப்பதுபோல் இறுக்கமாக கட்டிக்கொண்டு போய் பார்த்தேன்.

நம்மூர் கசாப்புக் கடைகளில் ஆடு மாடுகளை தோலுரித்து தலைகீழாகக் கட்டி தொங்கவிடுவது போல் நாய்களை தோலுரித்து வரிசையாகக் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். சற்று தூரத்தில் நின்றுதான் பார்த்தேன். அப்போதும் அதன் நாற்றம் தாங்கமுடியாமல் அடிவயிறு [மீண்டும்] குமட்டிக்கொண்டு வந்தது. ஓரமாக ஓடிப்போய் இம்முறை வாந்தியே எடுத்துவிட்டேன்.

‘இதப்போய் எப்டிதான் தின்றாங்களோ?’ என நினைத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தேன். ஒருவரும் என்னை கவனித்ததாகத் தெரியவில்லை. எல்லோரும் அவரவர் வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்.

மெல்ல எழுந்து அருகிலிருந்த கடையில் போய் தண்ணீர் வாங்கி வாய் கொப்புளித்துவிட்டு மார்க்கெட் முன்புறமாக வந்தேன். ”என்ன, வாந்தியா வடிவரசு?’’ என்று கேட்டார் அக்கா. ‘ஆமாம்’ என தலையாட்டிச் சொன்னேன்.

பின் அங்கிருந்து ஆட்டோ பிடித்துக்கொண்டு அரை மணி நேரம் பயணித்து பெரும் மலைகளுக்கு நடுவில் ஓடிய சிற்றாறு ஒன்றை பார்ப்பதற்காகப் போயிருந்தோம்.

மிக அமைதியான இடம்; அழகான ஆறு. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக எங்களை மறந்து நீரிலும் மணலிலும் பாறையிலும் குழந்தைகள் போல் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்துவிட்டு, வர மனமின்றி கிளம்பி அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்துவந்து இரண்டு ஆட்டோ மாறி நகருக்குள் வந்தோம்.

வரும் வழியில் ஓரிடத்தில் சுவரில் அமீர்கான் நடித்த ‘டங்கல்’ படத்தின் போஸ்டர் ஒட்டியிருந்ததை பார்த்துவிட்டு, ”படத்துக்கு போலாமா?” என்றேன். இருவரும் உடனே, ”போலாமே’’ என்றார்கள்.

மதிய உணவை அருகிலிருந்த சிறு உணவகம் ஒன்றில் மிகத் தாமதமாக உண்டுவிட்டு, திரையரங்கம் இருக்கும் இடத்திற்கு வழிகேட்டு மெல்ல நடந்து தெருக்களையும் எதிர்வரும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு போனோம்.

‘ஒரு டிக்கெட் இருநூறு ரூபாய்’ என்றார்கள். ‘சரி’ என மூவருக்கும் வாங்கிக்கொண்டு, எதிரில் இருந்த தேநீர்க் கடையில் போய் தேநீர் குடித்துவிட்டு வந்து முக்கால் மணி நேரம் காத்திருந்து திரையரங்கினுள் நுழைந்தோம்.

நம்மூர் திரையரங்குகள் மாதிரி அகலமாக இல்லாமல், மிகக் குறுகிய ஆனால் நீளமான வீடு போல் அதன் ஒரு முனையில் திரைவைத்து, மேலிருந்து கீழாக இறங்குவது போன்று அவ்வளவு அழகாக கட்டியிருந்தார்கள்.

எங்களோடு சேர்த்து மொத்தமே இருபது பேர்தான் படம் பார்க்க வந்திருப்பார்கள். இத்தனைக்கும் அப்படம் அப்போதுதான் வெளியாகி இந்தியா முழுக்க மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக தேசிய கீதம் போட்டதும், பழக்க தோசத்தில் மூவரும் உடனே எழுந்து நின்றுவிட்டோம். பக்கத்திலிருந்த தம்பிதான் முதலில் பார்த்துவிட்டு சொன்னார், பிறகுதான் நாங்கள் கவனித்தோம்.

எங்களைத் தவிர ஒருவர் கூட அரங்கினுள் எழவில்லை. எல்லோரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அனைவர் முகத்திலும் ஒருவித எதிர்ப்பும் ஒவ்வாமையும் வெளிப்பட்டது. சட்டென மூவரும் பேசிக்கொண்டதுபோல் ஒரேநேரத்தில் ‘எதற்கு வம்பென’ உட்கார்ந்துகொண்டோம்.

‘என்னவாக இருக்கும், ஏன் இவர்கள் யாரும் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்கவில்லை?’ எனும் கேள்வியோடவே படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தோம்.

அங்கே ஓரமாக நின்றிருந்த கல்லூரிப் பெண் ஒருவரிடம் போய் அக்காவும் நானும் கேட்டோம். அதற்கு அவர் சொன்ன பதில் இன்னமும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தேசிய கீதம் ஒலிக்கக் கேட்கும்போதெல்லாம் அவ்வரிகளுக்கு பதிலாக அவரது வார்த்தைகள்தான் கேட்டுக்கொண்டிருக்கிறன. ஆம்!

”நாங்க யாரும் இந்தியர் கிடையாது. அது எங்க தேசிய கீதமும் கிடையாது. அப்போ எதுக்கு அந்தப் பாட்டு ஓடும்போது நாங்க எழுந்து நிற்கணும், மரியாதை கொடுக்கணும்? அதற்கும் எங்களுக்கும்  ஒரு சம்பந்தமும் இல்ல. இந்தியா ஒரு சுதந்திர நாடுன்னு பெருமையா சொல்றாங்க. ஆனா, இங்கே எங்களுக்கு எந்த சுதந்திரமும் இல்ல. அதனாலதான்  நாங்க யாரும் எழுந்து நிற்கல’’.

அங்கிருந்து மெல்ல நடந்து வந்து, ரயில் நிலையம் முன்னாலிருந்த உணவகத்தில் போய் பசியின்றி ஆளுக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு, ஏதோ சத்தம் கேட்க எழுந்து வெளியில் வந்தோம்.

ஒரு கடைக்காரரை அங்கே நான்கு ராணுவ வீரர்கள் சுற்றி நின்று தம் பூட்ஸ் காலால் மாறிமாறி உதைத்து இந்தியில் எதையோ சொல்லி திட்டிக் கொண்டிருந்தார்கள்.

”என்னாச்சு, ஏன் அவர அடிக்கிறாங்க?’’ என்று பக்கத்திலிருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டோம். இயலாமையுடன் வராத புன்னகையை வரவழைத்துக் காட்டி, ”தினமும் இப்படித்தான் இங்கே’’ என்றுவிட்டு நடக்கமுடியாமல் அங்கிருந்து எதிர்பக்கமாக நடந்து இருளுக்குள் மறைந்து போனார். ஆம்!

நாகலாந்து பயணத்தின் ‘எனது இந்த ஒரு நாளினை’ எப்போது நினைத்தாலும் ஒருவாரத்திற்கு மேலான அனுபவத்தையும், பாடத்தையும் தந்த நாளாகத்தான் உணர்கிறேன்; பார்க்கிறேன். வெறென்ன சொல்ல?

*

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=