திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்
எனக்கொரு பழக்கம் உண்டு. எங்கே எவ்வூருக்கு சென்றாலும் யாரிடமும் போய் வழி கேட்காமல் முடிந்தவரை செல்ல வேண்டிய இடத்தை நானே தேடிக் கண்டுபிடித்து அடைவது.
அது ஏற்கனவே சென்ற ஊராக இருந்தாலும் சரி, முதல்முறை செல்லும் ஊராக இருந்தாலும் சரி, இப்பழக்கம் இன்றுவரை என்னுள் மாறாமல் இருந்து வருகிறது.
‘எப்போது இந்தப் பழக்கம் என்னில் வந்திருக்கும்?’ என இப்போது எண்ணிப் பார்க்கையில், மிகச் சிறுவயதில் எங்களூர் தெருக்களில் தனியனாய் ‘இப்படி போனா எங்கே போகலாம்? ஏன் அந்த வழியா நாம் வரக்கூடாது?’ என எனக்கு நானே கேட்டுக்கொண்டு புதுப்புது வழியாக நடந்து நடந்து கண்டுபிடித்து அதன் சுவையை உணர்ந்ததில் ஆரம்பித்திருக்கும் எனத் தோன்றுகிறது.
இதில் விந்தை என்னவென்றால் மனிதர்கள் நடமாடும் ஊர்களுக்குள் மட்டுமல்லாமல் காடு மேடுகளிலும், தெரிந்த மொழி பேசும் நம்மூர்களில் மட்டுமல்லாது தெரியாத மொழிபேசும் வெளி மாநிலங்களிலும், அயல்நாட்டிலும் கூட இப்பழக்கம் தொடர்வதுதான். ஆம்!
கடந்து 2015 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் மலேசியா சென்றிருந்தேன். அதுவும் அந்நாட்டு அரசாங்கம் தம் நாட்டின் அருமை பெருமைகள் தொடங்கி புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் வரை உலகுக்கு அறிமுகம் செய்யும் விதமாக, கிட்டத்தட்ட அறுபதுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பத்திரிகையாளர்களில் ஒருவனாக [இந்தியாவிலிருந்து ஏழு பேர்களிலும், தமிழகத்திலிருந்து தனித்தும்] போயிருந்தேன்.
இதை இப்படியும் சொல்லலாம். தமிழகத்தின் முகமாக, தமிழக ஊடகங்களின் பிரதிநிதியாக சென்றிருந்தேன். ஆம்!
கோலாலம்பூரின் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான பெர்ஜயா டைம்ஸ் ஸ்கொயரின் முப்பத்தியாறாவது மாடியில் எனக்கு மட்டும் தனியாக ஓர் அறை ஒதுக்கியிருந்தார்கள்.
வானுயர நின்றிருந்த அதனுள்ளிருந்து கண்ணாடி சாளரம் வழியாகப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் விரிந்து பெருகிய நகரம் பார்க்கப் பார்க்கத் திகட்டாததாய் அத்தனை பிரமாண்டமாய்த் தெரியும். அதிலும் குறிப்பாக மிகச் சிறிய எறும்புகள் போல மனிதர்கள் கீழே சாலைகளில் போகும் காட்சியும், மரவட்டை போன்று மோனோ ரயில் ஊர்ந்து செல்லும் அழகும் அத்தனை இனிதாக இருக்கும்.
முதல் இரண்டு நாட்கள் மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயில் ஆரம்பித்து, இரட்டை கோபுரக் கட்டிடம், ஆசியாவின் மிகப்பெரிய தீம் பார்க்கான சன்வே லகூன் உள்ளிட்ட இன்னும் பல இடங்களை சுற்றிக் காட்டியவர்கள், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அரைநாள் அறையிலேயே ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.
‘ஆடிய கால்கள் சும்மா இருக்காது’ என்பார்களே, அதுபோல் சுற்றிய என் கால்களும் சும்மா இருக்காமல் அதிகாலையில் சீக்கிரமே எழுந்து ஒரு கருந்தேநீர் போட்டுக்கொண்டு சாளரத்தருகில் போய் உட்கார்ந்து, இரவின் மெல்லிருளிலிருந்து பகலின் துளிரொளிக்கு மாறிக்கொண்டிருந்த நகரையும், அதன் உயர உயரமான கட்டிடங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
சட்டென ஓரிடத்தில் ஓர் அழகிய தேவாலயம் இருப்பது கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும் ‘நாம ஏன் அங்கே தனியா போய் வரக்கூடாது?’ எனத் தோன்றியது. யோசிக்கவெல்லாம் இல்லை. உடனே, ‘சரி, போய் வருவோம்’ என மனத்துள் முடிவெடுத்து, வேகவேகமாக வெந்நீரில் குளித்துக் கிளம்பி மேலிருந்து கீழே வந்து கூட்டமில்லாத உணவரங்கில் போய் தனியாக உட்கார்ந்து காலை உணவை உண்டுவிட்டு வெளியில் வந்தேன்.
இத்தனைக்கும் அந்த தேவாலயம் நான் தங்கியிருந்த இடத்திலிருந்து குறைந்தது நான்கு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். அதோடு மிகப் பெரிய தேவாலயம் எல்லாம் கிடையாது. இருந்தும் அதைப் பார்த்த மாத்திரத்தில் ஈர்க்கப்பட்டு கிளம்பிவிட்டேன்.
ஹோட்டல் முன்னாலிருந்த சாலையைக் கடந்து மோனோ ரயில் ஓடும் மேம்பாலத்தடியில் நுழைந்து எதிர்ப்பட்ட சாலைகளில் ‘இந்த வழியா போனா போயிடலாம், இப்படி வளைந்து அந்தப் பக்கமா நடந்தா சென்றிடலாம்’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டு, நகரையும் வியக்கவைக்கும் அதன் கட்டிடங்களையும் எதிர்வரும் மனிதர்களின் முகங்களையும் பார்த்துக்கொண்டு அவசரமின்றி மெதுவாக நடந்து போனேன்.
சரியாக ஒரு கிலோமீட்டர் தூரம் வந்திருப்பேன். சட்டென்று பெயர் தெரியாத பெரிய மரமொன்று அங்கே சாலையோரமாக இருக்கக் கண்டு அதனடியில் போய் ஆசுவாசமாய் சற்றுநேரம் நின்று திரும்பிப் பின்னால் பார்த்தேன். தூரத்தில் மிகப் பிரமாண்டமாய் நான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் தெரிந்தது.
‘அதில் எங்கே நான் உட்கார்ந்து பார்த்த அறையின் சாளரம்?’ என ஓரிருநிமிடம் தேடிப்பார்த்துவிட்டு, அம்மரத்தை மெல்லத் தொட்டு வருடிவிட்டு, அங்கிருந்து தேவாலயம் நோக்கி மறுபடியும் நடக்க ஆரம்பித்தேன்.
‘அது என்ன தேவாலயம், எங்கே இருக்கிறது, இந்நேரம் திறந்திருக்குமா?’ போன்ற எத்தகவலும் தெரியாமல், அந்த மொத்த பெருநகரத்தில் ஒருவரைக் கூட தெரியாதவனாய், நான் தங்கியிருந்த ஹோட்டலின் பெயரையும் அறை எண்ணையும் மட்டுமே தெரிந்தவனாய், அந்நாட்டுப் பணமான ஒரு ரிங்கிட் கூட இல்லாமல், எது தந்த உந்துதலில் போகிறேன் எனத் தெரியாமல் நான் பாட்டுக்கு குத்துமதிப்பாக, இருந்தாலும் மனத்துக்குள் ‘இந்த வழியாதான் இருக்கும்’ எனும் நம்பிக்கையுடன் நடந்து அடுத்த அரை மணிநேரத்தில் சரியாக என் அறையிலிருந்து பார்த்த தேவாலயத்தை கண்டுபிடித்து அதன் முன்னால் சென்று நின்றுவிட்டேன்.
இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அங்கே அத்தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாட்டுக் கூட்டம் தமிழில் நடந்துகொண்டிருந்ததுதான்.
இதை ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. தேடிவந்த தேவாலயத்தை நினைத்ததுபோல் யாரிடமும் வழி கேட்காமல் நானே கண்டுபிடித்தது ஒரு மகிழ்ச்சி என்றால், அங்கே நம் தாய்மொழியான தமிழில் இறைவழிபாட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது இன்னொரு மகிழ்ச்சி. மொத்தத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்பார்களே, அப்படித்தான் இருந்தது எனக்கு.
மெல்ல தேவாலய வளாகத்துள் போய் காலணியை ஓர் ஓரமாக அதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் விட்டுவிட்டு, ஆலயத்துள் நுழைந்து வலது பக்கமாக ஒருவர் மட்டுமே உட்கார்ந்திருந்த கடைசி வரிசைக்கு நான்கு வரிசை முன்னால் போய் உட்கார்ந்துகொண்டேன்.
முன்னாலிருந்த மேசைமேல் ‘திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு’ என தமிழில் பொறிக்கப்பட்ட அழகிய கருநிற அட்டைகொண்ட பைபிலும், அதனுள் சற்றுமுன் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்த வழிபாட்டுக் கூட்ட நிரலும், அதில் பாடப்போகும் பாடல் வரிகள் அச்சிட்ட தாளும் வைக்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே நான் படித்த லயோலா கல்லூரி தேவாலயம் உள்ளிட்ட நான்கைந்து ஆலாயங்களில் நடைபெற்ற இறைவழிபாட்டுக் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன் என்பதால், அக்கூட்டத்தில் கலந்துகொண்டது பெரும் மகிழ்வை தந்ததெனக்கு.
குறைந்தது நூறு பேருக்குமேல் இருந்திருப்பார்கள். மெல்ல ஒவ்வொருவர் முகமாகப் பார்த்தேன். எல்லாம் தமிழ்முகம். எனினும் சிறு வேறுபாடு தெரிந்தது. ஒரு பார்வையாளனாய் அடுத்த அரை மணிநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்து கூட்டம் முடிந்ததும் எழுந்து போய் அழகிய ஏசுநாதர் வடிவத்தை மிகப் பக்கத்திலிருந்து வணங்கிவிட்டு வெளியில் வந்தேன்.
ஆங்காங்கே இரண்டு மூன்று பேர்களாக நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். ‘யாரிடமாவது போய் பேசலாமா?’ என நினைத்தபோது ஓர் ஐந்து வயது சிறுமி தன் தந்தையுடன் வந்து, ”மாமா, எனக்கு இன்னைக்கு ஹாப்பி பர்த்டே… சாக்லேட் எடுத்துக்கோங்க’’ என மழலை மொழியில் சொல்லிக்கொண்டு, தனது கையில் வைத்திருந்த சிறு அட்டைப்பெட்டியை என்னிடம் நீட்டினாள்.
அந்நிய மண்ணில், அதுவும் கடல் கடந்து இத்தனை கிலோமீட்டர் தூரம் தாண்டி வந்து மழலைக் குரலில் தமிழைக் கேட்டது, ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என பாரதி சொல்வானே, அதை அப்போதுதான் முதல்தடவையாக உணர்ந்தேன்.
பல் தெரியாமல் இதழ் விரித்து அவளது தித்திப்பு முகத்தைப் பார்த்து மெல்லப் புன்னகைத்துவிட்டு அதிலிருந்து ஒரு சாக்லேட் எடுத்துக்கொண்டு, ”முதலழுகை தின வாழ்த்துகள் பாப்பா’’ என்றேன்.
என் வாழ்த்தை கேட்டு அதிசயத்தவளாய் நொடிநேரம் கண்கள் மூடி சிரித்துவிட்டு, ”மிக்க நன்றி மாமா. and உங்க wishes so different’’ என ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லி, மறுபடியும் புன்னகைத்து உதடசைத்து கைகாட்டி ‘bye’ என்று சொல்லிவிட்டுப் போய் ஆங்காங்கே நின்றிருந்தவர்களிடம் சாக்லேட் தந்துகொண்டு, நடுநடுவில் திரும்பி என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
நானும் பதிலுக்கு சிரித்துவிட்டு, ஓரமாக விட்டிருந்த காலணியை போய் மாட்டிக்கொண்டு பக்கத்திலிருந்த இருக்கையில் சென்று உட்காந்து, மிகப் பழமையான அந்த தேவாலயத்தையும், அதன் முன்னால் நின்றிருந்த தமிழ் பேசும் முகங்களையும், சாக்லேட் தந்துவிட்டுப் போன பெயர் தெரியாத சிறுமியையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தேன்.
கொண்டுவந்திருந்த சாக்லேட் மொத்தத்தையும் அங்கிருந்தவர்களிடம் தந்துவிட்டு தன் தந்தையிடம் ஏதோ சொன்ன சிறுமி, சட்டென்று என்னை நோக்கி தன் வெண்ணிற கவுனை இரு கைகளாலும் தூக்கிப் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடி வந்தாள்.
‘ஏதோ சொல்லத்தான் வருகிறாள்’ என ஆர்வத்தோடு காத்திருந்தேன். சிரிப்போடு வந்தவள் அருகிலிருந்த காலியிடத்தில் உட்கார்ந்து தன் தந்தையை பார்த்துவிட்டு, கையில் மறைத்து வைத்திருந்த கடைசி சாக்லெட்டை என்னிடம் நீட்டி, ”மாமா, இது உங்களோட sweet wishes-க்கு’’ என்றாள்.
மெல்லப் புன்னகைத்துக்கொண்டு வாங்கி அதை திரும்பவும் அவளிடமே நீட்டி, ”இது உன்னோட cute smile-க்கு’’ என்றேன்.
என்ன சொல்வதென்று தெரியாமல் தனக்குள் எதையோ நினைத்தவளாய் மென்சத்தத்தில் சிரித்துக்கொண்டு எழுந்தவள், ”thank you மாமா’’ எனச் சொல்லி வாங்கிக்கொண்டு, வந்ததை விட வேகமாக தன் தந்தை நின்றிருக்கும் ஆலய முகப்புக்கு ஓடிப்போய் நான் தந்த சாக்லெட்டை அவரிடம் காட்டி மகிழ்ந்தாள்.
உடனே பாக்கெட்டிலிருந்த நகர்பேசியை எடுத்து, தன் தந்தையின் பின்னால் நின்றுகொண்டு எட்டிஎட்டி என்னைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்த சிறுமியை பார்த்துவிட்டு, பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் ஒன்றை அதில் எழுத ஆரம்பித்தேன்.
அடுத்த பத்து நிமிடத்துக்குள் பல்லவி எழுதி முடிக்கவும், அவள் தன் அப்பாவோடு செந்நிற காரில் ஏறிக்கொண்டு கண்ணாடி வழியாக என்னைப் பார்த்து சிரித்து கை காட்டிவிட்டு செல்லவும் சரியாக இருந்தது.
இன்னும் கொஞ்சநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்துவிட்டு, மெல்ல எழுந்து தேவாலய வளாகத்திலிருந்து வெளியில் வந்து சாலையோரமாக நின்றுகொண்டு சுற்றிலும் பார்த்தேன்.
தூரத்தில் மிகச் சின்னதாய் இரட்டை கம்பம் போல் நான் தங்கியிருந்த ஹோட்டல் தெரிந்தது. சட்டெனப் புன்னகைத்துக்கொண்டு வந்த வழியாகச் செல்லாமல், இம்முறை எதிர்பக்கமாக வேறு புதுவழியில் நடக்க ஆரம்பித்தேன். ஆம்!
எப்படியும் நான் யாரிடமும் வழி கேட்காமல் மதியத்திற்குள் அங்கே சென்றுவிடுவேன் என உறுதியாகத் தோன்றியது. பிறகென்ன, உற்சாகமாக நடக்கவேண்டியதுதான்!
*
‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்
திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி
திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்
திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்
திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை
திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்
திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி