சாமிக்கண்ணு மவனாகவே இருங்கள் – ஆண்டாள் பிரியதர்ஷினி

அவரை நான் முதன்முதலாகச் சந்தித்த போது எனக்குள் ஆச்சர்யம் மேலோங்கியது. மென்மையான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வெகு இயல்பான மொழியில். அவரது குரல் இலகுவாக, தோழமையோடு இருந்தது. இந்தத் தளத்தில் இயங்குபவர்களிடம் நான் அவதானித்த சனாதனத்தின் சாயல் ஏதுமில்லாத மரியாதை கசியும் குரல். அது முதல் ஆச்சர்யம். இரண்டாவது அவரது உயரம். நான் அண்ணாந்து பார்த்த அந்தத் தோழர், “நான் விகடனில் பணியாற்றுகிறேன்… உங்களுடைய நேர்முகத்துக்காக வந்திருக்கிறேன்..’’ என்ற அந்தக் குரலின் தோழமை இப்போதும் என் மனதில் ரீங்கரிக்கிறது.
காற்றை விடவும் மெலிந்த அவரிடம் ததும்பிய தமிழ் ரசனை கனமானது. மற்றவரைக் காயப்படுத்தாத முன்னிறுப்பில் பேசும் அவர்… மெல்லின வார்த்தைகளையே வார்த்தெடுத்துப் பேசும் அவர்… அவரவர் உயரத்தை அவரவருக்குத் தந்து மரியாதையாகப் பேசும் அவர்… இப்படியாக நான் உணர்ந்த அவருக்கான ஆளுமையின் திசைகளையும் காரணங்களையும் நான் அப்போது யோசித்தாலும் – கால ஓட்டத்தில் அவ்வப்போது அவர் குறித்த செய்திகள் என்னை எட்டும்போது மகிழ்ச்சி கொள்வேன். “சரி சரியான முனைப்போடுதான் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்’’ என்று. எல்லாவற்றின் ஒட்டுமொத்தக் கலவையாக என் கையில் இப்போது “ஐயா (எ) 95 வயது குழந்தை’’ ஐயாவைக் குழந்தையாக உணரும் அந்த ஆளுமை கவிஞர் வடிவரசு. அச்சு அசலாக அவரது அப்பாவின் நீட்சிதான் வடிவரசு.
“நீ பொறந்தப்போ கைஅளவு கூட இல்ல… படிச்ச டாக்டருங்களே ஒண்ணு பண்ணமுடியாதுன்னு சொன்னவன – வடுவச்சி அம்மாதான் காபந்து பண்ணா. அவ பேருல இருந்துதான் ஒம்பேர வச்சன்..’’ வடிவரசு பெயர்க் காரணத்தை உயிரோட்டமாக ஐயா சொல்லுவது ஆச்சர்யமில்லை. நவநாகரிக சென்னையில் உழன்றும், திரைத்துறையில் திறமையை, தமிழை, பாடலை நிறைக்கும் செயல்பாடுகளில் ததும்பியும் இருக்கும் வடிவரசு – மின்மினிப்பூச்சியாக, செயற்கை விளக்காக, நாகரிக மோஸ்தரில் தன் தமிழ்ப்பெயரை மாற்றிக் கொள்ளாமல் இயங்குவதுதான் ஆச்சர்யங்களின் உச்சம்.
மண்வாசனை, பண்பாட்டு வாசனை மிக்க பெயர் மட்டுமல்லாமல் மனசும் வாய்த்திருக்கிறது – அவரது ஐயாவிடமிருந்து. கதை சொல்லும் தகப்பனுக்கே கதை நாயகன் ஆகின்ற வடிவரசு – உள்ளங்கையை விரித்துக் காட்டி சகலத்தையும் நேர்மையாகப் பேசுகிறார்.
ஐயாவால் இரண்டு வருடம் படித்த ஐந்தாம் வகுப்பு. ’சாயாரம்’ குடித்த ஐயாவை – அதிலிருந்து மீட்டது, ஐயாவுக்கும் ஆத்தாளுக்குமான சாராயச் சண்டைகள். அக்கா கல்யாணத்துக்கு ஒரே சொத்தான நிலத்தை விற்றது, தனக்கு இரண்டு காதலிகள் வாய்த்தது, வறுமையிலும் வறுமை அப்படியொரு வறுமையை வாழ்ந்தது, புளியங்கொட்டை, பலாக்கொட்டையை அவித்துத் தின்று பசியாறிய வலி, சாப்பாட்டை வீணடிப்பதைக் கண்டால் வரும் ரெளத்திரம், துணி துவைப்பது, சமையல் செய்வது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, பொருட்களை நேர்த்தியாக வைத்திருப்பதை – ஐயா செய்வதைப் போலவே, தானும் இயல்பாக, விகல்பமின்றி, மன விகாரமின்றிச் செய்கிறார் வடிவரசு.
பல ஏக்கர் நிலத்தைப் பொதுப் பயன்பாட்டுக்குத் தானமாகக் கொடுத்து தனக்கென இருந்த கையளவு நிலத்தையும் மகள் திருமணத்துக்காக விற்ற பின்பும் – ‘எதுவும் நிரந்தரமில்ல. இருக்கறத இல்லாதவங்களுக்குக் கொடுத்து வாழணும்… உழைப்புதான் பெரிய ஆயுதம். அத மூச்சு மாதிரி சுவாசிக்கணும்..’ என்று சொல்கின்ற இயல்பான ஐயா – வெளிநாட்டில் மனித வள மேலாண்மை படிக்கவில்லை. முதுகலை சமூக சேவை படிக்கவில்லை. அவர் படித்தது வாழ்வியல் அறம் மட்டுமே… அதனால்தான் இயற்கையை, பறவையை, விலங்குகளை, பாடல்களை, இசையை, கோயில் தெய்வச்சிற்பங்களை, மனிதர்களை – ஒரே நேர்கோட்டில் நேசிக்க முடிகிறது. வடிவரசு நேசத்தை இயல்பாக ஏற்கமுடிகிறது. சாதி, மதம் வேறுபாடுகள் எந்தக் குருதிக்கும் இல்லை என்பதாக ஞானம் உரைக்க முடிகிறது.
90 வயதுக்குமேல் ஐயாவையும், ஆத்தாவையும் விமானப்பயணம் செய்ய வைத்திருக்கிறார் வடிவரசு. அது பெரிதில்லை. கையும் காலும் காய்த்துப் போய் பாளமாகப் பிளந்த கறுத்த நாகரீகம் தெரியாத இரண்டு கிராமத்து உழைப்பாளிகளோடு விமானத்தில் பறந்தால் – விமானத்தில் எல்லோரும் தன்னை வேடிக்கை பார்ப்பார்கள். நாட்டுக்கட்டை என்று முகம் சுளிப்பார்கள் என்றெல்லாம் தயங்காமல் – எல்லா இடங்களிலும் ஐயாவையும் ஆத்தாளையும் காக்காய்ப் பொன் மினுமினுப்பு இல்லாமல் அப்படியே பெருமை செய்யும், பெருமைப்படுத்தும் வடிவரசு… உங்களிடமிருந்து இளைய தலைமுறை ஈர்த்துக்கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் ஓராயிரம் அறங்கள் ததும்பி வழிந்து நிறைகின்றன உங்களிடம்.

13ல் துவங்கி 100ஆம் பக்கம் வரையிலும் – உங்கள் ஐயா – நம் எல்லோருக்குமான ஐயாவாகிறார். காடு கழனியில், மேடு, வரப்பில், வயக்காட்டில், ஆடு, மாடு கொட்டாயில், கம்மாயில், மலையில், திருவிழாவில் சாமி சப்பரத்தில் அப்பாவின் விரல் பிடித்துக் கண்ணகல விரித்து, வியப்பும், ஆச்சர்யமுமாக நடக்கும் கிராமத்துப் பால்யம் – ஒவ்வொரு வார்த்தையிலும் பரவசம் தருகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் பச்சையமாய் வாசம் தருகிறது.
“கஷ்டப்படறது தப்பில்ல. நல்லாக் கஷ்டப்படு… நம்மள மாரி தூக்கிவிடவும் வழிகாட்டவும் ஆளில்லாதவங்களுக்கு கஷ்டம்தான் தொண. கஷ்டப்படு பாத்துப்போம்..’’ எந்த வேதமும் சொல்லும் தத்துவத்தை விடவும் ஐயாவின் இந்த கிராமத்து வேதம் – என் உயிருக்குப் புல்லரிப்பு தருகிறது. ஐயாவின் ஒவ்வொரு அனுபவமும் எனக்குத் தந்த ஜில்லிப்பை, சிலிர்ப்பை, கண்ணீரை, பரிதவிப்பை, பதைபதைப்பை, உள்ளங்கையில் பொத்தித் தருகிறேன் காய்த்துப்போன ஐயாவின் பாதத்துக் காணிக்கையாக…
உங்களின் முனைப்புகள், வெற்றிகளாகட்டும் என்கிற என் ஆழ்மன நம்பிக்கையை அட்சதையாக…
விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயாவும் – உழைப்பின் ஆணிவேர்தான். அவருக்கு என் வணக்கம் – மகளின் உரிமையாக…
வாழ்க வடிவரசு… உங்களின் மனசுக்குள்ளிருக்கும் நஞ்சை, புஞ்சை, மண்வாசனை எல்லாமே இதுபோன்று ஆவணமாகட்டும். வருங்காலக் கணினி மனிதர்களுக்கு ஐயா போன்ற கழனி மனிதர்கள்தான் கனவு மனிதர்களாக இருப்பார்கள். எப்போதும் மாறிப் போகாமல் சாமிக்கண்ணு மவனாகவே இருங்கள் வடிவரசு. என்றும் அன்புடன்,
– ஆண்டாள் பிரியதர்ஷினி
19/3/2020
*
ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை