ஐயா (எ) 95 வயது குழந்தை! – என்னுரை

ஐயா (எ) 95 வயது குழந்தை!

எனக்கு மட்டும் ஐயாவாக இருந்தவர் இப்போது பலருக்கும் ஐயாவாகியிருப்பது எத்தனைப் பெரிய மகிழ்வைத் தருகிறது தெரியுமா?

ஐயாவைப் பற்றி முதலில் மூன்று பதிவுகள்தான் முகநூலில் எழுதியிருந்தேன். ஒன்று, அவரது பிறந்தநாளுக்கு எழுதியது. இரண்டு, அவருடனான விமானப் பயணக் கட்டுரை. மூன்றாவது, ஐயா என் திருமணம் பற்றி பேசியது குறித்தது.

இம்மூன்று கட்டுரைகளையும் முகநூல் மற்றும் குமுதம் சிநேகிதியில் வாசித்தவர்களில் பலர் (தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட) நெகிழ்ந்ததும் கண்ணீர் சிந்தியதும் ஒருபுறம் இருந்தாலும், இதுவரை ஐம்பதுக்கும் அதிகமானோர் ஐயாவை சந்திக்க விரும்பிக் கேட்டதும், அவர் எங்களுக்கும் ஐயா என உரிமையுடன் சொன்னதும் ஆச்சர்யத்தை விட பெருமகிழ்வையே தந்தது.

அதிலும்… அண்ணன் ஒருவர் ஐயாவை தன் ஹீரோ என்றதும், உங்களையும் ஐயாவையும் பார்த்து தன் பெற்றோர்களுடன் கூடுதல் நேரம் ஒதுக்குவதாகவும் அவர்களுக்குப் பிடித்ததை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகவும் சிலர் சொன்னதும், எனக்குத் தெரிந்த இருவர் தங்கள் வயதான பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்றதும், இன்னும் பலர் தங்கள் பெற்றோரை கூடிய சீக்கிரத்தில் அழைத்துப்போக உள்ளதாகச் சொன்னதும், சிலர் பெற்றோர்களுடன் எப்படி இருக்கவேண்டுமென உங்களைப் பார்த்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் சொன்னது அவ்வளவு மன நிறைவைத் தந்தது.

அத்தோடு… என் மூன்றாவது பதிவைப் பார்த்துவிட்டு நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளுமை உட்பட நான்கைந்து பேர் ‘உங்க ஐயா… இப்போ எங்களுக்கும் ஐயாவா ஆய்ட்டாரு தெரியுமா?’ என உணர்வுப்பெருக்கில் கூறியதோடு, ‘நீங்க ஏன் ஐயாவப் பத்தி ‘ஐயா’ன்ற தலைப்புலயே ஒரு புத்தகம் எழுதக்கூடாது? அது வர்ற தலைமுறைக்கு மட்டுமில்லாம… இப்போ இருக்கப் பலருக்கும் அன்பயும் தந்தை மகன் உறவயும் பத்தி இன்னும் தெரியாத பல விஷயத்த சொல்லித்தருமே’ என்ற வினாவையும் அன்புக்கோரிக்கையையும் வைத்தார்கள்.

‘என்னது… ஐயாவப் பத்தி புத்தகமா? அதுவும் நாம எழுதறதா? எப்படி எழுதப்போறோம்? அத யாரு பதிப்பிக்கப்போறாங்க? யாரு படிக்கப் போறாங்க?’ என பல கேள்விகள்.

ஒரு பக்கம் எழுதித்தான் பார்ப்போமே என மனம் சொன்னாலும், ஏற்கெனவே எழுதிய நான்கு புத்தகங்களை வெளியிடமுடியாமல் வைத்திருப்பதை புத்தி நினைவுபடுத்தியது.

ஐயா – அன்பின் ஆழ்கடல்; ஆச்சர்ய மனிதர்; உழைப்பின் முகவரி; நற்தந்தை; ஆசான்; நண்பர். இன்னும் இன்னும்.

எழுதத்தான் எவ்வளவோ இருக்கிறதே. பிறகேன் யோசிக்கவேண்டும்?

நிஜம்தான் எவ்வளவு அழகானது. அதிலும் அன்பு நொடிந்துபோன இக்காலத்தில் ஐயாவைப் போன்ற எளிய அன்புரு மனிதர்கள் பற்றி எழுதுதல் என்பது காலத்தின் அவசியத் தேவையன்றி வேறென்ன?

சிலர் நினைக்கலாம், ‘என்னடா இவன் எப்பப்பாரு ஐயா அது இதுன்னு பில்டப் கொடுத்திட்டிருக்கான்’ என.

நினைக்கட்டுமே. அன்பின் சுவடறியாதவர்களின் ஏளனக் கூச்சலின்றி வேறென்ன அது?

வெறும் மூன்று பதிவுக்கே இவ்வளவு பேரின் உள்ளத்தில் ஐயா நுழைந்திருக்கிறார், நல் மாற்றத்தை விதைத்திருக்கிறார், தங்கள் பெற்றோரைக் கொண்டாட வைத்திருக்கிறாரென்றால் இதைவிட வேறென்ன வேண்டும்?

ஆம்! ஐயாவின் வாழ்வு என் மூலமாகப் பதிவுசெய்யவேண்டிய அவசிய ஒன்றாகவே கருதுகிறேன்.

இது காலத்தின் கட்டளை; பேரன்பின் அழைப்பு; வாழ்வின் தேடல்; நினைவின் வழிகாட்டல்.

ஐயா… படிக்காதவர். தன் பெயரைத் தவிர வெறெதுவும் எழுதத்தெரியாதவர். இருப்பினும் அவரெனக்குக் கற்றுத்தந்தது ஏராளம். அவரால் வாழ்ந்தவர்கள் அதிகம். வாழ்பவர்கள் இன்னும் இன்னும் அதிகம்.

செப்டம்பர் ஒன்றாம் தேதி (2019) ஐயாவின் 95 ஆவது பிறந்தநாள். இந்த பிறந்தநாளுக்கு… இல்லை இல்லை முதலழுகை தினத்துக்கு (என் ஸ்டைலில்… ஹிஹி) இம்மகனின் அன்புப் பரிசாக, அவர் சற்றும் எதிர்பாராத, அவரைப் பற்றி நான் எழுதிய ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ என்னும் இப்புத்தகத்தை அவரது கைகளில் தருகிறேன்.

ஆம்! இதைவிட எனக்கென்ன மகிழ்வுளது சொல்லுங்கள்!

இது வெறும் புத்தகமன்று; வாழ்வு. படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நுழையும். நுழைந்து வற்றிப்போன அன்பை சுரக்க வைக்கும். சுரக்க வைத்து அன்பின் பாதையில் நடக்க வைக்கும். நடக்க வைத்து ஒவ்வொரு நொடியையும் அன்பின் பேரில் மலரவைக்கும். மலரவும் மலர்த்தவும் தயாராகுங்கள்.

வாழ்த்துகளுடன்,

வடிவரசு.

(06.06.2019)

*

ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை

ஐயா () 95 வயது குழந்தை! – 1

ஐயா () 95 வயது குழந்தை! – 2

ஐயா () 95 வயது குழந்தை! – 3

ஐயா () 95 வயது குழந்தை! – 4

ஐயா () 95 வயது குழந்தை! – 5

ஐயா () 95 வயது குழந்தை! – 6

ஐயா () 95 வயது குழந்தை! – 7

ஐயா () 95 வயது குழந்தை! – 8

ஐயா () 95 வயது குழந்தை! – 9

ஐயா () 95 வயது குழந்தை! – 10

ஐயா () 95 வயது குழந்தை! – 11

ஐயா () 95 வயது குழந்தை! – 12

ஐயா () 95 வயது குழந்தை! – 13

ஐயா () 95 வயது குழந்தை! – 14

ஐயா () 95 வயது குழந்தை! – 15

ஐயா () 95 வயதுகுழந்தை! – ‘கண்மணி குணசேகரன்‘ பின்னுரை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=