அரம்பு போற்றுதும் – 033 : பிறந்தநாள் பரிசு

ஜூன் 06, 2026
*
சென்ற வாரத்தில் ஒருநாள் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போல தோன்றியதால் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போய் பரிசோதனை செய்துவிட்டு வந்தேன்.
அப்போது உடனிருந்த ஐ, ”அப்பா என்ன பண்ண?’’ என்று கேட்டான்.
உடனே, ”அப்பாவுக்கு பீ.பி. செக் பண்ணன்’’ என்றேன்.
இது அத்தோடு; அன்றோடு முடிந்தது.
இன்று எனது பிறந்தநாள் என்பதால் அதிகாலை மிகச் சீக்கிரமாக எழுந்து குளித்துக் கிளம்பி, செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில், பாலாறும் சேயாறு என்னும் செய்யாறும் கலக்கும் முக்கூடல் என்னும் இடத்தில், சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஆதுலர் சாலை என்னும் மருத்துவமனை செயல்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குப் போய்விட்டு மதியம் போல வீட்டுக்கு வந்தேன்.
எனக்காக சாப்பிட்டுவிட்டு உறங்காமல் காத்துக்கொண்டிருந்த ஐ, ஓடிவந்து தன் இன்மிகு மழலை மொழியால் தமிழுக்கு மேலும் தித்திப்பு சேர்த்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கட்டிக்கொண்டான்.
உவந்து தூக்கி அவனது நெற்றியில் முத்தம் இட்டுக் கூட்டிக்கொண்டு, எனது அறையுள் நுழைந்ததும் கேட்டேன். ”ஐ பாப்பா, அப்பாவோட பிறந்த நாளுக்கு… என்ன பரிசு தரப்போற?’’
நொடியும் தாமதிக்காமல், ”பீ.பி செக் பண்ணு’’ என்றான்.
இப்படி ஒரு பதிலை சொல்வான் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால், ”என்னது, பீ.பி செக் பண்ணப் போறயா?’’ என்று கேட்டேன் குரல் நீட்டி.
‘ஆமாம்’ என வேகமாகத் தலையாட்டினான்.
உடனே என்ன சொல்வதென்று தெரியாமல் மறுபடியும் கேட்டேன். அவனும் அதையே சொன்னான்.
‘சரி, இந்த உலகத்துல எந்த ஓர் அப்பாவுக்கும் கிடைக்காத பிறந்தநாள் பரிசுதான் இது’ என்று நினைத்து உள்ளத்துள் சிரித்துக்கொண்டு, தனித்துவம் மிக்க அவனது அவ்வுயரிய பரிசுக்கு ஒருசேர ஐந்தாறு முத்த நன்றி உரைத்துவிட்டு, இரத்த அழுத்தப் பரிசோதனை செய்வதற்காக கையை நீட்டினேன்.
*