ஐயா (எ) 95 வயது குழந்தை! – 14

ஐயா () 95 வயது குழந்தை! – 1

ஐயா () 95 வயது குழந்தை! – 2

ஐயா () 95 வயது குழந்தை! – 3

ஐயா () 95 வயது குழந்தை! – 4

ஐயா () 95 வயது குழந்தை! – 5

ஐயா () 95 வயது குழந்தை! – 6

ஐயா () 95 வயது குழந்தை! – 7

ஐயா () 95 வயது குழந்தை! – 8

ஐயா () 95 வயது குழந்தை! – 9

ஐயா () 95 வயது குழந்தை! – 10

ஐயா () 95 வயது குழந்தை! – 11

ஐயா () 95 வயது குழந்தை! – 12

ஐயா () 95 வயது குழந்தை! – 13

ஐயாவுடன் வெளியே செல்வதென்றால் அளவுகடந்த மகிழ்ச்சி வந்துவிடும். அது கோயிலுக்காக இருந்தாலும் சரி, நிலத்திற்காக இருந்தாலும் சரி, விறகு வெட்ட, கிழங்கு தோண்ட, காளான் பிடுங்க, வேர்க்கடலைப் பிடுங்க என எங்காக இருந்தாலும் சரி.

ஐயா கிராமத்தில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்தார். அதனால் அடிக்கடி எங்கள் தெருவில் இருக்கும் மாரியம்மன் கோயில் தொடங்கி ஊர் காவல் தெய்வங்களான முனியப்பன், வேடியப்பன், பொறடியாத்தா, ஊம வேடியப்பன் என ஏதாவது ஒரு கோயிலுக்கு வாரத்தில் ஒருதடவையாவது என்னை உடன் கூட்டிச்சென்றுவிடுவார்.

அப்படிச் செல்லும்போதெல்லாம் பொங்கல் வைக்க அடுப்புக்கு கல்லெடுத்துவந்து தருவது, சுள்ளி (விறகு) பொறுக்கி வருவது, பொங்கல் படைக்க இலை பறித்து வருவது, சாமி சிலைகளை குளிப்பாட்ட தண்ணீர் மொண்டுவருவது, கழுவுவது, பொட்டிடுவது, பூ வைப்பது என அனைத்திலும் ஐயாவுக்கு உதவியாக இருப்பேன். அதனால் சிறு வயதுமுதலே கடவுள் மீதான பக்தியானது எனக்கும் ஐயாவைப் போலவே அதிகமானது (இப்போது குறைந்துவிட்டதென்பது வேறு கதை).

அதன் தொடர்ச்சியாக கிராமத்தில் உள்ள என் வயதொத்த நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தனியாக கோயில் கட்டி விளையாடுவது, வீட்டிலிருந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டுபோய் (திருடிக்கொண்டு) பொங்கலிடுவதென விடுமுறை தினங்களில் விளையாடுவதை கிட்டத்தட்ட பத்தாவது படிக்கும்வரை வாடிக்கையாக வைத்திருந்தேன்.

கிராமத்தில் அப்போதெல்லாம் இயற்கை உடனான உறவென்பது இப்போதைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்தந்த பருவங்களுக்கேற்ப இயற்கையாக விளையக்கூடிய காய்கள், கனிகள், கிழங்குகளை தவறாது கொண்டுவந்து உண்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

அவ்வகையில் வருடந்தோறும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் கிடைக்கும் எலந்தைப் பழம், சூரப்பழம், காரப்பழம், சொத்துகெளாப்பழம் போன்றவற்றை ஆரம்பத்தில் ஐயாதான் எப்படி பறிக்கவேண்டும், எப்படி சாப்பிடவேண்டுமென சொல்லித்தந்தார். அதன்பின் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வருடந்தோறும் தவறாது பறித்துச்சாப்பிடுவேன்.

இங்கே பலருக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குச்சி வள்ளிக்கிழங்கு (மரவள்ளிக்கிழங்கு) தெரிந்திருக்கும். ஆனால் காட்டு வள்ளிக்கிழங்கு எனச் சொல்லும் காட்டில் மட்டுமே விளையக்கூடியக் கிழங்கை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வருடந்தோறும் தோண்டி எடுத்துவர எங்கள் ஊரிலிருந்து கடப்பாரை, மண்வெட்டியோடு கூட்டம்கூட்டமாக காட்டுக்கு அதிகாலை புலர்வதற்குள் எழுந்து நீசத்தண்ணி குடித்துவிட்டு மதியம் சாப்பிட கூழ் அல்லது பழைய சோறை டீப்பனியில் (உணவு எடுத்துசெல்லப் பயன்படும் ஒருவகைப் பாத்திரம்) எடுத்துக்கொண்டு சைக்கிள் உள்ளவர்கள் சைக்கிளிலும் இல்லாதவர்கள் நடந்தும் செல்வார்கள்.

எங்கள் வீட்டில் அப்போது சைக்கிள் இல்லாததால் ஐயாவுடன் நடந்து கதை பேசிக்கொண்டு எங்கள் கிராமத்திலிருந்து தென் திசையில் ஏழெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுக்கு நான் உள்ளிட்ட சிலர் சென்றோம்.

காடெனில் ஏராளமான மரம் செடி கொடிகள் நிறைந்திருக்கும். அதில் எது காட்டு வள்ளிக்கிழங்குக் கொடியென கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கும். அதிலும் அந்தக் கொடியைப் பார்த்ததும் அது எவ்வளவு நாட்களான கொடி, அதில் எந்தளவுக்கு கிழங்கு இருக்கும், முத்தியக் கிழங்காக இருக்குமா இல்லை இளம் கிழங்காக இருக்குமா என ஐயா எளிதில் கண்டுபிடித்துவிடுவார்.

அப்படி ஒருதடவை (அதுதான் எனக்கு முதல்தடவை) ஐயாவுடன் காட்டுக்கு சென்றிருந்தபோது, புதர்புதராக மண்டிக்கிடக்கும் செடி கொடிகளுக்கு நடுவில் மூன்று மூன்று இலைகளாக விரிந்து படர்ந்திருக்கும் காட்டு வள்ளிக்கொடியை தனியாக விலக்கி எடுத்துக் காட்டி, ”இதான் காட்டு வள்ளிக்கொடி. இதோட எல இப்டிதான் மூணுமூணா இருக்கும்” என சொல்லிக்காட்டினார்.

பின் அவ்விடத்தில் அக்கொடியின் அடிப்பகுதி எங்குள்ளதென தேடிக் கண்டுபிடித்து அதைச் சுற்றிலும் உள்ள செடி, கொடிகளை விலக்கிவிட்டு பாரக்குச்சியால் தோண்ட ஆரம்பித்தார். அவர் முட்டியளவு ஆழத்திற்குத் தோண்டியதும் கிழங்கிருப்பது தெரிய ஆரம்பித்தது. அதன்பின் கிழங்கின் பாதை எந்தப்பக்கம் செல்கிறதென சரியாகப் பார்த்து அப்பக்கம் தோண்டித் தோண்டி கிழங்கை அடிபடாது (காயம்படாது) எடுத்தார்.

காட்டு வள்ளிக்கிழங்கு தோண்டும் முறையே பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதற்கெனத் தேவையான கணிப்பு, உழைப்பு, பொறுமை, நாசுக்கு எளிதில் எல்லோர்க்கும் வாய்த்துவிடாது. அதற்கு தக்க பயிற்சி அவசியம்.

ஐயா அந்த ஒரு கொடியில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து கிலோவுக்குமேல் கிழங்கெடுத்துவிட்டார். அதை அவர் கொண்டு வந்த சாக்குப்பையில் போட்டெடுத்துக்கொண்டு அடுத்தக் கொடியைக் கண்டுபிடித்து தோண்ட ஆரம்பிக்கையில் அதற்கு அருகில் அவர் சொன்ன அடையாளத்துடன் இருந்த கொடியைப் பார்த்து, ”ஐ வள்ளிக்கொடி… வள்ளிக்கொடி…” என அதன் ஓர் இலையைப் பறித்துப்போய் ஐயாவிடம் காட்ட, ”ஆமாம்டா… இது வள்ளிக்கொடிதான்” என்றார்.

உடனே நான் கொண்டுசென்ற சின்னப் பாரக்குச்சியில் அக்கொடியைச் சுற்றி தோண்ட ஒரு சாண் ஆழத்தில் மிக சின்னதாக கிழங்கிருக்க மகிழ்ச்சியோடு அதை தோண்டியெடுத்துப் போய் ஐயாவிடம் காட்டினேன். பார்த்துவிட்டு, ”பரவால்லயே அதுக்குள்ளக் கெழங்கெடுத்துட்ட…” எனப் பாராட்டிவிட்டு,

”நீ நோண்டுனது எளங்கொடி. அதனாலதான் கெழங்கு சின்னதாயிருக்கு. இதலாம் இப்ப நோண்டக்கூடாது. விட்டு அடுத்த வருஷம் நோண்டிருந்தன்னா ரெண்டு மூணு கிலோ கெழங்கெடுத்திருப்ப” எனச் சொல்ல, அப்போதுதான் புரிந்துகொண்டேன் எதைத் தோண்ட வேண்டும், எதை தோண்டக் கூடாதென.

பின் தோண்டியக் கிழங்கை சாக்குப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு இருட்டியபிறகு வீடு வந்து சேர்வோம். அதன்பின் கிழங்கை நன்கு கழுவிவிட்டு அடுப்பில் வேகவைத்து வெந்ததும் தோலுரித்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

அப்போதெல்லாம் (இப்போதும் கூட) வீட்டில் விறகு அடுப்பில்தான் சமைப்பார்கள் என்பதால் ஐயா வாரத்திற்கு ஒருநாளாவது விறகு வெட்ட செல்வார். அப்படி அவர் செல்லும்போது விடுமுறை தினமாக இருந்தால் என்னையும் உடன் கூட்டிப்போவார்.

அப்படி ஒருதடவை அவருடன் விறகுவெட்ட சென்றிருந்தபோது ஓரிடத்தில் கும்பலாக இருந்த காரச்செடியில் (அது மரமாகவும் வளரும்) சுற்றியுள்ள எல்லாக் கிளைகளையும் வெட்டிவிட்டு ஒன்றை மட்டும் வெட்டாது விட்டுவிட்டார். அதைப் பார்த்துவிட்ட நான் ஏனெனக் கேட்க,

”எல்லாத்தயும் வெட்டிட்டா மொத்தமா அது செத்துப்போயிடும். ஒண்ண மட்டும் விட்டோம்னா சாகாம இருக்கும். அத்தோட வெட்டுன எடத்துக்குப் பக்கத்துலலாம் துளுத்துவரும்” என்றார்.

அவர் சொன்னபோது எதுவும் புரியவில்லை. சற்று நேரம் கழித்து யோசிக்கையில் எத்தனை பெரிய விஷயம் இது, சூட்சுமம் இது எனப் புரிந்தது. என்னதான் இயற்கை மனிதனின் பயன்பாட்டுக்காக ஆயிரமாயிரம் பொக்கிஷங்களை வாரி வழங்கியிருந்தாலும் அதை மொத்தமாக அதாவது அடியோடு சுரண்டி எடுத்துக்கொள்ளாமல் தேவையானதை அதிலும் எடுக்கவேண்டிய அளவுக்கு எடுத்துக்கொண்டு விட்டுவிடவேண்டும் என்பதுதான் இயற்கையின் ஆக்கநியதி. இதை நம்மில் எத்தனை பேர் அறிவோம், புரிவோம், பின்பற்றுகிறோம் என்றால் மிக சொற்பமானவர்கள்தான் எனலாம்.

அதுவும்… எங்கோ கிராமத்தில் வாழும் எழுதப்படிக்கத் தெரியாத எளிய மனிதர்களுக்குத் தெரியும் இந்த அடிப்படை நியதிகூட இன்றைக்கு அரசியல் பின்புலத்துடன் இயங்கிவரும் ஆற்றுமணல் கொள்ளையர்களுக்கும் கல் குவாரி திருடர்களுக்கும் தெரியாதுபோதல் எத்தனை பெரிய கொடுமை.

விறகு வெட்ட எனக்கென சின்னதாக ஒரு கொடுவா ஐயா செய்து வைத்திருந்தார் (அது என் வயதுக்கேற்ப எளிதில் தூக்கி வெட்டவும், பாதுகாப்பாக இருக்கவும்தான் என்பதை பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன்). அதில்தான் நான் வெட்டவேண்டும். அதனால் ஐயாவுடன் விறகு வெட்டச் செல்லும்போது என் கொடுவாவை எடுத்துக்கொண்டுபோய் நானும் அவருடன் சேர்ந்து விறகுவெட்டுவேன்.

ஐயா பெரும்பாலும் கார, பூலா போன்ற முள் விறகையும் துரிஞ்சி போன்ற முள்ளில்லா விறகையும் தான் தேர்ந்தெடுத்து வெட்டுவார். அதிலும் துரிஞ்சி விறகை தோல் உரித்துதான் (துரிஞ்சி விறகு தோல் உரித்தால் உடனே அப்போதே எரியக்கூடியது) வீட்டுக்கு கொண்டுவருவார். காரை போன்ற முள் விறகை அவர் தேர்வு செய்யக் காரணம் அது நன்கு நீடித்து எரியக்கூடியது என்பதால்.

ஆரம்பத்தில் அவருடன் செல்லும்போது ஆவாரம், உனிமில், துரிஞ்சி போன்ற எளிய விறகையே (அதிலும் சின்ன சின்னதாகப் பார்த்து) வெட்டுவேன். பின் கொஞ்சம் வளர்ந்த பிறகு நண்பர்களுடன் தனியாக விடுமுறை தினங்களில் விறகு வெட்டப் போகையில் ஐயா விரும்பி வெட்டும் காரையையும், பூலாவையும், துரிஞ்சியையும்தான் தேர்வுசெய்து வெட்டுவேன்.

கிராமங்களில் மலை காடுகளில் மரத்தின் மீதும் புதர்களின் மீதும் பரந்து விரிந்திருக்கும் ஓணாங்கொடியும் கட்டுக்கொடியும் தான் ஐயாவுக்கு விறகு கட்டித் தூக்கிவரப் பயன்படும் இயற்கை கயிறுகள். அதை பதமாகப் பார்த்து பிய்த்து எடுத்து நுணுக்கமாகக் கட்டினால் அவ்வளவு உறுதியாக இருக்கும். இதை ஐயா முதலில் சொன்னபோது ஆச்சர்யப்பட்டேன். பின் நானும் அவரை பின்பற்றி கட்டிப்பார்த்து மகிழ்ந்தேன்.

இயற்கைதான் எத்தனைப் பெரிய சக்திவாய்ந்தது. அது மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் எங்கெங்கும் வைத்துள்ளது. அதில் பாதியைத்தான் மனிதன் இதுவரை கண்டுபிடித்திருக்கிறான். அதுவே இத்தனை பெரிய ஆச்சர்யத்தையும் வியப்பையும் தருகையில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் மீதி எத்தகைய ஆச்சர்யத்தை விதைக்குமோ?!

இயற்கையின் முன்னால் நாமெல்லாம் சிறு பதரென உணரும் யாரும் இயற்கையை சுரண்ட நினைக்கமாட்டார்கள். மாறாக அதை வணங்குவர்; போற்றுவர்.

இதை நன்கு உணர்ந்ததால்தான் ஐயா இயற்கையின் அனைத்து படைப்புகளையும் சமமாகப் பார்க்கிறார்; மதிக்கிறார்; நடத்துகிறார். அதனால்தான் அவரை இந்த இயற்கை இன்னமும் தன் பிள்ளையாக அன்போடு அணைத்துக்கொண்டு செல்கிறது.

கடந்த பொங்கலுக்கு ஊருக்குச் சென்றிருந்தபோது ஐயாவின் தலையில் காயம் பட்டிருந்ததைப் பார்த்து பதறிப்போய், ”என்னாச்சுய்யா…?” என்றேன்.

”அதுவா… நேத்து செட்டுல (நிலத்தில் மோட்டர் வைத்திருக்கும் இடம்) இடிச்சிக்கிட்டன்” என்றார்.

”பாத்துப் போயிருக்கலாம்லயா” என்றதும்,

சிறிதுநேர மவுனத்திற்குப் பின், ”நேத்துக் காலில மோட்ருப் போட்டுட்டுத் திரும்புனதும் கதவுக்கு மேலப் பக்கத்துலயே ஒக்காந்திருந்த பெரிய நல்லப்பாம்பப் பாத்துட்டு டப்புனு பதறிபோய் திரும்புனன், செட்டுல இடிச்சிடிச்சு. அப்டியே வலிலக் கீழ ஒக்காந்துட்டன். கொஞ்ச நேரம் என்னயேப் பார்த்துட்டு கால் மேல ஏறிப் போயிடிச்சி” என சொல்லி ஐயா சிரித்ததும் பதறிவிட்டேன்.

ஏற்கனவே ஒரு தடவை ஐயா சொன்னதுதான் அப்போது ஞாபகம் வந்தது. ‘நாம எதுவும் பண்ணாத வரைக்கும் பாம்பு கீம்பு எதுவும் நம்மல ஒண்ணும்பண்ணாது.’

ஆம்! நிஜம்தான். ஐயா அன்று பாம்பை எதுவும் செய்யவில்லை. அதனால் அதுவும் ஐயாவை ஒன்றும் செய்யாது சென்றுவிட்டது.

ஆனால் நாமோ… ஏரியை, குளத்தை, ஆறுகளை தூர்த்துவிட்டு வீடுகள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மால்கள் என பார்க்கும் இடங்கள்தோறும் கட்டிடக் காடுகள் கட்டிவிட்டோம். அதனால்தான் தன் இடம் தேடிவந்த நீர் அது அபகரிக்கப்பட்டதையறிந்து கொதித்துப்போய் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. வீட்டையும் நிறைத்துவிட்டது.

பாம்பு மட்டுமல்ல… நாம் எதுவும் செய்யாத வரைக்கும் இயற்கையின் அனைத்துப் படைப்புகளும் நம்மை ஒன்றும் செய்யாது.

”ம்… இப்போது நன்கு புரிந்துகொண்டோம் ஐயா!”

[இன்னும்]

*

ஐயா (எ) 95 வயது குழந்தை!

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=