அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அன்புள்ள ஐயாவுக்கு,

யாராவது என்னிடம் வந்து, ‘உலகிலேயே உங்களுக்கு மிகப் பிடித்த இடம் எது?’ என்று கேட்டால், நம் பழைய கூரை வீட்டைத்தான் சொல்வேன் ஐயா.

காரணம், எவ்வித வசதி வாய்ப்புகளும் இல்லாதபோதும் அவ்வீடு நினைத்ததை விட அதிகமான மகிழ்வைத் தந்தது. வானளவுக்கு அன்பை வாரிக் கொடுத்தது. படுத்ததும் நல்லுறக்கத்தை வரவழைத்தது. இவை அத்தனைக்கும் மேலாக எப்படியெல்லாம் எளிதாக ஒருவரால் வாழமுடியுமென சொல்லாமல் சொல்லித் தந்தது. ஆம்! ஐயா.

அடிக்கடி ஒன்றைச் சொல்வீர்கள்.

‘எப்பயும் இருக்கறத வச்சு சந்தோசமா வாழக்கத்துக்கோ. அப்பதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’

இவ்வார்த்தைகளை குறைந்தது நாளுக்கொரு தடவையாவது நினைத்துவிடுவேன். இவ்வார்த்தைகளும், அது தரும் ஆழமான அர்த்தத்தையும், புரிதலையும் தன் வாழ்வில் எப்போதும் கடைப்பிடிக்கும் ஒருவரின் வாழ்வானது எத்தகைய உயர்வுரும் என்பதை தங்களைப் பார்த்தும், தங்கள் நண்பர்களில் முத்துசாமி ஐயாவைப் பார்த்தும் பலதடவை உணர்ந்திருக்கிறேன்.

கடந்தாண்டு டிசம்பர் பதினான்காம் தேதி நான் முதுகலை படித்த லயோலா கல்லூரியில், அதுவும் நான் படித்த கணிப்பொறி அறிவியல் துறையில் நடக்கவிருந்த கல்லூரிகளுக்கு இடையிலான துறை விழாவுக்கு, ‘கௌரவ விருந்தினராக’ என்னை அழைத்து, என் இதுநாளையப் பணிகளையும் முயற்சிகளையும் பாராட்டி, சிறு அங்கீகாரமும் மரியாதையும் தர எண்ணியிருந்தார்கள்.

பெரு மகிழ்வோடு செல்ல சம்மதித்தேன்.

அன்றைய தினம் அதிகாலை சீக்கிரமாக எழுந்து குளித்து எனக்கு மிகவும் பிடித்த வெண்ணிறச் சட்டையும், வான் நீலநிற கால்சட்டையும் போட்டுக்கொண்டு கிளம்பினேன்.

காலை எழுந்தது முதல் விடாமல் கொட்டிய மழை, விடுவதாகத் தெரியவில்லை. சரி குடை பிடித்துக்கொண்டே செல்வோமென எழுந்தபோது, பேராசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது.

”வடிவு… நான் உங்களுக்கு 3rd year student ஒருத்தரோட எண் அனுப்பியிருக்கன். காலேஜ் கேட் கிட்ட வரும்போது சொன்னீங்கன்னா, அவர் வந்து உங்கள ரிசீவ் பண்ணிக் கூட்டிட்டு வருவாரு..’’ என்றார்.

”சரிங்க சார்..” என்றேன்.

கால்சட்டையில் நடக்கும்போது பின்பக்கம் சேறு பட்டுவிடக்கூடாது என்பதற்காக கீழே மூன்று மடிப்பு மடித்துவிட்டுக் கொண்டு, என் அறையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லூரி முன்பக்க நுழைவாயிலருகே போய் நின்று, அம்மாணவருக்கு அழைத்துச் சொன்னேன்.

பல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மழையில் நனையாமல் குடைபிடித்துக்கொண்டும், சிலர் நனைந்துகொண்டும் வரிசையில் நின்று, தங்களது அடையாள அட்டையையும், பதிவுசெய்த எண்ணையும் சொல்லி கல்லூரிக்குள் நுழைந்துகொண்டிருந்தார்கள்.

ஓரமாக நின்றபடி மடித்திருந்த கால்சட்டை கீழ்மடிப்பை எடுத்துவிட்டு, சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அடுத்த ஒரு நிமிடத்திற்குள் வந்தார்.

என்னையும், நான் குடை பிடித்துக்கொண்டு மிகச் சாதாரணமாக நடந்து வந்திருந்ததையும் பார்த்துவிட்டு,

”என்ன சார் நடந்து வந்திருக்கீங்க?’’ என்றார்.

”ரூம் பக்கத்துலதான் தம்பி இருக்கு. அதான்..’’ என்றேன்.

எனது பதிலில் திருப்தியுறாதவராய்,

”இல்ல சார், சீஃப் கெஸ்ட்லாம் கார்லதான் வருவாங்க. அதான் கேட்டேன்..’’ என்றார்.

என்ன சொல்வதெனத் தெரியாமல் சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு,

”இல்லப்பா, சீஃப் கெஸ்ட் நடந்து கூட வருவாங்க. என்ன மாதிரி..’’ என்றேன்.

எதுவும் சொல்லாமல்,

”வாங்க சார், உள்ள போகலாம்..’’ என கல்லூரிக்குள் அழைத்துப் போனார்.

விடாமல் மழை பெய்துகொண்டிருந்தது. மரம் செடிகொடிகள் யாவும் இரவு முழுக்க பெய்த தொடர்மழையில் நனைந்து நடுங்கும் குளிரில் இழுத்துப் போர்த்திக் கொண்டு அசைய மறுப்பதாய்த் தோன்றியது.

வாரத்தில் குறைந்தது ஓரிரு தடவையாவது சென்றுவரும் இடம்தான் என்றாலும், இம்முறை நான் அங்கு செல்வது வெறும் மாணவராகவோ, பழைய மாணவராகவோ அல்ல… கெளரவ விருந்தினராக.

ஏற்கனவே நான்கைந்து தடவை சிறுசிறு நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறேன். 2016 ஆம் ஆண்டு நடந்த பழைய மாணவர் கூட்டமைப்பின் விழாவில் ‘இளம் சாதனையாளர் விருது’ வாங்கியிருக்கிறேன்.

என்றபோதும், கௌரவ விருந்தினராக அதுவும், நான் படித்த துறையில், எனக்குப் பாடம் நடத்திய பேராசிரியர்கள் அழைத்துச் செல்வது அதுவே முதல்முறை.

உள்ளம் துள்ளி குதித்தது. வான் மழை சிந்தி வரவேற்க, இரு பக்கமும் வரிசையாக நின்றிருக்கும் மரங்கள் புன்னகைத்து கையசைக்க, எப்போதும் போல் மிகச் சாதாரணமாக குடை பிடித்தபடி நடந்து, விடுதி நுழைவாயில் அருகேயுள்ள சவுலியர் அரங்குக்குப் போனேன்.

அங்கே என்னை வரவேற்க எனக்குப் பாடம் சொல்லித் தந்த பேராசிரியர்களும், மாணவ – மாணவியர் அமைப்பினரும் மகிழ்வோடு காத்திருந்தனர்.

லயோலா கல்லூரியின் கணிப்பொறி அறிவியல் துறை நடத்தும் அந்நிகழ்வுக்கு, கிட்டத்தட்ட சென்னையில் உள்ள அனைத்து கல்லூரியைச் சேர்ந்த கணிப்பொறி அறிவியல் துறை மாணவ மாணவிகளும் வந்திருந்தார்கள். எப்படியும் ஐநூறு பேருக்கு மேல் இருந்திருப்பார்கள்.

எட்டாண்டுகளுக்கு முன்னால் அதே அரங்கத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த நான், அன்று கௌரவ விருந்தினராக மேடையேற்றப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டு, சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டேன்.

மேடையில் நடுவில் உட்கார்ந்து மொத்தக் கூட்டத்தையும் பார்க்கிறேன். அனைவர் பார்வையும் என்மீது படுகிறது.

‘இல்ல சார், சீஃப் கெஸ்ட்லாம் கார்லதான் வருவாங்க. அதான் கேட்டன்..’

அழைக்க வந்த மாணவர் சொன்ன வார்த்தைகள்.

‘எப்பயும் இருக்கறத வச்சு சந்தோசமா வாழக் கத்துக்கோ. அப்பதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’

நீங்கள் சொன்ன வார்த்தைகள்.

இரண்டும் மாறி மாறி மனக்காதில் கேட்கிறது. திரும்பத் திரும்ப, நிகழ்ச்சி முடியும் வரைக்கும்.

நிகழ்ச்சி முடிந்ததும் அருகிலிருந்த அறைக்குள் உட்கார்ந்து பேராசிரியர்களுடன் தேநீர் குடித்துவிட்டு, சிறிதுநேரம் பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு தனியாக கல்லூரி வளாகத்திற்குள் எப்போதும்போல் நடந்து கொண்டிருந்தேன். என்னையறியாமல் சிறுவயது நினைவுகள் கண்முன் வந்து வந்து போகின்றன.

ஒரு தடவை எதிர் வீட்டுப் பையன், தன் அப்பா வாங்கித்தந்த பொம்மைக் காரை திண்ணையில் ஓட்டி விளையாடுவதைப் பார்த்துவிட்டு,

”எனக்கும் அதுமாரி கார் வேணும்..’’ எனக் கேட்டு அடம்பிடித்தபோது,

நீங்களும் அம்மாவும் எவ்வளவு சொல்லியும் கேட்காத என்னை பெரிய அண்ணன் அடித்துவிட, அழுதுகொண்டுபோய் கட்டுத்தெருவின் மூலையில் சுவரோரமாகப் போட்டிருந்த கருங்கல் மீது உட்கார்ந்து கொண்டேன்.

முதலில் அம்மாவும், அடுத்தது அக்காவும், அதன்பின் அண்ணன்களும் மாறி மாறி வந்து சாப்பிடக் கூப்பிட்டும் வராத என்னைக் கூட்டிப்போக கடைசியாக நீங்கள் வந்தீர்கள்.

எதுவும் பேசாமல் மெல்ல என்னருகில் வந்து உட்கார்ந்து,

”எப்பா, அடம்புடிக்காம வந்து சோறு தின்னுய்யா..’’ என்றீர்கள்.

முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு ஒரு வார்த்தையும் நான் பேசவில்லை.

நான்கைந்து தடவை கூப்பிட்டுவிட்டு எழுந்துபோய், எங்கிருந்தோ ஒரு செங்கல் எடுத்துவந்து,

”எப்பா வடுவரசு, இந்தா… சாப்ட்டு வந்து இத ஓட்டினு வெளாடு..’’ என்று சொல்லி, கையில் வைத்திருந்த செங்கல்லை தரையில் வைத்து முன்னும் பின்னும் தேய்த்துக் காட்டினீர்கள்.

அதைப் பார்த்து சட்டெனக் கோபம் குறைந்தவனாய்,

”இது பஸ்ஸாய்யா..?’’ என்றேன்.

‘ஆமாம்’ என்பதுபோல் லேசாகப் புன்னகைத்துத் தலையாட்டினீர்கள்.

மெல்ல அச்செங்கல்லை தரையில் தேய்த்து முன்னகர்த்தி, ‘டிர் டிர்… டிர் டிர்..’ என வாயால் சத்தம் போட்டபடி தேய்த்துக்கொண்டு, கட்டுத்தெருவிலிருந்து வெளியில் வந்து வலது பக்கம் திரும்பி, சற்று முன்னால் போய் மீண்டும் வலதுபக்கம் திரும்பி வாசலோரமாக முன்வாசல் நிலைப்படியருகே வந்து,

”கீங் கீங்… கீங் கீங்… பஸ்சு வந்திருக்கு. வந்து ஏர்றவங்கலாம் ஏறலாம்..’’ என்றேன் சத்தமாக.

அதைப் பார்த்த அண்ணன்களும், அம்மாவும், அக்காவும் சிரித்தார்கள்.

என் செங்கல் பஸ்ஸை அங்கேயே விட்டுவிட்டு, கை கழுவிப் போய் சாப்பிட்டுவிட்டு, துரிஞ்சி மரத்தடியில் உட்கார்ந்திருந்த தங்களிடம் ‘டிர் டிர்… டிர் டிர்..’ என மீண்டும் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தேன்.

எதையோ யோசித்தவராய் உட்கார்ந்திருந்த நீங்கள்,

”கீங் கீங்… கீங் கீங்… பஸ்சு வந்திருக்கு. வந்து ஏறவங்கலாம் ஏறலாம்..” என்ற என் குரலைக் கேட்டு,

”இங்க வா..” என்று அருகில் அழைத்தீர்கள், வந்தேன்.

பக்கத்திலிருந்த மாவுக்கல்மீது உட்காரச்சொல்லி,

”நம்ம வூட்லயே எதயும் கேட்டுப் புரிஞ்சிக்கிற நல்ல பையன் நீதான். எப்பயும் இருக்கறத வச்சு சந்தோசமா வாழக்கத்துக்கோ. அப்பதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’’ என்றீர்கள்.

புரிந்ததாய் தலையாட்டிவிட்டு, அங்கிருந்து ‘டிர் டிர்.. டிர் டிர்..’ என வண்டியை ஓட்டிக்கொண்டு பூவரச மரத்தடியில் போட்டிருந்த என் சிறு பந்தல் வீட்டுக்குப் போனேன்.

தாங்கள் அன்று சொன்ன,

”எப்பயும் இருக்கறத வச்சு சந்தோசமா வாழக்கத்துக்கோ. அப்பதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..”

இவ்வார்த்தைகள் எனக்குள் கொஞ்ச கொஞ்சமாக போய் ஆழமாகப் பதிய ஆரம்பித்தது. அதுமுதல் எதையும் கேட்டு அடம் பிடிப்பதை நிறுத்திக் கொண்டேன்.

அதன் விளைவாக செங்கல்லின் ஒரு முனையில் சிறு கல்லால் லேசாகக் கொத்தி அதுதான் பஸ்ஸின் விளக்கு என்றும், பக்கவாட்டில் இருபக்கமும் இரண்டிடத்தில் கொத்திவிட்டு அதை சக்கரம் என்றும் நினைத்துக் கொண்டு மகிழ்வுடன் ஓட்டி விளையாட ஆரம்பித்தேன்.

அதுமட்டுமல்ல… யாராவது கடையில் போய் குச்சிமிட்டாய், காசுமிட்டாய் வாங்கிவந்து தின்பதைப் பார்த்தால் ஓடிவந்து வீட்டில் பானையிலிருக்கும் புளியில் சிறிதளவு எடுத்து, அத்துடன் கொஞ்சம் உப்பு சேர்த்து உருண்டையாக உருட்டி, தென்னங்குச்சியில் செருகி புளி மிட்டாயாக, புளிபப்பாக தின்பது.

மணக்கட்டை, கொட்டாங்குச்சி, கற்கள், குச்சி போன்றவற்றைக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் அவற்றின் வடிவத்துக்கேற்ப பெயர் வைத்து விளையாடுவது.

அண்ணன் தைத்துவிட்டுப் போடும் துண்டுத் துணிகளைப் பொறுக்கியெடுத்து வரிசையாக இணைத்துக் கட்டி அதை ஒயராகவும், கயிறாகவும் நினைத்து விளையாடுவது.

ஆப்பிள், மாதுளை, அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, பேரிச்சை போன்ற விலையுயர்ந்த பழங்களுக்குப் பதிலாக… நம்மூரில் கிடைக்கும் காரைக்காய், சூரைக்காய், பூலாப்பழம், கொய்யா, மல்லாட்டை, தேங்காய், புளியம்பழம், கிளாப்பழம், சொத்துக்கிளாப்பழம், நாவப்பழம், இலந்தைப்பழம், ஞானாப்பழம், பப்பாளிப்பழம், கொடிக்களிக்காய், சீத்தாப்பழம், சுக்கம்பழம் போன்றவற்றைத் தின்பது என, கொஞ்ச கொஞ்சமாக தாங்கள் சொன்ன,

‘எப்பயும் இருக்கறத வச்சு சந்தோசமா வாழக்கத்துக்கோ. அப்பதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’

வார்த்தைகளில் இருந்து மகிழ்வுடன் வாழக் கற்றுக் கொண்டேன். ஆம்! ஐயா.

நான் இளங்கலை படிக்கும்போது என்னுடன் விடுதியில் தங்கிப் படித்த பலரும் கணினி, மடிக்கணினி என வாங்கி அறையில் வைத்து தினந்தோறும் புதுப்புது ப்ரோக்ராம்கள் எழுதிப் பழகி வந்தார்கள்.

எனக்கோ நம் குடும்பச்சூழல் நன்கு தெரியும். அதுவும் கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம் கட்டவே தாங்களும் அண்ணன்களும் பட்ட பாட்டை நன்கறிவேன்.

அதனால் தங்களை எதுவும் வாங்கித்தரச் சொல்லிக் கேட்டு தொந்தரவு செய்யாமல், ஒருநாள் நண்பன் ஒருவனை உடன் கூட்டிக்கொண்டு மதிய சாப்பாட்டுக்குப் பிறகு கல்லூரியில் உள்ள எங்கள் துறைக்குப் போய் அங்கிருந்த என் வகுப்புப் பேராசிரியர் தினகரன் சாரிடம்,

”சார்… என்கிட்ட ஹாஸ்டல்ல சிஸ்டம், லேப்டாப் எதுவும் இல்ல. மதியத்துக்கு மேல இங்க வந்து ப்ரோக்ராம் செஞ்சிப்பாக்க சிஸ்டம் யூஸ் பண்ணிக்கட்டுமா சார்?’’ என்றேன்.

எதுவும் சொல்லாமல், ”இங்கயே இருப்பா வர்றன்..’’ என்று சொல்லிவிட்டு, துறைத் தலைவரிடம் போய் கேட்டுவந்து,

”நாளைல இருந்து வந்து யூஸ் பண்ணிக்கோ..’’ என்றார்.

அவ்வளவு மகிழ்ந்தேன்.

அதுமுதல் தினம்தோறும் கல்லூரி முடிந்ததும் விடுதிக்குப் போய் நோட்டுப் புத்தகங்களை வைத்துவிட்டு, உணவறைக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் விடுதியறைக்குச் சென்று தேவையான நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லூரி கணினி ஆய்வகத்திற்குப் போய் ப்ரோக்ராம் எழுதிப் பழகுவதை வாடிக்கையாக வைத்திருந்தேன்.

அதன் விளைவாக மூன்றாண்டுகளில் இரு பருவம் தவிர அனைத்துப் பருவங்களிலும் செய்முறைத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினேன். அவ்விரு பருவத்திலும் 99 மற்றும் 97 மதிப்பெண்கள் வாங்கினேன்.

‘எப்பயும் இருக்கறத வச்சு சந்தோசமா வாழக்கத்துக்கோ. அப்பதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’

நீங்கள் சொன்ன இவ்வார்த்தைகள்தான் அப்போதென் நினைவுக்கு வரும்.

அதோடு, என்னை எப்போதும் மிக எளியவனாக, இல்லாததைப் பற்றி யோசித்து வருத்தப்படாமல் இருப்பதைக் கொண்டு மகிழ்வுடன் வாழும் புரிதலுள்ளவனாக இதுநாள்வரை வைத்திருக்கிறது, வழிநடத்துகிறது. ஆம்! ஐயா.

இவ்வுயர் எண்ணத்தை, பார்வையை என் நண்பர்களில் சிலருக்கும் கற்றுத் தந்திருக்கிறேன். அவர்களும் இதை தம் வாழ்வில் பின்பற்றி மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வுயரிய எண்ணத்தையும், பார்வையையும் எனக்குள் விதைத்து, வாழ்வின் மேன்மையை, வாழ்தலின் உன்னதத்தை எங்கும், எதிலும் காணவும் உணரவும் வழிவகுத்த உங்களுக்கு, இன்று மட்டுமல்ல… என்றும் மனதார நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் ஐயா.

ஆழ்மன நன்றியுடன்,

வடிவரசு

(August 17, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=