ஐயா (எ) 95 வயது குழந்தை! – 11

ஐயா ஒரு தடவை நான் வீட்டிலிருந்து சென்னைக்கு கிளம்புகையில் அருகில் வந்து (அப்போதுதான் நான் லயோலாவில் முதுகலை சேர்ந்திருந்தேன்),
”எப்ப்பா… இந்த காலேஜி காலேஜின்னு சொல்றாங்களே… அது எப்டி இருக்கும்? என்ன ஒரு தடவக் கூட்டிட்டுப்போய் காமிக்றியா?” என்றார் குழந்தை போல.
நான் கொஞ்சமும் எதிர்பார்க்காததை ஐயா கேட்டதும் என்ன சொல்வதெனத் தெரியாது சில நொடி மவுனத்திற்குப் பின், ”சரிய்யா… கூட்டிட்டுப் போய் காமிக்றன்” எனச் சொல்லிவிட்டு, மூன்றாவது அண்ணனிடம், ”நாளிக்கிக் காலில பஸ்ல ஐயாவக் கூட்டிட்டு மெட்ராஸ்க்கு வந்துடு. நான் தாம்பரத்துல இருக்கன்” எனச் சொல்லிவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.
நான் ஆசைப்பட்டு சேர்ந்த கல்லூரி. அதுவும் முதல்நாள் வகுப்பு விடிந்தால். அத்தோடு ஐயா வருகிறார். அவரைக் கல்லூரிக்குக் கூட்டிவந்து காட்டப்போகிறேன் என்ற யோசனையிலேயே இரவு தூங்காது முடிந்துவிட்டது.
அடுத்தநாள் திட்டமிட்டதுபோல் ஐயாவும், அண்ணனும் தாம்பரம் வந்திறங்க, அங்கிருந்து அவர்களை மின்சார ரயிலில் நுங்கம்பாக்கம் அழைத்து வந்து கல்லூரியின் முன்புறவாசல் வழியாக கூட்டிப்போய் மெயின் பில்டிங் முன்னால் நிற்கவைத்து,
”காலேஜிப் பாக்கணும்னு சொன்னல்ல… இதுதான்யா காலேஜி. ஒன் புள்ளப் படிக்கிறக் காலேஜி” என்றேன்.
”ஐயோ… இம்மாம்பெரியக் காலேஜிலயாப் படிக்கிற” என சிறு பிள்ளைபோல் வியந்ததை இப்போது நினைக்கையிலும் அந்த மகிழ்வின் ஈரம் மனதை நனைக்கிறது.
அதன்பின் அவரைக் கூட்டிச் சென்று என் வகுப்பறை, விடுதி, விடுதி அறை, சாப்பிடும் இடம், குளிக்கும் இடம் என ஒவ்வொன்றாக சுற்றிக் காட்டிவிட்டு, கடைசியாக நூலகத்தின் முன்னால் நிற்கவைத்து, ”இதுதான்யா லைப்ரரி. இதுக்குள்ள எல்லாம் புக்குதான் இருக்கும். எத வேணாலும் யார் வேணாலும் எடுத்துப் படிக்கலாம்” என்றதும் ஆச்சர்யத்துப்போனார்.
தொடர்ந்து அவரை கல்லூரி உணவகத்திற்குக் கூட்டிப்போய் சாப்பிடவைத்து கல்லூரி வளாகம் முழுக்க சுற்றிக்காட்ட, கிரிக்கெட் மைதானம், கால்பந்து மைதானம், ஹாக்கி மைதானம் என அனைத்தையும் பார்த்துவிட்டு, ”வெளயாட்றதுக்குப் போய் இவ்ளோ எடமா?” என வியந்து கேட்டார்.
”படிப்பு எவ்ளோ முக்கியமோ அவ்ளோ முக்கியம் இங்க விளயாட்டுக்கும் தருவாங்க” என்றதும், ‘ஓ!’ என மெல்லமாகத் தலையாட்டினார்.
அருகிலிருந்த கால்பந்து மைதானத்தின் பார்வையாளர் இருக்கையில் உட்காரவைத்து, ”இந்த காலேஜிதான்யா தமிழ்நாட்லயே நெம்பர் 1 காலேஜி. இந்தியாவுல மொத மூனு எடத்துல எப்பவும் இந்த காலேஜி இருக்கும். இங்கப் படிக்கிறதுலாம் அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல…” என கல்லூரி பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் சொல்ல,
”ஆமாம்… இவ்ளோப் பெரியக் காலேஜ்ல நம்மள எப்டி சேத்துக்கிட்டாங்க?’’ என்றார்.
”எவ்ளோப் பெரியக் காலேஜா இருந்தாலும் நல்லாப் படிச்சா சேத்துப்பாங்க. ஒன் பையன் நல்லாப் படிச்சான். அதான் சேத்துக்கிட்டாங்க…” எனச் சொல்லி சிரித்ததும்,
”ஆமால்ல…” என அவரும் சிரிக்க, அவ்விடம் விட்டு எழுந்து நடந்தபடி பேசிக்கொண்டே மூவரும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்குப் போனோம்.
பின் அங்கிருந்து எழும்பூர் வரை மின்சார ரயிலில் கூட்டிப்போய் அங்கிருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு முதல்நாள் வகுப்பிற்கு சென்றேன். இது நடந்து சரியாக எட்டரை ஆண்டுகள் ஆகிறது.
அதன்பின் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு விகடனில் தலைமை நிருபராக பணிபுரிகையில் ஒரு தடவை ஈரோட்டில் உள்ள நவரசம் பெண்கள் கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தப் போயிருந்தேன்.
முதல்நாள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அருகில் உள்ள பழனிக்குப் போகலாம் என முடிவெடுத்து நானும் நண்பனும் பேருந்தில் சென்று மலையேறி முருகனைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து வீட்டுக்கு நகர்பேசியில் அழைத்து அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நான் பழனியில் இருப்பதாகச் சொல்ல, அதை அவர் ஐயாவிடம் சொல்ல, உடனே ஐயா வாங்கி, ”என்ன ஒருதடவ பழனிக்கி கூட்டிட்டுப் போயேன்ப்பா. முருகனப் பாக்கணும் போல இருக்கு” என்றார்.
உடனே, ”சரிய்யா” என்று சொல்லி வைத்துவிட, அதன்பின் வேலை வேலையென மூழ்கிக்கிடந்ததில் அவரை கூட்டிச்செல்வதாய் சொன்னதை கிட்டத்தட்ட மறந்தேபோய்விட்டேன். அச்சமயத்தில் ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருக்கையில் சட்டென அது நினைவுக்கு வர, ”ச்ச… அந்த மனுசன் நமக்காக எவ்ளோ பண்ணிருக்காரு. அவர் ஆசப்பட்டுக் கேட்ட ஒரு விஷயத்தப்போய் இப்டித் தள்ளிப்போட்டுட்டு இருக்கமே” எனத் தோன்ற குற்றவுணர்ச்சியாக இருந்தது.
அப்போதே எழுந்து நகர்பேசியில் நாட்காட்டியைப் பார்த்து, ”என்ன ஆனாலும் சரி… வர வாரம் சனிக்கெழம போறோம்” என முடிவெடுத்துவிட்டு, அடுத்த நாளே அலுவலகத்தில் சனிக்கிழமை விடுப்பு சொல்லிவிட்டு, அதற்கான திட்டமிடுதலை ஒவ்வொன்றாக செய்யத்தொடங்கினேன்.
சரியாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு புறப்பட்டு அதிகாலையில் திருவண்ணாமலைக்குச் சென்று நண்பனை அழைத்துக்கொண்டு அவனது காரில் அங்கிருந்து எங்கள் கிராமத்திற்குச் சென்று ஐயாவையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு சேலம் வழியாக பழனியை சென்றடைய, அங்கு எங்களுக்காக காத்துக்கொண்டிருந்த பத்திரிகை நண்பர் எங்களை வரவேற்று ரோப் காரில் மலைமீது அழைத்துப்போய், விவிஐபி செல்லும் வழியாக ஒருசில நிமிடத்தில் கோயிலுக்குள் கூட்டிப்போய் (அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் அவர் முன்னமே செய்திருந்தார்) சரியாக கருவறை முருகன் சிலைக்கு மிகப் பக்கத்தில் ஐயாவை அமரவைக்க, அங்கு அவருக்கு மாலை மரியாதையெல்லாம் செய்த குருக்கள்… ஐயாவிடம்,
”ஐயா… அவசரமில்லாம ஒங்க ஆசத்தீர சாமியப் பாருங்க. கும்பிடுங்க” எனச் சொல்ல ஐயா மெய்சிலிர்த்துப்போனார்.
சில நிமிடம் கண் மூடியும், சில நிமிடம் கண் திறந்தபடியும் முருகனைப் பார்த்து வேண்டிக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்தபடி எழுந்து அருகில் வந்து கையைப் பிடித்துக்கொண்டார்.
”ஆசத்தீர முருகனப் பாத்துட்டன்ய்யா. சின்ன வயசுலயிருந்து பத்துப் பதனஞ்சி தடவ வந்திருப்பன். ஒரு தடவக் கூட இப்டி சாமியப் பாத்ததில்ல” என கண் கலங்கிவிட்டார்.
பின் அவரை மெல்லக் கைபிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியில் வந்து கோயிலை ஒரு தடவை சுற்றிவிட்டு ஓரமாக ஓரிடத்தில் சிறிது நேரம் உட்கார வைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு எழுந்து மீண்டும் ரோப் கார் வழியாக மலையிலிருந்து கீழிறங்கி அருகிலிருந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குப் புறப்பட்டோம். சரியாக மாலை நான்கு மணிக்குச் சென்றவர்கள் சாமிதரிசனம் முடித்துவிட்டு, மதுரை மீனாட்சியம்மனைப் பார்க்கச் சென்றோம்.
பழனியில் முருகனைப் பார்த்ததுபோல் மீனாட்சியம்மனையும் மிக அருகிலிருந்துப் பார்த்த ஐயா ஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்றதாக சொன்னதும் மகிழ்ந்துபோனேன். பின் அவர்களைக் கூட்டிக்கொண்டு மதுரை பேமஸ் ஜிகர்தண்டா வாங்கி, ”இதுதான்யா மதுரயில ரொம்ப பேமஸ்” எனச் சொல்லிக் கொடுக்க, குடித்துவிட்டு ”நல்லாருக்கு… இன்னொண்ணு வாங்கித் தர்றீயா?” என்றார். உடனே போய் அவருக்கும் அம்மாவுக்கும் இன்னொன்று வாங்கித்தர விரும்பிக் குடித்தார்கள்.
பின் மதுரையிலிருந்து கதைகள் பேசியவாறு சேலம் வந்தடைய, இரவு உணவை அங்கு முடித்துவிட்டு நள்ளிரவு சரியாக 12.30 மணிக்கு வீட்டுக்கு வந்துசேர்ந்தோம்.
உடைகள் மாற்றிக்கொண்டு பாயில் படுத்து தூங்கப்போகும் முன் என்னருகில் வந்த ஐயா, ”பழனி முருகனப் பாக்கணும்னு ஆசப்பட்டுக் கேட்டன். பக்கத்துலயேக் கூட்டிட்டுப் போய் காட்டுன. கூடவே திருப்பரங்குன்ற முருகனயும் மதுர மீனாச்சியயும் காட்டிட்டு வந்துட்டல்ல… நல்லப் புள்ளடா நீ. நல்லாருப்ப…” எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அவ்வளவு மகிழ்ந்தேன். மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் கடந்த ஒருவாரமாகத் தூங்காத தூக்கத்தை அன்றைய ஓரிரவில் மொத்தமாக தூங்கிமுடித்தேன்.
பெற்று வளர்த்து ஆளாக்கிப் பார்க்கும் பெற்றோர்களை மகிழ்விப்பதைவிட பெருமகிழ்வு இவ்வாழ்வில் வேறென்ன உள்ளது?
குழந்தைகள் எதையும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் உடனுக்குடன் சொல்லிவிடுவார்கள். அது ஆசையாக இருந்தாலும் சரி, ரகசியமாக இருந்தாலும் சரி. ஆனால் முதியவர்கள் அப்படிக் கிடையாது. அப்படியே குழந்தைகளுக்கு நேர்மாறாக ரகசியத்தைக் கூட சொல்லிவிடுவார்கள். ஆனால் அவர்களின் ஆசையை அவ்வளவு சீக்கிரத்தில் வெளியில் சொல்லமாட்டார்கள். காரணம் அவர்களின் ஆசையை, விருப்பத்தை மதிக்க முயற்சிகூட செய்யாத பிள்ளைகள் பெருகிவிட்டதுதான்.
‘எங்க நாமக் கேட்டு முடியாதுன்னு சொல்றதோட நிக்காம… எதாது சொல்லி காலத்துக்கும் காயப்படுத்திடுவாங்களோ’ என்று நினைத்துதான் வயதான பெற்றோர்கள் பெரும்பாலும் தம் ஆசைகளை வெளியே சொல்வதில்லை. ஆனால் ஐயா அப்படி நினைக்காது தன் ஆசையை ஒரு முறையல்ல இருமுறை என்னிடம் சொன்னது, ‘என் மவன் அப்டிலாம் என்னோட ஆசயத் தட்டிக்கழிக்கமாட்டான்’ என்ற நம்பிக்கையாகவும் அல்லது ‘என் ஆசய என்னோட மவன்கிட்ட சொல்றதுல என்ன இருக்கு. செஞ்சா செய்யட்டும். இல்லனாப் போகட்டும்’ என்று எதையும் நல்லதற்காய் எடுத்துக்கொள்ளும் பக்குவமாகவுமே இருக்கும்.
வயதானவர்கள் அப்படியொன்றும் நிகழ்த்தவே முடியாத ஆசைகளை வைத்திருக்கப்போவதில்லை. அத்தோடு அவர்களிடம் நாம் சிறுவயதில் கேட்ட ஆசைப்பட்டியலில் ஒரு சதவிகிதம் கூட அவர்களிடம் இருக்கப்போவதில்லை. அப்படியிருக்கையில் ஏன் வயதான பெற்றோர்களின் ஆசையை பிள்ளைகள் உதாசீனப்படுத்தவேண்டும்? ஒருவேளை அவர்கள் வாழ்ந்து முடிந்தவர்கள் என்ற எண்ணமா இல்லை ஆசைப்பட தகுதியற்றவர்கள் என்ற ஏளனமா?
எந்தப் பெற்றோர்களும் தன் பிள்ளை நன்றாக இருக்கவேண்டுமென்றுதான் நினைப்பார்கள். அவன் நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலும் சரி. ஆனால் அந்த நினைப்பை அவர்கள் பெரும்பாலும் வெளியில் சொல்லிக்கொள்ளமாட்டார்கள். அப்படியிருக்கையில் ஒரு தந்தை அதுவும் வயது முதிர்ந்த தந்தை தன் வாயால் மனத்தின் அடியாழத்திலிருந்து அவர் ஆசைப்பட்டுக் கேட்டதைவிட சற்று கூடுதலாய் செய்தமைக்கு, ‘நல்ல புள்ளடா நீ. நல்லாருப்ப…’ என வாழ்த்துதல் என்பது கண்ணுக்குத் தெரியாதக் கடவுளின் வாழ்த்தைவிட பல மடங்கு பெரிதல்லவா?
ஆம்! அப்படித்தான் பார்க்கிறேன்.
ஐயா இதுவரைக்கும் ஆசைப்பட்டுக் கேட்டது இந்த இரண்டு மட்டும்தான். இன்னும் கேட்கமாட்டாரா என ஏங்கியிருக்கிறேன், கேட்கவில்லை. நானும் கேட்டுப்பார்த்தேன். ம்…ஹூம் எதுவும் சொல்லவில்லை. அதனால்தான் நானே அவருக்கான ஆசையை வரைந்து விமானத்தில் கூட்டிப்போனேன்.
இன்னும் இன்னும் செய்யவேண்டுமென ஆசைதான். என்ன செய்ய? அவரின் மூப்பும், இக்காலமும்தான் அதற்கெல்லாம் வழிவகுக்க வேண்டும்.
ஐயா – நீங்கள் வெறும் சொல்லல்ல, செயல்.
அதனால்தான் எப்போதும் நான் செயல்வழியில் சென்றுகொண்டிருக்கேன் ஐயா.
[இன்னும்]
*