காலம் போட்ட கணக்கு

2013 ஆம் ஆண்டு ஒருநாள் முற்பகல் வேளையில் திருவல்லிக்கேணியிலுள்ள செந்நிற பழங்கட்டிடம் ஒன்றில் முதுகலை இதழியல் மாணவர்களான எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருந்தார் முனைவர் பால.இரமணி ஐயா அவர்கள்.

கண்டதும் அவரை பிடித்துவிட்டது. சிலரைத்தான் அவ்வாறு பிடிக்கும். ஏனெனக் கேட்டால் காரணம் சொல்லத் தெரியாது. அதுதொடங்கி அவரது வகுப்பை கூடுதல் ஆர்வத்தோடு கவனிக்கத் தொடங்கினேன். வகுப்பு முடிந்ததும் அவரிடம் சந்தேகங்கள் கேட்க ஆரம்பித்து, அது ஒருவகையான மரியாதை நிமித்தமான நட்பாகத் தொடர ஆரம்பித்தது.

2014 ஆக இருக்கும் என நினைக்கிறேன். நான் பணிபுரிந்த விகடன் நிறுவனத்தின் அவள் விகடன் இதழின் ‘கலங்காதிரு மனமே’ பகுதியில் ‘ஐயாவை பேச வைத்தால் என்ன?’ என்று ஒருநாள் தோன்ற, உடனே அவரது எண்ணுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி அடுத்தநாளே அலுவலகத்துக்கு வரவழைத்து பதினான்கு நாட்களுக்கு 14 விஷயங்களை பேச வைத்து பதிவுசெய்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை ஒலிபரப்பினோம்.

நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரிதும் மகிழ்ந்தவர், தன் காதல் மனைவி ஆண்டாள் பிரியதர்ஷினி அம்மாவை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஏற்கனவே அவரது மூன்று நூல்களை வாசித்தவன் என்ற முறையில் உடனே அவரிடம் அவள் விகடன் – பொங்கல் சிறப்பிதழுக்கு கவிதையொன்று எழுதித் தருமாறு கேட்டு வாங்கி வெளியிட்டேன்.

இவ்விரு சம்பவங்களுக்குப் பிறகு கணவன் – மனைவி இருவரோடும் நெருங்கிய நட்பு தொடர்ந்தது. இருவரையும் எப்போதும் ‘ஐயா – அம்மா’ என்றுதான் அழைப்பேன். ஐயாவோ என்னை புன்னகையோடு ‘வடிவு’ என்றே அழைப்பார்.

ஒருநாள் மாலை ஐந்தரை இருக்கும். என் முதல் கவிதை நூலினை அவர் பணிபுரிந்த பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்திற்கு கொண்டுபோய் சந்தித்து, ”என்னோட இந்த நூலுக்கு நீங்க ஒரு சின்ன வாழ்த்துரை தந்தா நல்லாருக்கும்யா” என்றேன். மகிழ்வோடு வாங்கி நான்கைந்து கவிதைகளை வாசித்தவர், உடனே அழகானதொரு வாழ்த்துரை எழுதித் தந்து மனதார வாழ்த்தியனுப்பினார்.

கடைசியாக அவரை சந்தித்தது 2020 சென்னை புத்தகத் திருவிழாவில். அம்மாவோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர் என்னைக் கண்டதும் முகம் மலர, ”வா வடிவு… எப்படி இருக்க? வேலையெல்லாம் நல்லாப் போகுதா?’’ என்று எழுந்து தோள்மீது கைபோட்டு நலம் விசாரித்தார். நானும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு புறப்படும்போது, ”சீக்கிரமே உங்கள வந்து நேர்ல சந்திச்சு ஒரு விஷயம் பேசணும்யா’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஆனால் அதன்பிறகு அவரை சந்திக்கவில்லை. கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால் சந்தித்திருக்கலாம்தான். ‘நம்ம ஐயாதான, எங்க போய்டபோறாரு… பொறுமயா போயி பாத்துக்கலாம்’ என விட்டுவிட்டேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிந்த நொடிமுதல் யோசிக்கலுற்றேன். எங்களை இணைத்த காலத்திடமும் தமிழிடமும் இயற்கை அன்னையிடமும் இருகரம் கூப்பி வேண்டிக்கொண்டேன். ஏனோ என் வேண்டுதலுக்கு செவி சாய்க்காது அவரை தன்னோடு நிரந்தரமாகக் கூட்டிக் கொண்டது காலம்.

பால.இரமணி ஐயா கம்பனில் மிகத் தேர்ந்தவர் என்னும் தகவல் எனக்கு மிகப் பிந்தியே தெரியவந்தது. ஏற்கனவே அவர் வகுப்பில் மாணவனாக இருந்தவன் என்றமுறையில் கம்பனை அவர் சொல்லக் கேட்கவேண்டும் எனும் ஆர்வம் நாளுக்குநாள் அதிகரித்தது. எனது இவ்வார்வத்தை எப்படியாவது அவரிடம் சொல்லி கம்பராமாயணத்தை முழுக்க அவர் வழியாக கற்கவேண்டும் என நினைத்தேன். பேரார்வத்தோடு அதற்காக காத்தும் இருந்தேன்.

ஒருவேளை இக்கொரோனா இல்லாதிருந்திருந்தால் நிச்சயம் சென்றாண்டே அவரை சந்தித்து கேட்டிருப்பேன். அவரும் மறுக்காமல் கூடுதல் உற்சாகத்தோடு எனக்கு சொல்லித் தந்திருப்பார். என் செய்ய? நாம் ஒன்று நினைக்க, இக்காலம் ஒன்றை நிகழ்த்திவிடுகிறது.

ஐயா விரைவில் நலம் பெற்று வருவார் எனப் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த என்னை அவர் மறைந்துவிட்டார் எனும் தகவல் வந்து எட்டியதும் சட்டென என்னிரு விழிகளும் கலங்க ஆரம்பித்துவிட்டது. எவ்வளவு முயன்றும் அதிலிருந்து இந்நாள் வரை என்னால் மீண்டுவர முடியவில்லை. என் வரமோ, சாபமோ தெரியாது. நான் பெரிதும் மதிக்கும், நேசிக்கும் சிலரின் உயிரிலா உடம்பை ஒன்று நேரில் பார்க்க முடியாமல் போய்விடும். இல்லையேல் பார்க்கத் துணிவற்றவனாக ஆக்கிவிடும்.

அப்படித்தான் ஐயாவின் உயிரற்ற உடலைப் பார்க்காமல் போனேன். ஒருவேளை பால.இரமணி ஐயா என்றதும் சட்டெனக் கண்முன் தோன்றும் அந்தப் புன்னகைத்த முகம் மட்டும்தான் வாழ்நாளெல்லாம் என்னுடன் வரவேண்டும் என இக்காலம் போட்ட கணக்காகக் கூட இது இருக்கலாம்.

கண்ணீரோடு,

வடிவரசு

(25.11.2021 அன்று நடைபெற்ற பால.இரமணி ஐயாவின் நினைவேந்தல் கூட்டத்தில் ஆண்டாள் பிரியதர்ஷினி அம்மா தொகுத்து வெளியிட்ட ‘என் இனிய பாலா…’ நூலுக்காக எழுதிய நினைவுக் கட்டுரை)

உம்மவர்க்கும் பகிர