ஐயா (எ) 95 வயது குழந்தை! – 10

ஐயா () 95 வயது குழந்தை! – 1

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 2

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 3

ஐயா () 95 வயது குழந்தை! – 4

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 5

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 6

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 7

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 8

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 9    

ஐயாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றாலும் தான் ஒருபோதும் கைநாட்டாக இருக்கக்கூடாதென நினைத்து யாரிடமோ தன் பெயரை மட்டும் எழுதக் கற்றுத்தரும்படிக் கேட்டு சிறுவயதிலேயே கற்றுக்கொண்டார்.

அத்தோடு நிற்கவில்லை. என்னை எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சேர்த்ததும் தினந்தோறும் ஆசிரியர்கள் என் பலகையில் எழுதியனுப்பும் ‘அ, ஆ, இ, ஈ…’யையும், என் புத்தகம் மற்றும் வாய்ப்பாட்டில் உள்ள ‘அ ஆ இ ஈ…’யையும் பார்த்து தானாகவே அதை எழுதக் கற்றுக்கொண்டார் (அ முதல் ஃ வரைக்கும்).

அதனால் நான் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஆரம்ப நாட்களில் தினமும் மாலை நேரத்தில், சில நாட்கள் காலை நேரத்தில் என்னை பலகை எடுத்துவரச்சொல்லி அதில் என் கைப்பிடித்து அகரம் எழுதச் சொல்லித்தருவார். நானும் சில தினங்களில் கொஞ்ச கொஞ்சமாக அகரம் எழுதக் கற்றுக்கொண்டேன்.

அதன் பிறகு பள்ளியில் சராசரி மாணவனாக இருந்ததால் ஓரளவுக்கு மதிப்பெண் பெற்றுவிடுவேன். அதனால் ஒவ்வொரு தடவை மதிப்பெண் பட்டியல் கொடுத்து ஐயாவிடம் கையெழுத்து வாங்கும்போதும் பெற்ற மதிப்பெண்கள் ஒவ்வொன்றையும் படித்துக்காட்டி கையெழுத்து வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

ஐயாவின் கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். அவர் தன் பெயரை ஒவ்வொரு தடவை எழுதும்போதும் (மிகப்பெருமையாக நினைத்து எழுதுவார்) அவருக்கேத் தெரியாமல் ரசிப்பேன். அதனால் அவரைப் போல் எழுத நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் போல் கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டேன். இருந்தும் ஒருதடவை கூட அவர் கையெழுத்துப்போடவேண்டிய இடத்தில் நான் போட்டதில்லை.

ஐயா படிப்பு விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு தடவை (ஏழாவது படிக்கும்போதென நினைக்கிறேன்) இருதின விடுமுறையில் ஏதோ வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார்கள். நான் அதை முதல்நாளே முடித்துவிட, என் நோட்டைப் பார்த்து எழுத, நண்பன் ஒருவன் வாங்கிக்கொண்டுபோய் இன்னொரு நண்பன் வீட்டில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே நானும் இன்னும் சிலருடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்க, அவ்வழியாகச் சென்ற ஐயா பார்த்துவிட்டார். அருகில் வந்தவர்,

”ஏதோ எழுதப்போறன்னு நோட்டெடுத்துட்டு வந்து எழுதாம விளையாடிட்டிருக்க? நோட்டு புக்குலாம் எங்க?” என கோபமாகக் கேட்க,

”அதுவா… சீனு எழுதிட்ருக்கான்…” என நான் விளையாட்டாகச் சொன்னதும், பளாரென கன்னத்தில் அறைந்துவிட்டார்.

வலி தாங்க முடியாமல் நான் அழ, ”ஒன்னக் கஷ்டப்பட்டுப் படிக்கவச்சா… நீ எழுதாம விளையாடுற… ஒனக்கு அவன் எழுதிட்ருக்கான்” எனச் சொல்லி ஐயா இன்னும் கோபமாக,

”தாத்தா… அவன் நேத்தே எழுதிட்டான். அவன் நோட்டப் பாத்து நான் எழுதிட்ருக்கன்” என ஓடிவந்து சீனு சொல்ல, நான் சொன்னதை தான் தவறாகப் புரிந்துகொண்டதை உணர்ந்த ஐயா, உடனே என் கையைப் பிடித்துக்கொண்டு, மறு கையால் கன்னத்தை தடவிவிட்டு,

”வலிக்குதாய்யா… நான் தப்பாப் புரிஞ்சிட்டு கோவத்துல அடிச்சிட்டன். மனசுல வச்சிக்காத… ஐயாவ மன்னிச்சிடுய்யா…” என அனைவர் முன்னாலும் அப்போதே மன்னிப்பு கேட்டார்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லயா…” என நான் அவர் கையைப் பிடித்துக்கொண்டு சிரித்ததும்தான் ஐயாவுக்கு முகமே மலர்ந்தது. அது முதல் அவருக்கு என் மேலான நம்பிக்கை இன்னும் பல மடங்கு அதிகமானது.

ஐயா படிக்காதவர், எதுவும் பெரிதாகத் தெரியாதவர், வெளியுலகம் அறியாதவர் என்றெல்லாம் ஒருநாளும் நினைத்ததில்லை. அதனால் என் வாழ்வில் நடக்கும் முக்கிய நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் அவரிடம் சொல்லிவிடுவேன். சொல்லுவதோடு மட்டுமல்லாது அதில் அவரது கருத்தையும் கேட்டறிந்து, பின் தீர யோசித்துதான் ஒரு முடிவெடுப்பேன்.

அப்படி கடந்த 2011 ஆம் ஆண்டு லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். எப்படியும் அதில் நான் தேர்வாகிவிடுவேன் என நண்பர்களிடம் மட்டுமல்லாது ஐயாவிடமும் நம்பிக்கையோடு முன்கூட்டியே சொல்லி விண்ணப்பிக்க, சொன்னதுபோல் தேர்வாகிவிட்டேன்.

அப்போது ஐயாவிடம் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் பற்றியும், அதில் நான் தேர்வாகி, கடைசி ஆறு மாதத்தில் எழுதிய நூற்றைம்பதுக்கும் அதிகமான கட்டுரைகள் பற்றியும், அதனால் விகடனில் அந்தாண்டுக்கான தலை சிறந்த மாணவ நிருபர் விருது கிடைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, ஒரு பக்கம் விகடன் வேலை இன்னொரு பக்கம் ஐ.டி கம்பெனி வேலை, இதில் நான் விகடன் வேலைக்குப் போகலாம் என நினைக்கிறேன் என்றதும், ஐயா ஒரு வார்த்தையும் எதிர்ப்பு சொல்லாது… ”ஒனக்கு அதுதான் சரின்னுப் பட்டுச்சுன்னா தாராளமாப் போ…” என்றதோடு, ”அவன் சொல்றான் இவன் சொல்றான்னு ஒன் வாழ்க்கைய யாருக்காகவும் விட்டுடாத… மனசுக்கு சரின்னுப் பட்டா உடனே செஞ்சிடு…” என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார்.

நான் முதுகலை கணிப்பொறி அறிவியல் படித்துவிட்டு பத்திரிகைத் துறை வேலையை தேர்ந்தெடுத்ததற்கு வீட்டில் அவ்வளவு எதிர்ப்பு. இருந்தாலும் ஐயா தனி ஒருவராக என் பக்கம் நின்று மகிழ்வோடு தட்டிக்கொடுத்தார்.

பின் மூன்றரை ஆண்டுகள் விகடனில் பணிபுரிந்துவிட்டு ”இனி என் பாடலாசிரியர் கனவை நோக்கி பயணப்படலாம்” என வேலையை விட நினைத்ததை வீட்டில் யாரிடமும் சொல்லாது ஐயாவிடம் மட்டும் சொன்னேன்.

”நான் வேலய விட்டுட்டு பாட்டு எழுத முயற்சி பண்ணலாம்னு இருக்கன்யா. கொறஞ்சது மூணுலயிருந்து அஞ்சு வருஷம் கஷ்டப்பட்டு போராடினா கண்டிப்பா எனக்கான எடத்த உருவாக்கிடலாம். அதுவரைக்கும் பல போராட்டத்தத் தாண்டிக் கஷ்டப்பட்டே ஆகணும்…” என விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.

அமைதியாகக் கேட்டவர், ”கஷ்டப்படுறதுல தப்பில்ல… நல்லாக் கஷ்டப்படு. எல்லாக் கஷ்டத்துக்கும் கண்டிப்பா ஒருநாள் பலன் கெடைக்கும்…” என்றார்.

அன்றவர் சொன்ன இவ்வார்த்தைகளால் அவ்வளவு நம்பிக்கையாக உணர்ந்தேன்.

கடந்த மூன்றாண்டுகளாக பாடல் எழுத முயற்சித்துவருகிறேன். தினம்தினம் போராட்டம்தான் என்றாலும் பிடித்த ஒரு விஷயத்திற்காகப் படும் கஷ்டங்கள் கூட சுகமாக இருப்பதை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். அத்தோடு எதிர்வரும் தடைகள், அவமானங்கள், புறக்கணிப்புகள் போன்றவற்றால் சிலநேரம் உடைந்துபோனாலும், ஐயாவின் வார்த்தைகளை நினைத்து, அவர் என்மேல் கொண்ட நம்பிக்கையை நினைத்து சட்டென எழுந்து எனக்கான வழியில் இன்னும் இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கிவிடுவேன்.

சில மாதங்களுக்கு முன் ஊரிலிருந்து நகர்பேசியில் அண்ணன் அழைத்திருந்தார். அப்போதுதான் தூங்கி எழுந்து அன்றைக்கு செய்யவேண்டிய வேலைகள் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அழைப்பை எடுத்ததும்,

”நீ ஏண்டா இப்டி இருக்க? நமக்குலாம் இந்தக் கனவு, பாட்டுலாம் தேவயா? அதெல்லாம் ரஜினி, கமல் மாதிரி பெரிய ஆளுங்களோடப் பசங்களுக்குதான் சரிவரும். ஒனக்கெல்லாம் எதுக்குடா கனவு?” என விடாமல் ஐந்து நிமிடத்திற்குப் பேசியவர் சட்டென நிறுத்திவிட்டு,

”ஒழுங்கா இந்தக் கனவு, பாட்டெல்லாம் தூக்கிப்போட்டுட்டு வேற வேலைக்கிப் போய் கல்யாணம் பண்ற வேலயப் பாரு…” என்றதும்,

”ரஜினி, கமல் மாதிரி பெரியாளுங்களோடப் பசங்கதான் கனவு காணணும்னா… ரஜினியும், கமலும் யாரோடப் பசங்கண்ணா? அவங்க அன்னிக்கி கனவு கண்டதாலதான இன்னிக்கி ரஜினியா, கமலா இருக்காங்க…” என்றதும் கோபத்தோடு அண்ணன்,

”ஒன்னலாம் திருத்தவே முடியாது. எக்கேடோ கெட்டுப்போ” எனச் சொல்லி வைத்துவிட்டார்.

இன்றைக்கு எத்தனை பெற்றோர்கள், உறவுகள் பிள்ளைகளின் கனவுக்கு பக்க பலமாக இருக்கிறார்கள் என்றால் மிக சொற்பமானவர்கள்தான்.

‘பொறக்கணும், படிக்கணும், வேலைக்கிப் போவணும், வீடு கட்டணும், கல்யாணம் பண்ணணும், கொழந்தப் பெத்துக்கணும், அதப் படிக்க வைக்கணும், அதுக்கு கல்யாணம் பண்ணணும், அப்புறம் செத்துப்போயிடணும்’ – இது மட்டுமே வாழ்க்கையென நினைத்துக்கொண்டிருப்பவர்கள்தான் இன்றைக்கு 95 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர்களும், குடும்பத்தினரும்.

இளைஞர்களையும், குழந்தைகளையும் பார்த்து கனவு காணுங்கள் என நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐயா சொன்னதற்குப் பதிலாக, பெற்றோர்களையும், உறவினர்களையும் பார்த்து பிள்ளைகளின் கனவுக்கு தடையாக இருக்காதீர்கள் என சொல்லியிருக்கலாம்.

நல்லவேலை என் மீதும் என் கனவு மீதும் நம்பிக்கை வைத்து தன் வார்த்தைகளால் எப்போதும் விட்டுக்கொடுக்காது, தட்டிக்கொடுக்கும் ஐயா ஒருவராவது வீட்டில் இருக்கிறாரே என நினைத்து மகிழ்வேன். 

ஐயா போன்று பிள்ளைகளின் ஆசையை, கனவை, லட்சியத்தை புரிந்துகொண்டு சோர்வுறுகையில் எல்லாம் நம்பிக்கையூட்டி தட்டிக்கொடுக்கும் பெற்றோர்கள் வாய்த்தல் என்பது பெருவரம்.

அவரது நம்பிக்கையும் வார்த்தைகளும்தான் என்னை இன்னும் இன்னும் கனவை நோக்கி நடைபோட வைப்பதாகவும், வருகின்ற போராட்டம் தடைகள் தூரோகங்கள் ஏமாற்றம் அவமதிப்புகள் எல்லாவற்றையும் கடந்து தகர்த்தெறிந்து செல்ல நல் ஊக்கியாகவும் துணையாகவும் இருப்பதாகவும் உணர்கிறேன். நம்புகிறேன்.

நிச்சயம் உங்கள் நம்பிக்கை வீண் போகாது ஐயா.

அண்ணன் சொல்வதுபோல் ரஜினி, கமல் போன்றவர்களின் பிள்ளைகளாக இருந்து ஒரே நாளில் பெரும் வெற்றியை விட, எங்கோ ஒரு பெயர்தெரியாத, சரிவர பேருந்து வசதிகூட இல்லாத உட்கிராமத்தில் வாழும் மூத்த விவசாயியான உங்களின் மகனாக யாதொரு பின்புலமுமில்லாது போராடி எனக்கான இடத்தை நானே உருவாக்கி வெல்வதே பெரிய வெற்றியாக நினைக்கிறேன் ஐயா.

இது நடக்கும். நிச்சயம் நடத்திக் காட்டுவேன் ஐயா.

[இன்னும்]

*

ஐயா (எ) 95 வயது குழந்தை!

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=