ஐயா (எ) 95 வயது குழந்தை! – 9

ஐயா () 95 வயது குழந்தை! – 1

ஐயா () 95 வயது குழந்தை! – 2

ஐயா () 95 வயது குழந்தை! – 3

ஐயா () 95 வயது குழந்தை! – 4

ஐயா () 95 வயது குழந்தை! – 5

ஐயா () 95 வயது குழந்தை! – 6

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 7

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 8

ஐயா – போகிறபோக்கில் மிக நுணுக்கமான விஷயங்களைக் கூட கற்றுத்தருவதில் படு கெட்டிக்காரர்.

அதேபோல்… சின்னச் சின்ன விஷயங்களைக் கூட சுவைக்க சுவைக்க ரசிப்பதெப்படி எனவும் அவ்வளவு சுவாரசியமாக சொல்லித்தருவார்.

எருக்கஞ்செடியை (அது மரமாகவும் வளரும்) கிட்டத்தட்ட எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். சிலர் பார்த்திருப்போம். அந்த எருக்கன் செடியை ஏதோவொரு செடி என்பதுபோல்தான் ஆரம்பத்தில் பார்த்திருக்கிறேன்.

ஒரு தடவை ஐயாவுடன் ஊரின் மேற்குப்புறத்தில் உள்ள ஏரிக்கரை அருகில் காடுபோல் அடர்ந்துள்ள இடத்தின் நடுவில் ஊர் காவல் தெய்வங்களில் ஒன்றான முனியப்பன் கோயிலுக்கு பிரார்த்தனை நிறைவேறியதன் பொருட்டு பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செய்யச் சென்றிருந்தேன்.

அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் செல்லும் வழியெங்கும் முட்கள் படர்ந்து வழியை முழுமையாக மறைத்திருந்தது. அதில் மிக கவனமாக ஒவ்வொரு அடியை எடுத்து வைத்துச் சென்றும் முள்ளொன்று காலில் குத்திவிட துடிதுடித்துப்போனேன்.

ஒருவாறு குத்திய முள்ளை எடுத்தும், அதன் நுனி உடைந்து காலில் நின்றுவிட்டதால்… நடக்கும்போதும், உட்காரும்போதுமென சுர் சுர்ரென உள்ளுக்குள் குத்த தொடர் வலி உண்டானது.

உடன் வந்த அண்ணன் அருகிலிருந்த வேல மர முள்ளொன்றை எடுத்துவந்து (அதைக் கொண்டு எடுக்க) எவ்வளவு முயன்றும் உள்ளிருக்கும் முள்ளை எடுக்கமுடியவில்லையென ஐயாவிடம் சொல்ல… ஐயா வந்து என் காலில் முள் குத்திய இடத்தைப் பார்த்துவிட்டு அண்ணனிடம் சொல்லி எருக்க இலையை பறித்து அதில் வரும் பாலை முள் குத்திய இடத்தில் வைக்கச் சொன்னார்.

அண்ணனும் அதை செய்ய… அவ்விடம் சில்லென்றதோடு கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்து முள் தானாகவே வெளியில் வந்துவிட்டது.

அந்த சிறு வயதில் இதை பெரும் ஆச்சர்யமாகப் பார்த்ததோடு… அது குறித்து ஐயாவிடம் கேட்டேன்.

”எருக்கஞ்செடி எவ்ளோ பெரிய பொக்கிஷம் தெரிமா?” என ஆரம்பித்து, ”அதோட பால, முள் குத்துனக்கு மட்டுமில்ல… காயம்பட்ட எடத்துல வச்சாலும் சீக்கிரம் ஆறிடும். அதோட பழுத்த எலயப் பறிச்சி அயவான (மருதாணி) அரக்கிறப்போ கூட வச்சி அரச்சா செவக்க செவக்கப் புடிக்கும். அதோட சிமிர் (மெல்லிசானக் குச்சி) வெட்டி, காத்தி சுத்தலாம் ((ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தினங்களில் கார்த்தி எனப்படும் காத்தி சுற்றுவோம். அதற்காக வேர்க்கடலைத் தொலும்புடன் (தோல்), பனம்புடுக்கு (ஆண் பனை மரத்தில் காய்க்கும்), பொரிப் பூண்டு (ஒருவகை செடிபோல கரம்புக்காடுகளில் இருக்கும்) சேர்த்து, நெருப்பு பற்றவைத்து, எரியாது புகையவிட்டுக் கரியாக்கி… அதை பழைய நாட்டுத் துணியை கைக்குட்டை அளவுக்கு கிழித்து, அதில் வைத்து பொட்டலமாகக் கட்டி, நல்ல மூன்று எருக்கன் சிமிராகப் பார்த்து வெட்டி (ஓரேயளவுக்கு நீளமாக) இரு பக்கமும் ஒன்று சேர்த்துக் கட்டிவிட்டு, ஒருபக்கம் மூன்று அல்லது நான்கு அடி நீளமுள்ள உறுதியானக் கயிர் ஒன்றைக் கட்டிவிட்டு, சிமிருக்கு நடுவில் கட்டியப் பொட்டலத்தை வைத்து, அதன் ஒருபுறம் (நீளமான கயிறு கட்டிய பக்கம்) நெருப்பு பற்றவைத்து லேசாகப் பற்றியதும் தலைமீது தூக்கி வட்டமாகச் சுற்ற, பொறி பறக்கும். இதை எங்கள் கிராமத்தில் கார்த்தி என்பார்கள். இதற்கென எருக்கன் சிமிர் தேர்வு செய்வது எளிதில் தீயில் எரியாது, கருகாது, உடையாது என்பதால்தான்)), அதோட சிமிருல நாறெடுத்து (தோல் பகுதியை உரித்து) கயிறு திரிக்கலாம். எருக்கம் பூவப் பறிச்சு சாமிக்கு மாலக் கட்டலாம். அதுமட்டுமில்லாம… எருக்கன் பூவுல இருக்கத் தேன சொட்டுச் சொட்டாக் குடிக்கலாம். இப்டி இன்னும் எவ்ளோத்தரம் சொல்லிட்டேப் போலாம்…” என்றார்.

”அய்யோ… ஒரு செடிக்குள்ள இவ்ளோ விஷயமா?” என வியந்துபோனேன்.

அது தொடங்கி ஐயாவுடன் செல்லும்போதெல்லாம் எதிர்ப்படும் மரம், செடி, கொடிகளின் பெயர்களை மட்டுமல்லாது அதன் பண்பு நலன்களையும் கேட்டறிவதை வழக்கமாகக் கொண்டேன்.

அப்படி ஒருதடவை ஐயாவுடன் விறகுவெட்ட எங்கள் கிராமத்திலுள்ள பெரிய மலையான அரசங்கல்லுக்குச் சென்றிருந்தேன். அப்போதங்கே ஒரு செடியைப் பார்த்து, ”ஐ கருப்பல…” என ஓடிப்போய் அதன் ஒரு கொத்தை உடைக்க…

‘ஹாஹா..’ என ஐயா என்னைப் பார்த்து சிரித்தபடி அருகில் வந்து,

”அதுக் கருப்பல இல்லடா மடயா… ஞானாச்செடி…” என்றார்.

”பாக்குறதுக்கு ரெண்டும் ஒரேமாரிதான் இருக்கும். ஆனா ரெண்டும் வேறவேற…” என சொல்லியபடி, அதன் ஓர் இலையைப் பறித்துக் கசக்கி முகர்ந்துப் பார்க்கச் சொன்னார்.

”இப்டி வாசன வந்துச்சின்னா அது ஞானாச்செடி. கருப்பல வாசன அப்டியே இதுக்கு நேர்மாறா இருக்கும் வா…” எனக் கூட்டிப் போய், அருகில் உள்ள புதரொன்றின் நடுவில் செடியோடு செடியாக மறைந்திருந்த கருவேப்பிலைச் செடியை ஒதுக்கிக் காட்டி,

”இதுதான் கருப்பல… இந்தா இத மூந்துப் பாரு…” என அதன் ஓரிலையைப் பறித்துக் கசக்கி நீட்ட, இரண்டுக்குமான வேறுபாட்டை அப்போதுதான் உணர்ந்தேன்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த பலருக்கும் ஞானாச்செடியை தெரிந்திருக்கும். பெரும்பாலும் இது மலைக் காடுகளில்தான் இருக்குமென்பதால் டெல்டா போன்ற பகுதிகளில் உள்ள கிராமத்தவருக்கு இச்செடியைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், ஒரேயொரு தடவை மலை காடுகள் உள்ள இடங்களுக்குச் சென்று ஞானாச்செடியைப் பாருங்கள். அது அச்சசல் கருவேப்பிலை போல் இருப்பதைப் பார்த்து வியந்துபோவீர்கள்.

ஐயா இச்செடி குறித்து (கருவேப்பிலை போல் இதுவும் மரமாக வளரும். எங்கள் வீட்டில் கருவேப்பிலை மரமொன்று கடந்த இருபது ஆண்டுகளாக உள்ளதென்பது ஓர் ஆச்சர்யத் தகவல்) சொன்ன சில விஷயங்கள் என்னை இப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துபவை.

”இந்த ஞானாச்செடியில வருஷா வருஷம் தவறாம பூ பூத்து காய் காய்ச்சி பழம் பழுக்கும். அந்தப் பழத்தப் (வெள்ளை நிறத்தில் இருக்கும்) பறிச்சி சாப்டலாம். இதுல ஆச்சர்யம் என்னன்னா… ஒரு செடி பழத்துக்கும் இன்னொருச் செடிப் பழத்துக்கும் அவ்ளோ வித்தியாசம் இருக்கும். ரொம்ப ரொம்பக் குளிர்ச்சி அதனால வெயிலுக்கு நல்லது. ஆனா, அதிகமா சாப்டா சளிப் புடிச்சிக்கும்” என்றவர்,

”இந்த எலயப் பறிச்சி கல்லு மேல வச்சி நல்லா நசுக்கி அதோட சாற எடுத்து ஒடம்புல பூசிக்கிட்டுப் போனா தேனீ கடிக்கவே கடிக்காது. தேனழிக்கிறவங்களுக்கு இதுதான் பெரியத் தொணயே.. (நானும் நண்பர்களோடு சேர்ந்து இதை பலதடவை செய்துபார்த்துள்ளேன்… ஹிஹி…)” என்றதும் அதிசயித்துப்போனேன்.

இப்படி… கல்யாண முருங்கை மர இலையைப் பறித்து ‘இலை தைத்தல்’ (நான்கைந்து இலைகளை ஒன்றிணைத்து ஊசி அளவிலான சின்னச் சின்னக் குச்சியைக்கொண்டு பெரிய அளவிலான இலையாகத் தைத்தல். அப்போதெல்லாம் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் இதில்தான் சாப்பாடு போடுவார்கள்), காரப்பழம், சூரப்பழம், கெளாப்பழம் (கிளாப்பழம்), சொத்துக்கெளாப்பழம் (கிளாப்பழம் போன்று சின்னதாக இருக்கும்) போன்றவற்றை எப்படிப் பறித்து, எப்படி சாப்பிட வேண்டுமென ஒவ்வொன்றையும் அவ்வளவு நுணுக்கமாக அழகாகக் கற்றுத்தந்துவிடுவார்.

இது ஒருபக்கமென்றால்… இன்னொரு பக்கம் ஐயா பெரும் ரசனைக்காரர்.

எருக்கன் செடியில் இருவகையான எருக்கன் செடிகள் உள்ளன. வெள்ளை எருக்கு, நீல எருக்கு. வெள்ளை எருக்கு பார்க்கவே வெள்ளை வெளேரென இருக்கும். அதன் பூ, கிளை, இலை என பார்க்கும்போதே அதன் வெண்மைத்தன்மை இது வெள்ளை எருக்கென எளிதில் காட்டிவிடும். ஆனால் நீல எருக்கு அப்படி இருக்காது. பார்க்க மிக அழகாக இருக்கும். அதன் பூ மட்டும்தான் நீல நிறத்தில் பூக்கும். பூவை வைத்துதான் இது நீல எருக்கென அடையாளம் காண முடியும் (இன்னும் சில வகை எருக்கு கூட இருக்கலாம்).

இந்த இரு வகையான எருக்கிலும் காய் காய்க்கும் என்றாலும் வெள்ளை எருக்கில் தான் அதிகமாக காய் காய்க்கும். அதன் காயானது கொழுக்கட்டை அளவுக்கு இருக்கும். இது ஒரு கட்டத்தில், அதாவது முற்றிய நிலையில் வெடிக்க… அதிலிருந்து சின்னச் சின்னதாக பஞ்சுடன் கூடிய விதைகள் உதிர்ந்து காற்றில் பறக்கும் (அது விழுந்து மண்ணோடு கலந்துபோய் பின் மழை பெய்யும்போது முளைத்துவிடும்). அது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். இதை ஐயா சொல்லிதான் உணர்ந்தேன்.

நடுவில் விதை. அது தலை (அல்லது உடல்) போன்றும், அதன் நுனிப்பகுதியில் பஞ்சானது விரிந்த தலைமுடி போன்றும் இருக்கும். இது காற்றில் பறந்து வரும் அழகைப் பார்த்தால் ரசனை இல்லாதவர்க்குக் கூட ரசனை வந்துவிடும். 

ஒரு தடவை ஐயா காற்றில் பறந்துவந்த விதையைப் பிடித்து உள்ளங்கையில் வைத்து… தனக்கேயான மண் மொழியில் அதை வர்ணித்தது தொடங்கிதான் எதுவொன்றையும் மிக நுணுக்கமாகப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன்.

சிறு வயது முதல் எங்கள் வீட்டில் ஆடு அல்லது மாடு, சில சமயம் இரண்டுமென இருக்கும் (இப்போது மாடு மட்டும்). அதனால் ஆடு மாடுகளுடனான சிநேகம் என்பது எங்கள் வீட்டார்க்கு அதிகமாகவே இருக்கும்.

மனிதர்களில் எப்படி ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பதில்லையோ அதேபோலத்தான் ஆடு, மாடுகளிலும். முகம், உருவம் என எதுவும் ஒன்றைப் போல் இன்னொன்றுக்கு இருக்காது. இதை இயற்கையின் பெரு விந்தை எனலாம்.

ஆரம்பத்தில் மாட்டிடம் செல்ல கொஞ்சம் பயமாக இருக்கும் (அது உருவம் காரணமாக இருக்கலாம்). ஆனால், ஆட்டிடம் அதிலும் சிறு குட்டி ஆடுகளிடம் சகஜமாகச் சென்று விளையாடுவேன்.

அப்போதொருதடவை ஐயாவும், அண்ணனும் ஆடுகள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கையில்… ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு பெயர் சொல்வதைக் கேட்டதும்,

”ஆட்டுக்குப் பேரிருக்கா…?” என்றேன்.

ஐயா சிரித்துக்கொண்டே, ”ஆமாம்” என்றார்.

”யார் வச்சதுப் பேரு?” என்றதும்,

”நானும் அண்ணனும்”

”அப்போ இந்தக் குட்டி ஆட்டுக்கு?”

”அதுக்கா… இன்னும் பேர் வக்கல… நீயே ஒரு பேரு வையேன்…”

”எனக்குப் பேர் வக்கத் தெரியாதே…” என்றதும் ஐயாவும் அண்ணனும் சிரிக்க,

”அந்தக் குட்டிய நல்லாப் பாரு… அது யாருமாறி, எதுமாறி இருக்கோ அந்தப் பேரு வை…” என்றார் ஐயா.

உடனே அருகிலிருந்த ஆட்டுக்குட்டியைப் பிடித்து உத்து உத்துப் பார்க்க (அதைப் பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்)… அதன் முகம் நடிகர் கார்த்தியைப் (பழைய கார்த்தி) போல் இருந்தது.

”கார்த்தி மாறி” என்றதும், ”அப்போ அதுப் பேரு கார்த்தி” என்றார் ஐயா.

அது தொடங்கி ஆடு, மாடு மட்டுமில்லாது நான் நட்டு வளர்க்கும் மரம், செடி, கொடியென ஒவ்வொன்றுக்கும் பேர் வைக்கத் தொடங்கினேன். அப்பழக்கம் இப்போது என் அறையில் இருக்கும் குட்டி நூலகத்திற்கு ”அம்முகுட்டி நூலகம்” என பெயர் வைத்தது வரைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

திடீரென ஒருநாள் ‘எதுக்கு எல்லாத்துக்கும் பேர் வக்கணும்? வக்கலன்னா என்ன?’ எனத் தோன்ற, வீட்டிலுள்ள ஆடு கட்டும் தாழ்வாரத்தில் கயிற்றுக்கட்டிலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த ஐயா எழுவது வரைக்கும் அருகிலேயே காத்திருந்து கேட்டேன்.

”அதுவா… பேர் வக்கலன்னா அது நம்மள விட்டு தூரத்துல இருக்க யாரோ, யாருதோ மாரி இருக்கும். பேர் வச்சிட்டோம்னா அது நம்மளோடதா, நம்ம சொந்த பந்தமா கூடவே இருக்கும்…” என்றார் புன்னகைத்தவாறு.

எவ்வளவு அர்த்தம் பொதிந்த பதில் இது. யோசிக்க யோசிக்க வியப்பைத் தந்தது.

நான் ஆட்டுக்குட்டிக்கு ‘கார்த்தி’ என பெயர் வைத்தது தொடங்கி, தினந்தோறும் அதை அன்போடு ‘கார்த்தி’ என பெயர் சொல்லி அழைப்பது, தூக்கிக் கொஞ்சுவது, அதனுடன் விளையாடுவது, அதற்கு தண்ணீர் காட்டுவது (கொடுப்பது), புண்ணாக்கு, இலை, தழை, கொடி உண்ணத் தருவதென… சொந்தமாக, பந்தமாக இருப்பதை அவர் சொன்ன பதிலில் புலர்ந்ததை நினைத்து வியந்துபோனேன்.

இப்படி ஒன்றா இரண்டா? எத்தனை எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

எங்கோ எதையோ தேடி அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய டெக்யுக பெற்றோர்களுக்கு இப்படியெல்லாம் தங்கள் பிளைகளுக்குச் சொல்லித்தர நேரம்தான் இருக்கப்போகிறதா?

இல்லை… வீடியோகேம், கிரிக்கெட், வாட்ஸ்அப், பேஸ்புக் என அழகான வாழ்வைச் சுருக்கி வீணே அர்த்தமற்றதாக மாற்றிக்கொண்டிருக்கும் இத்தலைமுறைப் பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் கற்றுக்கொள்ள இதுபோன்று எவ்வளவோ இருக்கிறதெனத் தெரியத்தான் போகிறதா?

வாழ்க ஐயா.

[இன்னும்]

*

ஐயா (எ) 95 வயது குழந்தை!

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=