இடமாறல்
தும்பியின் மென்றெக்கை பிடித்து
உலகை வலம்வர
யானைத்துதிக்கை துறந்தமனது
எறும்புடன் நடைபோட
பாம்பின்கால் துண்டித்தது
கனவு
சூரையில் சிக்குண்டு தவிக்க
தூக்கணாங்கூடுவிட்டு வெளியேறியது
வார்த்தைகள்
சப்தமும் நிசப்தமும் பின்னிய சாலையில்
நின்றோடும் குட்டைநீரில்
முகம்பார்த்த நொடி
இளமையின் முழுமை தொட்டிருந்தது
அழுக்கேறிய அர்த்தமுகம்
பனிக்கு பயந்த ஆசை
மழையில் மாட்டிக்கொண்டு
வெளியேறயெண்ண
இடம் மாறியிருந்தது
வானமும் பூமியும்
அதற்கும் இதற்கும் தெரியாமல்.