திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

எதிர்பாராத பாடங்களையும் திகிலையும் ஊட்டக்கூடியதில் பயணத்தையும் அதில் எதிர்படும் எளிய மனிதர்களையும் மிஞ்சின ஒன்றில்லை என்பதை அன்றுதான் முதல் தடவையாக உணர்ந்தேன்.

வெயில் கொளுத்துமொரு நண்பகல் வேளையில் மாமண்டூர்  குகைக்கோயில் இருக்கும் மலைநோக்கி நடந்து சென்றேன். மலையை நெருங்க நெருங்க நான்கைந்து பேர் அதன் மேலிருப்பதை கண்டேன்.

மாமண்டூர் [எங்கள்] திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு மூலையில் காஞ்சிபுரத்திற்கு மிக அருகில் இருக்கும் சிறுகிராமம். பல்லவர்களால் அதிலும் குறிப்பாக மகேந்திர வர்மனால் குகைக்கோயில் அமைக்கப்பட்ட மிகச் சில இடங்களில் ஒன்றாக சொல்லப்படுவது.  

சரியாக முதல் குகைக்குச் செல்லும் படிக்கட்டின் அருகில் போனபோது, குகையைப் பார்த்துவிட்டு கீழே வேகமாக இறங்கிவந்த நான்குபேர் தம் இருசக்கர வாகனத்தில் அவசர அவசரமாக ஏறிப் புறப்பட்டுச் சென்றார்கள்.

சரி, வேறு யாரும் இல்லையென நினைத்துப் படியேறி குகைக்கருகில் சென்றபோது… அங்கே இருபது வயதுடைய மூன்று வாலிபர்கள் வட்டமாக உட்கார்ந்து மது அருந்திக்கொண்டும், சிறியரக தண்ணீர்பாட்டிலில் பொத்தலிட்டு அதிலொரு சிறுவடிவ பழுப்பைச் செருகி அதன்வழியாக கஞ்சா புகைத்துக்கொண்டும் இருந்தார்கள். 

அவர்களை பார்த்தும் பார்க்காததுபோல் குகையை சுற்றிப்பார்க்கும் வேலையில் மும்முரமானேன். சட்டென மூவரில் இருவர் எழுந்து தாங்கள் அருந்திய மது பாட்டில்களை எடுத்து தூரத்திலிருந்த ஒரு கல்லின் மீது குறிபார்த்து எறிந்துவிட்டு (உடைத்துவிட்டு) ஏதோ தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டு இறங்கி அங்கிருந்து கிளம்பிப் போனார்கள்.

சரி, நம் வேலையைப் பார்ப்போமென பாக்கெட்டிலிருந்த நகர்பேசியை எடுத்து வந்ததன் அடையாளமாகவும், அங்கிருக்கும் கல்வெட்டின் எழுத்துகளையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு அடுத்த குகைக்குச் செல்ல எத்தனிக்கையில், ”ண்ணா, நீங்க பிரஸா?” என்றான், வெகுநேரமாக கஞ்சாவுக்குள் தொலைந்துபோயிருந்த சட்டையணியாத, காலில் காயத்துடனிருந்த கருநிறத்தன்.

‘இல்லப்பா’ என்பதற்குள், ”எங்கருந்து வர்றீங்கண்ணா?” என்று கேட்டான்.

முதலில் இவனிடம் நமக்கெதுக்கு பேச்சு என நினைத்தாலும், சரி கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு இங்கிருந்து வேகமாக சென்றுவிடலாம் என முடிவெடுத்து, ”மெட்ராஸ்” என்றேன்.

உடனே அவனோ, ”மெட்ராஸ்ல எங்கண்ணா?” என்று கேட்டான்.

”நுங்கம்பாக்கம்” என்றேன்.

”நுங்கம்பாக்கத்துல எங்கண்ணா?”

‘என்ன, இவன் விட்டா வீட்டு அட்ரஸ் வரைக்கும் கேட்பான் போலயே’ என ஒருவிதக் கடுப்புடன், ”வள்ளுவர் கோட்டம் பக்கத்துல’’ என்று சொன்னேன்.

சட்டென அவன், ”ண்ணா… நானு அங்கதாண்ணா இருந்தன்’’ என ஆரம்பித்து ஏதேதோ சொல்ல, நானும் அவற்றை விருப்போடு கேட்பதுபோல் சில நிமிடம் நடித்துவிட்டு அவனிடமிருந்து தப்பித்து ஒருவழியாகப் புறப்படுகையில், ”கொகய மட்டுந்தான் போட்டா புடிப்பீங்களா? என்னலாம் புடிக்கமாட்டீங்களா?’’ என்று கேட்டான். 

இதென்னடா தலைவலியா போச்சென்று நினைத்து, ”அதெல்லாம் இல்லப்பா… இதோ புடிக்கிறன்” எனச் சொல்லி முடிப்பதற்குள் குகையின் முன்னால்  போய் நின்று விதவிதமாக போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.

சரியென நானும் நான்கைந்து ஒளிப்படங்கள் சொடுக்கிவிட்டு, ”செரிப்பா, நேரம் ஆகுது. நான் போய் அந்தக் குகைங்கள பார்த்துட்டு கிளம்பணும்’’ எனச் சொல்லிக்  கிளம்ப, ”ண்ணா… நீங்க சரக்கடிப்பீங்களா?’’ என்று கேட்டான்.

‘ரைட்டு இவன் விடமாட்டான் போலயே’ என, ”இல்லப்பா அடிக்கமாட்டன்’’ என்றேன்.

”ண்ணா… சொம்மா சொல்லுங்கண்ணா?”.

”இல்லப்பா… எப்பவாவது பீர் மட்டும்தான். அதும் தோணுச்சினாதான்”.

என் பதிலை கேட்டதும் மகிழ்ந்தவனாய் அங்கிருந்த பீர் பாட்டிலைக் காட்டி, ”அடிக்கிறீங்களாண்ணா?” என்று கேட்டான்.

”இல்லப்பா வேணாம்’’.

”ண்ணா, சொம்மா அடிங்கண்ணா. வெய்யிலுக்கு கும்முனுருக்கும்’’.

நான்கைந்து தடவை இதையே வேறுவேறு மாதிரி சொன்னான். நானும் ஏதேதோ சொல்லி சமாளித்து புறப்படுகையில், ”ண்ணா… ஒரு எல்ப்புண்ணா’’ என்றான். 

‘ரைட்டு பயபுள்ள ஏதோ பெருசா பிளான் போடுறான்’ என

நினைத்துக்கொண்டு சற்று எச்சரிக்கையாகவே, ”என்னப்பா?’’ என்று கேட்டேன்.

”ண்ணா… பெட்டி அடிச்சிவுடுறீங்களா?’’

முதலில் அவன் சொன்னது என்னவென்றே புரியவில்லை. இன்னொரு தடவை கேட்டேன். சொன்னான்.

”அப்டின்னா என்னன்னு தெரியாதேப்பா’’.

”ண்ணா… இன்னாண்ணா இதுபோயி தெர்லன்னு சொல்ற. தோ… இந்த வத்திக்குச்ச கொளுத்தி, இத (கஞ்சா புகைக்க அவன் உருவாக்கி வைத்திருந்த தண்ணீர் பாட்டிலுடன் பொருத்தப்பட்ட சிறு பழுப்பில்) பத்தவக்கணும்ண்ணா. அவ்ளோதான்…’’.

ஒருமாதிரி நக்கலாக சிரித்துக்கொண்டு அவன் சொன்னதை பார்த்ததும் ஒருபக்கம் சுர்ரென கோபமாக வந்தாலும், சரி போனாப் போகிறதென்று பற்றவைத்துவிட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பி படி இறங்கினேன்.

பின்பக்கமாக ஓடிவந்து நின்றவன், ”ண்ணா… நீ இன்னாண்ணா வேல செய்யிற?’’ என்று கேட்டான்.

ஏற்கெனவே போதையில் இருந்தவன், இப்போது கஞ்சா வேறு புகைத்துவிட்டு இன்னும் போதையேறி இருந்தான். ‘அட, இவன் விடமாட்டான் போலயே’ என உள்ளுக்குள் திட்டிக்கொண்டு, ”பாட்டு எழுதறன்’’ என்றேன்.

கேட்டதும், ”அய்யோ அண்ணா… தெரியாம ஒங்கள பெட்டி அடிக்க வச்சிட்டண்ணா. சாரிண்ணா சாரிண்ணா… என்ன மன்னிச்சிருண்ணா’’ என்று சொல்லிக்கொண்டு வேகமாக அருகில் வந்து மன்னிப்பு கேட்டு கெஞ்சினான்.

இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்தேன்.

”அய்யோ தம்பி, அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. நீ போய் வேலயப் பாரு. நான் போய் சுத்திப்பாத்துட்டு கெளம்பறன்’’ எனச் சொல்லி கிளம்புகையில், ”ண்ணா… நெஜமாலுமே சாரிண்ணா. சத்திமா நானு பண்ணது பெரிய தப்புண்ணா’’ என மீண்டும் ஆரம்பித்து சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு, ”ண்ணா… ஒங்கப் பாட்டு எதாது சொல்லுண்ணா’’ என்று கேட்டான்.

சுற்றிலும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஆள் நடமாட்டமே இல்லை. உடனே அவனிடம், ”யூடியூப்லாம் பாப்பியா?” என்று கேட்டேன்.

”ஓ, பாப்பண்ணா’’ எனத் தலையாட்டி சொல்லிவிட்டு, தன் டவுசர் பாக்கெட்டிலிருந்த திரை உடைந்துபோன நகர்பேசியை எடுத்து யூடியூப் பக்கத்தைத் திறந்து என்னிடம் நீட்டினான்.

மெல்ல வாங்கி அதில் என் பெயரை டைப் செய்து, ”இதெல்லாமே என்னோடப் பாட்டுதான்ப்பா’’ எனச் சொல்லி தந்துவிட்டு படியிறங்கி அடுத்த குகை நோக்கி செல்கையில் மேலிருந்து சத்தமாகக் கூப்பிட்டு, ”ண்ணா… ஒங்கப் பாட்டு சூப்பர்ண்ணா’’ என்றுவிட்டு, ”போயி அந்தக் கோயில பாத்துட்டு வாங்க. மலைக்கு அந்தாண்ட இன்னொரு கோயிலு இருக்கு, நானு பைக்ல கூட்டுனு போறன். அது ரொம்ப தொலவு’’ என்றான்.

”சரி’’ என சொல்லிவிட்டு ஒவ்வொரு குகைக் கோயிலாகப் போய் பார்த்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டு திரும்பி வருகையில் முதல் குகையின் அடிவாரத்தில் அவனும் பூ போட்ட சட்டை அணிந்துகொண்டு தன் இருசக்கர வாகனத்தின் மீது உட்கார்ந்து புறப்படத் தயராக இருந்தான்.

கூடவே இப்போது அவனுடன் இன்னொரு வாகனத்தில் புதிதாக இருவர் இருந்தனர். அவன் அவர்களிடம் என்னைக் காட்டி ஏதோ சொல்ல, நான் அருகில் செல்வதற்குள் அங்கிருந்து அவர்கள் வேகமாகக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். 

மிகுந்த தயக்கத்தோடு அவனிருக்கும் இடத்தருகில் சென்றேன். ஏதோ எனக்காகவே காத்திருந்ததுபோல், ”ண்ணா… வாங்கண்ணா மெயின் ரோட்ல வுட்டுட்றன்’’ என்றான். 

”இல்லப்பா… நான் நடந்தே போயிட்றன்’’ என்றேன்.

”ண்ணா… ரொம்பத் தொலவு நடக்கணும், வாண்ணா. வெயில் வேற அடிக்குது’’ என வற்புறுத்தி என்னை வாகனத்தில் ஏற்றிக்கொண்டான்.

”டேய் தம்பி… ஸ்டடியா இருக்கியாடா?’’ 

”என்னாண்ணா அப்டி கேட்ட… நான்லாம் எம்மா அடிச்சாலும் கில்லி மாரி நிப்பண்ணா’’.

”செரிப்பா, பொறுமயா போ’’ என ஒருவித பயத்துடன்தான் சொன்னேன். அவனோ நான் எதிர்பார்த்ததை விட நன்றாகவே ஓட்டிச் சென்றான்.

ஆளரவம் அற்ற வழி. கிராமத்திலிருந்து காட்டுக்குச் செல்லும் மண்பாதை. ஒருபக்கம் ஏரிக்கரை, இன்னொரு பக்கம் முட்புதர். சரியாக எரிக்கரையின் முடிவுப்பகுதியை நெருங்குகையில் இரண்டாகப் பிரியும் பாதையில் செல்லவேண்டிய வழிவிடுத்து வேறு வழியில் திரும்பினான். அது நேராக ஏரிக்குள் நுழைந்தது.

”ஹே, ஏன்ப்பா இப்டி போற? அப்டிதான போகணும்’’.

”இப்டியும் போலாண்ணா”. 

”இல்ல, இது சுத்திட்டுப் போறமாதிரி இருக்கு”.

வெளியில் மிக சகஜமாக இதை நான் சொன்னாலும், உள்ளுக்குள் பீதியாகவே இருந்தது. 

ஏரி முடிந்ததும் சிறிதாக ஒரு காடு போல் இருந்தது. அதைத் தாண்டியதும் கல்குவாரி. சட்டென்று இரண்டு இருசக்கர வாகனங்களில் இன்னும் ஐந்து பேர் பின்னால் வர, நான் ஒருவாறு முடிவே செய்துவிட்டேன்.

‘அவ்வளவுதான், நம்மை அடித்துப் போட்டுவிட்டு நம்மிடம் இருக்கும் பணத்தையும் செல்போனையும் பிடுங்கிக்கொண்டு விடப்போகிறார்கள். சரி, எல்லாவற்றையும் தந்துவிடுவோம். உயிரோடு விடுவார்களா?’

இப்படி ஏதேதோ யோசித்தவாறு பயத்துடன், அதைத் துளியும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மிகுந்த அன்பாக அவனிடம், ‘என்னப் படிச்சிருக்க தம்பி, என்ன வேலை செய்யிற, உனக்கு வேலை வாங்கித் தரட்டுமா?’ எனப் பேசிக்கொண்டு போக, சட்டென ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டான்.

சுற்றுமுற்றும் பார்த்தேன். ஓர் ஈ, காக்கா கூட இல்லை. இறங்கி வேகமாக ஓடிவிடலாமா என நினைத்தேன். அதற்குள் பின்னாலேயே வந்தவர்கள் அருகில் வந்து நின்று தங்களுக்குள் எதையோ குசுகுசுவெனவும், ஜாடைமாடையாகவும் பேசிக்கொண்டார்கள்.

ஒருவன் மட்டும் இறங்கி வந்து இவனிடம் எதையோ (கஞ்சாவாகத்தான் இருக்கவேண்டும்) வாங்கிக்கொண்டு மீண்டும் போய் ஏறிக்கொள்ள, வந்த வழியாகவே அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

‘அப்பாடா’வென இருந்தது. மெல்ல மூச்சுவிட்டுக்கொண்டேன்.

அங்கிருந்து மெல்லக் கிளம்பி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வரிசையாக, ”படிப்புலாம் சுத்தமா வர்லண்ணா. அதால ஸ்கூலு பக்கமே போவல. ஊருல சொம்மாதான் சுத்தினுருக்கன். ஒரு வேலயும் எனக்கு செய்யத்தெரியாதுண்ணா. வீட்லயும் சொல்லி சொல்லிப் பாத்துட்டு இப்ப தண்ணிதெளிச்சி வுட்டாங்கண்ணா’’ என்று பதில் சொன்னான்.

”செரி, ஒன் பேரென்னப்பா?” என்று கேட்டேன்.

திரும்பிப் புன்னகைத்து, ”பிட்லர்’’ என்றான்.

”ஹிட்லர் தெரியும். அதென்ன பிட்லர்?” என்று கேட்டேன்.

”ஹிட்லர்னா எனக்கு ரொம்பப் புடிக்கும்ணா. நான் ஊர்ல டம்மிபீஸ்ங்கறதால எல்லாரும் என்ன பிட்லர்னு கூப்புட்டு… இப்ப என் பேரே அதுவாயிடிச்சிண்ணா’’.

அவன் சொல்லி முடிக்கவும் மெயின் ரோடு வரவும் சரியாக இருந்தது. வண்டியை ஓரமாக நிறுத்தியவன், ”ண்ணா… அதோ தெர்துபார்ணா, அதான் பஸ் ஸ்டாண்டு. அந்த வழில போலீஸ் இருப்பாங்கண்ணா, என்னப் பாத்தாலே புடிச்சினுப்போயி எதாது பொய்கேஸ் போட்டுருவாங்க. அதாண்ணா இந்த வழில வந்தன்” என்று சொல்லி சிரித்துவிட்டு, ”தோ, அங்க இருக்குபார்ணா… அதான் நம்ம வீடு. நீ எப்பவேணாலும் வாண்ணா. ஒனக்கு இங்க ஒரு தம்பி இருக்கான்… பாத்துப் போயிட்டு வாண்ணா” எனச் சொல்லி என்னை இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டான்.

கன்னத்தில் ஓங்கி அறைந்ததுபோல் ஒருமாதிரி ஆகிவிட்டது.  ‘ச்சை, இவன போய் தப்பா நெனச்சிட்டமே’ என என்னை நானே திட்டிக்கொண்டேன். 

‘ஏன் அப்படி நினைத்தோம்?’ இச்சமூகமும், சினிமாவும், பத்திரிகைகளும் இவன் போன்ற எளிய மனிதர்களை இப்படித்தான் நினைக்க நமக்குக் கற்றுத்தந்துள்ளதோ அல்லது கற்றுத்தருகிறதோ என எண்ணுகையில் வருத்தமாகவும் குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது. 

வாழ்க்கை என்னதான் அழகானதாக இருந்தாலும், இவன் போன்ற எளிய மனிதர்களால்தான் அது இன்னும் இன்னும் அழகாகிறது. அல்லது பூரணத்துவமடைகிறது என மனத்துக்குள் தோன்றியது. ஆம்!

பிட்லர் என்பவன் அவன் ஊரைப் பொறுத்தவரை குடிகாரனாக, கஞ்சா புகைப்பவனாக, எதற்கும் லாயக்கற்றவனாக, காமெடி பீஸாக இருக்கலாம். ஆனால் என் பொறுத்தவரையில் எளிய மனிதன். நல்லவன். பாடம் கற்பித்தவன். உதவியவன். யாவற்றுக்கும் மேலாக பயணம் தந்த தம்பி. ஆம்!

பயணம் தருபவையெல்லாம் மகத்தானவை என்றால், அப்பயணம் தந்த தம்பி பிட்லரும் மகத்தானவன்தான்.

*

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=