ஐயா (எ) 95 வயது குழந்தை! – 15

ஐயா அடிக்கடி கதைகள் சொல்வார். கதைகளெனில் ஏதோ பொய்யான கற்பனையானக் கதைகள் கிடையாது. அவர் வாழ்வில் நடந்த அல்லது பார்த்த அல்லது கேள்வியுற்றதை கதைகளாகச் சொல்வார்.
அவர் கதை சொல்லும் விதத்தில் கதை கேட்கப் பிடிக்காதவர்க்குக் கூட கதை கேட்கப் பிடித்துவிடும். அப்படி அவர் சிறுவயது முதல் சொன்ன கதைகள் மிக ஏராளம் எனலாம்.
அதிலும் அவர் கதைகள் வழியாக அறிமுகமாகும் கதை மாந்தர்கள் யாரும் நம்மூர் சினிமாக்களில் காட்டப்படும் அசகாய சூரர்கள் போலில்லாமல் மிக எளிய மனிதர்களாக இருப்பார்கள். அதனாலோ என்னமோ அவர்களை வெறும் கதை மாந்தர்களாக மட்டுமல்லாது நம்முடன் நம்மருகே வாழும் நிஜ மனிதர்களாக நினைக்கத் தோன்றியது.
ஐயாவின் கதைகள் வழியாகத்தான் அவரின் ஐயா, அம்மா, தாத்தா, பாட்டி எனப் பலரும் எனக்கு அறிமுகம். அதனால் அவர்கள் யாரையும் நான் நேரில் பார்க்கவில்லையென்றாலும் கதைகள் வழியாகப் பார்த்துப் பேசிய நிறைவு மனதில் உண்டாகும்.
அதனால் ஐயாவிடம் கதைகள் கேட்க விரும்பி நானாகப் போய் ஏதாவது கேட்க (அதுதான் அவரை கதை சொல்லவைக்கும் எளிய முறை) அவர் தானாக, ”அதுவா… அது ஒர்நாள்” எனத் தொடங்கி கதை சொல்ல ஆரம்பித்துவிடுவார். நானும் மகிழ்வோடு கதை கேட்கத் தொடங்கிவிடுவேன்.
கதை கேட்க கதை சொல்பவர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் கதை கேட்பவர்களும் கதை சொல்ல மிக முக்கியம் என்பேன். அப்படி ஐயாவுக்கு கதை கேட்க சரியான நபர்கள் அமைந்துவிட்டால் போதும் அவ்வளவு உற்சாகத்தோடு கதை சொல்வார்.
அவ்வகையில் ஐயாவும் நானும் நன்கு பொருந்திப்போக கதைகள் களைகட்டும்.
அப்படி ஒருதடவை ஐயாவுடன் பேசிக்கொண்டிருக்கையில் கதை கேட்கவேண்டும்போல் இருந்தது. உடனே அவரிடம் ”எனக்கு ஏன்யா வடிவரசு’னு பேர் வச்சீங்க?” என்றேன்.
”அதுவா… நீ பொறந்தப்போ கை அளவுகூட இல்ல. ஒன்னத் தூக்கவே பயமா இருந்துச்சு. நீ என்னடான்னா விடாமா அழுதுட்டே இருந்த. ஒரு பக்கம் அழுக இன்னொரு பக்கம் குடிக்கிறப் பாலெல்லாம் கைசலாப் போயிட்டிருந்தது. என்ன பண்றதுன்னுத் தெரியாம ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனா ‘ஒண்ணும் பண்ணமுடியாது. எடக் கொறச்சலா இருக்கு’ அது இதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. சரி இனி கடவுள் வுட்ட வழின்னு தூக்கிட்டுவந்து சாமிப் படத்துக்குக் கீழவச்சி நம்ம கொலதெய்வம் வடுவச்சி அம்மன வேண்டிக்கிட்டுத் திர்நூறுப் புடிச்சிப் போட்டன். அன்னிக்கே அழுவர்த நிறுத்திட்ட. கையிறதும் நின்னுப்போச்சு. அவ்ளோப் படிச்ச டாக்டருங்களே ஒண்ணு பண்ணமுடியாதுன்னு சொன்னவன வடுவச்சி அம்மாதான் காபந்து பண்ணா. அதனால அவப் பேருல இருந்துதான் ஒம்பேர வச்சன்” என ஐயா அவ்வளவு உயிரோட்டமாக சொல்வார்.
அவர் சொல்லும் கதைகள் எதுவும் வெறும் கதையாக மட்டும் கேட்காமல் கண்முன் காட்சியாக விரிவதை பல தடவை கண்டிருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன்.
அண்மையில் ஊருக்குச் சென்றிருந்தபோது இரவு உணவை நான், ஐயா, அண்ணன், அண்ணன் குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது மூன்றாவது அண்ணனின் இளைய மகள் சாப்பிடாமல் அடம்பிடித்து அழுதுகொண்டிருக்க, ஐயா சாப்பிட்டதை விட்டுவிட்டு ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு வாசலுக்குப் போனார். போனவர் சிறிதுநேரம் அங்குமிங்கும் நடந்துவிட்டு, திண்ணையில் உட்கார்ந்து குழந்தையை மடியில் படுக்கவைத்து கதை சொல்ல ஆரம்பித்தார்.
அச்சமயம் நானும் அங்கே செல்ல, கேட்கும் தூரத்தில் அவருக்குத் தெரியாமல் அமர்ந்து கதை கேட்கத் தொடங்கினேன்.
”ஓர் ஊர்ல ஒரு பையன் இருந்தான். அவனுக்கு கிராமத்தத்தவுர வெளியுலகமே தெரியாம வளந்தான். அவன் வீட்ல, ஏன் அவன் பரம்பரயிலே யாரும் பெருசாப் படிக்கல. அதனால அவனுக்கு நறயாப் படிக்கணுன்னு ஆச. ரொம்பக் கஷ்டப்பட்டு வெளியூர்க்குப் போய் லோன்லாம் போட்டு நாட்டுலயேப் பெரியக் காலேஜ்ல சீட்டு வாங்கிப் படிச்சான். படிச்சி முடிச்சிட்டு பெரிய வேலைக்கிப் போயி அவன் படிக்க வாங்குனக் கடன்லாம் அடச்சிட்டு, அவன் ஆசப்படி புடிச்ச வேலய செய்யப்போயிட்டான். இருந்தாலும் அவனுக்கு கஷ்டப்பட்டுப் பெத்து வளத்த ஐயா அம்மாவுக்கு அவங்க கனவுலக் கூட நெனச்சிப்பாக்காத ஒண்ண செய்யணும்னு ஆச. திடீர்னு ஒருநாள் அவன் ஐயாவயும் அம்மாவயும் எங்க கூட்டிட்டுப் போறன்னு சொல்லாமக் கூட்டிட்டுப் போய் ஏரோப்பிளேன்ல ஏத்திட்டான். அவங்களுக்கு ஒண்ணுமேப் புரில. நடக்குறதுக் கனவா இல்ல நனவான்னு. அவங்க கனவுலக் கூட நெனச்சிப்பாக்காத விஷயத்த அவன் செஞ்சி சந்தோசப் படுத்தினான். நீயும் அவன மாதிரிப் படிச்சி பெரியாளாயி ஒங்க ஐயாவயும் அம்மாவயும் ஏரோப்பிளேன்ல கூட்டிட்டுப் போவணும் சரியா?” எனச் சொல்லிவிட்டு திரும்பியதும் என்னைப் பார்த்த ஐயா புன்னகைக்க, கண் கலங்கிவிட்டேன்.
சிறுவயது முதல் ஐயாவிடம் நூற்றுக்கணக்கான கதைகள் கேட்டிருந்தாலும், அவர் கதைகளில் நானும் ஒருநாள் கதை மாந்தராக ஆவேன் என ஒருநாளும் நினைத்ததில்லை. அதுவும் சிறு குழந்தையிடம் என்னை ஒரு ஹீரோவாக, அதிலும் முன்னுதாரணமாகக் கருதி அவர் சொல்வார் என கனவில் கூட நினைக்கவில்லை.
பிறந்து ஒரு வருடம் கூட ஆகாதக் குழந்தையை தொலைக்காட்சிப்பெட்டி முன்னால் உட்காரவைத்துவிட்டும், செல்போனில் டேபில் ஏதேனும் சீரியல் அல்லது வீடியோ அல்லது பாடல் என ஏதாவதொன்றை போட்டுவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும் பெற்றோர்கள் பெருகியுள்ள இச்சூழலில் கதைகள் சொல்ல ஒருவரும் இல்லை என்பது எத்தனை வருத்தமான விஷயம்?
எந்தக் குழந்தையும் சிறுவயதில் தன் பெற்றோர்களைப் பார்த்தும், சுற்றத்தைப் பார்த்தும்தான் ஏதொன்றையும் கற்றுக்கொள்கிறது. அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி. இதனை உணர்ந்து எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன்னால் நல்ல பெற்றோர்களாக நடந்துகொள்கிறார்கள் என இன்றைக்கு வலைவீசி தேடவேண்டியுள்ளது.
சாலைகளில் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை வாகனத்தில் அமர்த்திக்கொண்டு ஹெல்மெட் போடாமலும், சிக்னலில் நிற்காமலும் என சாலை விதிகளைப் பின்பற்றாமல் போதல் எத்தனை பெரிய விஷத்தை அவர்கள் மனத்தில் விதைக்கிறதெனத் தெரியாமலா அல்லது உணராமலா அறிவிலிகளாக இருக்கிறார்கள்?
சிறு வயதில் குழந்தைகள் பெற்றோர்கள் எதைச் செய்கிறார்களோ அதைப் பார்த்து எளிதில் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல்… அவை அவர்களது ஆழ்மனத்திலும் பதிந்துவிடுகிறது. அதனால் எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள்.
அப்படி இருக்கையில் குழந்தைகள் முன்னால் பெற்றோர்கள் எவ்வளவு கவனத்தோடும் அக்கறையோடும் நடந்துகொள்ளவேண்டுமென ஏன் இக்காலப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் போகிறது?
சிறுவயதாக இருக்கும்போது ஐயாவுடன் கோயிலுக்குப் பொங்கல் வைக்க, விறகு வெட்ட, விவசாயம் செய்ய, தெருக்கூத்துப் பார்க்க என எங்கெல்லாம் செல்வேனோ அங்கெல்லாம் அவர் செய்வதைப் பார்த்து அதேபோல் செய்திருக்கிறேன். அது ஐயாவுக்கும் தெரியும் என்பதால் என்னை புன்னகையோடு, ‘அப்டி இல்லடா… இப்டி’ எனச் சொல்லித் திருத்தி சரி செய்வார். அதனால் அடுத்த தடவை தவறாகச் செய்யாமல் சரியாகச் செய்வேன்.
இதுதான் பெற்றோர்கள் செய்யவேண்டியதே தவிர, ‘என்ன படம்? அது குழந்தைகள் பார்க்கவேண்டிய படமா?’ என எதுவும் தெரியாமல் (தெரிந்துகொள்ளாமல்) ‘தல படம் பாக்கப்போறோம், தளபதி படம் பாக்கப்போறோம்’ எனச் சொல்லிக்கொண்டு கூட்டிப்போய் அவர்கள் வயதை, மனத்தைத் தாண்டியப் படங்களைப் பார்க்கவைப்பது, அவர்களுக்கு எதில் ஆர்வமென தெரியாது அல்லது தெரிந்துகொள்ள முற்படாது தன் விருப்பமானதைக் கற்றுக்கொள்ளப் பணிப்பது, அவர்கள் முன்னால் சண்டையிடுவது, கெட்ட வார்த்தைகளை சரளமாக உதிர்ப்பது, குடிப்பது என எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் சகட்டுமேனிக்கு இன்றைய பெற்றோர்கள் செய்வது பெரும் வருத்தத்தை மட்டுமன்று பெரும் கோபத்தையும் ஒருங்கே உண்டாக்குகிறது.
ஐயா நினைத்திருந்தால் தான் பார்த்த சினிமாப் படங்களில் பறந்து பறந்து அடிக்கும், மரத்தைச் சுற்றி பாடல் பாடும், ஒரே நாளில் பணக்காரனாகும் ஹீரோக்கள் பற்றியக் கதைகளாக சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் சொல்லவில்லை. ஏனெனில் அதில் நிஜம் இல்லை, உயிர் இல்லை. அதனால் அது பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லையென்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால் தான் அவரின் கதைமாந்தர்கள் நிஜமானவர்களாக இருக்கிறார்கள். எதார்த்தத்தை உண்மையை உணர்வைப் பேசுகிறார்கள். அதனால் அதைக் கேட்குபோதே நம்மையறியாமல் நமக்குள் சென்று பதிந்துவிடுகிறது. பதிந்துவிடுவதோடு மட்டுமல்லாது அது தக்க சமயத்தில் வெளிப்பட்டு நம்மை நல்வழிப்படுத்தும் மருந்தாகவும் மாறிவிடுகிறது. இதுதான் ஒரு கதையின் வெற்றி. கதைசொல்லியின் சூட்சுமம்.
எப்போது ஐயாவின் கதை மாந்தர்களில் ஒருவனாக நானும் ஆனேனோ, அன்றே அர்த்தமுள்ள வாழ்வை நான் வாழ்வதாக உணர்ந்துவிட்டேன். இதைவிட பெரிய விருதோ, அங்கீகாரமோ இவ்வுலகில் எனக்கு இல்லவே இல்லை என்பேன்.
வேலையில், சீரியலில், பேஸ்புக்கில், வாட்ஸ்அப்பில் தொலைந்துபோய் கிடக்கும் பெற்றோர்களே… தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு கதையாவது உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள். சில நிமிடம் அதற்காக ஒதுக்கினால் போதும். அது அவர்களது வாழ்வில் பெரும் மாற்றத்தையும், உயர்வையும் உண்டாக்கும். அதன்முன் நீங்கள் அவர்களுக்குப் பொக்கிஷமாக நினைத்து வாங்கித்தரும் விலையுயர் பொருட்கள் எதுவும் ஈடாகாது. அத்தோடு நீங்கள் அவர்களுக்காக வாங்கித்தரும் பொருட்கள் அனைத்தும் வெறும் பொருட்கள் மட்டும்தான் என்பதை உணருங்கள். ஆனால் கதைகள் அப்படி கிடையாது. அது அவர்களுக்கான துணை, வழிகாட்டி, ஆசான், மருந்து, ஊக்கி… இன்னும் இன்னும்.
கதை சொல்லும் ஐயாவுக்கு கதையொன்று சொல்ல வேண்டுமென்று பல தடவை நினைத்திருக்கிறேன். என்றவர் என்னையேக் கதையாக சொன்னாரோ, அன்றே அவ்வெண்ணத்தை விட்டுவிட்டேன்.
கதை சொல்லலை விடவும் கதையாதல் பெரிதன்றோ!
என்னையும் என் செயலையும் மதித்துப் போற்றி, தன் கதையில் எனக்கும் இடமளித்து, அதை வரும் சந்ததிக்குச் சொன்ன கதை சொல்லியே, உம் மகனாக அல்ல உம் கதைமாந்தனாக இதோ என் நன்றி ஐயா.
[முற்றும்]
*