ஐயா (எ) 95 வயது குழந்தை! – 13

ஐயா () 95 வயது குழந்தை! – 1

ஐயா () 95 வயது குழந்தை! – 2

ஐயா () 95 வயது குழந்தை! – 3

ஐயா () 95 வயது குழந்தை! – 4

ஐயா () 95 வயது குழந்தை! – 5

ஐயா () 95 வயது குழந்தை! – 6

ஐயா () 95 வயது குழந்தை! – 7

ஐயா () 95 வயது குழந்தை! – 8

ஐயா () 95 வயது குழந்தை! – 9

ஐயா () 95 வயது குழந்தை! – 10

ஐயா () 95 வயது குழந்தை! – 11

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 12

ஐயாவின் ரசனை எதையும் ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தான் செய்யும் எதிலும் ரசனையோடு ஈடுபடுவார். அதேபோல் தனக்குத் தேவையான எதையும் ரசனையோடு தேடி வாங்குவார்; செய்து கொள்வார்; செய்யச் சொல்வார்.

அப்படி அவர் ரசனையோடு சேகரித்த பொருட்களும் செய்த பொருட்களும் ஏராளமாக இருக்கும் எங்கள் வீட்டில். அது சின்னச் சின்ன அருவாவில் (நெல்லறுக்கப் பயன்படுவது) தொடங்கி எங்கள் வீட்டின் கதவு வரைக்கும் அவரின் ரசனைப் பட்டியல் மிக நீண்டது.

அருவா, கொடுவா, கடப்பார, மண்வெட்டி, களக்கட்டு (களைவெட்டி) சொண்டி, சில்லாக்கோல் (பாம்பு எலி போன்றவற்றைக் குத்த பயன்படும் இரட்டை கூர் கொண்ட கருவி), ஊத்தா (வட்டமாக சிறு சிறு குச்சியாக அடுக்கி செய்யப்பட்டு மீன் பிடிக்கப் பயன்படுவது), பாரக்குச்சி (இது கடப்பாரை போன்று கைபிடிக்கும் பக்கம் பெரியளவிலான மரப்பிடி வைத்து செய்யப்பட்டிருக்கும்), மரக்கா, படி, அரிவாமனை, சூரக்கத்தி (தேங்காய் கீறுவதற்கு பயன்படும் சிறிய அளவிலானக் கத்தி), ஆக்கருவா (நீண்ட குச்சியின் நுனிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் அருவா போன்ற கருவி), கோடாரி, ஆப்பு (மரம் பிளக்க, கல் உடைக்கப் பயன்படுவது), ஏர் கலப்பை, நுகத்தடி, பறம்பு, மனக்கட்ட, ஒலக்க, பெஞ்ச், ஸ்டூல், கயிற்றுக் கட்டில் போன்ற பொருட்களுடன் காவடி, தேர், அலகு, வேல் போன்ற பக்திப் பொருட்களையும் தன் நெருங்கிய நண்பரான முத்துசாமி ஆச்சாரியுடன் சேர்ந்து ஐயா உருவாக்கியிருந்தார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களுக்கு பயணம் சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் நான் சொன்ன கொடுவா, அருவா, மண்வெட்டி போன்றவற்றை பரவலாகப் பார்த்தாலும் எங்கள் வீட்டில் உள்ளதுபோல் அழகு தொடங்கி அதன் தரம் வரைக்கும் இல்லை என்றுதான் சொல்வேன்.

காரணம் ஐயா ஒரு பொருளை உருவாக்க நினைத்த நொடியிலிருந்து அதற்குத் தேவையான இரும்பு, மரம் போன்றவற்றையும் தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிடுவார். உதாரணமாக ஒரு மண்வெட்டி செய்வதாக எடுத்துக்கொண்டால் அதற்கென தரமான இரும்பை தேடி வாங்கி அதை தன் நண்பரிடம் கொடுத்து நெருப்பில் பழுக்கவைத்து தனக்குத் தேவையான மாதிரி மண்வெட்டி செய்யச் சொல்வார்.

பின் அதற்கான கைப் பிடியை அது எந்த மரத்தில், எந்த அளவில், எப்படி இருந்தால் நன்றாக இருக்குமென யோசித்து அம்மரத்தைத் தேடி வெட்டிவந்து தன் நண்பரிடம் தந்து அல்லது தானாகவே அதை நன்கு இழைத்து உருவாக்குவார்.

ஐயாவின் தேர் அவ்வளவு அழகாக இருக்கும். ஆரம்ப நாட்களில் ஐயா வருடந்தோறும் ஊரில் நடக்கும் தைப்பூசத் திருவிழாவில் தேரிழுத்தார். அவருக்குப் பின் அந்தத் தேரினை இழுக்க ஆசைப்பட்டு வருடந்தோறும் பலர் வந்து ஐயாவிடம் கேட்பார்கள். அவ்வளவு அழகாக மெனக்கெட்டு அதன் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்கியிருப்பார்.

இங்கு முக்கியமாக குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயம் அவர் செய்யும் பொருட்கள் எதிலும் கொஞ்சம் கூட சமரசம் செய்துகொள்ள மாட்டார். தன் எண்ணத்தில் நினைத்ததுபோல் வரும்வரைக்கும் விடாமல் மெனக்கெடுவார். அதனால் எங்கள் வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் தனித்துவமாக இருப்பதைப் பார்த்து பலரும் அதுபோல் வேண்டுமெனக் கேட்டு தொல்லை செய்வதைப் பார்த்திருக்கிறேன். சிலர் கொண்டி, கடப்பாரை, மண்வெட்டி போன்றவற்றை தேவையானபோது வந்து கடன் வாங்கிக்கொண்டு போய் பயன்படுத்திவிட்டு திருப்பித்தருவார்கள்.

ஒரு தடவை (ஐந்தாவது அல்லது ஆறாவது படிக்கும்போதென நினைக்கிறேன்) தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாட பேட் செய்ய நினைத்து வீட்டில் நானும் சின்ன அண்ணனும் பயன்படுத்த ஐயா செய்துவைத்திருந்த சின்ன அளவிலான கொடுவாவை எடுத்துக்கொண்டுபோய் பேட் அளவுக்கு வெட்டி அதன் ஒருபுறம் கைப்பிடிக்க ஏதுவாக வெட்டிக்கொண்டிருந்தேன்.

இதை எங்கிருந்தோ எனக்குத் தெரியாமல் பார்த்த ஐயா, அது எப்படியிருக்குமென உன்னிப்பாகப் பார்த்துவிட்டு அதற்கென பொர்ச மரத்தில் (பூவரசம் மரம் கிடையாது. சிறிய இலையுடன் நன்கு மணம் வீசும் மரம் இது. வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யவும், இதன் இலைகள் மருத்துவத்திற்கும் பயன்படும்) பேட் அளவுக்கு வெட்டிவந்து, அதை தன் நண்பரிடம் கொடுத்து பேட் செய்துவந்து நான் உறங்கி எழும்போது பக்கத்தில் இருந்து கண்ணில் படுவதுபோல் வைத்துவிட்டு வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து மல்லாட்டைக்கு தண்ணீர் காட்ட (போகியத்திற்கு பயிரிட்ட நிலத்திற்கு) சென்றுவிட்டார்.

உறங்கி எழுந்ததும் பேட்டைப் பார்த்துவிட்டு சந்தோஷத்தோடு எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அம்மாவிடம்,

”இது ஏதும்மா…?” என்றேன்.

”ஐயாதான் ஒனக்கு வெளயாட செஞ்சிட்டு வந்தாரு” என்றதும் நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

உடனே அதை எடுத்துக்கொண்டுபோய் என் நண்பர்கள் ஒருவர் விடாது வீடு வீடாகச் சென்று, ”ஏ… எங்கய்யா எனக்கு பேட் செஞ்சிருக்காரு… தோ பாரு” எனக் காட்டி சந்தோஷப்பட்டேன்.

ஐயாவின் நண்பர் முத்துசாமி ஆச்சாரியும் ஐயாவைப் போல் பெரும் ரசனைக்காரர். அதனால்தான் அவர்கள் இருவரும் சேர்ந்து எதையும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யமுடிவதாக நினைக்கிறேன்.

அவரின் வீடு எங்கள் கிராமத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வாரத்தில் ஒருநாள் அல்லது இருநாள் சைக்கிளில் வந்து ஐயாவைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவார். வேலை இருந்தால் ஐயாவுடன் சேர்ந்து செய்துவிட்டுப் போவார்.

அவர்களின் நட்பைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். அவ்வளவு அன்பாகவும் உண்மையாகவும் புரிதலோடும் இருப்பார்கள்.

ஒரு தடவை அவர் காலைநேரத்தில் வீட்டுக்கு வந்திருந்தபோது நான் ஓரமாக உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு ஐயாவுடன் எங்கோ வெளியில் சென்றவர், மாலை வீட்டுக்கு வரும்போதும் எழுதிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். எதுவும் சொல்லாது அன்று வீட்டுக்குப் போனவர் அடுத்த வாரம் வரும்போது நான் தரையில் உட்கார்ந்து எழுத வசதியாக எழுத்துமேசை ஒன்று செய்துவந்திருந்தார்.

அப்போதும் நான் ஏதோ எழுதிக்கொண்டிருக்க… பக்கத்தில் வந்தவர், ”இந்தாடா… இனிமே இதல வச்சி எழுது” எனச் சொல்ல நான் பெரு மகிழ்ச்சியோடு அதில் வைத்து எழுதத் தொடங்கினேன்.

அதைத் தன்னை மறந்து பார்த்தவர், ”நல்லாருக்கா…?” என்றதும், ”ம்… நல்லாருக்குய்யா” என்றேன். மகிழ்ந்துபோனார்.

இப்படி இவரைப்போல ஐயாவுக்கு பல நண்பர்கள் உண்டென்றாலும், ஐயாவின் நண்பரென்றால் முதலில் இவர்தான் மனத்தில் தோன்றுவார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருதடவை நண்பருடன் மருத்துவமனைக்குச் செல்லும்போது அவரை வழியில் பார்த்ததும் அருகில் சென்று, ”எப்டிய்யா இருக்கீங்க?” என்றேன்.

வயதின் முதிர்வால் பார்வை சரிவர தெரியாததால் என்னை அடையாளம் காணமுடியாது, ”யாரு…?” என்றார்.

”வடிவரசுய்யா… சாமிக்கண்ணு மவன்” என்றதும் சட்டெனக் கையைப் பிடித்துக்கொண்டு,

”டேய் குட்டிப்பையா… ஐயாவுக்கு அடயாளம் தெர்லடா… அதான் யாருன்னு கேட்டுட்டன், கோச்சிக்காத… ஐயா எப்டிருக்காரு, நீ எப்டிருக்க, நல்லாப் படிக்றியா?” என ஒவ்வொன்றாகக் கேட்டுவிட்டு,

”நல்லாப் படிக்கணும் சரியா… நீ நல்லாருந்தாதான் எங்களுக்கு சந்தோசம்” என்றவரிடம், ”நான்தான்யா கிளாஸ்லயே மொத மார்க்” என்றதும்,

”ஓ… இதுபோதும்யா பொழச்சிப்ப… இனி சந்தோசமாப் போய் சேருவோம்” என்றவர் சொல்ல, சரியாக அந்நேரம் அவர் ஊருக்குச் செல்லும் பேருந்து வர, அதில் அவருடன் வந்திருந்தவருடன் ஏற்றி அனுப்பிவைத்தேன்.

அதன்பிறகு ஒருநாள் ஊருக்குச் சென்றிருந்தபோது ஐயாவுடன் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் நடுவில், ”முத்துசாமி செத்துட்டான்டா… போனமாசம்தான்” என ஐயா வருத்தத்தோடு சொல்ல கண் கலங்கிவிட்டேன்.

எதுவும் சொல்லாது அமைதியாக இருந்துவிட்டு சென்னைக்குப் புறப்படுகையில் அவர் எனக்காக செய்து கொடுத்த எழுத்து மேசையை என்னுடன் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

இப்போதும் அது என்னுடன் என் அறையில் இருக்கிறது. அதில் வைத்து அடிக்கடி எழுதுவேன். புத்தகம் வைத்துப் படிப்பேன்.

ஐயா அன்றைக்கு சொன்னார், ”முத்துசாமி கொடுவா அருவான்னு எத்தன செஞ்சிக் கொடுத்திருந்தாலும் ஒனக்குன்னு எழுத செஞ்சித்தந்ததுலதான் அவன் இருக்கான். அதுல நீ எழுதறதப் பாத்து எவ்ளோ சந்தோசப்பட்டான் தெரிமா… அந்த மொகமும், சிரிப்பும் இன்னும் மனசுல இருக்கு” என்றார் கண் கலங்கியவாறு.

இப்படி ஐயா தான் மட்டுமல்லாது தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மூலமாகவும் பொருட்கள் மூலமாகவும் எனக்கு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை தொடர்ந்து சொல்லிக்கொடுத்தபடிதான் இருந்திருக்கிறார். அதில் சிலதை அப்போதே நான் உணர்ந்து படித்திருந்தாலும், பலதை படிக்கத் தவறவிட்டிருக்கிறேன். இருந்தாலும் அவை ஏதோ ஒருவகையில் மனத்தின் நினைவடுக்குகளில் அழியாமல் பதிந்திருக்க, இப்போது நினைக்கையில் கூட அவை உயிரோட்டமாக எழுந்துவந்து சொல்லித்தருகிறது.

படைப்புகள் மட்டும்தான் கற்றுத்தரும் அறிவை விரிவு செய்யும் என்பதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். அதையும் தாண்டி ஐயா போன்ற எளிய மனிதர்கள் ஏராளமான வாழ்வின் பாடங்களை தம் வாழ்வின் மூலமாக தம் இருப்பின் மூலமாக கற்றுத்தந்தார்கள், கற்றுத்தருகிறார்கள், இனியும் கற்றுத் தருவார்கள்.

ஆதலால் படைப்புகளோடு சேர்த்து ஐயா போன்ற எளிய மனிதர்களையும் அவர்கள் வாழ்வையும் படியுங்கள். அது படைப்புகளைத் தாண்டிய பாடங்களை மட்டுமல்ல… படைப்புகளை படைக்கும் வல்லமையையும் ஆற்றலையும் தரக்கூடும்.

இதுவரை ஐயாவிடம் சொல்லாததை இப்போது சொல்லவேண்டும்போல் இருக்கிறது. 

‘உண்மயிலயே நீங்க ரொம்ப கிரேட் ஐயா’

[இன்னும்]

*

ஐயா (எ) 95 வயது குழந்தை!

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=