கூழாங்கல்
தன்மீதெதையும் ஒட்டவிடாத
தனித்த கூழாங்கல்லாய்
மனமொன்றிலழுந்த
நனைந்துகொண்டிருக்கையில்
எதுப்பற்றிய சலனமுமில்லை
பழத்திடைப்புழுவாய்
சிந்தையலையடிக்க
கண்ணீருகுக்கையில்
யாதொரு வினவுமில்லை
உலைகொதி நீராய்
படபடத்தெழுந்து
எதிர்காலக் கனவால்
வாழுங்காலம் கடந்திட
மென்னிருளானேன்
வன்னொளிக்குள்
மோசமான அந்தியில்
வெகுதூரமெட்ட
முதல் கடைசியாக
அல்லது கடைசிமுதலாக
நனவு தொலைத்தேன்
கனவு வரைய முற்பட்டு
கூழாங்கல்
புழு
கொதிநீர்
இதில் எதுவாகவுமில்லாத நான்
எல்லாவுமாக
எல்லாவுமான நான் இதில்
எதுவுமற்றுப்போனேன்