சொல்லன்றி எதுவுமற்றவன்! – 305
இந்நெடிய நேர்காணல் தொடங்கி பத்து மாதம் முடிந்து, பதினோராவது மாதம் ஆரம்பிக்கிறது. எண்ணிக்கையில் பார்த்தால் 304 நாட்கள். இப்போதுதான் தொடங்கினதுபோல் உள்ளது. அதற்குள் இத்தனை நாட்கள். இந்நாட்களில் எத்தனையோ அரிய பணிகளை செய்திருப்பீர்கள். பல இடங்களுக்குப் பயணித்திருப்பீர்கள். நல்ல பல நூல்களை வாசித்திருப்பீர்கள். நல்லது. இப்போது நேர்காணலுக்கு வருவோம்.
உங்களது கடைசி வினாவுக்கானப் பதிலை, இன்னும் விளக்கமாக சொல்லமுடியுமா?
தமிழ்ச் சூழலில் எழுத்தாளராய் இருப்பதே பெரும் சவால் மிக்கது. பல இன்னல்களுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில் பாவப்பட்டவர்களாய் வாழும் அவர்களைப் போய், அவர்களது எழுத்தைக் கொண்டு பிழைக்கும் பதிப்பாளர்கள் அத்தனை எளிதாய் ஏமாற்றுவதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அதைத்தான் இங்கே பெரும்பாலான பதிப்பாளர்கள் செய்கின்றனர்.
என் காதால் நானே கேட்டிருக்கிறேன். தமிழின் மிக முக்கியமான இரண்டு எழுத்தாளர்கள் சொன்னது. ‘தங்களுக்கு இதுநாள்வரை தங்கள் நூலை வெளியிட்ட பதிப்பகங்கள் (அவற்றின் பெயர்களையும் சொன்னார்கள்) ஒரு ரூபாய்கூட ராயல்டியாக தந்ததில்லை. ஆனால், அவர்கள் மட்டும் தமது சொத்துக்களை ஆண்டுதோறும் கூட்டிக்கொண்டு போகிறார்கள்.’
இதில் கொடுமை என்னவென்றால், அந்த எழுத்தாளர்கள் தம் நூல்களை தாமே காசு கொடுத்துதான் வாங்கவேண்டும் என்று அந்தப் பதிப்பகங்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பதுதான்.
[இன்னும்]
*