சொல்லன்றி எதுவுமற்றவன்! – 365
ஒரு வழியாக இந்நேர்காணலின் இறுதிக்கு வந்துவிட்டோம். எப்படி வார்ம்அப் கேள்வியில் தொடங்கினோமோ, அதுபோல கூல்டவுன் கேள்வியால் நிறைவு செய்யலாம். இதுவரையான உங்களது வாழ்வில் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல நினைக்கிறீர்கள்? (நிச்சயம் அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கக் கூடாது.)
தொடக்கக் கல்வி படிக்கையில் பல்வேறு வகையில் எனக்கு உதவி தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்திய சத்தார் வாத்தியார், எங்கேயோ எப்படியோ போக இருந்தவனை நல்வழிப்படுத்தி பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் சேர்த்துவிட்ட திவாகர் சார், கல்லூரியில் எதுவும் புரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் தவித்திட்ட என்னை ஆற்றுப்படுத்திய தினகரன் சார், என்னை வேண்டாம் என்று தூக்கிப்போட்டுக் காயப்படுத்தி எனக்குள் இருந்த எழுத்தை தூண்டிவிட்டுப் போன அந்த அவள், உடைந்துபோயிருந்த என்னை ஒட்டி திடப்படுத்திய அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து ஃபாதர், என் முதல் எழுத்தை அங்கீகரித்த நாஞ்சில் நாடன் ஐயா, எனது நல்லது கெட்டதுகளில் அண்ணனாய் உடனிருக்கும் ‘முகவரி’ ரமேஷ் அண்ணன் முதலான இன்னும் சில நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் என்றும் நன்றி சொல்ல நினைக்கிறேன்.
அதோடு, இப்படியோர் அழகான நேர்காணலை சாத்தியப்படுத்தி, இதுபோல் இனி நிகழுமா? என எண்ண வைத்து, பல நேர்த்தியான வினாக்களை தொடுத்து, என் இதுவரையான வாழ்வை அத்தனை அர்த்தத்தோடு திரும்பிப் பார்க்க வைத்த உங்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன். நன்றி வடிவரசு.
*
2023 ஜனவரி ஒன்று தொடங்கி இதோ, இந்த டிசம்பர் 31 வரை தொடர்ந்து 365 நாட்கள், எனது 365 கேள்விகளுக்கு, மிக நேர்த்தியாக இன்னும் சொல்லப்போனால், வெளிப்படையாக பதிலளித்திருக்கிறீர்கள். உங்களுக்கும் என் நன்றி வடிவரசு.
வாழ்தல் இனிது என்பார்கள். அதனை மனத்துக்கு பிடித்த விதத்தில் உங்களைப்போல் வாழ்தல் பேரினிது என்பேன் நான். தொடர்ந்து எழுதுங்கள். பல நல்ல படைப்புகளை தமிழுக்கு கொடுங்கள். அவற்றையெல்லாம் கைகளில் ஏந்தவும், வாசித்து இன்புறவும் ஆவலோடு காத்திருக்கிறோம்.
*
கடந்த ஓராண்டாக நிகழ்ந்திட்ட இந்நீண்ட நெடிய நேர்காணல் தொடங்கிய பிறகு இளம் எழுத்தாளரான வடிவரசு, ‘டர்புர் வண்டி’ முதலான நான்கு நூல்களை எழுதியிருக்கிறார். மத்திய அரசின் ‘கலாச்சார அமைச்சகம்’ வழங்கும் 2021- 22 ஆம் ஆண்டுக்கான ‘ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது’ முதலான இரண்டு முக்கிய அங்கீகாரங்களை பெற்றிருக்கிறார். பல இடங்களுக்கு பயணித்தும், பல அரிய நூல்களை வாசித்தும் இருக்கிறார். வடிவரசின் இந்த தொடர் ஓட்டம்தான் அவரது தனித்த அடையாளமாக எண்ணுகிறேன்.
இறுதியாக, எப்படி இந்த நேர்காணலை வடிவரசின் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளோடு தொடங்கினேனோ, அதேபோல அவரது இன்னொரு நூலான ‘ஏலேலோ பாட்டு’வில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடல் வரிகளோடு முடிக்க விரும்புகிறேன்.
‘நாளைய நெனைக்காத அழகிய –
இந்த அழகிய வாழ்க்கப்பாரு…
இன்னைய தொலைக்காத அதிசய –
இந்த அதிசய வாழ்வக்கேளு… ‘
*
[இன்னும்]
*