”அனைவருக்குமான சொல்!”

(ஐயன் சொல் நூலுக்கான முன்னுரை)
அதிகமும் இல்லாது குறைவாகவும் இல்லாது விட்டுவிட்டு மழை பெய்த நாளின் மதியப்பொழுதில் கிராமத்திலுள்ள எங்கள் வீட்டின் அருகமை முருங்கை மரத்தில் குடை பிடித்துக்கொண்டு போய் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நான்கு வயதான அண்ணன் மகளைப் பார்த்து, ”என்ன பாப்பா பண்ற?” என்றேன். ”பாத்தா தெரியல, முருங்க்கா மரத்துக்கு தண்ணி ஊத்தறன்..’’ என்றார். உடனே நான், ”அதான் இவ்ளோ மழ பெய்யுதே, எதுக்கு தண்ணி ஊத்தற?’’ என்றதற்கு, ”நீதான தாத்தா சொன்னாங்கன்னு சொன்ன, வீட்டுக்கு ஒரு முருங்க்கா மரமும், பசுமாடும் இருந்துச்சின்னா எப்பயும் நம்மள அது பாத்துக்கும்னு. அதான் இந்த முருங்க்கா மரத்த தண்ணி ஊத்தி நான் பாத்துக்கிறன்..’’ என்று சொல்லி சிரித்துவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடிவிட்டார்.
வியப்பாக இருந்தது. அதுவும் ஐயா என்றோ ஒருநாள் என்னிடம் சொன்ன சொல். அதனை கடைசியாக ஊருக்கு சென்றிருந்தபோது பேச்சுவாக்கில் அவரிடம் சொன்னது. அதை தன் நினைவில் பதித்துவைத்து, நம்மை காப்பாற்றும் மரத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என நினைத்து தண்ணீர் ஊற்றியது. பெரிதாய் மகிழ்ந்தேன். ஆம்!
ஐயாவின் சொல் எனக்குள் மட்டுமல்ல… வரும் சந்ததிக்குள்ளும் எளிதில் நுழைந்து அற்புதம் நிகழ்த்தவல்லது. ஆம்! அதை உணர்ந்த அந்நொடி ஒட்டுமொத்த உலகும் மறைந்து, ஐயா தன் மென்மையான குரலில் மகிழ்ச்சி பொங்க, ‘வூட்டுக்கொரு பசுமாடும், முருங்க மரமும் இருந்தாக்கா… அது ஆயிசுக்கும் நம்மளக் காபந்து பண்ணும்’ என்று சொன்ன காட்சி கண்முன் வந்து போனது.
கூடவே, ‘இப்படி அவர் தன் வாழ்நாளில் பல்வேறு சமயங்களில், பல்வேறு இடங்களில் என்னிடமும், என் அண்ணன்களிடமும், அக்காவிடமும், மற்றவர்களிடமும் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றையும் வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றால் என்ன?’ எனும் வினாவும் எழுந்தது. ஆம்!
ஐயன் சொல் யாவும் கேட்க சாதாரணமாக இருந்தாலும் பெரும் அர்த்தங்கள் பொதிந்தது. தன் இத்தனை ஆண்டுகால வாழ்வியல் அனுபவத்தின் வாயிலாக கண்டெடுத்தது. கேட்கும் யாவருக்குள்ளும் நுழைந்து மாற்றங்களையும், ஏற்றங்களையும் நிகழ்த்த வல்லது. படிக்கட்டுகளாய் மாறி வாழ்வின் அந்தநாள் வரை கை பிடித்துக் கூட்டிச் செல்லக்கூடியது. ஆம்!
ஒருவகையில் பார்த்தால் இவை வெறும் சொற்கள் அல்ல; பொன்மொழிகள். அதுவும் மண்மணம் மாறாத மண்மொழிகள். பெரும் தலைவர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளர்களின் பொன்மொழிகளுக்கு நிகராக அல்லது ஒருபடி மேலாக வைக்கவேண்டிய நன்மொழிகள். ஆம்!
ஐயன் சொல்லுக்கிருக்கும் வல்லமையை பலதடவை உணர்ந்திருக்கிறேன் என்றபோதும், அது சின்னஞ்சிறு உள்ளத்துள்ளும் நுழைந்து தன் மகத்துவத்தை விதைக்க வல்லது என்பதை உணர்ந்த நொடியில் துளிர்த்ததுதான் இப்படி ஒரு நூலை உருவாக்கவேண்டும் என்னும் உயரிய எண்ணம்.
ஜனவரி 01, 2021 தொடங்கி – ஏப்ரல் 10, 2021 வரை தொடர்ந்து நூறு நாட்கள்… நான் அவ்வப்போது என் நகர்பேசியில் சொடுக்கிய ஒளிப்படங்களுடன், தினம் ஒரு சொல் என முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும், டிவிட்டரிலும் பதிவிட்டு வந்தேன். வாசித்த பலர் ஐயன் சொல்லுக்கு ரசிகரானார்கள். சிலர் நூலாக வந்ததும் வாங்கி தம் குழந்தைகளுக்கு வாழ்நாள் பரிசாக வழங்க உள்ளதாகவும், தினமொரு சொல்லாக அவர்களுக்குள் விதைக்கப் போவதாகவும் மகிழ்வுடன் சொன்னார்கள்.
ஆம்! இதைவிட வேறென்ன மகிழ்சியுள்ளது சொல்லுங்கள்?!
இவ்வினிய மனத்துக்கு மிக நெருக்கமான நூலை, அண்மையில் எங்களைவிட்டு பிரிந்த என் ஏற்றங்களில் மகிழ்வும், இறக்கங்களில் வருத்தமும் கொள்ளும் அன்பு நண்பன் ஆம்பூர் மணி (எ) வரதராஜனுக்கு மிக்க பிரிவன்போடு சமர்ப்பணம் செய்கிறேன் (உயிரோடிருந்து பார்த்திருந்தால் என்னைவிட மிகுதியாக மகிழ்ந்திருப்பான். என் செய்ய?).
ஐயன்சொல், இனி அனைவருக்குமான சொல்! வாருங்கள்! அன்போடு ஏந்தி வாசித்து வருடி வரும் தலைமுறைகளிடம் கொண்டு செல்வோம். பின் அவர்களுக்குள் நிகழும் அதிசயங்களை ஒரு பார்வையாளராக நின்று வேடிக்கை பார்ப்போம்!
ஏப்ரல் 11, 2021 வணக்கத்துடன்,
சென்னை – 43 வடிவரசு.