தாவர சங்கமம் – 11 : பொறிவரை

‘ஓவம்’ என்னும் பழஞ் சொல்லிலிருந்து இன்றைக்கு நாம் சித்திரத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் ‘ஓவியம்’ என்ற சொல் வந்ததாகச் சொல்வர்.

‘ஓவத்து அன்ன உருகெழு நெடுநகர்’

என்கிறது, பதிற்றுப்பத்து 88 ஆம் பாட்டின் 28 ஆவது வரி. ‘சித்திரத்தைப் போன்ற அழகையுடைய [பகைவர்க்கு அச்சம் பொருந்திய] நீண்ட அரண்மனையில்’ என்னும் பொருளில்.

‘ஓவத்து அன்ன உண்துறை’

என்கிறது, சிறுபாணாற்றுப்படை 70 ஆவது வரி. ஓவியத்தை ஒத்து விளங்கும் அப்பொய்கைத் துறை என்னும் பொருளில்.

ஆனால், இதற்கும் முந்தைய அல்லது நிகரான இன்னொரு சொல் நம் தமிழ் மொழியில் இருந்துள்ளதை சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். அதுவும், ஒரு வனத்திடமிருந்து. அங்கே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் வாழ்ந்த ஓர் மலையிடமிருந்து. அதில் உள்ள ஒரு குகையிடமிருந்து. ஆம்!

‘பொறிவரை’ என்னும் அந்தச் சொல்லுக்கு, ”பொறி’ன்னா வரையறது. ஓவியம். வரை’ன்னா மலை. மலையில வரைந்திருப்பதால அந்த இடத்துக்குப் பேரு பொறிவரை.’’ இது அங்குள்ள கிராமத்தார் சொன்ன பொருள்.

[மேலும் ஓவியத்திற்கு ஓவம் தவிர… ஓ, ஓவி, சித்திரப்படம், சித்திரப்பணி, சித்திரம் போன்ற நிகர்சொற்கள் இருப்பதையும், ‘ஓவியம்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் நெடுநல்வாடையில் (146 – 148) ஆளப்பட்டிருப்பதையும் (‘அம்மாசு ஊர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு / புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல் / தளிர் ஏர் மேனி’), ஓவியம் வரைவோர் ஓவியன், ஓவியர், ஓவிய மாக்கள், ஓவமாக்கள், கண்ணுள்வினைஞர் போன்ற பல பெயர்களால் அறியப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.]

முதன்முதலில் ஒரு குழந்தை தன்னிலிருந்து வெளிப்படுத்தும் கலை (அதுவும், யாரிடம் இருந்தும் கற்காமல்) எதுவாக இருக்கும்? எனக் கேட்டால், சட்டென்று ஓவியம் என்று சொல்லலாம். கையில் கிடைக்கும் கரித்துண்டு, சாக்பீஸ், பல்பம், எழுதுகோல், பென்சில், ஸ்கெட்ச் முதலானவற்றைக் கொண்டு தனக்குத் தோன்றுவதை கிறுக்கத் தொடங்கி, அதுவே பின்னாளில் நன்கு கைவரப்பெற்று நேர்த்தியான ஓவியக் கலையாக வளர்ச்சியுறும்.

சிறு வயதில் ஓவியத்தின் மீது பெரும் காதலுடன் இருந்தவன். பத்தாம் வகுப்பு வரை போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஏனோ, அதன்பின் வரைவதை நிறுத்திவிட்டேன். ஒருவேளை தொடர்ந்திருந்தால் எழுத்தாளனுக்குப் பதிலாக ஓவியனாகி இருப்பேனோ, என்னவோ!

அப்படிப்பட்ட எனக்குள் அடிக்கடி ஒரு கேள்வி எழும். ‘நாம இன்னைக்கு வரையிற மாதிரி… நம்ம முன்னோர்கள் அதுவும், ரண்டாயிரம், மூனாயிரம் வருடத்துக்கு முன்னால எப்படி வரைந்திருப்பாங்க? வரைய என்னென்ன பயன்படுத்தி இருப்பாங்க?’

இந்தக் கேள்விதான் தொல்பழங்கால ஓவியங்களில் முதன்மையான ஒன்றாகக் கருதப்படும் கரிக்கையூர் குகை ஓவியம் நோக்கி என்னை கடந்த ஈராண்டுகளாக ஈர்த்துக்கொண்டிருந்தது.

நம் மூதாதையர் வரைந்த முதல் மனித உருவம், முதல் விலங்குரு, முதல் சூரிய உதயம், முதல் போர்க்காட்சி, முதல் விளையாட்டு, முதல் மரம் என்று பல வகைகளில் முதன்மையாகச் சொல்லத்தக்க இம்மாபெரும் ஓவியத் தொகுதியைக் காணும் வாய்ப்பு அண்மையில்தான் வாய்த்தது. அதுவும் பல முயற்சிகளுக்குப் பிறகு.

உடன் செந்தில் அண்ணனும், அவரது நண்பர் மோகன் பிரபு என்னும் தாராளப் பிரபு அண்ணனும், வனத்துறையைச் சேர்ந்த அன்பர் ஒருவருமாக கடந்த ஏப்ரல் நான்காம் தேதி நண்பகல் வேளையில், கோத்தகிரியில் இருந்து சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ‘கரிக்கையூர்’ என்னும் மலை கிராமத்துக்குப் போயிருந்தோம்.

சென்றதும் நான் கண்ட முதல் காட்சி ஊரின் மத்தியில் ஓரடி உயர சிறு கற்சுவர்களுக்கு நடுவில் சிறுவர்களின் விளையாட்டு பொம்மைகள் போல சிலைகள் வைக்கப்பட்டிருந்த இடம்தான். முதலில் அது கோயிலாக இருக்கும் என்று நினைத்து அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். ‘இல்லை, இடுகாடு’ என்றார்கள். அதிர்ச்சியுடன் மேலும் கேட்க, பல புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

ஊரில் வாழும் இருளமொழி பேசும் இருளர் சமூக மக்களில் கல்கட்டி, குருநக, குப்பர், கொடுவர், பேரதர், சம்பர், புங்கர் முதலான 12 இனங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் இனத்துக்கும் இதுபோல தனித்தனி இடுகாடுகள். இதைச் சுற்றி இருக்கும் இடத்தில் இறந்தவர்களை புதைத்துவிட்டு, அவர்கள் நினைவாக அவர்களைப் போன்று ஒரு சிலை செய்து நடுவில் வைப்பது வழக்கம்.

அதேபோல பலநூறு ஆண்டுகளாக தொடர்ந்துவரும் இரு கலைகள் உண்டு இவ்வூரில். ஒன்று, தொட்டாட்டம் என்று சொல்லக்கூடிய எருமையாட்டம். இன்னொன்று, கொத்தரிக்கை. முன்னது, புலி வடிவத்தில் வரும் பஞ்சத்திடம் இருந்து எருமையை (அதாவது, மக்களை) முதியவர் வேடம் தரித்தவர் காப்பது போல கார்த்திகை மாதத்தில் ஓரிடத்தில் மூன்று நாட்கள் நடப்பது. பின்னது, ஊரிலுள்ள ஆண்கள் ராஜா, ராணி முதலிய வேடங்கள் தரித்து, மூன்று நாட்கள் வீட்டுக்கு வெளியிலேயே தங்கியிருந்து, ஊர் முழுக்க சென்று சாமை உள்ளிட்ட தானியங்களும், உணவுப் பொருட்களும் சேகரித்து வந்து சமைத்துப்போய், அருகில் ஓடும் வசங்கரை ஆற்றில் கரைத்து மக்களை பஞ்சத்திலிருந்து காப்பது.

வனத்துறை அன்பர் வழிகாட்ட யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் மிக்க அடர் வனத்துள் நுழைந்து, மிகுந்த ஆர்வத்தோடு நம் மூதாதையர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரைந்த குகை ஓவியங்களைக் காண போய்க்கொண்டிருந்தோம்.

ஆரம்பத்தில் சற்று எளிதாக இருந்த பாதை போகப் போக மரங்களின் கிளைகளையும், வேர்களையும், கொடிகளையும் பிடித்துக்கொண்டும், தொங்கிக்கொண்டும் இறங்கும் வகையில் கடினமாக மாறியது. இரு தினங்களுக்கு முன் வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்கியவன் என்பதால், எனக்கு அது ஒன்றும் அத்தனை சிரமமாக இல்லை. இருந்தாலும் வேர்த்து விறுவிறுத்து குகை அருகில் செல்லச் செல்ல ஒருவித பரவசநிலை அடையத் தொடங்கினேன்.

தொடக்கத்தில் காடுகளில் விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்ந்த மனிதர்கள் மலைகளில் இயற்கையாக இருக்கும் குகைகளையே தமக்கான இருப்பிடமாகக் கொண்டனர். அவ்வாறு வாழும் காலங்களில் வரும் தலைமுறையினருக்குச் சொல்ல நினைத்ததை ஓவியங்களாகத் தீட்டி வைத்தனர் (எழுத்து தோன்றிய பிறகு எழுத்தாகவும்). இன்னொரு வகையில் பார்த்தால், ‘இது என் குகை’ என்று மற்றவர்களுக்கும் விலங்குகளுக்கும் அறிவிக்கவும், ‘இங்கே கிடைக்கும் விலங்குகள் இவையெல்லாம்’ என்று வருவோரை ஆற்றுப்படுத்தவும் கூட வரைந்ததாகக் கொள்ளலாம்.

பொறிவரை என்னும் அந்த முதுபெருங்குகையை தூரத்திலிருந்து கண்டதும் உள்ளுக்குள் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினேன். ஒருவித கதகதப்புடன் சுமார் இருநூறு, முன்னூறு பேர்கள் ஒரே நேரத்தில் தங்கி வாழக்கூடிய அளவுக்கு மிகப் பிரமாண்டமாக இருந்தது. அதில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை பார்த்ததும், நிச்சயம் இது ஐந்தாயிரம் அல்ல, அதற்கும் முந்தைய ஏன், பத்தாயிரம் ஆண்டுகள் கூட இருக்கலாம் என்றே மனம் சொன்னது.

குகையின் நடுமத்தியில் போய் நின்றுகொண்டு, மொத்த குகையையும் பார்த்தேன். இயற்கை என்னும் பெருந்தாய் நம் மூதாதையர்கள் வாழத் தந்த மாபெரும் அரண்மனை என்று தோன்றியது.

உடனே ஓர் ஓரமாக அணிந்திருந்த காலணியை கழட்டி விட்டுவிட்டு, வெறும் மண் தரையிலும் கல்லிலும் நடந்தேன். அத்தனை குளுமையாகவும், இதமாகவும் இருந்தது.

மண்ணில் ஓரிடத்தில் சற்றுமுன் வந்துவிட்டுப் போன சிறுத்தையின் கால்தடமும், இன்னோர் இடத்தில் காட்டெருமை ஒன்று படுத்திருந்து எழுந்து போன தேகத்தடமும் தென்பட்டது. ஈரிடங்களில் உள்ளூர் மக்கள் வந்து குகையின் மேற்பகுதியில் இருந்த மலைத்தேனை எடுப்பதற்காக எரித்த கரியின் எச்சமும், தேன் எடுத்துப் போட்டுப்போன வெற்றுக்கூடும் இருந்தன.

குகையின் மறுமுனையில் போய் அமர்ந்துகொண்டு, பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இங்கே எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்திருப்பார்கள்? தாம் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியையும், காடுகளில் இருந்து அகழ்ந்தெடுத்த கிழங்குகளையும், பறித்து வந்த பழங்களையும் காய்களையும் எவ்வாறெல்லாம் பகிர்ந்து உண்டிருப்பார்கள்? என்று உளத்திரையில் ஓட்டிப் பார்த்து சிலித்துப் போனேன்.

பிறகு மெதுவாக எழுந்து குகையின் நீண்டு விரிந்த பாறைகளில் வரைந்திருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். மேலதிகம் விலங்குகள். மாடு (காட்டெருமை), மான், யானை, குரங்குகள், நாய், நரி, புலி மற்றும் அடையாளம் காணமுடியாத இன்னும் சில விலங்குகள் (மாடுகள் கன்றுக்குட்டிகளோடு வரிசையாகச் செல்லும் ஓவியம் இங்குள்ள ஓவியங்களிலேயே மிகச் சிறப்பானது). அதற்கடுத்து மனிதர்கள். ஆண்களின் வேட்டைக் காட்சிகள். வீரச்செயல்கள். காளையை அடக்கும் சல்லிக்கட்டுக் காட்சி. விலங்குகளை பழக்கப்படுத்துதல். விலங்குகளோடு பயணித்தல். பெண்களின் நடனம். வரிசையாக தோள்மேல் கை போட்டுக்கொண்டு ஆடும் விளையாட்டுகள். நடுநடுவில் சூரிய உதயம் முதலான இயற்கை வர்ணனைகள். தாவரங்கள். பறவைகள். மீன்கள். ஆங்காங்கே சில குறியீடுகள். மொத்தத்தில் இவ்வாறு சொல்லலாம். யாவும் தாவர சங்கமங்கள்.

காணக் காண இன்னும் இன்னுமாய் நீண்டுகொண்டிருந்தது.

சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அனைத்து ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன என்றாலும், சிவப்பு நிறம் வெவ்வேறு நிறத் தன்மையில் இருந்ததையும், வரையப்பட்ட ஓவியங்கள் பாறையின் தன்மைக்கேற்ப வரையப்பட்டிருந்தையும், ஓவியர்கள் தான் வரைய வேண்டிய ஓவியத்துக்கேற்ப இடத்தை தேர்வு செய்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

திகட்டத் திகட்ட ஓவியங்களை பார்த்து முடித்ததும் தோன்றியது. எத்தனை கலைதாகமும், தொழில்நுட்ப அறிவும், தொலைநோக்குப் பார்வையும் இருந்திருந்தால், இத்தனை ஆண்டுகள் கழிந்தும் ஓவியங்கள் உயிர்ப்புடன் இருக்கும் எனக் கணித்து, வெண் மற்றும் செந்நிற மண் கொண்டு தாவர உதவியுடன் தீட்டியிருப்பார்கள்?

ஓவியக் கலையின் தொடக்கமாயினும், அப்போதே அக்கலையில் நிபுணர்களாக இருந்த அவர்களது செய்நேர்த்தியும் திறன்வெளிப்பாடும் கண்டு வியந்தேன். அதிலும் அவர்கள் தீட்டிய மனித உருக்கள் குழந்தையின் கிறுக்கள் போல இருந்தாலும், விலங்குகளின் வளைவும் துள்ளியமும் பார்த்து உள்ளுக்குள் தீட்டியவர்களுக்கு மானசீகமாக கை தட்டினேன்.

ஒருபக்கம் பலநாள் காண விரும்பிய சித்திரத் தொகுதியின் முன்னால் நிற்பது அளவற்ற மகிழ்வை தந்தாலும், இன்னொரு பக்கம் நம்மவர்கள் வந்து அவற்றின் அருமை பெருமை உணராமல், கல்லாலும் கரியாலும் அதன்மீது தம் பெயர்களையும், கோடுகளையும் கிறுக்கி சிதைத்திருப்பதும், ஓரிடத்தில் வேண்டுமென்றே வெண்ணிற பெயிண்ட்டை ஊற்றி அழித்திருப்பதும் கண்டு கலங்கிப்போனேன்.

உலகத்திலேயே வெற்றுப் பழம்பெருமை பேசிக்கொண்டு, அவற்றின் எச்சமாய் இருக்கும் கலைச்செல்வங்களை அடிப்படை அறிவின்றி அழித்தும்; சூரையாடியும்; அவமதித்தும் வரும் ஒரே சமூகம் நம் தமிழ்ச் சமூகமாகத்தான் இருக்கும் என்று எண்ணி உள்ளுக்குள் வருந்தினேன்.

ஓவியங்களை எண்ணவில்லை என்றாலும், சிதைந்தது போக முந்நூறுக்கும் அதிகமாக இருந்திருக்கும். உடன் வந்திருந்த வனத்துறை அன்பர், ”யானை இறங்குற நேரமாச்சு. வாங்க சீக்கிரம் போகலாம்’’ என்றார். கடும் பசி ஒருபக்கம். என்றாலும், அங்கிருந்து வர மனமின்றி இன்னொரு தடவை வேகமாகப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லி, மொத்தக் குகையையும் அதிலிருக்கும் ஓவியங்களையும் தனியனாகப் போய் பார்த்து சில ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டு வந்தேன்.

போகும்போது ஓவியத்தைக் காணும் உற்சாகத்தில் எளிதில் போய்விட்டோம். திரும்பி வருகையில்தான் வழி எத்தனை கடினமானது எனப் புரிந்தது. அதிலும் ஓரிடத்தில் பள்ளத்திலிருந்து மரக் கிளைகளை பிடித்துக்கொண்டு மேலே ஏறும்போது கை விரலில் முள் கிழித்து ரத்தம் கொட்டியது. செந்தில் அண்ணனுக்கும் காலில் குச்சி கீறி ரத்தம் வந்தது. இருவேறு இடங்களில் யானை மற்றும் சிறுத்தையின் மலங்கள் இருந்தன. அதுவும் சில நிமிடங்களுக்கு முன் கழித்தவை. சுற்றுமுற்றும் பார்த்தோம். எதுவும் இல்லை.

எப்போது, எதுவேண்டுமானாலும் நிகழலாம் என்னும் அளவுக்கு ஆபத்து மிகுந்த தடைசெய்யப்பட்ட இவ்வனத்துக்குள் அவ்வளவு எளிதில் யாராலும் நுழைய முடியாது. முறையான அனுமதி பெறவேண்டும். கூடவே, அவ்வனம் பற்றி அறிந்த உள்ளூர்க்காரர் ஒருவர் துணைக்கு வரவேண்டும்.

பசியோடு நடந்து ஊருக்குள் வந்தவர்களுக்கு அவ்வூரைச் சேர்ந்த பத்ரன் ஐயா சுடச்சுட கஞ்சிசோறு பொங்கிவைத்திருந்தார். அவரோடு கதைகள் பேசியபடி உட்கார்ந்து உண்டுவிட்டு கிளம்பும்போது கேட்டேன், ”இந்த ஊரோட பேரு கரிக்கியூரா? இல்ல, கரிக்கையூரா?’’.

நொடியும் தாமதிக்காமல் நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் சொன்னார், ”கரிக்கையூர்’’.

அப்போது அவரது கண்களில் ஒளிர்ந்த சுடரானது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பொறிவரை குகையில் வாழ்ந்து, இத்தனை ஆண்டுகள் கடந்தும் அழியாமல் உயிர்ப்புடன் மிளிரும் ஓவியங்களை தீட்டிவிட்டுப் போன நம் மூதாதையர்களின் விழிச்சுடர் போல இருந்தது.

ஆம், மெல்லப் புன்னகைத்து கும்பிட்டுவிட்டு, அங்கிருந்து மனநிறைவுடன் கிளம்பி வந்தோம்.

கலைக்கு ஒருபோதும் இறப்பில்லை என்பார்கள். ஓவியக் கலையை இத்தனை நூற்றாண்டுகளாக காத்து வரும் இக்கரிக்கையூருக்கும், ஏந்தி நிற்கும் இப்பொறிவரைக்கும் கூட இறப்பில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஆமாம்தானே?

*

(கொலுசு – அக்டோபர் 2023 இதழில் வெளியானது.)

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=