சொல்லின்றி எதுவுமற்றவன்! – 088
இப்போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நீங்கள் படித்த லயோலா கல்லூரி நூலகத்தில் உங்கள் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யை தந்ததற்கு, ‘இலவசமாக இந்நூலை பெறமாட்டோம்’ எனச் சொல்லிவிட்டு, அதற்கான தொகையை காசோலையாக தந்ததாக ஒரு பதிவு போட்டிருந்தீர்களே?
ஆமாம். முதலில் நான் சென்று நூல் தந்ததும் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டவர்கள், அதன் பிறகு நூலை படித்துவிட்டு அழைத்திருந்தார்கள். போனேன்.
‘இது மற்ற நூல்களைப் போன்று கிடையாது. அதனால், இந்நூலுக்கு பணம் கொடுக்காமல் இருக்கமுடியாது. இப்படி இன்னும் பல நூல்கள் எழுதவேண்டும். எங்கள் மாணவர் என்று நாங்கள் பெருமைப்பட வேண்டும். மறுக்காமல் இந்த காசோலையை பெற்றுக்கொள்ளுங்கள். அதோடு, இந்த நூலை இங்கே இருக்கும் மாணவர்களிடமும் கொண்டுபோக நினைக்கிறோம். அதற்காக இன்னும் பல பிரதிகள் கேட்போம். நீங்கள் அதை ஏற்பாடு செய்து தரவேண்டும்’ என்றார்கள். மிகப் பெருமையாக இருந்தது.
‘லயோலா கல்லூரி, எப்போதும் திறமையாளர்களை கொண்டாடும் கல்லூரி’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வரிசையில் நானும் என்று உணர்ந்த இன்னொரு தினம் அது.
*