தாவர சங்கமம் – 1 : பூலாநந்தீசுவரர்

என் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள் தன் ‘பாடுக பாட்டே’ நூலில் பூளைப்பூ குறித்து எழுதியிருந்தார். அதை வாசித்த கையோடு அப்பூ எங்களூரில் ‘பூளப்பூ’ என்றும் ‘பூளாப்பூ’ என்றும் அழைப்பது பற்றிச் சொல்லி, என் நகர்பேசியில் இருந்த அந்தப் பூவின் ஒளிப்படத்தை அவருக்கு அனுப்பிவைத்து, ‘இதுதானே ஐயா, நீங்கள் குறிப்பிட்ட பூளைப்பூ?’ என்று கேட்டு உறுதிசெய்து கொண்டேன்.

பின் ‘பூலா’ என்றொரு முள்செடி உள்ளது பற்றி அவரிடம் சொல்லி, அச்செடியில் காய்க்கும் வெண்ணிற மணத்தக்காளிப்பழ வடிவிலான பழத்தை ‘பச்சரிசிப் பழம்’ என்று சொல்லி பறித்துச் சாப்பிட்டால் இனிக்கும் என்றும், ‘பூலாப்பழம்’ என்று சொல்லி பறித்துச் சாப்பிட்டால் கசக்கும் என்றும் சொன்னேன். கேட்டு மெலிதாகப் புன்னகைத்தார்.

பிறகு இம்முள் செடியை தலத் தாவரமாகக் கொண்டு தமிழகத்தில், அதுவும் தேனி மாவட்டம் – சின்னமனூரில் ஒரு பழம்பெரும் சிவாலயம் உள்ளதென்றும், அத்தல இறைவன் பெயரும் இச்செடியைக் கொண்டே ‘பூலாநந்தீசுவரர்’ என விளங்குகிறதென்றும் சொன்னேன். அத்தனை மகிழ்வோடு கேட்டுவிட்டு, ‘மிக அரிய பயனுள்ள தகவல்’ என்று சொல்லால் தட்டிக் கொடுத்தார்.

அதுதொடங்கி அச்சிவத்தலத்திற்கு, அதிலும் குறிப்பாக அங்குள்ள தலத் தாவரத்தையும், அவற்றின் பெயரால் அங்கே வீற்றிருக்கும் ஈசரையும் காணச் செல்லவேண்டும் என்ற ஆவல் மேலோங்கி வந்தது.

இது நடந்து சரியாக ஈராண்டுகள் இருக்கும். திடீரென ஒருநாள் கோவையிலிருந்து செந்தில் அண்ணன் அழைத்து, ‘தம்பி, நாளைக்கு சதுரகிரி போகலாம்… வர்றியா?’ என்று கேட்டார். ஏற்கெனவே இந்தாண்டில் வெள்ளியங்கிரி, பர்வதமலை, சதாசிவகோனே (ஆந்திரா) உள்ளிட்ட பெருமலைகளை ஏறியவன், இந்த சதுரகிரி மலை மட்டும் விடுபட்டுவிட்டதே என்ற ஏக்கத்தில் இருந்ததால் சட்டென ‘சரி’ என்றுவிட்டு, ‘சதுரகிரி ஏறி இறங்கினதும், அப்படியே சின்னமனூர்ல இருக்க சிவன் கோயிலுக்கும் போயிட்டு வரலாமா அண்ணா?’ என்றொரு விண்ணப்பத்தையும் அவரிடம் வைத்தேன். ‘ஓ, போயிட்டு வரலாமே’ என்றார். உடனே கிளம்பிவிட்டேன்.

அக்டோபர் 1, 2022 அன்று காலை பேருந்தில் போய் மதுரையில் இறங்கியவன், அண்ணனுடன் காரில் அங்கிருந்து சதுரகிரி மலையடிவாரம் வரைக்கும் சென்று, இயற்கையின் செல்லப்பிள்ளைபோல் அத்தனை எழிலுடன் இருந்த மலைமீது ஏறி அங்குள்ள சுந்தர மகாலிங்கத்தையும், சந்தன மகாலிங்கத்தையும் தரிசித்துவிட்டு, அன்றிரவு அங்கேயே தங்கியிருந்து அடுத்தநாள் காலையில் புறப்பட்டு கீழே வந்து, தேனி அருகில் வீரபாண்டியில் உள்ள அண்ணனது நண்பர் வீட்டில் இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலையில் எழுந்து அவ்வூர் ஒட்டி ஓடும் பெரியாறில் மகிழ்ந்து குளித்துவிட்டுக் கிளம்பி முதல் வேலையாக சின்னமனூரில் உள்ள பூலாநந்தீசுவரர் கோயிலுக்குப் போனோம்.

பலநாள் வர நினைத்த தலம். ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எப்படிப் பார்த்தாலும் ஒரே உயரத்தில் காட்சிதரும் சிவலிங்கம் உள்ள கோயில். பூலாச் செடியைக் காணும் போதெல்லாம் என்னுள் ஏக்கத்தை விதைத்த தலத் தாவரம் இருக்கும் இடம். அதுவும் இறைவன் சுயம்புலிங்கமாய்த் தோன்றிய இடத்தில் அவருக்கு நிழல் தந்த புண்ணியத்தின் பலனாக சாப நிவர்த்தி பெற்று தலவிருட்சமானது. ‘தன்னை தேவலோகத்து கற்பகத் தருவாகக் கருதி வணங்குபவர்கள் நினைப்பதை நிறைவேற்றித் தரவேண்டும்’ என்று சிவபெருமானிடம் வரம் கேட்டுப் பெற்றது. அதன் நினைவாகவே ‘அரிகேசரிநாதர் என்னும் தனது பெயர் இனி பூலாநந்தீசுவரர் என விளங்கும்’ என்று சிவனார் அருளியது.

அத்தனை மகிழ்வோடு கோயிலுள் சென்று கருவறையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் பூலாநந்தீசுவரரைக் கண்டு வணங்கிவிட்டு, உள்ளுக்குள் ‘பூலாச் செடி இங்கே தலத் தாவரமாக எப்படி இருக்கும்?’ என பொத்தி வைத்திருந்த ஆசையோடும், வினாவோடும் வெளியில் வந்து பிரகாரத்தை சுற்றிக்கொண்டு போய் இடது பக்கமாய் துர்கை சன்னதிக்கு அருகில் இருந்த பூலாச் செடியைக் கண்டேன். செடி போல் இல்லாமல் உயரம் குறைந்த மரம் போல இருந்தது.

என் ஐயாவுடன் சிறுவயதில் விறகு வெட்ட போகும்போது எதிர்பட்ட தாவரங்களைக் காட்டி ‘காரச் செடி, பூலாச் செடி, எருக்கஞ் செடி’ என்றதைக் கேட்டு, ‘செடி’ என்பதைத் திருத்தி அவர், ‘கார மரம், பூலா மரம், எருக்க மரம்’ என்றதையும், ‘சில மரங்க செடிமாரி வளரும்… அதுக்காக அத செடின்னு சொல்லக்கூடாது. அதேமாதிரி சில செடிங்க மரம்மாரி வளரும்… அதனால அத மரம்னு சொல்லக்கூடாது’ என்றதையும் உள்ளுக்குள் நினைத்துப் பார்த்து எனக்கு நானே புன்னகைத்துக் கொண்டு, அதன் அருகில் போய் நின்று அடிமரத்தையும், அதன் கிளைகளையும், இலைகளையும், முட்களையும், அதில் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக இலை மறைவில் தென்பட்ட வெண்ணிறப் பழங்களையும் தொட்டு வருடிப் பார்த்தேன். அத்தனை சிலிர்ப்பைத் தந்தது.

பூலா ஒரு முள் மரம். அதனால் யாரும் இதை வீட்டிலும், நிலங்களிலும் நட்டு வளர்க்க மாட்டார்கள். அதுவாக வளர்ந்தாலும் வேலியோரத்தில் என்றால் விட்டுவிடுவார்கள். மற்றபடி மலைகளிலும், கரம்புக் காடுகளிலும், பாழ் நிலங்களிலும், பாதையோரத்திலும்தான் முளைத்து வளர்ந்து காணப்படும். காரைக்கு அடுத்தபடியாக விறகுக்கும், வேலிக்கும் பயன்படுவது. சிறார்களுக்கும், என் போன்ற குழந்தைமையைச் சூடிக்கொண்டு திரிபவர்களுக்கும் ஆண்டு தவறாது பழம் தருவது. இலை, காய், பழம், முள் போன்றவற்றைத் தின்னும் ஆடுகளின் வயிற்றில் இருக்கும் புழுபூச்சிகளை அழிப்பது. புதர்ச்செடி என்றும் குறுமரம் என்றும் ஒருசேர அழைக்கப்படுவது. வெண்பூலா, கரும்பூலா என இருவகை கொண்டது. அடர்த்தியான புதர் வடிவில் காணப்படுவது. பல் வலி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, ரத்தபேதி, பித்தம், மஞ்சள் காமாலை உள்ளிட்ட இன்னும் பலவற்றுக்கு மருந்தாவது.

அதுமட்டுமின்றி… கருப்புபூலா, கரும்பூலா, சிவப்புப் பூலா, நீர்ப்பூலா, பேய்ப்பூலா, வறட்பூலா, வெட்பூலா, வெண்பூலா என தன் பெயரை பின்னொட்டாகப் பெற்ற வேறு சில தாவரங்களையும்… உயவைப் பூலா, சுவேத பூலா, செகப்புப் பூலா, தனைமாலிப் பூலா, நரிப் பூலா, பவளப் பூலா, மஞ்சட் பூலா, முள்ளுப் பூலாத்தி, வரட் பூலா, வெள்ளை பூலா, மணிப் பூலாரிசி உள்ளிட்ட தாவர சிறப்புப் பெயர்களையும்… பூலாந்தேவி, பூலாநாதன் போன்ற மாந்தர் பெயர்களையும்… பூலாங்குடி, பூலாங்கிணர், பூலாங்குளம், பூலாங்குறிச்சி, பூலாங்கொல்லை, பூலாம்பட்டி, பூலாம்பாடி, பூலாமேடு, பூலாவாடி, பூலான்சேரி, சின்ன பூலாம்பட்டி என தன் பெயராலான பல ஊர்களையும் கொண்டது.

இத்தகைய யாரும் நட்டு வளர்க்காத அல்லது வளர்க்க விரும்பாத ஒரு தாவரம், ஒரு பழம்பெரும் ஆலயத்தின் தலத் தாவரமாக வருவோர்கள் அனைவரும் வணங்கும்படி இருப்பதைக் கண்டு அத்துனை மகிழ்ந்தேன். இன்னும் சொல்லப்போனால் என் அளவுக்கு அதைப் பார்த்து யாரும் மகிழ்ந்திருப்பார்களா? தெரியாது. ஆம்!

என் முன்னிருந்த அப்பூலா மரத்தினை இன்னொரு தடவை தொட்டு வருடவேண்டும் போல் இருந்தது. வருடினேன். அதில் காய்த்திருக்கும் வெண்ணிறப் பழத்தை சிறுவயதில் சொன்னது போல் ‘பச்சரிசிப் பழம்’ எனச் சொல்லியும், ‘பூலாப் பழம்’ எனச் சொல்லியும் அடுத்தடுத்து பறித்துச் சாப்பிடவேண்டும் போல் இருந்தது. சாப்பிட்டேன். பின் அத்தாவரத்தின் பெயரை தன்னில் சூடிக்கொண்டு உள்ளே கருவறையில் இருக்கும் ஈசரை போய் இன்னொருவாட்டி பார்க்கவேண்டும் போல் இருந்தது. பார்த்தேன்.

உடன் வந்திருந்த செந்தில் அண்ணன் கோயில் முழுக்க சுற்றிப்பார்த்துவிட்டு ‘எங்கே நான்?’ எனத் தேடிக்கொண்டு வந்து, என் தோளைத் தொட்டுக் கூப்பிட்டு மெல்லிய குரலில் ‘போலாமா தம்பி?’ என்றார். இன்னும் சற்றுநேரம் இருக்கலாம் என்று தோன்றியது. இருந்தாலும் தலையசைத்து ‘போலாம்ணா’ என்றுவிட்டு, அங்கிருந்து வர மனமின்றி வெளியில் வந்து நின்று திரும்பி மொத்த கோயிலையும் ஒற்றைப் பார்வையில் பார்த்தேன். பலநாள் ஆசை கண்முன் உருவாய் நின்றது.

சட்டென நகர்பேசி எடுத்து கோயிலுள் கண்டுவிட்டு வந்த தலத் தாவரத்தையும், அதை தன் பெயரில் தாங்கி இருக்கும் சிவத்தலத்தின் ஒளிப்படங்களையும், இத்தனை நாள் கழித்தும் வந்து காணத் தூண்டியக் கட்டுரையை எழுதிய நாஞ்சில்நாடனுக்கு அனுப்பலாம் எனத் தோன்றியது. கூடவே, ‘இல்ல… அனுப்ப வேண்டாம். அவர நேர்ல பார்க்கும்போது காட்டலாம்’ என்றும் தோன்றியது. ‘சரி, நேர்லயே காட்டுவோம்’ என உள்குரலில் சொல்லிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டபோது வெயில் மங்கிப்போய் மழை லேசாக தூற ஆரம்பித்தது.

(கொலுசு – டிசம்பர் 2022 இதழில் வெளியானது.)

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=