8 – பெருவாழ்வுமந்திரம்

உன் தாத்தாவிடம் நான் பார்த்து வியக்கும் விஷயமும்; கற்றுக்கொண்ட முக்கியமான ஒன்றும் எது என்று கேட்டால், நொடியும் தாமதிக்காமல் ஒருநாளும் அவர் விடாது பின்பற்றும் நடைப்பழக்கத்தைச் சொல்வேன்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண ஒன்றாகத் தெரியும். ஆனால், இதன் உள்ளிருக்கும் ஆழ்ந்த குணத்தை உணர்ந்தால் எத்தனை அரிய அருமருந்து என்பது புரியும். ஆம், மகவே!
‘நடக்கர்த்து ஒரு எடத்துலருர்ந்து இன்னொரு எடத்துக்கு போறதுக்குன்றத தாண்டி பெரிய மருந்துன்னு சொல்லலாம். அதும்… சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம மனசு கெடந்து தவிக்கறப்பயும், ஒரு முடிவும் எடுக்கமுடியாத கொழப்பத்துல இருக்கறப்பயும் கால்வலிக்க தூரமா நடந்தம்னா மனசு பட்டுனு லேசாயிடும்’ என்பார் உன் தாத்தா.
இதை அவர் என்றோ இளமையில் ஒருநாள் மட்டும் சொல்லவில்லை. இந்த நடக்கமுடியாத நூறாம் அகவையிலும் சொல்கிறார். அப்படி என்றால் இதன் மகத்துவம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்.
இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அவர் என்னிடம் சொன்னவற்றில் எதை அதிகமாகச் சொல்லியிருக்கிறார். அதாவது, எதற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறார் என்று பார்த்தால், இந்நடத்தலைத்தான் என்று தோன்றுகிறது.
‘நடந்து பயணிப்பவர்களுக்கே இந்த உலகம் தன்னைத் திறந்து காட்டும்’ என்பார்கள்.
இதையே உன் தாத்தா வேறு மாதிரி சொல்வார். ‘நம்மள சுத்தி கீற அரிய விசியங்கள பாக்கணும்னா… நீ நடந்து போ, அப்பதான் அது ஒனுக்கு தன்னக் காட்டும்’.
கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி, உனது தாத்தாவின் 99 ஆவது பிறந்தநாளுக்கு ஊருக்குப் போயிருந்தபோது, இன்னும் இந்த நடைப் பழக்கத்தைப் பற்றி அதுவும், இந்த வயதில் என்னதான் சொல்கிறார் பார்ப்போம் எனக் கேட்டேன்.
”ஏன்யா இந்த முடியாத வயசுலயும்… தெனம் இம்மாந்தூரம் நடந்துவந்து கஷ்டப்படற. பேசாம வூட்லயே ஒக்காந்திருக்கலாம்… இல்லனா, பக்கத்துல மட்டும் ரவ தூரம் நடக்கலாம்லய்யா…?’’
என் கேள்வியையும் நான் எதற்காக அதைக் கேட்கிறேன் என்றும் சட்டெனப் புரிந்துகொண்டு புன்னகைத்தவர், ”அட மடயா… இன்னிக்கி இந்த சுத்துப்பட்டுல கீற எந்த ஊருலயும் என் வயசுல ஒருத்தரு கெடயாது. ஏன், என்னோட பத்து வயசு கம்மியான ஆளுங்களே இல்ல. எல்லாரும் நல்லா ஒழச்சவங்கதான். ஓடா தேஞ்சவங்கதான். கஷ்டப்பட்டவங்கதான். ஆனா, வயசானதும் மாளலன்னு நடக்கறத வுட்டுட்டாங்க. அதாலதான் படுத்தப் படுக்கயாயி… இன்னிக்கி இல்லாமப் போயிட்டாங்க.
நீ சொல்றமாரி நானும், நடக்க முடிலயே… எதுக்கு இம்மாந்தூரம் நடந்து வரணும்னு வூட்ல சொம்மா ஒக்காந்திருந்தன்னா… கால் வீங்கி, அப்பறம் ஒடம்பும் காலும் நடக்காத சொகத்துக்கு பழகும். அப்பறம் அது வேண்டாத நோவலாம் கொண்டாந்து வுட்டு… படுத்த படுக்கயாக்கி, எல்லாரயும் மாரி என்னயும் இல்லாமப் பண்ணிடும். அதான், நடக்க முடிலனாலும் செரி… அங்கங்க நின்னு, இல்லனா ஒக்காந்து ஏன்ச்சி… இம்மாந்தூரம் வந்துனு போறன்; என்னால முடிஞ்ச சின்னச் சின்ன வேலயலாம் செஞ்சுனு கீறன்.’’
அடுக்கிவைத்த கற்கள்போல நேர்த்தியாகச் சொன்னவர், பின்னால் திரும்பி சற்று தள்ளி அவிஞ்சி மரத்தருகில் மேய்ந்துகொண்டிருந்த கருப்பு மாட்டையும், அதன் கன்றையும் அவிழ்த்துக்கொண்டு பக்கத்துத் துண்டு நெல்லில் போய் மேயாமல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு என் முகம்நோக்கி சொன்னார்.
”இத ஏன் இப்ப இம்மாம் விளாவரியா உன்கிட்ட சொல்றன்னா… இதப் பாத்து நீயும் நடக்காம இருந்துடாம, என்னிக்கும் என்ன மாரி நடந்துனு இருப்பன்னுதான்.’’
இன்னும் எதையோ சொல்லாமல் விட்டதுபோல பார்த்தவர், ”இன்னிக்கி வண்டி, மயிரு மட்டன்னு… என்னென்னமோ வந்துருச்சு. வசதிங்க என்ன வேணாலும் வரும் போவும். அதப் புடிச்சிக்கினு அதுப் பின்னாலயே போனம்னா… வராத நோவுலாம் வந்து நின்னு, கூடிய சீக்கிரம் நம்மள இல்லாமப் பண்ணிடும். இன்னிக்கி இருவது முப்பது வயசுக்காரங்களுக்குளாம் சக்கரநோவு, புத்துநோவுன்றாங்க. நாங்கலாம் அப்டி ஒரு நோவ கண்டதே இல்ல. அந்தக் காலத்துல இருந்து இன்னிக்கு வரக்கும் நடந்துனு போயிதான் எல்லாத்தயும் செஞ்சினு வர்றோம். அது ஒண்ணுதான் எங்களலாம் நல்லபடியா வச்சிகீது. இத மட்டும் என்னிக்கும் வுட்றாத. செரியா?’’
அத்தனைக் கனிவுடனும், அக்கறையுடனும் சொன்னார். அதனை உணர்ந்துகொண்டவனாய் உறுதியுடன், ”சரிய்யா” என்றேன்.
கனிந்து கனிந்து கனிவே உருவான ஒருவரால்தான் அப்படி ஒருகுரலில், அப்படி ஒரு விஷயத்தை, அத்தனை உயிர்ப்புடன் பேசமுடியும்; சொல்லமுடியும். ஆம், மகவே!
உன் தாத்தா பார்க்கத்தான் படு சாதாரணமாக இருப்பாரே தவிர, பெரும் திறமைசாளி. விவசாயம் தொடங்கி, தெருக்கூத்துக் கலை வரை பன்முகம் கொண்டவர். பேரனுபவசாளி. எத்தனையோ ஏற்ற இறக்கங்களைப் பார்த்தவர்.
அப்படிப்பட்ட முதிர்ந்து கனிந்தவர், தனது 99 ஆவது பிறந்தநாளில் தன் மகனிடம் சொல்வது போல இந்த ஒட்டுமொத்த மானுட குலத்துக்கும் இதைச் சொன்னதாக உணர்ந்து நெகிழ்ந்துபோனேன்.
‘என்னிக்கி ஒருத்தன் ஏன்ச்சி நடக்கவே யோசிக்கறானோ… அன்னிக்கே அவன் பாதி செத்துட்டான்; அவன் சாவு, கிட்ட வந்துருச்சின்னு அர்த்தம்.’ பேச்சு நடுவில் என்றைக்கோ அவர் சொன்ன இந்த வார்த்தைகள் சட்டென்று நினைவுக்கு வந்தன.
அதன் பின்னாலேயே, ‘ஏன்ச்சி நடந்தாலே பாதி நோவுங்க இல்லாமப் போயிடும். தெனம் நடந்துனு இருந்தம்னா… எந்த நோவும் அம்மாஞ்சீக்கிரம் கிட்ட வராது.’ என்னும் வார்த்தைகளும் வந்தன.
நடை பற்றி எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் இப்போது வரை எத்தனை எத்தனை தடவை அதுவும், எத்தனை எத்தனை வகையாகச் சொல்லியிருக்கிறார் என்று எண்ணி உள்ளுக்குள் சிலிர்த்திட்டேன்.
இந்த உலகமும் இங்குள்ள மனிதர்களும் நடப்பதை ஏதோ கௌரவக் குறைச்சலாகப் பார்க்கும். ஆனால், அதே கூட்டம் காசு கொடுத்து உடற்பயிற்சிக் கூடங்களில் போய் வெட்கமே இல்லாமல் இயந்திரத்தின் மீது பொய்யாக நடந்துகொண்டிருக்கும். சிலர், வீட்டிலிருந்து பெருமையாக வாகனத்தில் போய் இறங்கி, பூங்காக்களில் பரிதாபமாக சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் யாரும் தம் வாழ்வில் நடையை ஓர் அங்கமாக வைத்திருக்க மாட்டார்கள்.
எனக்குத் தெரிந்து உன் தாத்தா நடக்காத ஒருநாள்கூட அவர் வாழ்க்கையில் இல்லை. அப்படிப்பட்டவரை பார்த்து வளர்ந்த உன் அப்பாவின் வாழ்விலும் நடைப்பழக்கம் பெரும் முக்கியத்துவம் கொண்டது. முடிந்தவரை தினந்தோறும் நடக்கிறேன். எந்த அவசர வேலையும் இல்லாதபோது, எங்கிருக்கிறேனோ அங்கிருந்து வீட்டுக்கு நடந்துசெல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். அது ஒரு கிலோமீட்டராக இருந்தாலும் சரி. முப்பது, நாற்பது கிலோமீட்டராக இருந்தாலும் சரி.
நடக்கும்போது நம் உள்ளமும் உடலும் புத்துணர்வு பெறுவதை உணரலாம். அதேநேரம், பல புதிய எண்ணங்கள் நமக்குள் இருந்து துளிர்த்து கிளைப்பதையும் பார்க்கலாம். அதுமட்டுமல்ல… பல நாள் கிடைக்காத வினாவுக்கான விடைகளும், கண்ணில் படாத அரும் காட்சிகளும்கூட மிக எளிதில் சாத்தியப்படும். ஆம், மகவே!
நம் இந்திய நாட்டின் தேசத் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி அளவுக்கு நடந்தவர் இல்லை என்பார்கள். என்னைக் கேட்டால் உன் தாத்தா அளவுக்கு நடந்தவர் இல்லை என்பேன். இப்படி உலகம் முழுக்க பெருவாழ்வு வாழ்ந்து, அரிய பல செயல்கள் செய்திட்ட; செய்கிற அனைவரும் நடைப்பழக்கத்தை வாழ்வின் மிக உயரிய செயல் மந்திரமாய் கொண்டவர்கள். மூச்சு போல சுவாசித்தவர்கள்.
இன்றைக்கு பக்கத்துத் தெரு கடைக்குக்கூட வாகனத்தில் போய் வருவோர்கள் மத்தியில், இந்நடைப்பழக்கத்தை விடாமல் இந்த சென்னைப் பெருநகரத்திலும் உன் அப்பா நான் பெருமையுடன் கைக்கொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு ஒரே ஒரு காரணம் உன் தாத்தாதான். அவர் கூறிய வார்த்தைகள்தான். கண்முன்னால் கண்டிடும் அவரது பெருவாழ்க்கைதான். ஆம்!
எந்நாளும் நீயும் உன் தாத்தா போல, என்னைப் போல இந்நடைப்பழக்கத்தை உன் வாழ்வில் கைக்கொண்டு, பெருவாழ்வு வாழ்ந்திட மனத்தார வாழ்த்துகிறேன்.
நட… நட… வாழ்வின் இறுதி மூச்சுவரை நட… அது மட்டும்தான் உன்னை நீள் ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் என்றும் எதிலும் இருக்கவைக்கும்; வாழவைக்கும்!
*